இந்திய தேசிய கீதம் உருவான வரலாறு - ராபியா குமாரன்,

.

(நான் எழுதி 2012ஆம் ஆண்டு சமரசம் இதழில் வெளியான கட்டுரை. ஜன கண மன, சாரே ஜஹான்சே அச்சா, வந்தே மாதரம் ஆகிய மூன்று பாடல்களின் பின்னணி, வரலாற்று நிகழ்வுகள், சர்ச்சைகள் ஆகியவற்றை அலசி எழுதப்பட்ட கட்டுரை. வந்தே மாதரம் பாடல் குறித்த சர்ச்சைகள் நாடு முழுவதும் எழுந்துள்ள நிலையில் இக்கட்டுரையை மீள்வாசிப்பு செய்வது அவசியம் என்று கருதுகிறேன்.)

1947, ஆகஸ்ட் 14 ஆம் நாள் இரவு. கடிகார முள் 11.59யைக் கடந்து 12.00 மணியை அடைந்தது.  சுதந்திரக் காற்று இந்தியா முழுவதும் வீசத் தொடங்கி, ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் சுவாசக் குழலையும் ஈரப்படுத்தியது.
நாடாளுமன்றத்தில் கூடியிருந்த அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்களுக்கு மத்தியில் திருமதி. சுஸேதா கிருபாளினி மற்றும் டாக்டர். சுசீலா நய்யார் ஆகியோர்,
'சாரே ஜஹான்சே அச்சாஹ், ஹிந்துஸ்தான் ஹமாரா
ஹம் புல்புல்ஹேன் இஸ்கி, ஏ குல்ஸிதான் ஹமாரா..'
என்று பாடிய பாடல் இந்தியாவின் சுதந்திரத்தை பிரகடனம் செய்தது.

ஆம், சுதந்திர இந்தியாவில் தேசிய கீதமாய் முதன் முதலில் ஒலித்தது அல்லாமா முஹம்மது இக்பாலால் எழுதப்பட்ட, புகழ்பெற்ற இப்பாடலே...
தற்போது இந்தியாவின் தேசிய கீதமாக இருக்கும் 'ஜன கண மன' என்னும் பாடலுக்கு சென்ற டிசம்பர் மாதம் 27ஆம் தேதி நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டுவிட்ட நிலையில், இந்தியாவின் தேசிய கீதம் உருவான வரலாற்றை அலசுவதற்காகவே இக்கட்டுரை.

இந்திய நாட்டின் சுதந்திரத்திற்குப் பின்னர் தேசிய கீதத்தை தேர்ந்தெடுக்கும் பொருட்டு மூன்று பாடல்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
அவை,

இரவீந்திரநாத் தாகூர் எழுதிய, 'ஜன கண மன...'
பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய, 'வந்தே மாதரம்'
அல்லாமா முஹம்மது இக்பால் எழுதிய,  'சாரே ஜஹான்சே அச்சா' என்னும் பாடல்கள்.

இம்மூன்று பாடல்களின் பின்னணியை முதலில் பார்க்கலாம்.
காங்கிரஸின் எதிர்ப்பால் வங்கப் பிரிவினையை திரும்பப் பெற்று, உத்தரவு பிறப்பித்த மன்னர் ஐந்தாம் ஜார்ஜை வரவேற்கும் பொருட்டு 1911 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் எற்பாடு செய்யப்பட்டிருந்த காங்கிரஸின் மாநாட்டின் இரண்டாவது நாளான டிசம்பர் 27 அன்று  'ஜன கண மன' பாடல் முதன் முதலாகப் பாடப்பட்டது.


 1882 ஆம் ஆண்டு பக்கிம் சந்திர சாட்டர்ஜி என்னும் வங்காள எழுத்தாளர் 'ஆனந்த மடம்' என்னும் நாவலை வெளியிட்டார்.  காளி என்னும் தெய்வத்தின் பக்தர்கள் சுதந்திர தேவியை காளியாகவும், காளியை சுதந்திர தேவியாகவும் பாவித்து,
'சுஜலாம் சுபலாம் மபஜய சீதளாம்
சஸ்ய சியாமளாம் மாதரம்'
எனத் தொடங்கிப் பாடும் பாடலாக வந்தே மாதரம் பாடல் 'ஆனந்த மடம்' நாவலில் வருகிறது.

இந்தியாவின் பெருமையை பறைசாற்றும் விதமாக 1904 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16 ஆம் நாள் 'இத்திஹாத்' என்னும் வார இதழில் முதன் முறையாக வெளிவந்த பாடலே முஹம்மது இக்பாலின்
'சாரே ஜஹான்சே அச்சாஹ்' என்னும் பாடல்.மேற்கண்ட மூன்று பாடல்களும் சுதந்திரப் போராட்ட காலத்தில் பல்வேறு தளங்களில் பயன்படுத்தப்பட்டன. வந்தே மாதரமும், ஜனகணமனவும் பல்வேறு சர்ச்சைளுக்கு உள்ளானது. 

ஜனகணமன பாடல் ஐந்தாம் ஜார்ஜ் மன்னரை வரவேற்பதற்காக எழுதப்பட்ட பாடல் என்ற சர்ச்சை எழுந்தது.  1911, டிசம்பர் 27 ஆம் நாள் நடைபெற்ற நிகழ்ச்சியில் துவக்கப் பாடலாக ஜனகணமன பாடப்பட்டது.  அதனைத் தொடர்ந்து மன்னரை வரவேற்று ஒரு ஹிந்திப் பாடலை ராம்புஜ் சவுத்திரி என்பவர் பாடினார். அப்பாடலே மன்னரை வரவேற்கும் முகமாக பாடப்பட்ட பாடல். இந்திய மொழிகளைப் பற்றிய பரிட்சயம் இல்லாத ஸ்டேட்ஸ் மேன், இங்கிலீஷ் மேன் போன்ற ஆங்கில பத்திரிக்கைகள் 'ஜன கண மன' மன்னரை வரவேற்பதற்காகவே விசேஷமாக எழுதப்பட்ட பாடல் என்று தவறுதலாக எழுதிவிட்டது என்பது தாகூர் தரப்பினரின் வாதம். தாகூர் ஜன கண மன என்னும் பாடலை ஐந்து பத்திகளாக எழுதினார்.  தேசிய கீதமாகப் பாடப்படுவது அவற்றில் முதல் பத்தி மட்டுமே. (வங்காளதேச நாட்டின் தேசிய கீதமான 'அமர் ஷோனார் பாங்க்ளா' என்னும் பாடலை எழுதியதும் இரவீந்திரநாத் தாகூரே).

ஆங்கிலேயே ஆட்சியின் போது பிரிட்டனின் தேசிய கீதமான புழன ளுயஎந வாந ஞரநநn என்ற பாடல் இந்தியர்களின் மீது திணிக்கப்பட்ட காலகட்டத்தில் அதாவது, 1876 ஆம் ஆண்டே  வந்தே மாதரம் பாடல் எழுதப்பட்டுவிட்டதாகக் கூறப்பட்டாலும் 1882 ஆம் ஆண்டு வெளிவந்த 'ஆனந்த மடம்' என்னும் நாவலில்; வந்தே மாதரம் பாடல் இடம்பெற்ற பின்னரே பிரபலமடையத் தொடங்கியது.

ஆனந்த மடம் நாவலின்படி, 1773 ஆம் ஆண்டு வங்காளத்தில் ஏற்பட்ட பஞ்சத்தின்போது வங்காள நவாபாக இருந்த மீர் ஜாபரை எதிர்க்கும்; நாயகனான பவானந்தன் அரசாங்க கஜானாவை கொள்ளையிடவும், முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலங்களை இடிக்கவும் மக்களை திரட்டும்போது பாடும் பாடலாக வந்தே மாதரம் பாடல் ஆனந்த மடம் நாவலில் வருகின்றது. முஸ்லிம்கள் நாடு கடத்தப்பட வேண்டியவர்கள், கொல்லப்பட வேண்டியவர்கள் என்பன போன்ற கருத்துக்களும் நாவலில் இடம் பெற்றுள்ளது.

'வந்தே மாதரம்' என்னும் சொல்லுக்கு 'தாயே உன்னை வணங்குகிறோம்' என்று பொருள். வந்தே மாதரம் பாடலில் துர்க்கை என்னும் பெண் தெய்வம் பாரத மாதாவாக சித்திரக்கப்பட்டு வணங்குவது போல் இருந்ததால் முஸ்லிம்களின் மத்தியிலும், மதச்சார்பற்ற தலைவர்களின் மத்தியிலும் இப்பாடலுக்கு எதிர்ப்பு கிளம்பியது. 

1908ஆம் ஆண்டு அமிர்தசரசில் நடைபெற்ற முஸ்லிம் மாநாட்டில் தலைமை உரையாற்றிய சையத் அலி இமாம் வந்தே மாதரம் பாடலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அதேபோல் 1923 ஆம் ஆண்டு காக்கி நாடா என்னும் இடத்தில் கூடிய காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் விஷ்ணு திகம்பர் பலுஸ்கர் என்பவர் வந்தே மாதரம் பாடலை பாட முயன்றார். அப்போது காங்கிரஸ் காரிய கமிட்டியின் தலைவராக இருந்த மௌலானா  முஹம்மது அலி இப்பாடல் இஸ்லாத்திற்கு எதிரானது, ஆதலால் இப்பாடலை பாட அனுமதிக்க முடியாது என்று தடுத்தார்.

1937 ஆம் ஆண்டு மதராஸ் மாகாணத்தின் முதல்வராக பொறுப்பேற்ற ராஜாஜி சட்டசபையில் வந்தே மாதரம் பாடலைப் பாடி நிகழ்ச்சிகளை ஆரம்பம் செய்ய வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வர முனைந்தார். அவையில் இருந்த முஸ்லிம்கள் வந்தே மாதரம் பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தீர்மானம் கைவிடப்பட்டது.

ஆரம்பத்தில் தாகூர் வந்தே மாதரம் பாடலை ஆதரித்தாலும் 1939 ஆம் ஆண்டு நேதாஜிக்கு எழுதிய கடிதத்தில் 'வந்தே மாதரம் பாடல் துர்க்கை அன்னையை வணங்குவது போலப் பாடப்பட்டுள்ளது.  இந்தியாவில் இந்துக்கள் தவிர முஸ்லிம்கள் மற்றும் பல மதத்தினர் இருக்கின்றனர்.  எனவே இந்தப் பாடலைத் தேசிய கீதமாக அறிவிக்கக் கூடாது' என்று  தாகூர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மகாத்மா காந்தி, எம்.என். ராய் மற்றும் சுபாஷ் சந்திர போஸ் போன்றோரும் இப்பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். நேதாஜி தனது இந்திய தேசிய படைக்கு (INA) ஜனகணமனவையே கீதமாகக் கொண்டிருந்தார்.

ஆனால் எந்தவித மதக் கருத்துக்கும் இடமளிக்காத,
'பரந்த உலகில் சிறந்தது எங்கள் இந்தியா
இந்திய பூந்தோட்டத்தின் பறவைகள் நாங்கள்
அதன் மணமும் குணமும் எங்கள் உயிர் மூச்சு.....'
என நீளும் சாரே ஜஹான்சே அச்சாஹ் பாடல் பரவலாக அனைத்து தரப்பு மக்களிடமும், தேசிய தலைவர்களிடமும் வரவேற்பைப் பெற்றிருந்தது. வந்தே மாதரம் பாடலின் ஆதரவாளர்கள் மட்டும் சாரே ஜஹான்சே அச்சா பாடலை எழுதியது ஒரு முஸ்லிம் என்ற காரணத்திற்காக புறக்கணித்து வந்தனர். இத்தனைக்கு மத்தியில் இந்தியாவிற்கு சுதந்திரமும் கிடைத்தாகிவிட்டது. 

இந்திய சுதந்திரத்திற்குப் பின் அமைக்கப்பட்ட அரசியல் நிர்ணய சபை இந்தியாவின் சட்ட திட்டங்கள் போன்ற அனைத்து அம்சங்களையும் விவாதம் செய்து முடிவெடுத்தது. இந்தியாவின் தேசிய கீதம் மட்டும் முடிவு செய்யப்படாமல் நிலுவையிலேயே இருந்தது. அரசியல் நிர்ணய சபையின் கடைசி நாளான 1950 ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் நாள் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட டாக்டர். இராஜேந்திர பிரசாத் தலைமையில் கூடிய கூட்டத்தில் விவாதித்து இந்தியாவின் தேசிய கீதம் முடிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அக்கூட்டத்தில் தேசிய கீதம் பற்றி எந்தவித விவாதமும் நடைபெறவில்லை. அதற்கு பதிலாக டாக்டர். இராஜேந்திர பிரசாத் ஓர் அறிக்கையை வெளியிட்டார்.

“There is one matter which has been pending for discussion, namely the question of the National Anthem. At one time it was thought that the matter might be brought up before the House and a decision taken by the House by way of a resolution. But it has been felt that, instead of taking a formal decision by means of a resolution, it is better if I make a statement with regard to the National Anthem. Accordingly I make this statement.


The composition consisting of the words and music known as Jana Gana Mana is the National Anthem of India, subject to such alterations in the words as the Government may authorise as occasion arises; and the song Vande Mataram, which has played a historic part in the struggle for Indian freedom, shall be honoured equally with Jana Gana Mana and shall have equal status with it. (Applause). I hope this will satisfy the Members.”

'ஒரே ஒரு விஷயம் மட்டும் விவாதம் செய்யாமல் நிலுவையில் உள்ளது.  தேசிய கீதம் பற்றிய முடிவுதான் அது.  முன்பு அது பற்றி சபையில் விவாதித்து ஒரு தீர்மானம் நிறைவேற்றலாம் என்று முடிவு செய்யப்பட்டிருந்தது.  ஆனால் ஒரு தீர்மானம் மூலமாக முடிவு செய்வதற்குப் பதிலாக நான் ஓர் அறிக்கை வெளியிடுவது பொருத்தமானதாக இருக்கும் என்று கருதப்பட்டது.  ஆதலால் நான் இந்த அறிக்கையை வெளியிடுகிறேன்.

ஜனகணமன என்ற பாடலின்சொற்களும், இசையும் இந்தியாவின் தேசிய கீதமாக இருக்கும். இந்திய விடுதலைப் போராட்டத்தில் வரலாற்றுப் பங்களித்த வந்தே மாதரம் என்ற பாடலுக்கும் ஜனகணமனவுக்குச் சமமான அந்தஸ்து வழங்கப்படும்.  இந்த அறிவிப்பு உறுப்பினர்களுக்குத் திருப்தி அளிக்கும் என்று நம்புகிறேன்'. என்பதே அந்த அறிக்கை.

இதற்குப் பிறகு தேசிய கீதம் பற்றி விவாதம் ஏதும் நடைபெறவில்லை. ஜனகணமன பாடலை தேசிய கீதமாக அங்கீகாரம் செய்து அரசியல் நிர்ணய சபை கடைசிவரை தீர்மானம் எதையும் நிறைவேற்றவில்லை. ஜனகணமனவை இந்தியாவின் தேசிய கீதமாகவும், வந்தே மாதரம் பாடலுக்கு  ஜனகணமனவுக்குச் சமமான அந்தஸ்தையும் அளித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் சாரே ஜஹான்சே அச்சா பாடலைப் பற்றி எந்தவொரு அறிவிப்பும் இல்லை.

சுதந்திர இந்தியாவில் முதன் முறையாகப் பாடப்பட்ட பாடல்,  1984 ஆம் ஆண்டு விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியரான ராகேஷ் சர்மா விண்வெளியிலிருந்து அன்றைய பிரதமர் இந்திரா காந்தியுடன் உரையாடும் போது பாடிய பாடல், முப்படைகளின் அணிவகுப்புகளில் பாடப்படும் பாடல், இந்தியாவின் முதல் பிரதமரான நேருவால் பல இடங்களில் மேற்கோள் காட்டப்பட்ட பாடல், இந்தியாவின் தொன்மையையும், சிறப்பையும் விளக்குவதில் மற்ற பாடல்களை விட சிறந்த கருத்துடைய பாடல், சுதந்திரத்திற்கு முன் பல அரசு விழாக்களில் துவக்கப் பாடலாகப் பாடப்பட்ட பாடல், மதக் கருத்துக்களுக்கு இடமளிக்காத, சர்ச்சைகளுக்கு உள்ளாகாத பாடல் என பல சிறப்புகளைப் பெற்ற 'சாரே ஜஹான்சே அச்சா' புறக்கணிக்கப்பட்டதற்குக் காரணம் அப்பாடல் பெரியது, இசை அமைப்பதற்கு ஏற்புடையதாக இல்லை என சில காரணங்கள் சொல்லப்பட்டாலும் அப்பாடலை எழுதியது ஒரு முஸ்லிம் என்ற காரணத்தால் புறக்கணிக்கப்பட்டதா? என்ற சந்தேகமும் இந்நேரத்தில் எழாமல் இல்லை.

-ராபியா குமாரன்,
புளியங்குடி.

No comments: