சர்வதேச சந்தையை நோக்கி யாழ். முருங்கை உற்பத்திகள் - கணபதி சர்வானந்தா


ரு எல்லயற்ற மூலிகை இது என்றும் சொல்லலாம். விசேஷமாக யாழ்ப்பாணத்தவர்களின் அன்றாட உணவில் கறி முருங்கையின் பயன்பாடுகள் அதிகம் என்பேன். இதன் இலையில் காணப்படும் அளவற்ற சத்துகளின் பயன்பாட்டை மக்கள் அறிந்திருப்பதே இதற்குக் காரணம். அந்த இலைகளில் ஊட்டச் சத்துக்கள் அதிகம் உண்டு. வைட்டமின்களும் மினரல்களும் நிறைந்திருக்கிறது.

உடலில் தோன்றும் கழிவுகளை அகற்றி உடல் கலன்களுக்குப் புத்துயிரூட்டக் கூடிய வல்லமை இந்த முருங்கை இலைக்கு உண்டென்று ஆய்வுகள் விதந்துரைக்கின்றன. தற்பொழுது வயதெல்லையற்றுக் காணப்படும் சலரோகம், இருதய நோய், இரத்தச் சோகை, மூட்டு வலி, கல்லீரல் நோய், தோல் வியாதிகள் மற்றும் அஜீரணக் கோளாறுகள் போன்ற நோய்களுக்குக் கைவைத்தியமாகவும் இதை உபயோகிக்கலாம் என்கின்றனர் சித்த வைத்தியர்கள்.
சித்த வைத்தியத்திலே உபயோகப்படுத்தப் படுகின்ற முக்கியமான தற்சரக்குகளோடு இதுவும் ஒரு மூலிகையாகப் பயன்படுத்தப்படுகிறது.முருங்கை இலை எதைக் குணமாக்கும்? என்று கேட்பதைவிட எதைக் குணமாக்காது? என்று கேட்கலாம். பாலுணர்வு தொட்டுப் பார்வைத் திறன் வரை, அதிகரிக்கக் கூடிய சக்தி முருங்கைக்கு உண்டென்று சித்த வைத்தியக் குறிப்புகள் சொல்லுகின்றன.
அப்படிப்பட்ட முருங்கையின் இலைகள் இன்று ஒரு முக்கிய பேசு பொருளாக இருக்கிறது. யாழ். மண்ணில் விளைகின்ற அந்த முருங்கை இலை உலர்ந்த பொடி வடிவில் சர்வ தேசச் சந்தையை சென்றடைகிறது. யாழ்ப்பாணத்தில் இது ஒரு புது முயற்சியாக மட்டுமல்ல இதற்காகப் பெறப்படும் இலைக் கொள்வனவால் பலர் பயனடைகின்றனர். அவர்களின் வாழ்வதாரத்திற்குரிய முக்கிய விளைபொருளாகவும் முருங்கை இலை காணப்படுகிறது.
அந்த முருங்கை இலைகளைப் பதனிட்டுப் பொடியாக்கி பொதிசெய்து ஏற்றுமதி வியாபாரிகளுக்கு விநியோகிக்கின்ற வியாபாரத்தைத் தனதாக்கிக்கொண்டிருக்கின்ற சங்கரப்பிள்ளை நகுலேஸ்வரனையே இன்றைய நேர்முகத்தினூடாகச் சந்திக்கிறோம்.
உணவே மருந்து என்ற கூற்று இங்கேதான் சரியாகிறது என்கிறார் அவர். 1970 களில் வட மாகாணத்தில் இயங்கிய அரஸ்கோ மற்றும் முருகன் இன்டஸ்றீஸ் ஆகிய வியாபார நிலையங்களிலே பணியாற்றியபோதுதான் இதன் அடிப்படை பற்றித் தெரிந்து கொண்டதாகச் சொல்லுகிறார் நகுலேஸ்வரன். அன்றைய நாட்களில், இந்த இரண்டு ஸ்தாபனங்களும் வட பகுதியில் மிகவும் திறம்பட இயங்கியவை என்பது குறிப்பிடத் தக்கது.
பெருமளவில் மேற்கொள்ளப்படாத இந்த முயற்சியை வெற்றிகரமாக நீங்கள் இயக்கக் காரணம் என்ன? ஏன் இதைத் தெரிவு செய்தீர்கள்? இதன் ஆரம்பம் எப்படி இருந்தது? இன்று உங்கள் முயற்சிகள் எவ்வளவு தூரத்தை எட்டியிருக்கிறது? என்று நகுலேஸ்வரனிடம் கேட்டேன்.
தமிழ் நாட்டில் இலைகளைப் பதனிடுவது மற்றும் இயற்கை விளை பொருட்களை வத்தலிடுவது பற்றிய தொழில் முயற்சியையும்,தொழில் நுட்பத்தையும் முறைப்படி நான் கற்றிருக்கிறேன். நான் முன்னர் பணியாற்றிய நிறுவனங்கள் இயற்கை பழரச விற்பனையில் ஈடுபட்டிருந்தன.
அவைகள் தான் என்னுள் இந்த வேட்கையைத் தோற்றுவித்தன. தற்பொழுது கோப்பாயில் எனது தொழிலகத்தை அமைத்து அங்கேயே வாழ்ந்து வருகிறேன். தெல்லிப்பளை கொல்லங்கலட்டி என்ற கிராமமே எனது பூர்வீகம். 1990 களில் அங்கே இராணுவமுகாம் அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து இடம்பெயர்ந்தோம். 2009இல் மீண்டும் யாழ்ப்பாணம் வந்தபோது, வாழ்வாதாரத்துக்கான வழி என்ன? என்ற வினா மேலெழுந்தது.
தெரிந்ததைச் செய்யலாம் என்ற எனது எண்ணத்துக்கு, எனது மகள் உதவிக்கரம் நீட்டினார். நானும் எனது மகளும் இணைந்து ஒரு பரீட்சார்த்த நடவடிக்கையாகவே இந்தத் தொழிலைத் தொடங்கினோம். ஆரம்பத்தில் எதுவித தொழில் நுட்ப வாய்ப்பும், வசதியுமின்றி ஒரு குடிசைக் கைத்தொழில் போன்றே ஆரம்பித்தோம். பின்பு சிறுகச் சிறுக வளர்ந்து வாடிக்கையாளர்கள் பெருகிக் கொண்டனர்.
2016 இல் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற யாழ். சர்வதேச வர்த்தகக் கண்காட்சியில் எமது உற்பத்திகளைக் காட்சிப்படுத்தினோம். அந்த நேரத்தில் தென்னிலங்கையிலிருந்து பலர் வந்திருந்தனர். அவர்களில் சிலர் எமது பொருட்களின்பால் ஈர்க்கப்பட்டனர். தாம் ஏற்றுமதி செய்கின்ற உணவுப் போருட்களோடு எமது தயாரிப்புகளையும் இணைக்கலாம் என்று யோசனை சொன்னார்கள்.
அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டேன். தற்போது, நேரடியாக ஏற்றுமதி செய்யாவிட்டாலும், ஏற்றுமதியாளர்களினூடாக எமது உற்பத்திகள் சர்வதேசச் சந்தையைச் சென்றடைகின்றன. அவற்றிற்கு நல்ல வரவேற்பும் உண்டு. Nutri Food Packers என எனது தொழிலகத்திற்குப் பெயரிட்டிருக்கிறேன்.
இந்த முருங்கை இலைப் பொடியை எப்படி உட்கொள்வது? நேரடியாக உட்கொள்வது ஒரு மருந்தை எடுப்பதை ஒத்ததாக இருக்கும் என்று எண்ணுகிறேன். இதை உட்கொள்ள எந்த வழியை நீங்கள் பரிந்துரைக்கிறீர்கள்?
பிட்டு, இடியப்பம் என்பனவற்றைச் சமைக்கும்போது முருங்கை இலைப் பொடியையும் கலந்து அவித்துப் பரிமாறலாம். ஆபிரிக்காவில், கோதுமை மாவுடன் கலந்து பிள்ளைகளுக்குக் கொடுக்கிறார்கள். இதனால் போசணைப் பெறுமானம் அதிகரிப்பதாக அவர்கள் சொல்லுகிறார்கள். தொன்று தொட்டு எமது சமூகத்திலும் இதுபோன்று பிட்டுக்கு முருங்கை இலையைக் கலந்து அவித்துப் பரிமாறுகின்ற வழக்கம் இருந்துவருகிறது. சிறிது சிறிதாக மறந்தும், மறைந்தும் வருகின்ற அந்தப் பழக்கம் தற்போது மீண்டும் புத்தியிர் பெற்றுக்கொண்டு வருகிறது. தொற்றா நோய்களின் அதிகரிப்பே அதற்குரிய காரணங்களில் முக்கியமானது எனலாம். தேநீரைப் போன்று அருந்தக் கூடியதாக முருங்கை இலைப் பொடியைப் பொதி செய்து விற்கிறோம். முன்னையவிடத் தற்போது மக்களும் தமது ஆரோக்கியத்தில் அதிகம் கவனம் செலுத்துகிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
உங்கள் உற்பத்திகளுக்கான மூலப்பொருட்களை எப்படிப் பெற்றுக் கொள்ளுகிறீர்கள்? இதில் சமூக மற்றும் பொருளாதாரப் பங்களிப்பு என்ன? நீங்கள் பயன்படுத்தும் புதிய தொழில் நுட்பம் பற்றியும் சொல்லலாம்.
இந்தத் தொழிலில் பிரதானமான சவால்களாக விளங்குவது மூலப்பொருட்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
அவற்றைத் தொடர்ச்சியாகப் பெறுவதில் இருக்கின்ற சிரமங்களை அதற்கான ஒரு பொறிமுறையை உருவாக்குவதன் மூலம் தவிர்க்கலாம் என்று எண்ணுகிறேன்.யாழ்ப்பாணம் ஒரு வரட்சிப் பிரதேசம்.எனவே பசுமைக் குடில்களை (Green House)அமைப்பதன் மூலம் தொடர்ச்சியான பயிரிடல்களை மேற்கொண்டு மூலப்பொருட்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
பாகற்காயை அப்படித்தான் தற்போது உற்பத்தி செய்கிறேன். இந்தப் பசுமைக் குடில்களைக் கிளிநொச்சியில் அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளேன். இப்படியான புதிய தொழில் நுட்பங்களை உட்புகுத்த ஏனைய விவசாயிகளும் முன்வர வேண்டும். ஆரம்பத்தில் பதனிடலையும், பொதி செய்வதையும் பல நிறுவனங்கள் நடத்திய பயிற்சிப் பட்டறைகளிலே தான் சென்று கற்றுக் கொண்டேன். இதனால் எமது பிராந்தியத்தின் உற்பத்தித் திறனை அதிகரிக்கலாம். பாலைவனமே தங்களுக்குரிய வளம் என்று இஸ்ரேலியர்கள் சொல்லுகின்றனர். விவசாய ஆராய்ச்சிகளும், விவசாய வணிகமும் கைகோர்த்துப் பயணிக்கும் போதுதான் பொருளாதாரத்தில் மேன்மையடையலாம். முறைப்படி கரிசனையோடு முயற்சித்தால் எமது பொருளாதாரம் பெருமளவில் அந்நிய செலாவணியைப் பெற்றுத்தரக்கூடிய தொன்றாக வருவதற்கு வாய்ப்புகள் அதிக முண்டு. எம்மால் தேர்வு செய்யப்பட்டவர்களிடமிருந்து மூலப்பொருட்களைப் பெற்றுக் கொள்ளுகிறோம். எமக்கு வழங்குநர்களாக இருப்பவர்கள் அதனால் பொருளாதார மேம்பாட்டைப் பெற்றுக்கொள்ளுகிறார்கள் என்று சொல்கிறார் நகுலேஸ்வரன்.
கிடைக்கின்ற போது அவற்றைப் பதனிட்டுப் பாதுகாத்து, கிடையாத போது அவற்றைப் பாவனைக்கு உட்படுத்துவதென்பது ஒரு சிறந்த சேமிப்பை ஒத்தவிடயம். அதனால் பலவிதமான நன்மை உண்டு. உணவை மருந்தாக்கக் கற்றுக் கொண்டவர்கள் பலர் ஆரோக்கியமாகவும், சந்தோஷமாகவும், பிறருக்குப் பாரமற்றவர்களாகவும் வாழ்வதை இன்றும் காணலாம்.
இயற்கையாகக் கிடைக்கக் கூடிய அத்தனை பொருட்களையும் சேமிக்கக் கூடிய முறையினை சித்தர்கள் கூறிச் சென்றிருக்கின்றனர். நகுலேஸ்வரனின் முயற்சியும் அத்தகையதொன்றாகவே காணப்படுகிறது. அவர் வெப்பத்தை விரைவாகக் கடத்தித் தக்க வைத்திருக்கும் மேற்கூரையுடன் கூடிய அறைகளை அமைத்து அதில் முருங்கை இலை, பாகற்காய், இராசவள்ளிக் கிழங்கு என்பனவற்றை உலர்த்திப் பெற்றுக் கொள்ளுகிறார். அத்துடன் பருவகாலங்களில் சேமித்து வைக்கப்பட்ட வேப்பம் பூவைக் கொண்டு வடகம், மற்றும் பாகற்காய் வடகம், மோர் மிளகாய் என்பனவற்றை அறிமுகப்படுத்தி நல்ல சந்தை வாய்பொன்றையும் பெற்றிருக்கிறார். இவர் அண்மையில் தாய்லாந்துக்குச் சென்று அவர்களின் முயற்சிகளையும் அறிந்து கொண்டவர். அங்கு நடைபெறுகின்ற பனம்பொருள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதிகள் பற்றி வியந்து போற்றுகிறார். அதன் மூலம் அந்த நாடு பெற்றுக் கொள்ளும் அந்நிய வருமானம் பெரியதாம். ஏற்றுமதிக்கேற்றவாறு தொழில் நுட்ப வளர்ச்சியையும் அந்த நாட்டுமக்கள் பெற்றுக் கொண்டுள்ளனர். அங்கு கிடைக்கின்ற மூலப்பொருளான மூங்கிலை வைத்துச் சிறப்பான முறையில் பசுமைக் குடில்களை அமைத்திருக்கிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தென்னிலங்கையுடன் ஒப்பிடும்போது நாங்கள் பின்னிலையில்தான் இருக்கிறோம். அங்கே தொழில் முயற்சியாளரின் வளர்ச்சிக்கு வங்கிகளும் அந்த முயற்சி தொடர்பான நிறுவனங்களும் அவர்களுக்குத் துணை புரிகின்றன. சிறிமாவோ ஆட்சிக்காலத்தில் வட பகுதியிலிருந்து மாம்பழங்கள் பெருமளவில் ஏற்றுமதியாகி இருக்கிறது. இங்கே பெருந்தொகையாக முருங்கையைப் பயிரிட விரும்புபவர்கள் PKM என்ற இந்திய இனத்தையே அதிகம் பயிரிட விரும்புகிறார்கள். ஆனால் அந்த இனம் நீண்டகால அடிப்படையில் நிலைத்து நின்று பயன்தரக் கூடியதொரு இனமல்ல. இந்தியாவில் இருக்கின்ற விவசாய விஞ்ஞானிகளும், ஆராய்ச்சியாளர்களும் இது பற்றிக் கருத்துத் தெரிவிக்கையில், உலகத்திலே சிறந்த இனம் யாழ்ப்பாண முருங்கை இனம். இதைவிட்டு நீங்கள் ஏன் இந்த இந்திய Hybrite கலப்பினவகைகளை விரும்புகிறீர்கள் எனக் கேள்வி எழுப்புகின்றனர். எனவே எமது சூழலுக் கேற்றவாறு வளர்ந்து நீண்டகாலம் பயன்தரக் கூடிய யாழ்ப்பாணத்து இனங்களை விருத்தி செய்யலாமே! என்று ஆதங்கப்படுகிறார் நகுலேஸ்வரன்.
முருங்கை விடயத்தில் மட்டுமல்ல பல விடயங்களில் எம்மிடையே காணப்பட்ட பல சிறப்புகளைத் தொலைத்துவிட்ட இனமாகத் தமிழ் இனம் காணப்படுகிறது. அத்துடன் அந்நியர்களிடமுள்ள எமக்கு ஒவ்வாத பல தரம் குறைந்த பழக்க வழங்களுக்கு அடிமையாகிச் சுயத்தை இழந்துவிட்ட சமூகம் வாள் கொண்டு அலைவதைவிட்டு வேறென்னத்தை செய்ய முடியும்.

1 comment:

Unknown said...

MAATRU SINDHANAI... VAZHTHUKAL IYA...