பாழாகும் எம்.ஜி.ஆர். பங்களா! பரிதவிக்கும் அண்ணன் குடும்பம்!



.

"நினைத்ததை முடிப்பவன்' என்பது எம்.ஜி.ஆர். படத்தின் டைட்டில் மட்டுமல்ல, அவரது வாழ்க்கையும்தான். திரை நாயகனாக, தமிழகத்தின் முதல்வராக  நினைத்ததை முடித்தவர் எம்.ஜி.ஆர். ஆனால், நினைத்தும் நிறைவேறாத ஒன்று உள்ளது. அதற்கு சாட்சியமாக இன்னமும் இருக்கிறது, திருச்சி காவிரிக்கரையில் பாழடைந்திருக்கும் அந்த பங்களா. 
காவேரி கரையிருக்கு... கரைமேலே...

எம்.ஜி.ஆரின் வாழ்க்கையில் காவிரிக்கரை என்பது முக்கியமானது. தந்தை இறந்ததால் இலங்கையிலிருந்து வந்த அவரது குடும்பம் தங்கியது, காவிரிக்கரையான கும்பகோணத்தில்தான். அங்குள்ள யானையடி பள்ளியில் எம்.ஜி.ஆரும் அவர் அண்ணனும் ஆரம்பப் பாடம் பயின்று, அதன்பிறகு நாடக மேடைக்குச் சென்றார்கள். திருச்சி காவிரிக்கரையில் பல நாடகங்களில் நடித்திருக்கிறார்கள். அந்தக் கரையில்,  தனது ஓய்வு காலத்தின் சில நாட்களை அங்கே கழிக்க வேண்டும் என எம்.ஜி.ஆரின் மனதில் ஆசை உண்டு. 

திராவிட கட்சிகளின் வரலாற்றில் மிக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்ட இடம் திருச்சி. இங்கே நடந்த தி.மு.கவின் இரண்டாவது மாநில மாநாட்டில்தான் தேர்தலில் போட்டியிடுவது என்ற முடிவு எடுக்கப்பட்டது. அடுத்த 10 ஆண்டுகளில் தி.மு.க. ஆட்சியைப் பிடித்தது. சென்டிமெண்ட்டுகளில் நம்பிக்கையுடைய எம்.ஜி.ஆர்., அ.தி.மு.க.வின் 2-வது மாநில மாநாட்டை திருச்சியில் நடத்தி திருப்புமுனையை உண்டாக்கினார். பிறகு தனதுஆட்சியின் நலத்திட்டங்களில் முக்கியமான சத்துணவுத் திட்டத்தையும் திருச்சியிலேயே  தொடங்கி வைத்தார். திருச்சியை தமிழகத்தின் இரண்டாவது தலைநகரமாக மாற்றப்போவதாக தனது ஆட்சிக் காலத்தில் எம்.ஜி.ஆர். அறிவித்தார். 


திருச்சியில் தொடங்கும் செயல்கள் நல்லபடியாக அமையும் என நம்பிய எம்.ஜி.ஆர்., அதனை இரண்டாவது தலைநகரமாக்கினால் விரும்புகிற சமயத்தில் வந்து தங்கலாம் என்று விரும்பினார்.

சொந்தப் பெயரில் வாங்கிய இடம்!

தனது விருப்பத்தை அவரது அமைச்சரவையில் இருந்த நல்லுசாமியிடம் தெரிவிக்கவே, அவர் திருச்சியில் குடமுருட்டி ஆற்றங்கரை அருகே காவிரிக்கரையில்  இருந்து சற்றே உள்ளே உறையூர் செல்லும் சாலையோரம் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் தோட்டங்களுக்கு நடுவே பங்களா மாதிரியான வீடு மற்றும் பணியாளர் ஓய்வு இல்லம் ஆகியவற்றுடன் கூடிய ஒரு இடத்தை தேடிப்பிடித்து அந்த இடம் பற்றிய விவரங்களை எம்.ஜி.ஆருக்குத் தெரிவித்தார்.

"எனக்கு எது பிடிக்கும் என உனக்குத் தெரியும். உனக்குப் பரிபூரணமாகப் பிடித்திருந்தால் அந்த இடத்தை கிரயம் செய்யலாம்'’என எம்.ஜி.ஆர் சொல்லவே... உடனே அந்த இடத்தை நல்லுசாமி விலை பேசினார். சோமரசம்பேட்டையைச் சேர்ந்த பாதிரியார் ஆரோக்கியசாமி என்பவரிடமிருந்து 4 இலட்ச ரூபாய்க்கு அந்த இடத்தை  கிரயம் பேசி எம்.ஜி.ஆர்.  பெயரில் 1984-ம் ஆண்டு மே 8-ம் தேதி திருச்சி உறையூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டது. கட்சியிலிருந்து பணம் தரப்பட்டது.

அப்போதைய அ.தி.மு.க. அமைச்சரான நல்லுசாமி மற்றும் உறையூரைச் சேர்ந்தவரும் அ.தி.மு.க.வின் மாவட்டத் துணைச்செயலாளரான  வீ.சந்திரனும் எம்.ஜி.ஆருக்காக வாங்குவதாக கையெழுத்திட்டு கிரயப் பத்திரம் பதிவுசெய்தார்கள்.

நினைத்தது நிறைவேறவில்லை!

நாம் இதுகுறித்து வீ.சந்திரனிடம் பேசும்போது,…""தனக்காகக் கிரயமான பிறகு அந்த பங்களாவில், தான் விரும்பும் சில மாற்றங்களைச் செய்யச்சொன்னார் எம்.ஜி.ஆர். அதன்படி முதல் மாடி, தரைத்தளம் ஆகியவை எம்.ஜி.ஆர். சொன்ன மாதிரி மாற்றி அமைக்கப்பட்டது. விரைவில் அந்த பங்களாவில் வந்து தங்குவதாகச் சொன்ன எம்.ஜி.ஆருக்கு 1984-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் உடல்நலம் சரியில்லாமல் போனது. அதன்பிறகு 1987-ல் அவர் இறக்கும்வரை அவரால் அங்கு வந்து தங்கவே முடியாமல் போனது.  

பங்களா வாங்கிய போது காவலாளியான ஆறுமுகம், இப்போதும் அந்த பங்களாவின் காவலராக இருக்கிறார். தற்போது அந்த பங்களாவில் பிரதான கட்டிடத்தைத் தவிர மற்ற கட்டிடங்கள், சுற்றுச்சுவர் ஆகியவை சிதிலமடைந்து காணப்படுகிறது. சுற்றுச்சுவரை உடைத்து உறையூர் பகுதி மக்கள் அந்த பங்களாவின் ஒரு பகுதியை குப்பைத் கொட்டும் இடமாக மாற்றிவிட்டனர். அந்த தோட்டத்தின் கிழக்குப் பகுதியில் சிலர் ஆக்கிரமித்து கட்டிடங்கள்கூட கட்டிவிட்டனர். தற்போது திருடர்கள் நடமாடும் இடமாகவும், அங்கே வளர்க்கப்பட்ட சந்தனமரங்களை வெட்டிச் செல்ல ஏதுவாகவும் அமைந்துள்ளது'' என்றார் வேதனையுடன்.

கட்சி பெயரில் கபளீகரம்!

தொடர்ந்து பேசிய சந்திரன், ""எம்.ஜி.ஆர். எழுதிய உயிலில், விடுபட்ட சொத்துகள் யாவும் தனது மனைவி வி.என்.ஜானகிக்கு சொந்தம் என்று எழுதியிருந்தார். எம்.ஜி.ஆர்-ஜானகி தம்பதிக்கு குழந்தைகள் சட்டப்படி வாரிசாக எம்.ஜி.ஆர். அண்ணன் எம்.ஜி.சக்கரபாணியின் மகன் எம்.சி.சந்திரன் உள்ளிட்ட சகோதர-சகோதரிகள் 10 பேரின் பெயருக்கு அந்த இடம் மாற்றம் செய்யப்பட்டது.  இதற்காக எம்.ஜி.ஆர்.,  ஜானகி ஆகியோரின் இறப்பு சான்றிதழ் முறைப்படி சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர். அண்ணன் பிள்ளைகளே வரி கட்டிவந்தனர். ஆனால்,  2002-ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த இடத்தை கழகப் பொதுச்செயலாளர் அண்ணா தி.மு.க. என்கிற பெயருக்கு போலி டாக்குமெண்டுகள் கொடுத்து மாற்றியிருக்கிறார்கள்.

எம்.ஜி.ஆர். அண்ணன் பிள்ளைகள் இந்த இடத்திற்காகப் போராடி சலித்துப் போயினர். எம்.ஜி.ஆருக்கு கிட்னி கொடுத்த அண்ணன் மகள் லீலாவதி தற்போது வாடகை வீட்டில் இருக்கிறார். சகோதர-சகோதரிகளில் 3 பேர் இறந்துவிட்டார்கள். ஜெ. தலைமையிலான கட்சிக்காகப் பிரச்சாரம் செய்த அவர்களுக்கு கட்சியிலிருந்து எதுவும் செய்யவில்லை. நடிகராக இருந்த எம்.ஜி.சி.சுகுமார் மருத்துவம் பார்க்கக்கூட வசதியின்றி இறந்துபோனார். தற்போதுள்ள எம்.ஜி.ஆரின் அண்ணன் வாரிசுகள் 7 பேரும் பரிதாபமான நிலையில் இருக்கிறார்கள். முறைப்படி எம்.ஜி.ஆரின் வாரிசுகளுக்கு செல்ல வேண்டிய இந்த திருச்சி சொத்தை யாரோ அபகரிக்க முயற்சிபண்ணுகிறார்கள். இதுநாள் வரை ஜெ. பெயரை சொல்லிக்கொண்டிருந்தவர் இனியாவது அவர்கள் குடும்பத்தினருக்கு கொடுக்கவேண்டும்'' என்றார்.

வறுமையின் பிடியில் வாரிசுகள்!

எம்.ஜி.ஆர். பெயரில் இருந்த சொத்து எப்படி கட்சி பெயருக்கு மாறியது என நாம் விசாரணையில் இறங்கியபோது, ஜெ. காலத்தில் மரியம்பிச்சை மாவட்டச் செயலாளராக இருந்த போதுதான், எம்.ஜி.ஆர். பெயருக்கு இருந்த அந்த இடத்தை எம்.ஜி.ஆர். அண்ணன் எம்.ஜி.சக்கரபாணியின் வாரிசுகள் 10 பேருக்கு மாற்றி கொடுத்திருக்கிறார்.  சிலகாலம் கழித்து, அந்த  வாரிசுகள் வறுமையின் காரணமாக அதனை விற்க முயற்சி செய்திருக்கிறார்கள். அதை வாங்குவதற்கு அருகே உள்ள காவேரி கல்லூரி நிர்வாகம் சம்மதித்திருக்கிறது. 

அப்போது மாவட்ட அ.தி.மு.க. செயலாளாக இருந்த மனோகரன், "எப்படி எம்ஜி.ஆர் கட்சிக்கு என்று வாங்கினதை இவர்கள் குடும்பத்திற்கு மாற்றலாம்' என்று அப்போது இருந்த உள்ளாட்சிதுறை அமைச்சர் எம்.சி. சம்பத்திடம்  சொல்ல... அமைச்சரின் நேரடி அதிகாரத்தில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் என்கிற பெயருக்கு மாற்றிவிட்டார்கள்.  இதை சற்றும் எதிர்பார்க்காமல் அதிர்ச்சியடைந்த எம்.ஜி.ஆர். அண்ணன் வாரிசுகள், வாழ்க்கை நடத்தவே சிரமப்படும்நிலையில், அதிகாரத்தில் உள்ளவர்களை எதிர்த்து எப்படி வழக்கு நடத்துவது எனத் தெரியாமல், எப்படி இந்த இடத்தை மீட்பது எனத் தவிக்கின்றனர். 

இதுகுறித்து அப்போது மா.செ.வாக இருந்த மனோகரனிடம் கேட்டபோது, ""இது கட்சியின் சொத்துதான். திருச்சியில் கருத்தையா பாண்டியன் கலெக்டராக இருந்தபோது எம்.ஜி.ஆரின் அண்ணன் குடும்பத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. பிறகு மீண்டும் கட்சிக்கே மாற்றம் செய்யப்பட்டது'' என விளக்கினார்.

எப்போதும் தோற்றப்பொலிவுடன் விளங்குபவர் எம்.ஜி.ஆர். ஆனால் அவர் ஆசையாக வாங்கிய இடம் பாழடைந்த பேய் பங்களா போல இருக்கிறது. காவலாளிக்குக்கூட மாத சம்பளம் தர முடியாத நிலை. அதனால் அந்தக் காவலாளி அங்கேயே தங்கிக்கொண்டு, வேறு வேலைகள் பார்த்து பசி தீர்க்கிறார். 

மீட்கப் போராடும் லீலாவதி!

திருச்சியில் எம்.ஜி.ஆர். காலத்தில் செல்வாக்குடன் இருந்த பொன்மலை டேனியல் என்பவரிடம் இது பற்றி பேசினோம். ""இந்த பங்களா  தலைவருடன் இருந்த மதுரை மகாலிங்கம், துரை ஆகியோர் நேரடி தொடர்பில்தான் வாங்கினார்கள். இடையில்  சசிகலா மூலம் மரியம்பிச்சை மா.செ.வாக ஆனார். அப்போது ஒரு கூட்டத்தில் ஜெ. பெயரைக் குறிப்பிட்டு பேசியதால் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார். மீண்டும் சசிகலாவிடம் பேசி திருச்சியில் உள்ள எம்.ஜி.ஆர். பங்களாவிற்கு, நான்தான் பொறுப்பு என்று சாவியை வாங்கி, உள்ளே நுழைந்து சுத்தப்படுத்தினார். அப்போ நான் "மரியம் பிச்சை என்ன எம்.ஜி.ஆர் தத்துபிள்ளையா?' என்று சசிகலாவிற்கு நோட்டீஸ் அனுப்பினேன். உடனே சாவியை மரியம்பிச்சையிடம் இருந்து வாங்கிவிட்டார்கள். ஜெ.வின் கவனத்துக்கு இந்த சொத்து பற்றிய விவரம் போனதாகத் தெரியவில்லை'' என்றார்.

சென்னையில் இருக்கும்  எம்.ஜி.ஆர்.  அண்ணன் மகள் லீலாவதியிடம் பேசினோம்… 

"எங்க சித்தப்பா பெயரிலான அந்த சொத்து, சித்தப்பாவும், சித்தியும் இறந்த பிறகு எங்கள் பெயருக்கு 2002- ஆம் ஆண்டு மாறியது. ஆனா 2003 இறுதியிலே எப்படியோ கட்சி பெயருக்கு மாற்றிவிட்டார்கள். எந்த அமைச்சர்கிட்டே திருச்சி பங்களாவை பத்தி பேசினாலும், அவுங்க எல்லோரும் பயப்படுறாங்க. நாங்களும் ஏதாவது இது சம்பந்தமாக முறையிட்டால், சித்தப்பா பெயருக்கு களங்கம் வந்திடுமோ என்று அமைதியாக இருந்தோம். ஆனால் இப்போ சித்தப்பாவும் இல்லை, ஜெயலலிதாவும் இல்லை. இனிமே சட்டப்படி நாங்கள் நடவடிக்கையில் இறங்குவோம்'' என்றார். 

இடத்தைப் பதிவு செய்தவரான முன்னாள் அமைச்சர் நல்லுசாமி, வெளிநாடு சென்றிருப்பதால் அவரின் கருத்தைப் பெறமுடியவில்லை.

வாரி வழங்கிய வள்ளல் எனப் பெயரெடுத்தவர் எம்.ஜி.ஆர். அவரது சொத்து அதிகாரத்தின் கரங்களில் சிக்கி, அதனை அனுபவிக்க வேண்டிய அவரது அண்ணனின் வாரிசுகளை அல்லாட வைத்திருக்கிறது.

-ஜெ.டி.ஆர்.

No comments: