இலங்கையில் பாரதி --- முருகபூபதி

.


( முக்கிய  குறிப்பு:   இலங்கையில்  பாரதி  என்னும்  எனது இந்தப்புதிய  தொடர் யாழ்ப்பாணத்திலிருந்து கடந்த நவம்பர்  மாதம் முதல்  வெளிவரத்தொடங்கியிருக்கும் காலைக்கதிர் பத்திரிகையில் பிரசுரமாகின்றது.  புகலிட வாசகர்களின் கவனத்திற்காக இங்கு மீள் பதிவாகின்றது. இதனைப்படிக்கும் வாசகர்கள் தங்கள் கருத்துக்களை சொல்வதன் மூலம்  இத்தொடர் நூலுருவாகின்ற சமயத்தில்  மேலும்  செம்மையுறலாம்.)
முன்னுரை
எனது பால்யகாலத்தில் ஆரம்பப்பாடசாலையிலும் வீட்டிலும் கேட்டு ரசித்து பாடிய பாடல்கள் பாரதியிடமிருந்தே  தொடங்கியது. குறிப்பாக ஓடிவிளையாடு பாப்பா, தீராதவிளையாட்டுப்பிள்ளை என்பனவற்றின் ஆழ்ந்த அர்த்தம் புரியாமலேயே பாடியிருக்கின்றேன். மனனம் செய்துள்ளேன்.
எனது அக்கா, நடனம் பயின்றவேளையில் தீராதவிளையாட்டுப்பிள்ளைக்கு  அபிநயம் பிடித்து ஆடியபோது ரசித்திருக்கின்றேன். இவ்வாறுதான் எனக்கு மகாகவி பாரதியிடத்திலான உறவும் ஈர்ப்பும்  படிப்படியாகத்தொடங்கியது.
பாடசாலை நடத்திய பேச்சுப்போட்டியில் வகுப்பு ஆசிரியை எழுதிக்கொடுத்த பாரதி பற்றிய உரையை மனனம் செய்து ஒப்புவித்திருந்தாலும்,  பாரதியின் ஞானத்தை கண்டறிவதற்கு எவரும் துணைக்கு வரவில்லை.    எனினும் எமது நீர்கொழும்பூருக்கு தமிழகத்தின் மூத்த படைப்பாளி கு. அழகிரிசாமியும் பாரதியாரின் பேத்தி விஜயபாரதியும் அவர் கணவர் சுந்தரராஜனும் வருகை தந்து உரையாற்றியதையடுத்து பாரதி மீது ஆர்வம் அதிகரிக்கத்தொடங்கியது.
அவர்கள் வரும்போது எனக்கு  பதினைந்து வயதுதானிருக்கும். இலக்கியப்பிரதிகள் எழுதத்தொடங்கிய 1970 இற்குப்பின்னர்தான் பாரதியை ஆழ்ந்த நேசத்துடன் கற்றேன்.
எமக்கு முதல் குழந்தை பெண்ணாக பிறந்ததையடுத்து அவளுக்கு விஜயபாரதி என்றும் பெயர் சூட்டினேன். காலம் கடந்து அவுஸ்திரேலியாவுக்கு வந்த பின்னர், 1990 ஆம் ஆண்டிற்குப்பிறகு, ஒருநாள், அவுஸ்திரேலியா சிட்னியிலிருந்து ஒரு நண்பர் தொலைபேசியில் தொடர்புகொண்டு, " பாரதியாரின் கொள்ளுப்பேத்தி மீரா( சுந்தரராஜன் - விஜயபாரதி தம்பதியரின் புதல்வி) வந்திருப்பதாக தெரிவித்து, அவருடன் உரையாடச்செய்தார்.
இந்த எதிர்பாராத  தொலைபேசி  அழைப்பு எனக்கு இன்ப அதிர்ச்சியைத்தந்தது.
அவருடைய பெற்றோர்களை இலங்கையில் எமது ஊரில் சந்தித்துப்பேசியதை நினைவுபடுத்தி உரையாடத்தொடங்கியதும் எனக்கு மற்றும் ஒரு அதிர்ச்சி கிடைத்தது. அது இன்ப அதிர்ச்சியல்ல.


                 முதலில் வணக்கம் என்று இனிய குரலில் பேசிய மீரா, பின்னர் " Uncle, very sorry . I can't speak Tamil  fluently  " என்றார்.
"தேமதுரத்  தமிழோசை  உலகமெலாம் பரவச்செய்வோம். வீதி எங்கும் தமிழ் முழக்கம் செய்வோம். யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்"  என்றெல்லாம்  முழங்கிய  தமிழ்க்கவியின்  ஒரு வாரிசுக்கு  தமிழில் பேசமுடியவில்லையே...! என்ற துயர அதிர்ச்சி வந்தாலும், சுதாரித்துக்கொண்டு, அதற்கான காரணம் கேட்டேன்.
தான் பெற்றோர்களுடன் அமெரிக்காவில் வசிப்பதாகவும், குழந்தைப்பருவத்திலேயே அங்கு சென்றுவிட்டதனால்  தமிழில் சரளமாகப்பேச முடியவில்லை என்றும் கவலையுடன் சொன்னார். புலம்பெயர் சூழல் அவரை அவ்வாறு மாற்றியிருக்கிறது.
ஆயினும்,  புலம்பெயர்ந்த  ஈழத்தமிழர்கள் தாம் சென்ற தேசங்கள் தோறும் பாரதியை நினைவுகூர்ந்தவாறுதான்  பயணிக்கிறார்கள்.
பாரதியின் கொள்ளுப்பேத்தி மீராவுக்கு  சரளமாகத்  தமிழ்பேச முடியாதுபோனாலும்,  பாரதியின் ஆங்கிலப்படைப்புகளை தொடர்ச்சியாக தாம் ஆய்வுசெய்துவருவதாகச்சொன்னார்.
எனது தந்தை வழி உறவினர் தொ.மு.சி. ரகுநாதன் தமிழ்நாடு திருநெல்வேலியைச்சேர்ந்தவர்.  புதுமைப்பித்தனின் நெருங்கிய நண்பர். பாரதி இயல் ஆய்வாளர். மக்ஸிம் கோர்க்கியின் தாய் நாவல் உட்பட  பல  சோவியத் இலக்கியங்களை தமிழுக்கு மொழிபெயர்த்தவர்.
இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம்  1956 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நாடளாவிய ரீதியில் பாரதிக்கு விழா எடுத்தவேளையில் ரகுநாதனையும் அழைத்திருந்தது. அப்பொழுது எனக்கு ஐந்துவயதுதான்.
பாரதி பற்றி கேட்டுத்தெரிந்துகொள்ளும் ஆர்வம் இல்லாத அந்தப்பருவத்தில்   அவர் எங்களைத்தேடி  நீர்கொழும்புக்கு வந்தார்.
பின்னாளில் எமது முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் 1973 இற்குப்பின்னர் நான் இணைந்திருந்தபோது, அவர் சொல்லிச்சென்ற ஒரு கூற்று பற்றி மூத்த எழுத்தாளர் இளங்கீரனும் சங்கத்தின் செயலாளர் பிரேம்ஜி ஞானசுந்தரனும் தெரிவித்த கருத்துக்களினால் எனக்கு பாரதியிடத்தில் ஈர்ப்பு அதிகரித்தது.
" பாரதி பிறந்து வளர்ந்து மறைந்த தமிழ்நாட்டைவிட இலங்கையில்தான் பாரதியின் தாக்கம் அதிகம். அதற்கு பாரதியின் ஞானகுரு யாழ்ப்பாணத்துச்சாமி மற்றும் விபுலானந்த அடிகள் முதலானோரும் காரணம். அத்துடன் தமிழகத்தில் காங்கிரஸ_ம் திராவிட   இயக்கங்களும் பாரதிக்குரிய இடத்தை வழங்கத்தவறிவிட்டன.
பாரதியை பார்ப்பனக்கவிஞன் என்றே திராவிட இயக்கங்கள் புறம் ஒதுக்கினாலும், அங்கிருந்த இடதுசாரிகளும் முற்போக்காளர்களும் பாரதியின் புகழை தொடர்ந்து பரப்பினார்கள். " என்ற அவரது கருத்து என்னை பாரதியின் இலங்கைத்தாக்கம் பற்றி கருத்தூன்ற வைத்தது.
இலக்கியப்பிரதிகள் எழுதத்தொடங்கியதும் எனது பாட்டா உறவு முறையான தமிழகத்தின் மூத்த படைப்பாளி ரகுநாதனுடன் கடிதத்தொடர்புகள் மேற்கொண்டேன்.


எமது சங்கம்,  நாடளாவிய ரீதியில் பாரதி நூற்றாண்டு கொண்டாட்டங்கள் நடத்தியபோது, அந்தக்குழுவில் இணைந்திருந்தேன்.  ரகுநாதன் 1983 ஆம் ஆண்டு எமது சங்கத்தின் அழைப்பை ஏற்று மீண்டும் அந்த நூற்றாண்டு காலத்தில் வந்திருந்தார். அவருடன்,  பேராசிரியர் ராமகிருஷ்ணன், படைப்பாளி ராஜம் கிருஷ்ணன் ஆகியோரும் வந்தனர். இவர்களுடன் இணைந்து இலங்கையில் பல இடங்களுக்கும் பயணித்து,  இலங்கை இதழ்களிலும் தமிழ்நாடு தாமரை இதழிலும் பதிவுகளை எழுதியிருக்கின்றேன்.
இலங்கையில் பாரதியின் தாக்கம் குறித்து மேலும் ஆராய்வதற்கு குறிப்பிட்ட பாரதி நூற்றாண்டு  காலப்பகுதி வழிவகுத்தது. தகவல்கள் தரவுகள், நூல்கள், பிரசுரங்கள் சேகரித்தேன்.
துர்ப்பாக்கியவசமாக 1983 நடுப்பகுதியில் வன்செயல் வந்து இடப்பெயர்வு அவதிக்குள் சிக்கியதால் , அவற்றில் சிலவற்றை இழந்தேன். எனினும் பாரதி எனக்குள் தாகமாகவே தொடர்ந்து ஊற்றெடுக்கிறார்.
பாரதியின் ஞானகுரு  யாழ்ப்பாணத்துச்சாமி அருளம்பலம் ( 1878 - 1942) அவர்கள் தோன்றிய அதே மண்ணிலிருந்து வெளிவரத்தொடங்கியிருக்கும்  காலைக்கதிர்,  அந்த ஊற்றினை உங்கள் முன்னால் பகிர்ந்துகொள்வதற்கு களம் அமைத்து தந்திருப்பது மனதிற்கு நிறைவானது.
இன்று முதல் வாராந்தம் இலங்கையில் பாரதி என்ற தொடர் ஊடாக  அன்பான வாசகர்களை சந்திக்கின்றேன்.
இந்தத்  தொடர் பதிவுக்கு களம் தந்திருக்கும் காலைக்கதிர் ஆசிரிய பீடத்தினருக்கு மனமார்ந்த நன்றியைத்தெரிவித்துக்கொள்கின்றேன்.
பின்னாளில் இந்தத் தொடர் நூலுருப்பெற விருப்பதனால் இலங்கையிலிருக்கும் பாரதி இயல் ஆய்வாளர்கள் மற்றும் வாசகர்கள் தங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் தயங்காது தெரிவிக்கலாம்.
எனது மின்னஞ்சல்: letchumananm@gmail.com
அன்புடன்
முருகபூபதி
--------------------------------------------------------------------------------------
                      இலங்கையில் பாரதி - அங்கம் -  01            
நண்பர்களுடன் வாழ்ந்த பாரதி
நண்பர்கள் பிறப்பதில்லை. உருவாக்கப்படுகிறார்கள். சொந்த பந்த உறவுகளைவிட  நட்பு வலிமையானது. ஒரு மனிதனின் ஆளுமையை விருத்திசெய்வதிலும்  நட்புக்கு முக்கிய பங்கிருக்கிறது.
பாரதியை பிறவிக்கவிஞர் , சர்வதேசிய பார்வைகொண்டவர் தீர்க்கதரிசி என்றெல்லாம் புகழ்ந்தாலும், தான் கற்றதையும் பெற்றதையும் தனது இலக்கிய தடத்திலேயே அடுத்து வந்த தலைமுறைக்கு விட்டுச்சென்றவர் என்பதையும் நாம் கவனிக்கலாம்.
அற்பாயுளில் மறைந்துவிட்டாலும் அரசியலில், அறத்தில், ஊடகத்தில், இலக்கியத்தில், இசையில், கலையில் சிந்தனையில் அவர் வாழ்ந்துகொண்டே இருக்கிறார்.
தந்தை சின்னச்சாமி அய்யர்,  தனது மகன் சுப்பிரமணியன் தன்னைப்போன்று  வளர்ந்து தனது தொழில் துறையை கவனிக்கவேண்டும்  என்ற  கனவில் வாழ்ந்தவர்.  பள்ளிப்படிப்பில் ஆர்வம் காண்பிக்காமல் இயற்கையின் எழிலில் மயங்கி ஓடித்திரிந்த மகன், எட்டயபுரம் மன்னர் அவையில்    பாரதியாகியது அவருக்கு உவப்பில்லை.
பாரதியின் நண்பர் குழாம் அவரை மாற்றி பேராளுமையாக்கியிருப்பதை அறியக்கூடியதாக இருக்கிறது.
எம்மிடத்தில் பாரதி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதுபோன்றே பாரதியிடத்தும் பலர் பெரும் தாக்கத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.
புதுமைப்பெண், பெண்மை வாழ்க, பெண்கள் விடுதலைக்கும்மி, பெண் விடுதலை முதலான கவிதைகள் அவரது சிந்தனையில் தோன்றுவதற்கு காரணமாக இருந்தவர் விவேகானந்தரின் சிஷ்யை நிவேதிதா தேவி. அயர்லாந்தைச்சேர்ந்த அவருக்கும் பாரதிக்கும் இடையேயான  அறிமுகம் 1906 இல் இன்றைய கொல்கத்தா என அழைக்கப்படும் அன்றைய கல்கத்தாவில் நிகழ்ந்தது.
"பெண்மை வாழ்கென்று கூத்திடுவோமடா
பெண்மை வெல்கென்று கூத்திடுவோமடா"  எனப்பாடியதன் பின்னால் இருந்த ஞானஒளி நிவேதிதாவிடமிருந்து பாரதிக்கு கிட்டியிருக்கிறது.
பாரதிக்கு கிடைத்த நண்பர்கள் பல்வேறு குணாதிசயங்கள் கொண்டவர்கள். அவர்களில் சித்தர்கள், ஞானிகள், அறிஞர்கள், வக்கீல், வர்த்தகர், தீவிரவாதிகள், விடுதலை வேட்கை மிக்கவர்கள், பத்திரிகாசிரியர்கள், சாதாரண ஹரிஜனர்கள், பாமரர்கள், என பலதரத்தவர்களும் இருந்தனர். அவர் சந்தித்த சித்தர்கள் அவருக்கு ஞானகுருவாகியுமிருக்கின்றனர்.
அவ்வாறு அவரது வாழ்வில் மாற்றங்களையும் சிந்தனைப்போக்கில் புதிய திசைகளையும் தந்தவர்களின் வரிசையில்தான் எங்கள் யாழ்ப்பாணத்துச்சாமி அருளம்பலம் அவர்களும் வருகிறார்.
பாரதி தனது வாழ்நாளில் சந்தித்த சித்தர்களில் மாங்கொட்டைச்சாமி என அழைக்கப்பட்ட குள்ளச்சாமி புதுச்சேரியில் அறிமுகமாகிறார். நாளரை அடி உயரமுள்ள அவருடைய ரிஷி மூலம் நதிமூலம் எவருக்கும் தெரியாது.
வீதியோரத்தில் படுத்துறங்குவார். மண்ணில் புரள்வார். நாய்களுடனும்  அவருக்கு சண்டை வரும். கள்ளும் அருந்துவார். கஞ்சா புகைப்பார். பிச்சையும் எடுப்பார்.  இருந்தும் அவர்  துணி வெளுக்கும்  தொழிலாளி.  ஒரு சமயம் பாரதியிடத்தில் " நீ நெஞ்சுக்குள்ளே சுமக்கிறாய், நான் முதுகின் மேல் சுமக்கிறேன்" என்றார்.
மற்றும் ஒருநாள் பாரதி, அந்தக்குள்ளச்சாமியிடம், " ஞானநெறியில் செல்லவிரும்புபவன் எந்தத்தொழிலைத் தேர்ந்தெடுக்கவேண்டும்...? " என்று கேட்கிறார்.
அதற்கு அந்தச்சாமியார், " முதலில் நாக்கை வெளுக்கவேண்டும், பொய், கோள், கடுஞ்சொல், இன்னாச்சொல், தற்புகழ்ச்சி என்பன கூடாது. உண்மையைத்தவிர வேறொன்றும் இந்த நாக்கு பேசலாகாது. அச்சத்தை அகற்றவேண்டும். அதற்கு மனதினுள் இருக்கும் இருளைப்போக்கவேண்டும்" எனச்சொல்லியிருக்கிறார். அதன் பிறகு,
உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின்.....
அச்சமில்லை... அச்சமில்லை....
மனதிலுறுதி வேண்டும்...   முதலான சாகாவரம் பெற்ற வரிகள் பாரதியிடத்தில் பிறக்கின்றன.
கப்பலோட்டிய தமிழன் வா. உ. சிதம்பரம்பிள்ளை சென்னையில் பெரம்பூரில் குடியிருந்தபோது, அவரைச்சந்திக்க வரும் பாரதி தம்முடன் குள்ளச்சாமியையும் அழைத்துவருகிறார்.
 அங்குதான் பாரதியும் குள்ளச்சாமியும் எலுமிச்சை அளவுள்ள ஏதோ ஒரு லேகியம் சாப்பிடுவதை வ.உ.சி அவதானித்துவிட்டு பாரதியிடம் என்ன சாப்பிடுகிறீர்கள் எனக்கேட்கிறார்.
அதற்கு பாரதியார், " இது மேலுலகத்திற்கு இட்டுச்செல்லும் அருமருந்து" என்கிறார். அந்த அருமருந்துதான் அபின். ( ஆதாரம்: பாரதியின் குருமார்களும் நண்பர்களும் நூல் - ஆர். சி. சம்பத்.)
ஞானகுருமார்களினால் இத்தகைய பழக்கங்கள் பாரதிக்கு தொற்றியிருப்பதுபோன்று பாரதியை தமது ஞானகுருவாக பின்னாளில் ஏற்றுக்கொண்ட ஜெயகாந்தனுக்கும் கஞ்சா புகைக்கும் பழக்கம் மற்றும் ஒரு சாமியாரால் தொற்றியிருந்ததை அறிவோம்.
அவர்தான் ஓங்கூர் சாமியார். இவரை ஜெயகாந்தன் தமது விழுதுகள் நாவலில் சித்திரிக்கிறார்.
புதுவையில் பாரதி சந்தித்த  யாழ்ப்பாணத்துச்சாமி அருளம்பலம் அவர்களின் கல்லறை பருத்தித்துறை வியாபாரிமூலையில் இருக்கிறது.
பார்த்திருக்கிறீர்களா...?
இவர் குறித்தும் எமது ஈழத்து இலக்கிய உலகில் ஒரு சர்ச்சை உருவானது. அது என்ன...?
(தொடரும்)


No comments: