கவி விதை - 24 - பெறுமதி - -- விழி மைந்தன் --

.


சின்னஞ்சிறு கிளியாய், செல்வக்   களஞ்சியமாய்,  அந்த வீட்டில் ஒரு குழந்தை இருந்தது.

வண்டுக் கண்களை  அகல விரித்து வருவோரைப்பார்த்தது. 

மதுரக் கலசம்   சிந்தியது போல் மழலை மொழிந்தது. 

வானத்தில்  இருந்து வந்த குட்டித்தேவதை மண்ணில்  வளர்வதென  வளர்ந்து வந்தது.

தந்தையும் அன்னையும் வேலைக்குப்போகும் தனிக்குடித்தனம் அது. வேறு யாரும் கிடையாது வீட்டில். பொருட்செல்வத்தினால்  குறைவில்லை அவர்களுக்கு. பிள்ளைக்கு  என்றால் அள்ளிச்  செலவழிப்பார்கள். கேட்டதெல்லாம் வாங்கிக்  கொடுப்பார்கள். விளையாட்டுப் பொருட்களும், விரும்பிய  தின்பண்டங்களும், அழகிய  உடைகளும், அதிகமாகவே கிடைத்து வந்தன அந்தக் குழந்தைக்கு.

காலை விடிந்து, குழந்தை கண்மலர்கள்  திறக்கு  முன்பே தூக்கி  விடுவார்கள். அரைத்தூக்கத்தில் உடை  அணிவித்து, உணவூட்டி, அவசர அவசரமாய்ச் செவிலியர் வீட்டுக்கு அழைத்துச்  செல்வார்கள். அன்பு முத்தம் கொடுத்து இறக்கி விட்டுவிட்டு வேலைக்கு ஓடி விடுவார்கள்.   மாலையில் வந்து வீட்டுக்கு அழைத்து  வருவார்கள். வரும்போது, இனிப்புப்பண்டமோ, விளையாட்டுப்பொருளோ  கொண்டு வருவார்கள், ஒரு இலஞ்சம் போல!

வார இறுதிகள், கண்மூடித் திறக்க முன் மறைந்து விடும்.அகவை   ஏற  ஏற, அந்தத் தளிருக்கு அலுத்து வந்தன தின்பண்டங்கள். விளையாட்டுப்பொருட்களில் விருப்பமும் குறைந்து வந்தது. எதுவானாலும் ஒரு தடவை விளையாடி விட்டு எறிந்து  விடும்.  இன்னும் இன்னும் அதிக விலைக்கு வாங்கி வந்தார் அப்பா. எதைக் கொடுத்தாலும்  இரண்டொரு நாளில் அலுத்துப்போனது பிள்ளைக்கு. இனி எதை வாங்கிக் கொடுப்பதென்று புரியவில்லை பெற்றோருக்கு.

இப்படியாய்  அந்த இளந்தளிர் வளர்கையிலே,  இல்லம் வந்தார் ஓர் உறவினர்.


இன்னோர் ஊரில் இருந்து  இரயிலில் வந்து  இறங்கிய அந்த  முதியவரை, அப்பா 'ஸ்டேஷன்' சென்று தம் காரில் அழைத்து வந்தார்.

வந்தவர் மெத்த  வசதியானவர்  அல்ல. வாழைப்பழச்  சீப்பொன்றும், குழந்தைக்கு மிகச் சிறிய குரங்குப் பொம்மை ஒன்றும்  கையுறையாகக்  கொண்டு வந்தார்.

அப்பா, அம்மா கொஞ்சம் ஐசுவர்ய கர்வம்  உடையவர்கள். கையுறைகளை அவர்கள் கணக்கில் எடுப்பதில்லை. 'எங்களிடம் இல்லாத எதைத்   தரப்போகிறார்கள்' என்ற இறுமாப்பு உண்டு.  ஆனால், எடுத்தெறிந்து  பேசும்  இயல்பற்றவர்கள். குப்பைக்குள் போடும் எண்ணம் இருந்தாலும்  கொடுப்பதைப்  பண்பாக வாங்கி நன்றி சொல்வார்கள்.

குரங்குப் பொம்மையைக், காரில்  வரும் போதே அப்பா கவனித்தார்.

" இதுவெல்லாம் ஒரு 'ரோய்' என்று என் மகள் எடுப்பாளா?   எவ்வளவோ செலவழித்து, விந்தை பல  புரியும் மின்னியக்கப்  பொம்மை பல வேண்டிக் கொடுத்தும்  விளையாடுகிறாள் இல்லை. இந்த மலிவான குரங்கிற்கு  'பாட்டரி' போடவே முடியாது போலும்.  திரும்பியும்  பார்க்க மாட்டாள்  இந்தச் சின்னப் பொம்மையை' என்று மனத்தில் நினைத்தார்.

'எதற்கு நீங்கள்  இதெல்லாம் வாங்கி வந்து சிரமப்  பட வேண்டும்? இவளிடம் நிறைய இருக்கிறது!" என்றார் அப்பா, பாதி ஸ்துதியாகவும், பாதி ஏளனத்தைப்  பதுக்கி  வைத்தும்.

வந்த மனிதர்  இதை வந்தனையாகவே  எடுத்தார். இரண்டகமான  இரண்டாவது அர்த்தத்தை மனதில் எடுக்கவில்லை. "இல்லைப்   பாருங்கோ.  இதிலென்ன சிரமம்?" என்று சொல்லி விட்டார்.

வாசல் திறந்து  உள்ளே வந்த  வயசாளியை, அன்னையின்  முதுகின்பின்  ஒளிந்து நின்றவாறே, அங்கயற்கண்களை அகல விரித்துப்  பார்த்துக்கொண்டிருந்தது குழந்தை.

"குட்டி அம்மா இங்கே வாங்கோ"   என்று கொஞ்சி அழைத்து, தனது எளிமையான பரிசை எடுத்து நீட்டினார் விருந்தாளி.

குதித்தோடிச் சென்று பெற்றுக் கொண்டது குழந்தை.  வாயெல்லாம் பல்லாக ஓடிச் சென்று வாங்கிக் கொண்டது. வந்தவர் மடி  மீதேறி   அமர்ந்தும் கொண்டு விட்டது.

வந்தவர் சிறிது நேரம் இருந்தபின் போய் விட்டார்.

அன்று முழுவதும் குழந்தை குரங்குப்  பொம்மையுடன் விளையாடிற்று. அலுப்பு வருவதாகவே தெரியவில்லை.  குழந்தை ஓடிய போது, கயிற்றில் கட்டிய குரங்குப் பொம்மை காலோடு  இழுபட்டது.  குழந்தை விளையாட்டுக்காரை உருட்டிய போது, குரங்குக்குட்டி  காரில் ஏறி நின்றது. அம்மா குழந்தைக்குக்   கதை சொன்ன போது, குரங்குக்குட்டி குழந்தையின்  மடியில்  குந்தி இருந்தது.

அப்பா அம்மாவுக்கு அதிசயம்.

இரவு  தூங்கும்  போது, குழந்தை அந்தக் குரங்குக்  குட்டியைக்  கட்டி  அணைத்தபடி   தூங்கியதை அப்பா  கவனித்தார்.   அடுத்த  நாளும்,  தான்  அமெரிக்காவில் வாங்கி வந்த அழகிய புகைவண்டி,  மினக்கட்டுத்  தேடி அன்னை வாங்கிய விலை உயர்ந்த   விமானம் என்பவற்றுடன்,  குரங்குப் பொம்மையையும் தன்  குட்டி  மகள் வைத்து விளையாடியதைக்  கண்டார்.

"இந்தக் குரங்கு வந்தது உனக்கு மிக்க குதூகலம் போலிருக்கிறதே?" என்று கேட்டார்.

"ஆம் அப்பா" என்று அழகாய்ச் சிரித்தது பிள்ளை.

"ஏன்  அப்படி? என்ன விசேஷம் இதில்?" என்று தந்தை கேட்டார்.

"அப்பா, இவ்வளவு நாளும், எனக்கு வேண்டிய  விளையாட்டுச் சாமான்கள்  தருவதற்கு அம்மாவும் அப்பாவும் தான் இருக்கிறார்கள் என்று நினைத்தேன்.  வேறு யாரும்  எனக்கு விளையாட்டுப்  பொருள்  வாங்கித் தந்ததில்லை. இப்போது, மூன்றாவதாக ஒருவரும் எனக்கு விளையாட்டுப் பொருள் வாங்கித் தர ஏற்பட்டு  விட்டார். அதனாலே தான் எனக்கு ஆனந்தம்" என்று மொழிந்தது,  தனிக்  குடும்பத்தில்  வந்து பிறந்த அந்தத் தளிர்.

அப்பா மகளை அணைத்துக்  கொண்டார்.

இப்போதெல்லாம், அந்த வீட்டுக்கு  வரும் விருந்தினர்கள் கையில் விளையாட்டுப் பொருள் ஒன்றை வாசலிலேயே வைத்து வழங்குகிறார் தந்தை. கூடவே ஒரு கோரிக்கையையும் வைக்கிறார்.

"குறை நினைக்காமல் இதைக் கொடுத்து விடுங்கள் என் குழந்தையிடம். என்  கையால் பெறுவதை விட, உங்கள் கையால் வாங்குவதில் மகிழ்ச்சி கொள்ளும்,  எம் வீட்டிலே பூத்த மலர்!"

வருபவர்கள் விழிக்கின்றனர்.

No comments: