இலங்கையில் பாரதி - அங்கம் 27 - முருகபூபதி

.

பேராசிரியர் கைலாசபதி  இறுதியாக  எழுதிய முன்னுரை


                                                                 
பேராசிரியர் க. கைலாசபதி தமது வாழ்நாளில் ஆயிரக்கணக்கான பக்கங்களை தமது கையினாலேயே எழுதியிருப்பவர். அவருடைய நூல்களின் எண்ணிக்கையிலிருந்தும், பத்திரிகைகள், இதழ்கள், சிறப்புமலர்கள் மற்றும் ஏனைய  படைப்பாளிகளின் நூல்களுக்கு எழுதியிருக்கும்  முன்னுரைகளிலுமிருந்தும்  பல்லாயிரம்  பக்கங்களை அவர்  தமது கையெழுத்தினாலேயே  வரவாக்கியிருப்பதை அறிவோம்.
ஆனால், அவர் சொல்லச்சொல்ல எழுதப்பட்ட ஒரு முதல் உரை வெளிவந்த நூல்  பற்றி அறிந்திருப்போமா...?
அவர் கொழும்பு அரச மருத்துவமனை படுக்கையிலிருந்தவாறே சொல்லச்சொல்ல எழுதப்பட்ட முதல் உரைதான் அவரது இறுதி உரையாகவே  அமையும்  என்று  நாம்  எதிர்பார்த்திருக்கவில்லை.
அந்த உரையை அவர் 27-11-1982 ஆம் திகதி எழுதத்தொடங்கினார். ஆனால், எதிர்பாராத விதமாக அவரைத்தாக்கிய நோயின் உபாதையினால் அவரால் தொடர்ந்தும் எழுத முடியாமல்போனது. எனினும் தான் எடுத்த எந்தக்கடமையிலிருந்தும் தவறாமல் சிறந்த நிருவாகி  என்ற பெயரெடுத்த அந்த ஆளுமை எம்மிடத்தில் அந்தக்கடமையையும்  நிறைவுசெய்து தந்துவிட்டே, 06-12-1982 ஆம் திகதி தமது கண்களை நிரந்தரமாக மூடிக்கொண்டார்.




இந்தச்சம்பவம் இலங்கையில் பாரதி நூற்றாண்டு கொண்டாட்டங்கள் இடம்பெற்ற  காலப்பகுதியிலேயே நடந்தது.
நாடுதழுவிய ரீதியில் பாரதி நூற்றாண்டு விழாக்கள் நடைபெற்றபோதிலும், காற்றில் கலந்த பேரோசையாகவே நிகழ்த்தப்பட்ட உரைகள் ஊடகங்களில் சுருக்கமாக செய்தி வடிவில் வெளியாகின.
ஆனால், அக்காலகட்டத்தில் ஒரே ஒரு நூல்தான் தமிழில்  இலங்கையில் அச்சிடப்பட்டு வெளியானது ஆச்சரியமானது. அதேசமயம்  பாரதி சம்பந்தமான இரண்டு நூல்கள் சிங்களத்தில் வெளியானது பேராச்சரியமானது.
தமிழில் வெளியான நூலின் பெயர்: மகாகவி பாரதி. இதனை எழுதியவர் "எஸ்.தி." என்றும் " திரு"  எனவும்  இலங்கை ஊடகங்களில் நன்கு அறியப்பட்ட  எஸ். திருச்செல்வம்.


யாழ். ஈழநாடு, ஈழமுரசு, முரசொலி ஆகியவற்றிலும் கொழும்பில் தினகரனிலும் பணியாற்றியிருக்கும் எஸ். திருச்செல்வம்,  இலங்கைப்பத்திரிகை உலகில் சவால்களையும் சங்கடங்களையும் மட்டுமல்ல  உயிர் அச்சுறுத்தலுக்கும் ஆளாகியவர். இந்தியாவிலிருந்து அமைதிகாக்க  வந்தவர்களினால் தடுத்து வைக்கப்பட்டவர்.
அந்தப்படைக்கு ஆதரவாக இயங்கிய ஒரு ஆயுதக்குழுவினால் தமது ஏகபுத்திரன் அகிலனையும்  பறிகொடுத்தவர். கனடாவுக்கு புலம்பெயர்ந்து  தமிழர் தகவல் என்ற இதழையும் நீண்ட காலமாக நடத்திவருவதுடன்,  வருடாந்தம்  ஆளுமைகளின் சேவைகளைப்பாராட்டி  விருது வழங்கி கௌரவித்து வருபவர்.
1991 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல்  தொடர்ச்சியாக, தங்குதடையின்றி,  மாதாந்தம்  கனடாவில்  வெளியாகும்  மூத்த தமிழ் இதழ்தான் தமிழர் தகவல்.  ஒவ்வொரு பெப்ரவரி மாதமும் ஆண்டு மலர் வெளியீடும் விருது விழாவும் இடம்பெறுகிறது.  இதுவரை 26 ஆண்டு மலர்கள் வெளியாகியுள்ளன. கனடா உட்பட தமிழர் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலிருந்து பல்வேறு பணிகளுக்காக 239 பிரமுகர்கள் விருதுடன் தங்கப் பதக்கம் பெற்றுள்ளனர்.
கனடியத் தமிழர் சமூகத்தில் விருது வழங்கலை முதன்முதலில் ஆரம்பித்து வைத்த (1992) பெருமை தமிழர் தகவலுக்குரியது. இலண்டன் பி.பி.சி. - தமிழோசை சோ. சிவபாதசுந்தரம், வீரகேசரி ஆசிரியர் க. சிவப்பிரகாசம், ஒலிபரப்பாளர் விமல் சொக்கநாதன்,  கவிஞர் அம்பி, மூத்த பத்திரிகையாளர் பொன். பாலசுந்தரம் (இலண்டன்), ஜேர்மனி வெற்றிமணி சிவகுமாரன், தொழிற்சங்கவாதி ஐ.தி. சம்பந்தன், பேராசிரியர் சேர். சபாரட்ணம் அருள்குமரன், விஞ்ஞானி சஞ்சயன் முத்துலிங்கம் (கலிபோர்னியா), பேராசிரியர் சிவலிங்கம் சிவானந்தன் (மிக்சிகன்), பேராசிரியர்  அஜித் யோகநாதன் (ஜோர்ஜியா), வியட்நாம் யுத்தத்தில் எரிகுண்டினால் காயம்பட்ட கிம் புக் ஆகியோர் கனடாவுக்கு வெளியிலிருந்து  வந்து விருது பெற்றவர்கள் என்பதும் குறிப்பிடத்தகுந்தது.



தமிழர் தகவல் மாதாந்த வெளியீட்டுக்கு அப்பால் பல்துறைசார்ந்தவர்களின் நூல்களை அவ்வப்போது வெளியிட்டுள்ளது. கவிஞர் அம்பி, இலண்டன் நூலகர் என். செல்வராஜா, அதிபர் கனகசபாபதி, கனகேஸ்வரி நடராஜா (சிட்னியில் வசிக்கும் பராசக்தி சுந்தரலிங்கம் அவர்களின் சகோதரி), தங்கம்மா அப்பாக்குட்டி, கவிஞர் வி.கந்தவனம், பண்டிதர் எம்.எஸ். அலெக்சாந்தர், லலிதா புரூடி, பிரெட் பாலசிங்கம் ஆகியோரினது உட்பட  இருபதுக்கும் அதிகமான நூல்கள் இதுவரை வெளியிடப்பட்டுள்ளன.
திருச்செல்வம்  இலங்கையில்  வாழ்ந்த இறுதிக்காலத்தில்  முரசொலி என்ற   நாளிதழை அவரே முதலிட்டுத் தொடக்கியவர். பல இலக்கியப்படைப்புகளுக்கு களம் தந்து அவற்றை நூலுருவிலும் வெளியிட  ஆவனசெய்தவர்.
1980 - 1982 காலப்பகுதியில் கொழும்பு கலை, இலக்கிய நண்பர்கள் என்ற அமைப்பைத்தோற்றுவித்து,  தலைநகரில் பல கலை, இலக்கிய நிகழ்ச்சிகளையும் சந்திப்புகளையும் பாராட்டு நிகழ்வுகளையும் நடத்துவதில் தீவிரமாக முன்னின்று உழைத்தவர்.
பாரதி நூற்றாண்டு காலத்தில்  இலங்கையில் தமிழ்ப்பாடசாலைகள் மட்டத்தில் நடத்தப்பட்ட பேச்சுப்போட்டிகளுக்கு  தேவைப்பட்ட குறிப்புகளை  மாணவர்கள் புரியும் வண்ணம்  எளியமுறையில் எழுதப்பட்ட  நூல்கள் இருக்கவில்லை  என்ற  பெருங்குறையை போக்கியவர்தான்  எஸ். திருச்செல்வம்.
குறிப்பிட்ட அந்த நூலின் முதல் உரையில் இறுதிப்பந்திகளை பேராசிரியர் கைலாசபதி படுக்கையிலிருந்து சொல்லச்சொல்ல எழுதி முடித்தார் எஸ்.தி.
24 பக்கங்கள் கொண்ட இச்சிறுநூலுக்கு இலக்கிய கலாநிதி பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்கள் வாழ்த்துரை வழங்கியுள்ளார்.
" மனிதர்களை மாபெரும் சமுதாயப்பிரச்சினைகள் எதிர்கொள்கின்றன. மற்றவர்களைவிட  யார் இந்தப்பிரச்சினைகளைத்தீர்ப்பதற்கு அதிகமாகப் பணிபுரிகிறார்களோ அவர்களைத்தான் மகா புருஷர்கள் என்று அழைக்கின்றோம். சுப்பிரமணிய பாரதி தனது காலத்து - யுகத்து கலை, இலக்கிய, தத்துவப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு பெருமளவில் உதவியவன் என்பதனாலேயே அவனை மகாகவி என்றும் யுகக்கவி என்றும் போற்றுவதோடு அவனது நூற்றாண்டு நிறைவையும் நன்றியுணர்வுடன் நினைவு கூருகின்றோம்." என்று இந்த நூலுக்கு முதலுரை வழங்கியிருக்கிறார் கைலாசபதி.
இனிவரும் அங்கங்களில் இலங்கையில் இதுவரையில் வெளியான பாரதிஇயல் சார்ந்த நூல்கள் பற்றிய மதிப்பீடுகளை பதிவுசெய்வோம்.
பாரதியின் மெய்ஞ்ஞானம் ( ந. இரவீந்திரன்) - பாரதி கண்ட சமுதாயம் ( இளங்கீரன்) பாரதி தரிசனம் ( தொகுப்பு - ச. அமிர்தநாதர்) - பாரதியார் சிந்தனைகள் ( க. அருணாசலம்) மகாகவி பாரதி ( எஸ். எம். ஹனிபா) இருமகா கவிகள் ( க. கைலாசபதி) வள்ளுவன் முதல் பாரதிதாசன் வரையில் ( சி. தில்லைநாதன்) பாரதி பிள்ளைத்தமிழ் ( க.த. ஞானப்பிரகாசம்) - பாரதியின் சக்திப்பாடல்கள் ( சொக்கன்) - பாரதியின் பெண்விடுதலை ( சித்திரலேகா மௌனகுரு) பாரதியாரும் பாஞ்சாலி சபதமும் ( அகளங்கன்) - பாரதியின் கன்னிக்குயிலின் இன்னிசைப்பாட்டு ( மனோன்மணி சண்முகதாஸ்) - ஈழம் வருகிறான் பாரதி ( தாழை செல்வநாயகம்) - முதலான பல நூல்களை ஈழத்தவர்கள் எழுதியிருக்கிறார்கள்.
இவை தவிர இதுவரையில் நூலுருப்பெறாத  பாரதி தொடர்பான பல ஆக்கங்கள் வெளியான இதழ்கள், பத்திரிகைகள், சிறப்பு மலர்களும் எம்மவர்களினால் வெளியிடப்பட்டுள்ளன.
எழுத்தாளர்கள் தமது நூல்களுக்கு பாரதியின் கவிதை வரிகளைத்தேர்ந்தெடுத்திருப்பது போன்று திரைப்படங்கள், தொலைக்காட்சி நாடகங்களுக்கும் பாரதியின் வரிகளை பயன்படுத்தியிருக்கின்றனர்.
( தொடரும்)

No comments: