பயணியின் பார்வையில் --- அங்கம் 07 - முருகபூபதி

.
வடமாகாண சபை நிழல் யுத்தமும் - ஆயுத யுத்த    வலிகளின் வாக்குமூலமும்                                                              
   
                                                             

யாழ்ப்பாணம் சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் ஏற்பாட்டில், மே மாதம் 20 ஆம் திகதி  யாழ். அரசாங்க செயலகத்தில் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த எமது இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் ஆதரவுடன் கல்வியைத்தொடரும் மாணவர்களின் ஒன்றுகூடலுக்கு செல்வதற்கு தயாராகிக்கொண்டிருந்தேன்.
அரியாலையில் தபால் கட்டைச்சந்தியில் எனக்கொரு குஞ்சியம்மா இருக்கிறார்கள். இவர்கள் பற்றி எனது சொல்லமறந்த கதைகள் நூலில் பதிவுசெய்துள்ளேன்.
அவர்களுடைய வீட்டிற்கு அருகில்தான் நடந்துசெல்லும் தூரத்தில் சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் பணிமனை இயங்குகிறது.
இந்தத்  தன்னார்வத்தொண்டு நிறுவனம் பலவருடகாலமாக ஆக்கபூர்வமான பணிகளை முன்னெடுத்துவருகிறது. இந்த அமைப்புத்தான் அவுஸ்திரேலியாவில் இயங்கும் எமது இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் தொடர்பாளர் அமைப்பு.
இதனை ஸ்தாபித்தவர்களில் ஒருவர்தான் தற்பொழுது வடமாகாண சபையின் தவிசாளர் திரு. சி.வி.கே. சிவஞானம். போர் முடிவுற்றபின்னர் இந்த அமைப்பு கொக்குவில் இந்துக்கல்லூரியில் 2010 ஜனவரியில் நடத்திய மாணவர் ஒன்றுகூடலுக்கு சிவஞானம்தான் தலைமைதாங்கினார்.
அவர் தேர்தலில் நிற்க தயாரானதும் இந்த அமைப்பிலிருந்து ஒதுங்கிக்கொண்டார். அவர்  மாகாணசபையில்  தவிசாளரானார். அவருடன் இணைந்து இந்த தன்னார்வத்தொண்டு நிறுவனத்தை இயங்கவைத்த திரு. பாலதாயனந்தன், சில வருடங்களுக்கு முன்னர் எமது பராமரிப்பிலிருக்கும் மாணவர்களுக்கு நிதிக்கொடுப்பனவு வழங்கிவிட்டு  திரும்புகையில் வேகமாக வந்த ஒரு மோட்டார் சைக்கிளினால் மோதுண்டு படுகாயமுற்றார்.
அதனைசெலுத்திவந்தவர்கள் கவால் துறையினர்.  அந்தவிபத்தைக் கண்டவர்கள் பாலதாயனந்தனை யாழ். மருத்துவமனையில் அனுமதித்தனர். சாட்சிகள் இருந்தும் காவல்துறைக்கு எதிராக எந்த நடவடிக்கையும் இல்லை.  இச்சம்பவம் பற்றி அறிந்ததும், அவுஸ்திரேலியாவிலிருந்து தவிசாளர் சிவஞானம் அவர்களுடன் தொடர்புகொண்டு, பாலதயானந்தனுக்கு ஏதும் வழிகளில் உதவுமாறும் சொன்னேன்.




என்ன நடந்தது...?  என்பது கடவுளுக்கே வெளிச்சம்.
பாலதயானந்தன் பலநாட்கள் படுக்கையிலிருந்தார். யாழ். செல்லும் தருணங்களில் அவரைச்சென்று பார்த்திருக்கின்றேன். எம்மால் முடிந்த உதவிகள் செய்தோம்.
தீவிர சிகிச்சைக்கு அவர் உட்படுத்தப்பட்டபோதிலும் இன்னமும் பூரண குணமின்றி அவதிப்படுகிறார். தொடர்ந்து சிகிச்சை நடக்கிறது.
அவருக்கு எவரது துணையுமின்றி நடக்கவும் முடியாது.  வடமாகாண சபையின் அதிகாரத்திலிருப்பவர்கள், அவருக்குரிய நட்ட ஈட்டையாவது காவல்துறையிடமிருந்து பெற்றுக்கொடுத்திருக்கவேண்டும்.
ஆனால், என்ன நடந்தது...? தந்தை செல்வா சொன்னதுபோன்று  தமிழ் மக்களை கடவுள் காப்பாற்றாவிட்டாலும்,  பாதிக்கப்பட்ட  மக்களின் தொண்டர் பாலதயானந்தனை கடவுள்தான் காப்பாற்றியிருக்கிறார்.
சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் தற்போதைய நிறைவேற்று இயக்குநர் திரு. சொ. யோகநாதன், தொடர்புகொண்டு இன்றைய மாணவர் ஒன்றுகூடலுக்கு பாலதாயனந்தனும் வருகிறார் எனச்சொன்னதும் வியப்பு கலந்த மகிழ்ச்சியடைந்தேன்.


கடந்த 2015 இல் அவரை அவரது கோண்டாவில் வீட்டில் படுக்கையில்தான் பார்த்தேன். எழுந்து நடக்கவும் முடியாமல் படுக்கையோடு இருந்தார்.
யோகநாதனுடன் உரையாடிவிட்டு, தொலைபேசியை வைத்ததும், மீண்டும் அழைப்பு ஒலி.
எனக்கு காலை ஆகாரத்தை தந்துவிட்டு, " முதல்ல இதனை நிறுத்தி வைத்துவிட்டு சாப்பிடும். இனி உமக்கு கோல் வந்துகொண்டே இருக்கப்போகுது. " என்று  குஞ்சியம்மா  கண்டித்தார்.
அவர்களின் அக்கறையான  பாசத்தை  புன்னகையுடன் ஏற்றுக்கொண்டு , தொலைபேசியை செவிமடுத்தேன். மறுமுனையில் எழுத்தாளர் கௌரி அனந்தன்.
முன்னர் மூன்று ஆண்களையும் திரு. என்றுதான் மதிப்பளித்து எழுதினேன். ஆனால், இவரை அவ்வாறு  திருமதி எனச்சொல்லி  விளிப்பதற்கு தயக்கம் வருகிறது.
" ஆணுக்கு 'திரு' என்கிற பொதுச்சொல் போன்று, ஒரு பெண்ணை செல்வியென்றும் திருமதியென்றும் வேறுபடுத்தாமல் பொதுப்படையாக அழைக்க முடியாதா..?


நிற்க, பொதுவாகவே என்னிடம், உங்களை எப்படி சபையில் விளிப்பது என்று கேட்பவர்களுக்கு, கௌரி அனந்தன்'  என்றே சொல்லுங்கள். அதுபோதும். என்னை ஒரு ஆணாகவோ பெண்ணாகவோ அல்லது கொடுக்கப்படும் பட்டங்களாகவோ அடையாளப்படுத்துவதை விட ஒரு ஆளுமையாக அடையாளப்படுத்துவதையே பெரிதும் விரும்புகிறேன்"  என்று இவர்,  அவுஸ்திரேலியாவுக்கு இந்த வருடம் மார்ச் மாதம் நடந்த அனைத்துலக பெண்கள் விழாவில் உரையாற்றியபின்னர் ஒரு குறிப்பு எழுதியிருந்தார்.
எமது அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வருடாந்த மகளிர் விழாவில் " பெண்ணியத்தின் புதிய போக்குகள் " பற்றி உரையாற்றியிருந்தார்.
நிகழ்ச்சி நிரலில் அவருடைய பெயருக்கு முன்னால் திருமதி என்று அச்சிட்டுவிட்டோம். எமது சங்கத்தின் நிகழ்ச்சி நிரல்களில் அது நடைமுறை. ஒரு தடவை ஒரு பேச்சாளரின் பெயரின் முன்னால் அவரது கலாநிதிப்பட்டத்தை அச்சிடவில்லை என்று வாதிக்க வந்துவிட்டார். அன்றிலிருந்து பெயர்களுக்கு முன்னால், திரு,  திருமதி, செல்வி, செல்வன், கலாநிதி, பேராசிரியர் என்றெல்லாம் அச்சிடத்தொடங்கினோம். இந்நிலையில் கௌரி அனந்தன் புதிய பிரச்சினையை தொடக்கியிருந்தார்.
கனவுகளைத்தேடி, பெயரிலி ஆகிய நாவல்களை வரவாக்கியிருப்பவர். தன்னார்வத்தொண்டர். சில அமைப்புகளில் இயங்குகிறார். வலைத்தளங்களில் எழுதிவருபவர். சிங்கப்பூர் - இலங்கையென இவரது பயணங்கள் தொடர்ந்தாலும் தனது படைப்பாளுமையை சமூகம் சார்ந்து வெளிப்படுத்தி வருபவர். இலங்கை, இந்தியா உட்பட  மேலும் சில நாடுகளில் உரையாற்றிவருபவர்.
நான் யாழ்ப்பாணத்தில் நிற்கும் தகவல் அறிந்து தொடர்புகொண்டு பேசினார். அன்றைய தினம்  மாலை நல்லூர், துர்க்கா தேவி மணிமண்டபத்தில் நடக்கவிருக்கும், மௌனவலிகளின் வாக்கு மூலம் நூல் வெளியீட்டு அரங்கிற்கு வருமாறு அழைத்தார்.
முற்பகல், யாழ். அரச செயலகத்தில் நடக்கவிருக்கும் மாணவர் ஒன்றுகூடலுக்கு வருமாறு அழைத்தேன். சம்மதித்தார். நூல் வெளியீட்டு அழைப்பிதழை மின்னஞ்சலுக்கு அனுப்பினார்.
அந்த அழைப்பிதழில் ஒரு வித்தியாசம் தெரிந்தது.
     History through the eyes of the " Youth for a Shared Future"
மௌன வலிகளின் வாக்குமூலம்"     Testimonies  of Silent Pain
இத்துடன் நில்லாமல், நிஹண்ட வேதனாவே சாக்‌ஷிய என்று நூலின் பெயரையும் சிங்களத்தில் மொழிபெயர்த்து சிங்கள மொழியிலும் அச்சிட்டிருந்தார்கள்.


இவ்வாறு யாழ்ப்பாணத்தில் ஒரு தமிழ் நூலின் வெளியீட்டில் ஆங்கிலமும் சிங்களமும் இடம்பெற்றிருந்தது என்னைப்போன்ற வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கு ஆச்சரியமானதுதான்.
சமூகச்சிற்பிகள் என்ற தன்னார்வத்தொண்டு நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட  இந்த நூலை செம்மைப்படுத்தி தொகுத்திருப்பவர் கௌரி அனந்தன்.
இந்த நிகழ்விற்கு வடமாகாண சபையின் முதல்வர் நீதியரசர் விக்னேஸ்வரன் பிரதம விருந்தினராக அழைக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்ட அழைப்பிதழ் தெரிவித்தது. அவர் அரசியலுக்கு வருமுன்னர் கொழும்பில் கம்பன் விழாக்களிலும் இலக்கிய நூல் வெளியிட்டு விழாக்களிலுமே மேடையேறிக்கொண்டிருந்தவர்.
ஒரு தடவை நண்பர் வீரகத்தி தனபாலசிங்கம் எழுதிய " ஊருக்கு நல்லது சொல்வேன்  "  நூல்வெளியிட்டுக்கு இவர் தலைமைதாங்கியபோது அதில் நானும் உரையாற்றினேன். அச்சமயம் அவருடன் மேடையில் உரையாடும்  சந்தர்ப்பமும் கிடைத்தது. அவர்,  அதற்குப்பிறகு  அரசியலுக்கு வருவார் என்று அவர் உட்பட எவரும் கனவிலும் நினைத்திருக்கமாட்டார்கள்.
ஆனால், அன்று தனபாலசிங்கத்தின் நூல்வெளியீட்டு தலைமையுரையில் அரசியல் நெடி தூக்கலாகவே இருந்தது. அந்த விழாவில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சி எம். பி.க்களும், மறைந்த எம். பி.  விநாயகமூர்த்தியும் இருந்தனர்.
அந்த நிகழ்ச்சி முடிந்து சில நாட்களில் விக்னேஸ்வரன் அவர்களின் உரை தினக்குரல், வீரகேசரி ஆகியவற்றில் முழுப்பக்கத்தில் அடுத்தடுத்து இரண்டு நாட்கள் வெளியானது.
நடக்கவிருக்கும் வடமாகாண சபைத்தேர்தலில் முதல்வர் வேட்பாளராக பலரது பெயர்கள் அடிபட்ட காலம் அது. எனது இலக்கிய நண்பர் ஒருவரின் அண்ணனான ஒரு சட்டத்துறை விரிவுரையாளரும் அந்தத்தேர்தலில் போட்டியிடுவார் எனவும், மற்றும் ஒரு பிரபல்யமான பத்திரிகையாளருக்கும் சந்தர்ப்பம் கிடைக்கவிருக்கிறது என்றெல்லாம் பேச்சு அடிபட்டது.
ஆனால், தேசியக்கூட்டமைப்பின் தலைமை அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் விக்னேஸ்வரனை முதல்வர் வேட்பாளராக்கி அரியணையில் ஏற்றிவிட்டது.
 அங்கு நடக்கும் சமகால நிழல் யுத்தம் தொடங்கிய வேளையில் யாழ். அரசாங்க செயலக மாநாட்டு மண்டபத்தில் எமது மாணவர் ஒன்று கூடலுக்கும் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது. முதல்நாள் மே 19 ஆம் திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா  கலந்துகொண்ட நிகழ்ச்சி அதே மண்டபத்தில் நடந்தது.
அன்று 20 ஆம் திகதி பருத்தித்துறை,  துறைமுக அபிவிருத்தி - வெளிச்சவீடு புனரமைப்பு - வடமராட்சி கிழக்கு மணற்காடு உல்லாச கடற்கரை  திட்டங்களை பார்வையிடுவதற்கு பிரதமர் சென்றார்.
விக்கினேஸ்வரன் அந்த நிகழ்ச்சிக்கும் சென்றுவிட்டுத்தான் ' மௌன வலிகளின் வாக்குமூம் ' நூல் வெளியீட்டுக்கு வருவார், மீண்டும் ஒரு நூல் வெளியீட்டில் அவரைப்பார்க்கலாம்,  அவரது பேச்சைக்கேட்கலாம் என நம்பியிருந்தேன்.
அன்று காலை, எமது நிகழ்ச்சிக்கு வருகைதந்திருந்த கௌரி அனந்தன் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிவிட்டுச்செல்லும்போது, " மாலை நிகழ்ச்சிக்கு தவறாமல் வந்துவிடுங்கள்" என நினைவுபடுத்தினார்.
எங்கள் நிகழ்ச்சி அன்றையதினம் இரண்டு அமர்வுகளாக நடந்தன. காலை அமர்வில், உரைகள், கலந்துரையாடல், நிதிக்கொடுப்பனவு என்பனவும் மதியபோசன இடைவேளைக்குப்பின்னர், க.பொ.த. சாதாரண தர, உயர்தர மாணவர்களுக்கான தகவல் அமர்வும் இடம்பெற்றது.
பல மாணவர்கள், உயர்தர வகுப்புடன் தமது கல்வியை நிறுத்துவதை அவதானித்து, பல்கலைக்கழகம் பிரவேசிக்க முடியாதவர்கள் ஏதும் தொழில் பயிற்சிகளில் ஈடுபடத்தக்க பாடநெறிகளுக்கு செல்வதற்கான விழிப்புணர்வூட்டும் தகவல் அமர்வாக நடைபெற்றது.
மாலை நான்கு மணியளவில் நல்லூரில் அமைந்த துர்க்காதேவி மணிமண்டபத்தை அடைந்தேன்.
வழக்கம்போன்று உரியநேரத்தில் விழா தொடங்கவில்லை.  தமிழ்நாட்டிலிருந்து வருகை தந்திருந்த இளம்  இசைக் கலைஞர்கள் அன்றைய விழாவில் நடத்தவிருந்த  நிகழ்ச்சிக்கு ஒத்திகை பார்த்துக்கொண்டிருந்தனர்.
விழாவுக்கு முதல்வர் விக்னேஸ்வரன் வரமாட்டார் என்ற தகவல் கசிந்தது.
குறிப்பிட்ட நூலின் உள்ளடக்கத்தினை அவர் கேட்டிருக்கிறார். Pdf  இல் சில பக்கங்களை அனுப்பியிருக்கிறார்கள். அவற்றை படித்தவர், ஏதோ காரணம் சொல்லி வரமுடியவில்லை எனச்சொல்லிவிட்டு,  தனது தரப்பில் ஒரு வாழ்த்துச்செய்தியை அனுப்பியிருக்கிறார். அதனை மேடையில் வாசித்தார்கள்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவின் வடமராட்சி விஜயத்தில் இவரும் இணைந்திருப்பார், அதனால் வரவில்லை என்றுதான் நான் முதலில் நினைத்தேன். ஆனால், அவர் அதற்கும் செல்லவில்லை என்பது மறுநாள் பத்திரிகைகளைப்பார்த்தபோதுதான் தெரிந்தது.
பிரதமருடன் சென்றிருந்தால், வடமராட்சி கிழக்கில் குடத்தனையில் அமைந்துள்ள சுமந்திரன் அவர்களின் இல்லத்தில்,  முதல்வரும் பிரதமருடன் சேர்ந்து இளநீரும், நுங்கும் அருந்தியிருக்கவேண்டி வந்திருக்கும்.
வடமராட்சிக்கும் முதல்வர் செல்லவில்லை. நல்லூரில் நடந்த நூல் வெளியீட்டுக்கும்  முதல்வர்  வரவில்லை.  வடமாகாண சபை அமளிகள் தொடங்கும் அறிகுறி தென்பட்ட வேளையில் ' மௌனவலிகளின் வாக்கு மூலம் ' நூலை ( 242 பக்கங்கள் )படிப்பதற்கு அவருக்கு சந்தர்ப்பம் கிடைத்திருக்குமா...?
கிடைத்திருந்தாலும் அவர் நிகழ்ச்சிக்கு வந்து உரையாற்றியிருப்பார் என்பது நிச்சயமற்றது. நூலின் உள்ளடக்கம் அத்தகையது...!!!!
மொத்தம் 21 உண்மைக்கதைகளின் தொகுப்பு. இதில் ஆயுதம் ஏந்திய எவரும் விட்டுவைக்கப்படவில்லை. இலங்கை, இந்திய அரசுகள் மட்டுமன்றி சில உலக நாடுகளும் இக்கதைகளின் ஊடாக  விமர்சனத்திற்குள்ளாக்கப்பட்டுள்ளன. பல போர்க்கால செய்திகளை இந்த நூலில் பார்க்க முடியும். இலங்கை, இந்திய இராணுவத்தினால் மட்டுமல்ல, புலிகள் உட்பட ஆயுதம் ஏந்திய அனைத்து தமிழ் இயக்கங்களினாலும் பாதிக்கப்பட்டவர்களால்   மனந்திறந்து பேசப்பட்ட  கதைகள்.
மற்றும் ஒரு முறிந்த பனையை  ( Broken  Palmyra ) இதில் காணமுடியும்.
" இந்தக்கதைகளில் வரும் சம்பவங்களும் கதை மாந்தர்களும் நிஜத்தை பிரதிபலிப்பவை. எனினும் எந்த ஒரு தனிநபரையோ, இயக்கத்தையோ அல்லது வேறு எவரையும் புண்படுத்தும் நோக்கத்தில் இந்தத் தொகுப்பு வெளியிடப்படவில்லை. வரலாற்றை ஆவணப்படுத்தும் நோக்கத்துடன் உண்மைக் கதாபாத்திரங்களின் வாக்கு மூலத்தின் அடிப்படையிலேயே எமது இளையோரினால் இக்கதைகள் தொகுக்கப்பட்டிருக்கின்றன. இதில் பதினெட்டு தமிழ் மூலக்கதைகளும் மூன்று சிங்கள கதைகளின் மொழிபெயர்ப்புகளும் அடங்கியுள்ளன. இந்த இருபத்தியொரு கதைகளுக்குள்ளும், இலங்கை வரலாற்றின் முக்கிய சில பக்கங்கள், தமிழ், சிங்கள, முஸ்லிம் இன மக்களின் பார்வையில் சொல்லப்பட்டிருப்பது மேலதிக சிறப்பை பெறுகிறது"  என்று நூலின் தொகுப்பாசிரியர் கௌரி அனந்தன் தமது உரையில் பதிவுசெய்துள்ளார்.
இந்த நூலின் அச்சாக்கம் அவசரத்தில் நடந்திருப்பதாகவே தெரிகிறது. அச்சுப்பிழைகள்  இடம்பெற்றுள்ளன.
அதனை விழா மேடையில் சிலர் குறிப்பிட்டனர்.  யாழ்ப்பாணத்தில் வெளியாகும்  வலம்புரி பத்திரிகை ஆசிரியர் என். விஜயசுந்தரம், அச்சுவேலி பங்குத்தந்தை வண. பிதா. ஜெயக்குமார், ஆறு திருமுருகன், முஹம்மட் றலீம் (மாலிக்) இமாம், ஆசுகவி சிவசுப்பிரமணியம் மற்றும்  சர்வேஸ்வரா ஆகியோர் உரையாற்றினர்.
காலைக்கதிர் ஆசிரியர் வித்தியாதரன் உட்பட சிலர் பிரதிகள் பெற்றுக்கொண்டனர். நிகழ்ச்சியின் இறுதியில் தமிழ்நாடு மயிலாப்பூரிலிருந்து வருகை தந்திருந்த இளம் தலைமுறையினரின் பஜன் சார்ந்த இன்னிசை விருந்து இடம்பெற்றது. அதற்கும் ஒரு விமர்சனம் எழுந்திருக்கிறது என்பதை நூலைப்படித்தபோதுதான் தெரிந்துகொண்டேன்.
 இந்த நூலை சமூக சிற்பிகளின் சார்பில் வெளியிட்டிருக்கும் ஷெரின் சேவியர், தமது முன்னுரையில் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்.
" இந்தப்புத்தகத்திற்கான " முன்னுரை" இனை நான் எழுதுவதற்காக அமர்ந்தபோது, ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. " சமூகச்சிற்பிகள்" அறங்காவலர்களில் ஒருவர் அழைத்தார். " நடக்க இருக்கும் நிகழ்ச்சி சம்பந்தமாக இங்கே யாழ்ப்பாணத்தில் ஒரு பிரச்சினை" என்றார். எனது பதில் " என்ன புதிதாக ?" என்பதுதான்.  அவர் கூறினார், " இன்னொரு அறங்காவலர் இந்த புத்தக வெளியீட்டில் கர்நாடகத்தமிழ் இசையை (பஜனை) ஒரு இளைஞர் குழு இசைப்பதை அவர் விரும்பவில்லை. ஏனென்றால், அவர் ஒரு கிறித்துவர்.               அந்த இசை " இந்துயிசம்" மூலம் வருகிறது என்றார். " நல்லிணக்கம் என்ற சொல்கூட, கிறித்துவத்திலிருந்து வந்ததுதான்" என்றேன் நான். " அதனால்  நாம் இலங்கையில், நல்லிணக்கம் பற்றி பேசக்கூடாது என்று அர்த்தமா ...? " என்று கேட்டேன். இப்படியாக அந்தப்பேச்சை முடித்துக்கொண்டேன்"
                  இவ்வாறு சொல்லியிருக்கும், ஷெரின் சேவியர்- மேலும், " நல்லிணக்கத்தை பற்றி பேசுவதற்கான சூழலில் ஒரு விவாதத்தை தொடங்கும்போது கூட மேலே கூறிய பிரச்சினைகளை எதிர்கொள்ளவேண்டிய நிலை உள்ளது" என்றும் பதிவுசெய்கிறார்.
இந்த விழவுக்கு நான் சென்றதற்கு கௌரி அனந்தனின் அழைப்பு மாத்திரம் காரணம் இல்லை. யாழ். குடாநாட்டில் வதியும் எனது இலக்கிய நண்பர்களை இங்கு பார்க்கலாம் எனவும் நம்பிச்சென்றேன்.
முதல்வர் விக்னேஸ்வரனும் அங்கிருந்த இலக்கியவாதிகளும் வரவில்லை என்பது எனக்கு ஏமாற்றம்தான்.
ஆனால், நான்  எதிர்பார்த்திருக்காத ஒரு முன்னாள்  பெண் போராளியை -  படைப்பாளியை அன்று சந்தித்தேன்.
( பயணங்கள்  தொடரும்)

No comments: