இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் சமீபத்திய அறிக்கை.

.
இலங்கை மாணவர் கல்வி நிதியம்  - அவுஸ்திரேலியா (இணை)
                   CEYLON  STUDENTS  EDUCATIONAL  FUND  (Inc)
                  P.O.Box  317. Brunswick, Victoria, 3056, Australia
   kalvi.nithiyam@gmail.com                                           www.csefund.org
அவுஸ்திரேலியாவில் இயங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியம் கடந்த 2017 மே 10 ஆம் திகதி முதல் ஜூன் 12 ஆம் திகதி வரையில் இலங்கையில் வடக்கு, கிழக்கு மற்றும் கம்பஹா பிரதேசங்களில் மேற்கொண்ட பணிகள் பற்றிய குறிப்புகள்:



அவுஸ்திரேலியாவில் கடந்த 1988 ஆம் ஆண்டு முதல் இயங்கிவரும் இலங்கை மாணவர் கல்வி நிதியம் (Ceylon Students Educational Fund ), தனது பணியில் 29 ஆண்டுகளை நிறைவுசெய்துகொண்டு, தொடர்ந்தும் செயல்படுகிறது.
இலங்கையில் நீடித்த போரினாலும் இயற்கை அநர்த்தங்களினாலும்  தாய், தந்தையரை அல்லது குடும்பத்தின் மூல உழைப்பாளியை இழந்த ஏழைத்தமிழ்ச்சிறார்களின் கல்விக்கான தேவைக்கு உதவும் எமது நிதியம், கடந்த காலங்களில் மாணவர்களின் கல்வி முன்னேற்றம் குறித்தும் அக்கறை காண்பித்துவந்துள்ளது.
இலங்கையில் நடைபெறும் க.பொ.த. (சாதாரண தரம் ) (G.C.E O/L) க.பொ.த. (உயர்தரம்) (G.C.E A/L) பரீட்சைகளைத்தொடர்ந்து பல மாணவர்கள் தமது கல்வியை நிறுத்துவதையும் - தொழில் வாய்ப்புகளுக்காக  கல்வியை  இடைநிறுத்துவதையும் நிதியம் அவதானித்திருக்கிறது.
முடிந்தவரையில் நிதியத்தின் உதவிபெறும் மாணவர்கள் தமது உயர்கல்வியை பல்கலைக்கழகம்வரையில் தொடரவேண்டும், அல்லது தொழில்நுட்ப கல்வியை தொடரவேண்டும் என்பதே நிதியத்தின் உறுப்பினர்களின் விருப்பமாகும்.



கடந்த காலங்களில் நிதியத்தின் உதவிபெற்ற வடக்கு, கிழக்கு மற்றும் கம்பஹா பிரதேச மாணவர்களில்  நூற்றுக்கணக்கான மாணவர்கள் பல்கலைக்கழகம் பிரவேசித்து பட்டம் பெற்று சிறந்த தொழில்வாய்ப்புக்களும் பெற்றுள்ளனர். அத்துடன் பலர் வெளிநாடுகளுக்கும் புலம்பெயர்ந்து சிறந்த தொழில்வாய்ப்பு பெற்றுள்ளனர்.

எனவே, தற்பொழுது நிதியத்தின் உதவிபெறும் மாணவர்களும் அத்தகைய உன்னதநிலையை அடையவேண்டுமென்பதற்காக எமது கல்வி நிதியம்,  இலங்கையில் இயங்கும்   நிதியத்தின் தொடர்பாளர் (Coordinators)  அமைப்புகளின்  ஊடாகவும் பாடசாலை அதிபர்கள் மூலமாகவும் மாணவர் தகவல் அமர்வுகளையும் ஒன்றுகூடல்களையும் கடந்த காலங்களில்  நடத்திவருகிறது.
அந்தவகையில் இந்த ஆண்டு (2017) மே மாதம் 10 ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 12 ஆம் திகதி வரையில் கம்பஹா, வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் மாணவர் சந்திப்புகளை நிதியம் நடத்தியது.
நிதியத்தின் சார்பில் நிதியத்தின் துணை நிதிச்செயலாளர் திரு. லெ. முருகபூபதி, நிதியத்தின் பரிபாலனசபை உறுப்பினர்கள் திருவாளர்கள் இராஜரட்ணம் சிவநாதன், அப்புத்துரை சதானந்தவேல், நிதியத்தின் உறுப்பினர் திரு. ந. கபிலன் ஆகியோர் இச்சந்திப்புகளில் கலந்துகொண்டனர்.

கன்பரா இலங்கைத்தமிழ்ச்சங்கத்தின் உதவி
எமது நிதியத்தின் வவுனியா - திருக்கோணமலை மாவட்ட தொடர்பாளர்அமைப்பு, நலிவுற்ற சமூக அபிவிருத்திக்கான தன்னார்வ நிறுவனம் ( Voluntary Organization for Vulnerable Community Development   - VOVCOD) நிதியத்திற்கு விடுத்தவேண்டுகோளில், திருக்கோணமலை மாவட்டத்தில் சம்பூர் மகா வித்தியாலயத்தில் க.பொ.த (உயர்தர வகுப்பு) மாணவர்களுக்கு கற்பிப்பதற்கு  ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாகவும் அதனை நிவர்த்திப்பதற்காக தொண்டர் ஆசிரியர்களை நியமித்து அவர்களுக்குரிய வேதனம் ( Allowance) வழங்குவதற்கு உதவுமாறும் கோரியிருந்தது.
                      எமது நிதியம் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு  நேரடியாக உதவும் அமைப்பாகும்.  இந்த வேண்டுகோள் எமது வேலைத்திட்டத்திற்குள் அமையாததால் நாம் எமது பரிபாலன சபை உறுப்பினர்களுடனும் நிதியத்தின் உறுப்பினர்களுடனும் இது தொடர்பாக ஆராய்ந்தோம்.  இதனையடுத்து , நிதியத்தின் உறுப்பினரும் கன்பரா இலங்கைத்தமிழ்ச்சங்கத்தின் நடப்பாண்டு தலைவருமான திரு. த. ரவீந்திரன் அவர்கள் தமது சங்கத்துடன் இதுவிடயமாக ஆராய்ந்து சம்பூர் மகா வித்தியாலயத்திற்கு  உதவுவதற்கு  முன்வந்தார்.
கன்பரா இலங்கைத்தமிழ்ச்சங்கம் கன்பராவில் இசை நிகழ்ச்சி நடத்தி நிதிசேகரித்து, எமது நிதியத்திற்கு இரண்டாயிரம்  அவுஸ்திரேலியன் வெள்ளிகளை ($2000.00) முதல்கட்டமாக வழங்கியது. 
அத்துடன்,  கன்பராவைச்சேர்ந்த அன்பர்கள் திரு, திருமதி சிவசபேசன் அவர்களும்  இந்தப்பணிக்காக தமது சார்பில் $140.00 வெள்ளிகள் நன்கொடையாக வழங்கியிருந்தனர்.

இலங்கையில் நடந்த மாணவர் சந்திப்புகள்.
குறிப்பிட்ட சம்பூர் மகா வித்தியாலயத்தின் தேவைகருதியும் கம்பஹா மற்றும் வடக்கு -  கிழக்கு பிரதேச மாணவர்களின் நலன்களின்பொருட்டும்  நிதியத்தினால் குறிப்பிட்ட  சந்திப்புகள் கடந்த  மே மாதம் 10 ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 12 ஆம் திகதி வரையில்  இலங்கையில் நடைபெற்றன.
கம்பஹாவில்
இலங்கையின் மேற்குப்பிரதேசம் கம்பஹா மாவட்டத்தில் இயங்கும் நீர்கொழும்பு விஜயரத்தினம்  இந்து மத்திய கல்லூரியில் பயிலும் நிதியத்தின் உதவிபெறும்   மாணவர்களுக்கான தகவல் அமர்வும்  2017 மே, ஜூன்  மாதங்களுக்கான நிதிக்கொடுப்பனவு வழங்கும் நிகழ்வும்,  கல்லூரி அதிபர் திரு. புவனேஸ்வரராஜா தலைமையில்  12-05-2017  ஆம்  திகதி வெள்ளிக்கிழமை  கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் நிதியத்தின் உதவி பெறும் மாணவர்களும் - அவர்களின் தாய்மாரும் கல்லூரி ஆசிரியர்களும் பழைய மாணவர் சங்கத்தின் பிரதிநிதிகளும் நிதியத்தின் (சிங்கப்பூர் ) உறுப்பினர் திரு. ப. விக்னேஸ்வரனும் -   திரு. லெ. முருகபூபதியும் கலந்துகொண்டனர்.


யாழ்ப்பாணத்தில் 
யாழ்ப்பாணம் அரசாங்க செயலகத்தில் (யாழ். கச்சேரி) 20-05-2017 ஆம் திகதி சனிக்கிழமை முற்பகல் 11 மணி முதல் மாலை 4.00 மணிவரையில் இரண்டு அமர்வுகளில் மாணவர் ஒன்றுகூடலும் தகவல் அமர்வும் நிதிக்கொடுப்பனவு நிகழ்வும் இடம்பெற்றன.
 யாழ். மாவட்டத்தின் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் தொடர்பாளர் அமைப்பான சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் ( Centre for Child Development )  நிறைவேற்றுப்பணிப்பாளர் திரு. சொ. யோகநாதன் தலைமையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. யாழ். சிறுவர் அபிவிருத்தி நிலைய பரிபாலன சபை உறுப்பினர், திரு. த. ஜெயந்தன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
யாழ். சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் ஸ்தாபகர்களில் ஒருவரான திரு. பாலதயானந்தன் மற்றும் யாழ். அரசாங்க அதிபர் திரு. என்.வேதநாயகம் மற்றும் யாழ். சாந்திகம் அமைப்பைச்சேர்ந்த திரு. சந்திரசேகர சர்மா, தன்னார்வத்தொண்டர் திருமதி கௌரி அனந்தன், இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் பிரதிநிதிகள் திருவாளர்கள் லெ. முருகபூபதி, அப்புத்துரை சதானந்தவேல்  ஆகியோரும் இந்நிகழ்வில்  கலந்துகொண்டனர்.
முற்பகல் அமர்வில் மாணவர்களினதும் சில தாய்மாரினதும் உரைகள் இடம்பெற்றன. அதனைத்தொடர்ந்து  2017 ஏப்ரில், மே, ஜூன் மாதங்களுக்கான நிதிக்கொடுப்பனவு  மாணவர்களுக்கு  வழங்கப்பட்டது.
வருகைதந்திருந்த மாணவர்களுக்கும் தாய்மாருக்கும் பாதுகாவலர்கள் மற்றும் மாணவர் கண்காணிப்பாளர்களுக்கும் சிற்றுண்டிகளும் மதியபோசன விருந்தும் வழங்கப்பட்டன.


பிற்பகல் நடைபெற்ற இரண்டாவது அமர்வில் க.பொ.த. (சாதாரண தரம் ) (G.C.E O/L) க.பொ.த. (உயர்தரம்) (G.C.E A/L) மாணவர்களுடனான சந்திப்பு இடம்பெற்றது. 
இச்சந்திப்பில் குறிப்பிட்ட வகுப்புகளின் அரசாங்க பரீட்சைகளைத்தொடர்ந்து வரும் விடுமுறை காலங்களில் மாணவர்களினால் தொடரக்கூடிய பயிற்சிகள் பற்றியும், பரீட்சை முடிவுகளையடுத்து மாணவர்கள் தொடரவிருக்கும் தொழிற் கல்வி குறித்தும்  ஆராயப்பட்டது.  மாணவர்களுக்கு பயன்தரக்கூடிய ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
முல்லைத்தீவில்
முல்லைத்தீவில்  21-05-2017 ஆம்  திகதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல் விசுவமடு   கணினி வள பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற  நிகழ்ச்சியில் சிறுவர் அபிவிருத்தி நிலைய திட்ட அலுவலர் திரு. ந. பாஸ்கரன், திட்ட இணைப்பாளர் திரு. சி இன்பரூபன், யாழ். சிறுவர் அபிவிருத்தி நிலைய பரிபாலன சபை உறுப்பினர் திரு. த. ஜெயந்தன் மற்றும் திரு. லெ. முருகபூபதி ஆகியோர் உரையாற்றினர்.
மாணவர்களின் சுயஆற்றலை வெளிப்படுத்தும் நிகழ்ச்சிகளும் தாய்மாரின் கருத்துரைகளும் இடம்பெற்றன. முல்லைத்தீவு மாவட்ட மாணவர்களுக்கான 2017 ஏப்ரில், மே, ஜூன் மாதங்களுக்கான நிதிக்கொடுப்பனவும் வழங்கப்பட்டது.
முல்லைத்தீவு மாவட்ட நிகழ்விலும் அனைவருக்கும் மதியபோசன விருந்து வழங்கப்பட்டது. 
வவுனியாவில்
வவுனியாவில்   21-05-2017 ஆம்  திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு,  வவுனியா வேப்பங்குளத்தில் இயங்கும் நலிவுற்ற  சமூக அபிவிருத்திக்கான தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் (VOVCOD) பணிமனையில் மாணவர் ஒன்றுகூடல் நடைபெற்றது.
வவுனியா நிகழ்ச்சிகளை, வவுனியா சமூக அபிவிருத்திக்கான தொண்டு நிறுவனத்தின் இணைப்பாளர்  செல்வி நிரோஷினி ஒழுங்குசெய்திருந்தார்.
                          எமது கல்வி நிதியம் ஆரம்பிக்கப்பட்ட 1988 ஆம் ஆண்டு காலப்பகுதியில்  உதவிபெற்ற  வவுனியா மாவட்ட  மாணவி செல்வி கிருஷ்ணவேணி சுப்பையா     ( திருமதி கிருஷ்ணவேணி நந்தபாலன் )   தமது கல்வியை நிறைவுசெய்து பட்டதாரியாகி,  வவுனியா மாவட்டம்  பூந்தோட்டம் மகா வித்தியாலயத்தில்  அதிபராக பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தகுந்தது.  இவரும்  இம்முறை வவுனியாவில் நடைபெற்ற மாணவர் ஒன்றுகூடலில் கலந்துகொண்டு உரையாற்றினார். 
க.பொ.த. சாதரண தரம் மற்றும் உயர்தர மாணவர்கள் பரீட்சைகள் நிறைவடைந்ததும் தொடரவேண்டிய பயிற்சி நெறிகள் குறித்த தகவல் அமர்வும்  இடம்பெற்றது.  குறிப்பிட்ட தகவல் அமர்வில் வவுனியா பூவரசங்குளம் மகா வித்தியாலய கணித ஆசிரியை செல்வி புனிதா சுப்பையாவும் உரையாற்றினார். வவுனியா சமூக அபிவிருத்திக்கான தொண்டு நிறுவனத்தின் திட்ட இணைப்பாளர் திரு. வணன் நன்றியுரையாற்றினார்.

வவுனியா மாவட்ட மாணவர்களுக்கான  2017 மார்ச், ஏப்ரில், மே, ஜூன் ஆகிய நான்கு மாதங்களுக்கான நிதிக்கொடுப்பனவு  வழங்கப்பட்டது.
ஒரு மாணவருக்கு  துவிச்சக்கரவண்டி 
வவுனியா செட்டிகுளம் மகா வித்தியாலயத்தில் 9 ஆம் ஆண்டில் பயிலும் மாணவன் செல்வன் யோ. தர்சனின் வேண்டுகோளை ஆராய்ந்து, அவரது பாடசாலை மற்றும் மாலைநேர வகுப்பு போக்குவரத்து வசதிக்காக ஒரு புதிய துவிச்சக்கர வண்டி எமது நிதியத்தினால் வழங்கப்பட்டது. 
சம்பூரில் 
கிழக்கு மாகாணம் -  திருக்கோணமலை மாவட்டத்தில் மூதூர் பிரதேசத்தில் சம்பூர் என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது சம்பூர் மகா வித்தியாலயம். கூனித்தீவு, இளக்கந்தை, சூடக்குடா, கடற்கரைச்சேனை,  கட்டைபறிச்சான் ஆகிய கிராமங்களைச்சேர்ந்த மாணவர்களுக்கான ஒரே ஒரு உயர்கல்விக்கான பாடசாலையே குறிப்பிட்ட சம்பூர் மகா வித்தியாலயம்.
கடந்த கால போர்நடவடிக்கைகளில் பெரிதும் பாதிக்கப்பட்ட இந்தப்பிரதேச கிராமங்களில் மக்கள் அடிக்கடி இடம்பெயர்ந்துள்ளனர். இப்பிரதேசத்தில் எமது நிதியம் கடந்த (1988 -1999) காலத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு உதவியிருக்கிறது. எமது முன்னாள் திருக்கோணமலை மாவட்ட கண்காணிப்பாளர் பல் மருத்துவர் ஞானசேகரன் அவர்களும் காணாமல் போனவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தகுந்தது.) 
இந்தப்பிரதேசத்தில் பல மாணவர்கள் போரிலே தமது தந்தையரை இழந்து பெரும் சிரமத்துடனேயே கல்வியைத்தொடருகின்றனர். இந்நிலையில் இப்பிரதேசத்தின் ஒரே ஒரு தமிழ் மகா வித்தியாலயமான சம்பூர் மகா வித்தியாலயத்தில்  க.பொ.த. (உயர்தரம் ) பயிலும் ஐம்பதிற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு தமிழ், சமயம், புவியியல் கற்பிப்பதற்கு ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது.
கலைப்பிரிவு மாத்திரமே இந்தப்பாடசாலையில் இயங்குகிறது. விஞ்ஞானத்துறையில் மாணவர்கள் கற்பதாயின் வேறு நகரங்களுக்கு செல்லவேண்டியுள்ளது.
இந்நிலையில் குறிப்பிட்ட க.பொ.த. உயர்தரம் (கலைப்பிரிவு) மாணவர்களின் தேவை கருதி எமது இலங்கை மாணவர் கல்வி நிதியத்திற்கு கிடைக்கப்பெற்ற கோரிக்கையை, அவுஸ்திரேலியா - கன்பரா இலங்கைத்தமிழ்ச்சங்கம்  ( Canberra  C.T.A ) பரிசீலித்து ஏற்றுக்கொண்டது.  அத்துடன் எமது நிதியத்தின் உறுப்பினரும்  கன்பரா தமிழ்ச்சங்கத்தின் தலைவருமான  திரு.த. ரவீந்திரன் அவர்களும்  நிதியத்துடன் அவ்வப்போது தொடர்புகொண்டு  தார்மீக  ஆதரவை வழங்கினார்.  
கன்பரா இலங்கைத்தமிழ்ச்சங்கம்  எமது நிதியத்தின் கோரிக்கையை  நிறைவேற்ற முன்வந்தமைக்காக  எமது மனமார்ந்த நன்றியை  மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றோம்.

09-06-2017 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முற்பகல் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் பிரதிநிதிகள் திருவாளர்கள் லெ. முருகபூபதி, இராஜரட்ணம் சிவநாதன் ஆகியோர் சம்பூர் மகா வித்தியாலயத்திற்கு பயணித்தனர்.
அன்றைய தினம் சம்பூர் மகாவித்தியாலய அதிபர் திரு. சோமசுந்தரம் பாக்கியேஸ்வரன் தலைமையில் உயர்தர வகுப்பு மாணவர்களுடனான சந்திப்பும் அவர்களின் கல்வித்தேவை கருதி மூன்று தொண்டர் ஆசிரியர்களுடனான கலந்துரையாடலும் நடைபெற்றது.    திரு. இ. இரத்தினசிங்கம் ( B.A - PGDE)  சமய பாடத்திற்காகவும், ஜனாப் ஏ.எல்.எம். சதாக்( B.A - PGDE)   புவியியல் பாடத்திற்காகவும் திருமதி ராமசீத்தா நாகேஸ்வரன் ( B.A - PGDE)  தமிழ்ப்பாடத்திற்காகவும் தொண்டர் ஆசிரியர்களாக தெரிவுசெய்யப்பட்டனர்.
(* B.A - Bachelor of Arts - PGDE -  Post Graduate diploma in Education )  
இவர்கள் மூவரும் பாடசாலை விடுமுறை நாட்களிலும் மாலைநேரங்களிலும் குறிப்பிட்ட க.பொ. த. உயர்தரவகுப்பு மாணவர்களுக்கான கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுபடுவர்.
இவர்களுக்குரிய முதல் கட்ட நிதிக்கொடுப்பனவு ( Allowance) அன்றைய தினம் சம்பூர் மகா வித்தியாலயத்தின் அதிபர்  திரு. சோமசுந்தரம் பாக்கியேஸ்வரன் முன்னிலையில் வழங்கப்பட்டது.
முதல் கட்ட நிதிக்கொடுப்பனவாக  குறிப்பிட்ட தொண்டர் ஆசிரியர்களுக்கு  2017 ஜூன் - ஜூலை மாதங்களுக்குரிய வேதனம் தலா 14 ஆயிரத்து 400 ரூபா வழங்கப்பட்டது. 
இதன் பிரகாரம் அன்றைய தினம் குறிப்பிட்ட மூன்று தொண்டர் ஆசிரியர்களுக்கும் 43 ஆயிரத்து 200 ரூபா வழங்கப்பட்டது. தொண்டர் ஆசிரியர்களின் கல்வித்தகைமை, மற்றும் கல்விச்சேவை அனுபவம் பற்றிய விபரங்களும் பெறப்பட்டன. 
இதன் பிரகாரம் தெரிவான தொண்டர் ஆசிரியர்களுக்கு மாதம் ஏழு ஆயிரத்து 200 ரூபா மாதந்தம் 2017 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முதல் இரண்டு மாதங்களுக்கு ஒரு தடவை அனுப்பிவைக்கப்படும்.   தொண்டர் ஆசிரியர்களுடனான தொடர்பாளராக சம்பூர் மகா வித்தியாலய ஆசிரியர் திரு. இ. தயாபரன் ( B.A - PGDE)   நியமிக்கப்பட்டுள்ளார். 
இந்நிகழ்வில் கலந்துகொண்ட  வித்தியாலய அபிவிருத்திச்சங்கத்தின் செயலாளர் திரு. கே. குமாரநாயகம் நன்றியுரையாற்றினார்.  அவுஸ்திரேலியாவில்  இலங்கை மாணவர் கல்வி நிதியம் தொடங்கப்பட்ட  காலத்தில்  நிதியுதவி பெற்று கல்வியை நிறைவுசெய்த சம்பூர்  மாணவி செல்வி உதயசந்திரிக்காவின் கணவர்தான்  திரு. கே. குமாரநாயகம் என்பது குறிப்பிடத்தகுந்தது.
சம்பூர் மகா வித்தியாலய க.பொ.த. (உயர்தரவகுப்பு ) மாணவர்களின் கல்வி முன்னேற்றம் தொடர்பான அறிக்கைகள் காலத்துக்காலம் பெறப்பட்டு, இலங்கை மாணவர் கல்வி நிதியத்திற்கும் கன்பரா இலங்கைத்தமிழ்ச்சங்கத்திற்கும் சமர்ப்பிக்கப்படும்.
திருக்கோணமலையில்
திருக்கோணமலை மாவட்டத்தில் எமது நிதியத்தின் தொடர்பாளர் அமைப்பு நலிவுற்ற  சமூக அபிவிருத்திக்கான தன்னார்வ தொண்டு நிறுவனத்தின்    (VOVCOD)  ஏற்பாட்டில் 10-06-2017 ஆம் திகதி சனிக்கிழமை முற்பகல்  மாணவர் ஒன்றுகூடலும் தகவல் அமர்வும் நிதிக்கொடுப்பனவும் நடைபெற்றது.
நிலாவெளியில் அமைந்த மேற்படி தொண்டு நிறுவனத்தின் பணிமனையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் பிரதிநிதிகள் திருவாளர்கள் லெ. முருகபூபதி, இராஜரட்ணம் சிவநாதன். ந. கபிலன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
எமது நிதியத்தின் ஆதரவுடன் தமது கல்வியைத்தொடர்ந்து பட்டதாரிகளான செல்வி டிலானி தனராஜ் ( கிழக்கு பல்கலைக்கழகம் செல்வி அம்மாசி நளினி ( பேராதனை பல்கலைக்கழகம் - External ) ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றினர்.
திருக்கோணமலை மாவட்ட மாணவர்களுக்கான 2017 ஜூன், ஜூலை, ஓகஸ்ட், செப்டெம்பர் ஆகிய நான்கு மாதங்களுக்கான நிதிக்கொடுப்பனவு  மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.    குறிப்பிட்ட மாணவர்களும் க.பொ.த சாதரண தரம் - உயர்தரம் கற்கின்றமையால் பரீட்சைகளுக்குப்பின்னர் தோற்றக்கூடிய பயிற்சி வகுப்புகள் பற்றிய அறிவுறுத்தலும் வழங்கப்பட்டது.
கல்முனையில் 
     அம்பாறை மாவட்டத்தில் கல்முனை பெரியநீலாவணை விஷ்ணு மகா வித்தியாலயத்தில்,12-06-2017 ஆம் திகதி திங்கட்கிழமை  அதிபர் திரு. என். கமலநாதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், வித்தியாலயத்தின் முன்னாள் அதிபர் திருமதி சிவமணி நற்குணசிங்கம், மாணவர்களின் சீர்மீய ஆசிரியை ( Counseling Teacher) திருமதி சுபாஷினி கிருபாகரன் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக பேராசிரியர் செ. யோகராசா, கிழக்கு மாகாண சமூகப்பணியாளர் திரு. த. கோபாலகிருஷ்ணன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
குறிப்பிட்ட வித்தியாலயத்தில் கல்வி பயின்று எமது கல்வி நிதியத்தின் உதவிபெற்று, தென்கிழக்கு பல்கலைக்கழகம் பிரவேசித்து பட்டதாரியான செல்வி கே. ஹர்சினி இந்நிகழ்ச்சிக்கு வருகைதந்து வரவேற்புரை நிகழ்த்தினார் என்பது குறிப்பிடத்தகுந்தது. 
குறிப்பிட்ட மாணவியின் முயற்சியை முன்னுதாரணம் காண்பித்த  வித்தியாலய அதிபர்,  மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தின் அவசியத்தை வலியுறுத்தி உரையாற்றினார். 
கடந்த காலங்களில் எமது நிதியத்தின் கண்காணிப்பாளராக சிறப்பாக  இயங்கிய   இவ்வித்தியாலயத்தின்  முன்னாள் அதிபர் திரு. சிவமணி நற்குணசிங்கம் அவர்களின் சேவைகளை பாராட்டி திரு. முருகபூபதி நன்றி நவின்றார்.
பெரியநீலாவணை விஷ்ணு மகா வித்தியாலயத்திலிருந்து எமது நிதியத்தின் உதவி பெறும் மாணவர்களுக்கான 2017 மே, ஜூன், ஜூலை, ஓகஸ்ட் மாதங்களுக்கான நிதிக்கொடுப்பனவு வழங்கப்பட்டது.
முக்கிய குறிப்பு: எஎமது கல்வி நிதியத்தின் தொடர்ச்சியான பணிகளுக்காக கன்பரா இலங்கைத்தமிழ்ச்சங்கத்தின் சார்பில் மேலும் ஆயிரம் அவுஸ்திரேலியன் வெள்ளிகள் ($1000-00) நன்கொடையாக வழங்கப்பட்டிருக்கிறது.  இலங்கைத்தமிழ்ச்சங்கத்தின் தலைவர் திரு. ரவீந்திரன்.

நன்றி
சுமார் ஒரு மாதகாலத்துள் மேற்குறித்த பணிகளை நிறைவேற்றுவதற்கு ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்கிய எமது நிதியத்தின் இலங்கைத்  தொடர்பாளர் அமைப்புகளுக்கும், அதிபர்கள், ஆசிரியர்கள், மற்றும் சீர்மீய ஆசிரியர்களுக்கும் ( Counseling Teachers )
மாணவர் ஒன்றுகூடலில் இடம்பெற்ற விருந்துபசாரங்களுக்கான செலவுகளை  பொறுப்பேற்ற  நிதியத்தின் உறுப்பினர்கள் திருமதிகள் வித்தியா ஶ்ரீஸ்கந்தராஜா, மகாதேவி முருகையா, துளசி கிருஷ்ணகுமார், மாலதி முருகபூபதி, சத்தியா அரசரட்ணம், திரு. கணேசலிங்கம் மற்றும்  அகிலா ஶ்ரீதரன் ஆகியோருக்கும்,
யாழ்ப்பாணம் அரசாங்க செயலகத்தின் ( கச்சேரி) மாநாட்டு மண்டபத்தை மாணவர் ஒன்றுகூடலுக்காக வழங்கிய  அரச அதிபர் திரு. என்.வேதநாயகம் அவர்களுக்கும்,
சம்பூர் மகா வித்தியாலயத்தின் உடனடித்தேவைக்கு எமது நிதியம் ஊடாக உதவமுன்வந்துள்ள கன்பரா இலங்கைத்தமிழ்ச்சங்கத்திற்கும் அதன் தலைவர் திரு. த. ரவீந்திரன் அவர்களுக்கும்,
 குறிப்பிட்ட பயணத்திற்கான விமானக்கட்டணத்தில் ஒரு பகுதியை ஏற்றுக்கொண்ட  நிதியத்தின் துணைத்தலைவர் மருத்துவர் D. ரவீந்திரராஜா (Canberra) அவர்களுக்கும்,
நிதியத்தின் பணிகள் பற்றிய செய்திகளை வெளியிட்ட இணையத்தளங்கள், செய்திப்பத்திரிகைகள் மற்றும் முகநூல்  ஊடகங்களுக்கும் நிதியத்தின் வேண்டுகோளை ஏற்று தொடர்ந்தும் இணைந்திருக்கும் நிதியத்தின் உறுப்பினர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றியைத்தெரிவித்துக்கொள்கின்றோம். 



















No comments: