இலங்கைச் செய்திகள்


  'ஏன்ட தெய்மே.. எங்கையா போன...' கிளிநொச்சியில் சோகம் :  9 வருடங்களின் பின்  உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது மாவீரர் நாள்

'வாழும் உரிமையை பறிக்காதே'  : கண்டியில் ஆர்ப்பாட்டம்

 கூட்டு உடன்படிக்கை விதியை மீறிய தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக மக்கள் கோஷம்

கருணாவுக்கு விளக்கமறியல்

கரு­ணா குழு­வி­ன­ருடன் இணைந்து கிழக்கில் பல கொலை­களை செய்தேன்.!

 பாராளுமன்றத்தை நோக்கி படையெடுக்கும் 3000 இற்கும் அதிகமான மாணவர்கள்?

பிள்ளையான் உட்பட நால்வரின் விளக்கமறியல் நீடிப்பு.!

முல்லைத்தீவு ஒதியமலை படுகொலை : 32ஆம் ஆண்டு நினைவுதினம் அனுஷ்டிப்பு!






  'ஏன்ட தெய்மே.. எங்கையா போன...' கிளிநொச்சியில் சோகம் :  9 வருடங்களின் பின்  உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது மாவீரர் நாள்


28/11/2016 கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் நேற்று இரவு மாவீரர் நாள் நிகழ்வுகள் பெருமளவு மாவீரர்களின் உறவுகள் மற்றும் பொது மக்கள் ஒன்று கூடி கண்ணீர் மல்க உணர்வுபூர்வமாக அனுஸ்டித்தனர்.
கடந்த 2007 ஆம் ஆண்டு இறுதியாக கிளிநொச்சி மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் நாள் சிறப்பாக நடத்தப்பட்டது. 

அதன் பின்னர் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு படையினரின் கட்டுப்பாட்டிற்குள் இப்பிரதேசங்கள் காணப்பட்ட  போது தமிழ் மக்களின் பிரதேசங்களில் உள்ள அனைத்து மாவீரர் துயிலுமில்லங்களிலும் காணப்பட்ட கல்லறைகள் மற்றும் நினைவுக்கற்கள் படையினரால் இடித்து ஒதுக்கப்பட்டு துயிலுமில்லங்கள்  இருந்த இடம்தெரியாது மாற்றப்பட்டிருந்தன.
அதன் பின்னர் துயிலுமில்லங்களில் படையினர் முகாம்கள் அமைத்து சில வருடங்கள் சில வருடங்கள் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். 
தற்போது படையினர் அங்கிருந்து வெளியேறிய நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்திற்கு சென்ற மாவீரர்களின் உறவினர்கள், மற்றும் பொது மக்கள் ஆகியோர் பற்றைகளால் சூழப்பட்டு காணப்பட்ட மாவீரர் துயிலுமில்லங்களை துப்பரவு செய்தனர்.
நேற்று கார்த்திகை 27 இல் தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடி உயிர் நீத்த உறவுகளுக்கு சுடரேற்றி அகவணக்கம் செலுத்தி உணர்வுபூர்வமாக  மாவீரர் நாள் நிகழ்வை அனுஸ்டித்தனர்.
மாலை 6.5 மணிக்கு மணியோசை எழுப்பட்டு பொதுச் சுடரேற்றப்பட்டது. கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் பொதுச் சுடரை பாராளுமன்ற  உறுப்பினர் சிறிதரன்   ஏற்றி வைக்க தொடர்ந்து  மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.
அதனைத் தொடர்ந்து சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகள் எனும்  மாவீரர் வணக்கப் பாடல்   ஒலிபரப்பப்பட அப் பாடலில் வருகின்ற வரிகளான  எங்கே எங்கே உங்களின் இருவிழி திறவுங்கள் எனும் வரிகள் ஒலிக்கும் போது  கலந்து கொண்ட அனைவரதும் கண்களில் கண்ணீருடன்  உணர்வு பூர்வமாக காட்சியளித்ததனைக் காணக் கூடியதாக இருந்தது  
கல்லறைகள், நினைவுக் கற்கள் இல்லாத  போதும் எங்கள் பிள்ளைகள் புதைக்கப்பட்ட இந்த  இடத்தில்  நின்று அவர்களை நினைவு கூற கிடைத்த சந்தர்ப்பத்தை என்னால் எவ்வாறு கூறுவது என்று தெரியவில்லை. எனது பிள்ளையை அவனது புதைக்குழியில் நின்று நினைவு கூறுவதற்கு இனி சந்தர்ப்பமே இல்லாது போய்விடுமோ என்று ஏங்கிய எனக்கு இப்பொழுது ஆத்ம திருப்தி ஏற்பட்டுள்ளது. ஏழு ஏட்டு வருடங்களுக்கு பின் இந்த இடத்தில் நின்று  சுடரேற்றி அஞ்சலி செலுத்வேன் என்று நான் ஒருபோதும் நினைக்கவில்லை. ஆனால் இன்று அது நடந்திருக்கிறது. எனவே எனக்கு இப்போதுள்ள ஒரு ஆசை இந்த மாவீரர் துயிலுமில்லம்  கடந்த காலத்தில் இருந்தது போன்று மீண்டும் மாறவேண்டும். அதுவும் ஒருநாள் நடக்கும் என்ற நம்பிக்கை உண்டு என்றார் ஒரு மாவீரரின் தாய்.
இவ்வாறு பலர் தங்களினது உணர்வுகளை கண்ணீராகவும் வார்த்தைகளாலும் வெளிப்படுத்தியவாறு மாவீரர் நாள் நிகழ்வுகளில் கலந்துகொண்டனர்.
யுத்தம் முடிவுக்கு வந்த பின் முதல்முதலாக துயிலுமில்லங்களில் அனுஸ்டிக்கப்பட்ட மாவீரர் நாள் நிகழ்வுகளில் ஆயிரக்கணக்கான  பொது மக்கள் மற்றும் அரசியல் தரப்புகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இவ்வாறு முழங்காவில் மற்றும் வடமராட்சிக் கிழக்கு உடுத்துறை  மாவீரர் துயிலும் இல்லங்களிலும்  மாவீரர் தின நிகழ்வுகள் அனுஷ்டிக்கப்பட்டன. 
நன்றி வீரகேசரி
















 'வாழும் உரிமையை பறிக்காதே'  : கண்டியில் ஆர்ப்பாட்டம்

28/11/2016 பெருந்தோட்ட காணிகளை தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதை எதிர்த்து, கண்டி மாவட்ட செயலகத்துக்கு முன்பாக இன்று பகல் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தெல்தோட்டை லிட்டில்வெளி பிரதேச மக்களால் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, ‘எமது காணியை அபகரிக்காதே’ ‘எமது வாழும் உரிமையை பறிக்காதே’ ‘தனியாருக்கு தோட்டக் காணிகளை விற்பனை செய்வதை உடன் நிறுத்து’ என கோஷங்கள் எழுப்பப்பட்டன.
மாவட்ட அபிவிருத்தி சபைக் கூட்டம் முடிவடைந்து ஆர்ப்பாட்ட இடத்திற்கு வந்த, சமூக வலுவூட்ல் அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்கவிடம் ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது கோரிக்கையை முன்வைத்தனர்.
இதன் போது இவ்விடயமாக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார். எக் காரணம் கொண்டும் அரச காணிகளை தனியாருக்கு வழங்கப்படமாட்டாது. அது உடன் நிறுத்தப்படும் என உறுதி வழங்கினார்.
இதனையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் குறித்த இடத்தை விட்டு விலகிச் சென்றனர்.
  நன்றி வீரகேசரி
  














கூட்டு உடன்படிக்கை விதியை மீறிய தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக மக்கள் கோஷம்

28/11/2016 கூட்டு உடன்படிக்கையில் கைச்சாத்திடப்பட்டுள்ள விதி முறைகளை மீறி செயல்பட்டதாக களனிவெளி பெருந்தோட்ட கம்பனியின் கீழ் இயங்கும் அட்டன் போடைஸ் தோட்ட தொழிலாளர்கள் அத்தோட்டத்தில் தேயிலை தூள் பொதிகளை கொழும்புக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படுவதை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இன்று காலை 9 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் போடைஸ் தோட்ட தொழிலாளர்கள் அத்தோட்ட நிர்வாகத்தின் செயல்பாட்டுக்கு எதிர்ப்புகாட்டியுள்ளனர்.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு ஒரு மாத காலம் மேலாகியும் அக்கூட்டு ஒப்பந்தத்தில் தோட்ட முதலாளிமார் சம்மேளனம் மற்றும் தொழிற்சங்கங்கள் இணைந்து கைச்சாத்திடப்பட்டுள்ள விதி முறைகளுக்கு அப்பால் போடைஸ் தோட்ட நிர்வாகத்தில் தொழிலாளர்களுக்கு எதிராக மாறுப்பட்ட தொழில் விதி முறைகள் உள்வாங்கப்பட்டுள்ளது.
“நோம்” அடிப்படையில் பறிக்கப்பட வேண்டிய கொழுந்தினை அதற்கும் அதகிமாக பறிக்கும் படி போடைஸ் தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களை வற்புறுத்தியுள்ளது.

அதேவேளை கூட்டு உடன்படிக்கையின் அடிப்படையில் திறன் கொடுப்பனவான 140 ரூபாவை அத்தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களுக்கு வழங்கவில்லை. அதேபோன்று மேலதிகமாக பறிக்கப்படும் தேயிலை கொழுந்திற்கான தொகையினையும் மறுத்திருக்கும் இத்தோட்ட நிர்வாகம் ஞாயிற்று கிழமைகளில் வழமைபோல் வழங்கப்பட்ட ஒன்றரை நாள் சம்பளத்தை தவிர்த்து கைக்காசு அடிப்படையில் சம்பளத்தை வழங்க முன்வந்திருந்துள்ளதாக தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இவை அனைத்திற்கும் எதிர்ப்பினை தெரிவித்த தொழிலாளர்கள் இவ்விடயம் தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளர் ஆறுமுகன் தொண்டமானின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

இதனடிப்படையில் இத்தோட்ட நிர்வாகத்தினரிடம் பேசப்பட்டுள்ளது. அதேவேளை கொடுக்கப்படும் கொடுப்பனவுகளை முறையாக கொடுக்காத பட்சத்தில் தொழிலாளர்களால் பறிக்கப்பட்டு தேயிலை தூள் உற்பத்தி செய்து கொழும்புக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படும் தேயிலை தூள் பொதிகளை தொழிற்சாலையிலிருந்து கொண்டு செல்லப்பட வேண்டாம் என தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகத்தை வழியுறுத்தியுள்ளனர்.
இதனை மீறி போடைஸ் தோட்ட நிர்வாகம் சுமார் 8000 கிலோ அடங்கிய தேயிலை தூள் பொதிகளை அத்தோட்டத்தின் வாகனத்தின் ஊடாக கொழும்புக்கு ஏற்றிச்செல்ல முற்பட்டுள்ளனர்.

இவ்விடயம் அறிந்த தொழிலாளர்கள் அத்தோட்டத்தின் மயானபூமிக்கு அருகில் உள்ள பிரதான வீதியில் வாகனத்தை மடக்கி பிடித்து நிறுத்தியுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் கவனத்திற்கு கொண்டு வந்த அதேவேளை தொழிலாளர்கள் இன்று பணிக்கு திரும்பாமல் வீதிக்கு இறங்கியுள்ளனர்.

இச்சம்பவத்தை அறிந்து ஸ்தலத்திற்கு விரைந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் மற்றும் மகளிர் பிரிவு இணைப்பாளர் அருள்நாயகி உள்ளிட்ட காங்கிரஸின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் தோட்ட தொழிலாளர்களுடனும், நிர்வாகத்தினருடனும் பேச்சுவார்த்தை ஒன்றில் ஈடுப்பட்டனர்.

அதன்போது தேயிலை பொதிகளை ஏற்றிச்சென்ற வாகனத்தை தோட்ட தொழிற்சாலையில் பாதுகாப்பாக நிறுத்தும்படியும், தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு கிட்டியதன் பின் இத்தேயிலை பொதிகளை கொழும்புக்கு ஏற்றிச்செல்ல வேண்டும் எனவும் இவர்களால் வழியுறுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை இது தொடர்பில் தோட்ட நிர்வாகத்தின் அதிகாரியிடம் வினாவியபோது, தொழிலாளர்கள் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் தொடர்பில் இ.தொ.கா எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில் தனக்கு ஏதும் உரிய நேரத்தில் அறிவிக்கப்படவில்லை. ஆகையால் வழமைபோல் தேயிலை பொதிகளை கொழும்புக்கு ஏற்றிச்செல்லும் நடவடிக்கையில் தாம் ஈடுப்பட்டதாக அவர் தெரிவித்தார். சரியான தீர்மானம் அல்லது எடுக்கபட்ட முடிவு இ.தொ.கா மூலம் எனக்கு தெரியப்படுத்திருந்தால் இந்நடவடிக்கையில் ஈடுப்பட்டிருக்க மாட்டேன் எனவும் அவர் தெரிவித்தார். 

இதனையடுத்து பேச்சுவார்த்தை ஒன்றில் ஈடுப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது. கூட்டு உடன்படிக்கையின் அடிப்படையில் செயற்படாத அனைத்து தோட்டங்களிலும், இவ்வாறான முறுகல் நிலை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது.    நன்றி வீரகேசரி














கருணாவுக்கு விளக்கமறியல்

29/11/2016 கருணா அம்மான் என அழைக்கப்படும் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனை டிசம்பர் மாதம் 7 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆட்சியின் போது 800 மில்லியன் பெறுமதியான துப்பாக்கி துளைக்காத வாகனொமொன்றை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில்  வாக்குமூலமளிப்பதற்காக நிதிமோசடி விசாரணைப்பிரிவில்  இன்று ஆஜராகிய போது இவர் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி














கரு­ணா குழு­வி­ன­ருடன் இணைந்து கிழக்கில் பல கொலை­களை செய்தேன்.!

29/11/2016 கருணா குழு­வி­ன­ருடன் இணைந்து கிழக்கு மாகா­ணத்தில் பல கொலை­களை தான் செய்­த­தாக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நட­ராஜா ரவிராஜ் கொலை வழக்கின் அரச சாட்­சி­யான முன்னாள் பொலிஸ் கான்ஸ்­டபிள் பிரித்­தி­விராஜ் மனம்­பேரி நேற்று கொழும்பு மேல் நீதி­மன்றில் தெரி­வித்தார்.  

ரவிராஜ் கொலை வழக்கின் இரண்­டா­வது பிர­தி­வா­தியின் சட்­டத்­த­ர­ணி­யான சிரேஷ்ட சட்­டத்­த­ரணி அசித் சிறி­வர்­த­னவின் குறுக்கு கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளிக்கும் போதே குறித்த சாட்­சி­யளர் மேற்­படி சாட்­சி­யத்தைப் பதிவு செய்தார். இந்த விட­யத்தை சாட்­சி­யாளர் வெளி­பப்­டுத்­திய போது மன்றில் பிர­சன்­ன­மா­கி­யி­ருந்த சிரேஷ்ட பிரதி சொலி­சிட்டர் ஜெனரல் ரொஹந்த அபே­சூ­ரிய கடும் எதிர்ப்­பினை முன்­வைத்­ததால் மன்றில் சிறிது நேரம்  வாதப் பிர­தி­வா­தங்கள் நீடித்­தன.
தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பின் யாழ்.மாவட்ட முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நட­ராஜா ரவிராஜ் மற்றும் அவ­ரது மெய்­பா­து­கா­வ­ல­ராக இருந்த பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் லக்ஷ்மன் ஆகி­யோரை படு­கொலை செய்த விவ­காரம் தொடர்­பி­லான சாட்சி விசா­ர­ணைகள் நேற்று கொழும்பு மேல் நீதி­மன்ற நீதி­பதி மணி லால் வைத்­திய தில­கவின் நேரடி கண்­கா­ணிப்பில் சிறப்பு ஜூரிகள் முன்­னி­லையில்  ஆரம்­ப­மா­னது. முத­லா­வது சாட்­சி­யா­ள­ரான அரச சாட்­சி­யாக மாற்­றப்­பட்ட பொலிஸ் கான்ஸ்­டபிள் பிரித்­தி­விராஜ் மனம்­பேரி முத­லா­வது சாட்­சி­யாக நேற்றும்  சாட்­சி­ய­ம­ளிக்க ஆரம்­பித்தார். 
பிர­தி­வாதி சட்­டத்­த­ர­ணி­க­ளான அசித் சிறி­வர்­தன மற்றும்  அனோஜ பிரே­ம­ரத்­னவின்  குறுக்குக் கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளித்­த­வாறு அவர் அளித்த சாட்­சியம் வரு­மாறு :
அசித்: 2005 ஆம் ஆண்டு காலப்­ப­கு­தியின் கிழகில் பிரதிப் பொலிஸ் மா அதி­பரின் கீழ் சேவை­யாற்­றிய காலப்­ப­கு­தியில் கருணா குழு­வுடன் இணைந்து நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டீரா?
பதில்: ஆம்
அசித்: அந் நட­வ­டிக்­கைகள் எவ்­வா­றா­னது என விளக்­க­மு­டி­யுமா?
பதில்: அர­சாங்­கத்தின் நிர்­வா­கத்­துக்கு உட்­பட்ட, உட்­ப­டாத பகு­தி­களில்  புலிகள் அமைப்­புக்கு எதி­ராக கருணா குழு­வி­ன­ருடன் இணைந்து தாக்­கு­தல்­களை நடத்­து­வது. அவர்­களை கொலை செய்­வது.
அசித்: நீர் கூறு­வது அனைத்தும் உண்மை என்­பது தானே உம்­மு­டைய நிலைப்­பாடு?
பதில்: ஆம்
அசித்: இவ்­வ­ழக்கின் குற்றம் மற்றும் சதி தொடர்பில் நீர் கூறி­வதும் அப்­ப­டி­யானால் உண்மை தானா?
பதில்: ஆம்
அசித்: உம்மை பொறுத்­த­வரை இரு நிலைப்­பா­டுகள் உள்­ளன. ஒன்று, ரவிராஜ் கொலையை வெளியே கூறா­மைக்கு உயிர் அச்­சு­றுத்தல் காரணம். மற்­றை­யது,  கொல்­லப்­பட்­டது ரவிராஜ் தான் என்­பதை நீர் வானொலி ஊடா­கவே அறிந்­துள்ளீர். அப்­ப­டித்­தானே?
பதில்: ஆம்
அசித்: நீர் பொய் சாட்சி கூறு­கின்றீர் என நான் பரிந்­து­ரைக்­கின்ரேன்.
பதில்: அதனை நான் நிரா­க­ரிக்­கின்றேன்.
அசித: ரவி­ராஜை கொல்லப் போகும் திட்டம் உமக்கு ஏற்­க­னவே தெரியும் தானே?
பதில்: இல்லை.
அசித்: கடந்த 2015.2.26 அன்று நீர் குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு வழக்­கிய வாக்கு மூலம், அதா­வது நீர் உண்­மை­களை மட்­டுமே கூறி­ய­தாக கூறும் வாக்கு மூலத்­துக்கு அமைய ரவி­ராஜை சாமி கொலை செய்ய தீட்­டிய திட்டம்  உமக்கு தெரிந்­துள்­ளது. அது தொடர்பில் நீர் வாக்கு மூலம் அளித்­துள்ளீர். ?
(இதன் போது எழுந்த சிரேஷ்ட சொலி­சிட்டர் ஜெனரல் ரொஹந்த அபே­சூ­ரிய அக்­கேள்­விக்கு எதிர்ப்பு தெரி­வித்தார். வாக்கு மூலத்தை மன்றில் வாசித்து காட்­டு­வ­தற்கும் இடம்­கொ­டுக்கக் கூடாது என்றார்) 
அசித் : ரவி ராஜ் கொலை இடம்­பெற்ற காலப்­ப­கு­தியில் நீர் பொலிஸ் சேவையில் இருந்­தீரா?
பதில்: ஆம்
அசித்: அப்­ப­டி­யானால் சட்டம் ஒழுங்கை நிலை நாட்டும் உத்­தி­யோ­கத்தர் ஒரு­வரின் பொறுப்­புக்கள் உமக்கும் இருந்­தது?
பதில்: ஆம்
அசித்: அப்­ப­டி­யானால் நீர் சாட்­சியம் அளிக்கும் போது கூறினீர், ரவி ராஜ் கொலையின் முக்­கிய பிர­தி­வா­தி­க­ளான சாமி சரண் ஆகியோர் கொழும்பில் அதி உயர் பாது­காப்பு வல­யத்தில் தங்­கி­யி­ருந்­த­தாக. அப்­ப­டி­யானால் அது தொடர்பில் நீர் உமது உயர் அதி­கா­ரி­க­ளுக்கு அறி­வித்­தீரா?
பதில்: இல்லை.
அசித்: ரவிராஜ் கொலைக்கு அவர்கள் தயா­ரா­னமை நீர் அறிந்­தி­ருந்தீர். அப்­படி இருந்தும் ஒரு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரை கொலை செய்யப் போவதை ஏன் நீர் அறி­விக்­க­வில்லை.?
பதில்: என்­னிடம் புலி இயக்க முக்­கி­யஸ்தர் ஒரு­வரை கொல்லப் போவ­தா­கவே கூறினர்.
அசித்:இல்லை. நீர் ரவி­ராஜை கொல்லப் போகும் திட்­டத்தை முன் கூட்­டியே அறிந்­தி­ருந்தீர். ஆகவே தான் பொலி­சா­ருக்கு வழங்­கிய வாக்கு மூலத்தில் சாமி தன்­னிடம் கூறி­ய­தாக அந்த விட­யத்தை கூறி­யுள்ளீர்?
பதில்: ஞாபகம் இல்லை.
அசித்: சரி, ரவிராஜ் கொலைக்கு முன்னர் உளவு பார்த்­த­தாக ஏதும் தக­வல்­களை சாமி கூரி­னாரா?
பதில்: ஆம், ரவி­ராஜின் வீட்டுப் பகு­தியில் சோதனை நட­வ­டிக்கை ஒன்­றினை சாமி, சரண், டூசேன், பிரசாத், வஜிர,சென­வி­ரத்ன ஆகியோர் இணைந்து முன்­னெ­டுத்­த­தாக கூறினார்.
( இதன் போதும் பிரதி சொலி­சிட்டர் ஜெனரல் தமது எதிர்ப்பை முன்­வைத்­த­தை­ய­டுத்து, நீதி­பதி மணி லால் வைத்­திய திலக, அந்த சோதனை நட­வ­டிக்­கையில் சாட்­சி­யாளர் நேர­டி­யாக பங்­கேற்­ராரா என கேள்­வியை தொடுத்தார். அதற்கு சாட்­சி­யாளர் இல்லை என பதி­ல­ளித்­தை­ய­டுத்து அது தொடர்பில் கேள்வி கேட்க அனு­ம­தி­ய­ளிக்க மறுத்தார்.)
அசித்: உமக்கு பிறகு சாட்­சி­ய­ளிக்­க­வுள்ள 2 ஆவது சாட்­சி­யா­ளரை தெரி­யுமா?
பதில்: ஆம்
அசித்: மூன்­றா­வது சாட்­சி­யா­ளரை தெரி­யுமா?
பதில்: ஆம்
அசித்: 2006.11.09 ஆம் திகதி  நீரும், ஏனைய இரு சாட்­சி­யா­ளர்­களும் சேர்ந்து தொழில் நுட்ப கல்­லூரி சந்­தியில் ரவி­ராஜை கொலை செய்ய முயன்ற போது அவ்­வி­டத்தில் மோட்டர் சைக்­கிளில் இருந்தீர் தானே?
பதில்: இல்லை. அதனை மறுக்­கின்ரேன்.
அசித்: ரவிராஜ் கொலைக்கு முன்­ன­ரேயே, கொலை செய்­யப்­பட்ட தினம் நீர் செலுத்­திய மோட்டர் சைக்கிள் உமக்கு தரப்­பட்­டது.
பதில்: இல்லை
கேள்வி: தலை கவசம் கூட ஒரு வாரத்­துக்கு முன்பே உம்­மிடம் கொடுக்­கப்­பட்­டது என நான் யோசனை செய்­கின்றேன்.
பதில்: அதனை நிரா­க­ரிக்­கின்றேன்.
அசித்: நீர் கருணா குழு­வுடன் இணைந்து செய்த குற்­றத்தை மறைக்க பிர­தி­வா­தி­க­ளுக்கு எதி­ராக பொய் சாட்சி கூறு­கின்றீர் என் நான் பிரே­ரிக்­கின்றேன்.
பதில்: நிரா­க­ரிக்­கின்றேன்.
அசித்: ரவி­ராஜின் கொலை இடம்­பெற்ற தினம் சாமி உம்மை எங்கு வரச் சொன்னார்?
பதில்: பொரளை கனத்தை அருகே
அசித்: கனத்தை என்­பது மிக விசா­ல­மான பகுதி. அதன் முன்­பாக ஒரு சுற்று வட்டம் உள்­ளது. அந்த சுற்­று­வட்டம் ஊடாக 5 பாதைகள் பிரிந்து செல்­கின்­ரன?
பதில்: ஆம்
அசித்: அப்­ப­டி­யாயின், கனத்தை அருகே வரு­மாறு சாமி கூறி­யதும் நீர் எப்­படி சரி­யாக, மாதா வீதிக்கு மிக அருகில் போய் நின்றீர்? ஏற்­க­னவே உமக்கு பாதை அறி­விக்­கப்­ப­டாமல், சதி தெரி­யாமல் இருப்பின் எப்­படி அது சாத்­தி­ய­மாகும்?
பதில்: இல்லை. சாமி வரச் சொன்­ன­தா­லேயே அங்கு சென்றேன்.
அசித்: அங்கு சாமி, சரண் வந்­த­னரா?
பதில்: ஆம். கறுப்பு முச்­சக்­கர வண்­டியில் சாமி சரண், டூசேன் ஆகியோர் வந்­தனர்.
அசித்: வேறு யார் வந்­தனர்?
பதில்: பச்சை மற்றும் கிறீம் நிர முச்­சக்­கர வண்­டி­க­ளில்­பி­ர­தி­வா­திகள் வந்­தனர். கிறீம் நிற முச்­சக்­கர வண்­டியில் கடற்­ப­டையைக் குறிக்கும் எழுத்­துடன் கூடிய இலக்­கத்­த­கடு காணப்­பட்­டது.
அசித்: அந்த முச்­சக்­கர வண்­டி­களில் வந்தோர் யார்?
பதில்: ஞாபகம் இல்லை
அசித்: ஞாபகம் இல்லை என்­பது பொய். கறுப்பு முச்­சக்­கர வண்டி மட்­டுமே வந்­தது. அதில் கருணா குழு­வினர் வந்­துள்­ளனர்.?
பதில்: இல்லை மறுக்­கின்றேன்.
அசித்: சாமி, சரண், டூசேன் ஆகியோர் இந்த வழக்கில் தற்­போது இல்­லா­ததால் நீர் தப்­பித்­துக்­கொள்­வ­தற்­காக இவ்­வாறு பொய்­யான சாட்­சியம் அளிக்­கின்ரீர்?
பதில்: இல்லை. அதனை மறுக்­கின்ரேன்.
அசித்: மட்­டக்­க­ளப்பில் கருணா குழு­வினர் பல கொலை­களை செய்­துள்­ளனர்?
பதில்: ஆம்
அசித்: கருணா குழு­வி­ன­ருடன் இணைந்து நீரும் பல கொலை­களை செய்­துள்ளீர்?
பதில்: ஆம்
(இதன் போது அந்த கேள்­விக்கு பிரதி சொலி­சிட்டர் ஜெனரல் கடும் எதிர்ப்பை வெளி­யிட்டார். புலிகள் இயக்­கத்­தி­ன­ரையே கொலை செய்­த­தா­கவும் பிர­தி­வா­தியின் சட்­டத்­த­ர­ணியின் கேள்வி தவ­றா­னது என வாதிட்டார். இதன் போது ஏனைய பிர­தி­வா­தி­களின் சட்­டத்­த­ர­ணி­க­ளான  ரசிக பால­சூ­ரிய மற்றும் அனோஜ பிரே­ம­ரத்ன ஆகி­யோரும் எழுந்து அசித் சிறி­வர்­த­ன­வுடன் சேர்ந்து தொடர் வாதங்­களை முன்­வைத்­தனர். பிரதி சொலி­சிர்ரர் ஜெனரல் தேவை­யில்­லாமல் குருக்­கீடு செய்­வ­தா­கவும் கேள்வி சரி­யா­னதே எனவும் பதிலும் கிடைத்­து­விட்­ட­தாக அவர்கள் கூறினர்.  வாதப் பிர­தி­வாதம் முற்­றிய நிலையில் பொது­வாக கொலை­களை செய்­தீரா என எப்­படி வினவ முடியும் என பிரதி சொலி­சிட்டர் ஜெனரல் பிர­தி­வா­தி­களின் சட்­டத்­த­ர­ணி­க­ளிடம் கேட்டார். இதன் போது சிரேஷ்ட சட்­டத்­த­ரணி அனோஜ பிரே­ம­ரத்ன,  கடத்­தப்­பட்ட சீனி முத­லாளி, மேலும் பல தன்மிழ் அப்­பா­விகள் யார் என கேள்வி எழுப்­பினார். அதற்குள் தலை­யிட்ட நீதி­பதி மணி லால் வைத்­திய திலக வாதத்தை நிறை­வுக்கு கொண்­டு­வந்து சமா­தா­னப்­ப­டுத்­தினார்.
இத­னை­ய­டுத்து மூன்­றா­வது பிர­தி­வா­தியின் சட்­டத்­த­ர­ணி­யான அனோஜ பிரே­ம­ரத்ன சாட்­சி­யா­ள­ரான பிரித்தி விராஜ் மனம்­பே­ரியை குறுக்கு விசா­ர­ணை­க­ளுக்கு உட்­ப­டுத்­தினார்.
அனோஜ: சாமியின் அறி­வு­றுத்தல் படி போகும் போது யாரையோ ஒரு மனி­தரை கொல்லப் போவதை நீர் அறிந்­தி­ருந்­தீரா?
பதில்: புலிகள் இயக்க உறுப்­பினர்.. என இழுக்கும் போதே
அனோஜ: புலிகள் இயக்­கமோ, ஐ.எஸ். அமைப்போ, போகோ ஹராமோ ஏதோ ஒரு அமைப்பை சேர்ந்த ஒரு மனி­தனை கொல்லப் போவதை அறிந்­தி­ருந்­தீரா?
பதில்: ஆம்.
அனோஜ: நீர் இவ்­வ­ழக்கில் மன்­னிப்பு பெற விதிக்­கப்­பட்ட நிபந்­த­னையைத் தானே தற்­போது இப்­படி சாட்சி சொல்­வது. இதனைப் பெற சட்ட மா அதி­ப­ருக்கு நீர் நன்றி தெரி­வித்­தீர்­தானே?
( இக்­கேள்­வியின் போது பிரதி சொலி­சிர்ரர் ஜெனரல் மீள தமது எதிர்ப்பைத் தெரி­வித்தார்.)
அனோஜ: அர­சுக்கு பக்கச் சார்­பாக சாட்­சி­ய­ளிப்­ப­தாக கூரினீர் தானே? அது தானே நிபந்­தனை?
பதில்: ஆம்
( கனம் நீதி­ப­தி­ய­வர்­களே, அரசின் சார்­பாக சாட்­சியம் அளிப்­ப­தாக அவர் கூற­வில்லை. அர­சாங்­கத்­துக்கு பக்கச் சார்­பாக வாக்கு மூலம் அளிப்­ப­தா­கவே அவர் நிபந்­த­னை­க­ளுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்ளார்.)
அனோஜ: உமக்கு நிபந்­தனை பிணை கடந்த 2015.10.05 அன்று கிடைத்­தது?
பதில்: ஆம்
அனோஜ: கஞ்சா தூள் 160 கிலோ விற்­பனை செய்த வழக்கில் குற்­றத்தை ஒப்புக் கொண்­டது அதன் பின்னர் தானே?
பதில்: ஆம்
அனோஜ: குறித்த வழக்கில் இரு சாட்­சிகள் விசா­ரிக்­கப்­பட்ட பின்­ன­ரேயே நீர் குற்­றத்தை ஒப்புக் கொண்டீர். அதன் பின்­ன­ரேயே உமக்கு தண்­டமும் 10 வருட ஒத்தி வைக்­கப்­பட்ட தண்­ட­னையும் வழங்­கப்­பட்­டது. இதன் போது சட்ட மா அதிபர் சார்­பிலும் உமக்கு குரைந்த பட்ச தண்­ட­னையே கோரப்­பட்­டது. இவை­ய­னைத்தும் இவ்­வ­ழக்கில் அரச சாட்­சி­யாக சாட்­சி­ய­ம­ளிப்­ப­தற்­கான நிபந்­த­னை­யல்­லவா?
பதில்: இல்லை.
( இதன் போது பிரதி சொலி­சிட்டர் ஜெனரல் ரொஹந்த கடும் ஆட்­சே­பனை வெளிட்டார்.)
அனோஜ: நீர் கிழக்கில் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஹனின் கீழ் எப்­போது கட­மை­யாற்­றினீர்?
பதில்: எனக்கு ஞாப­கத்தில் உள்­ளதன் படி 2005 ஜன­வரி முதல் டிசம்­ப­ருக்கு உட்­பட்ட காலப்­ப­கு­தியில்
அனோஜ: 2006 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பிர­பல சீனி வர்த்­தகர் நட­ராஜா ஸ்ரீ ஸ்கந்­த­ரா­ஜவை கடத்­தி­யமை தொடர்பில் நீர் 2008 ஆம் ஆண்டு கைது செய்­யப்­பட்­டாரா?
பதில்: ஆம்
அனோஜ: சட்ட மா அதிபர் அது தொடர்பில் குற்றம் சாட்­டி­யுள்ளார் தானே?
பதில்: ஆம்
( இதன் போது அது குறித்து வேறு ஒரு வழக்கு இடம்­பெ­று­வதால் அவ்­வ­ழக்­குக்கு  சாட்­சி­யா­ளரின்   சாட்சியாளரின் பதில் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் அதில் அவர் ஒரு பிரதிவாதி என்பதல் அவருக்கு பாதக நிலைமை ஏர்படலாம் எனவும் சுட்டிக்கடடப்பட்டது. அதனால் அக்கேள்விகள் தவிர்க்கப்படல் வேண்டும் என பிரதி சொலிசிட்டர் ஜெனரலினால் கோரப்பட்டது. எனினும்  சிரேஷ்ட சட்டத்தரணி அனோஜ பிரேமரத்ன, சாட்சிகள் கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் தமக்கு அக்கேள்விகளை தொடுக்க முடியும் என்பதையும், அதனால்  எவ்வித பாதிப்பும் இல்லை என்பதையும் எடுத்துக்காட்டி குறுக்கு விசாரணைகளை தொடர்ந்தார்)
இந் நிலையில் நேற்றைய தினம் மாலை 4 மணியளவில் வழக்கை இன்றைய தினத்துக்கு ஒத்திவைத்த நீதிபதி மணி லால் வைத்திய திலக இன்று காலை10.30 க்கு வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக அறிவித்தார். அதுவரை பிரதிவாதிகளை கொழும்பு விளக்கமறியல் சிறையிலும் முதலாவது சாட்சியாளரை மெகசீன் சிறையிலும் விஷேட பாதுகப்புக்கு மத்தியில் தடுத்து வைக்க நீதிபதி உத்தர்விட்டார்.    நன்றி வீரகேசரி
















பாராளுமன்றத்தை நோக்கி படையெடுக்கும் 3000 இற்கும் அதிகமான மாணவர்கள்?

29/11/2016 களனியிலிருந்து கொழும்பு நோக்கி  அனைத்து  பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும்  வைத்தியபீட மாணவர்கள் செயற்பாட்டுக் குழுவும் இணைந்து  முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டம் பாராளுமன்றத்தை நோக்கி முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில் 3000 இற்கும் அதிகமான மாணவர்கள்  பொரளையிலிருந்து கோட்டே வீதியினூடாக ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனால் வாகன சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   நன்றி வீரகேசரி











பிள்ளையான் உட்பட நால்வரின் விளக்கமறியல் நீடிப்பு.!

30/11/2016 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பராஜசிங்கத்தின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 4 பேரினதும் விளக்கமறியல் எதிர்வரும் டிசம்பர் மாதம் 14 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.
நீதவானும் மேலதிக மாவட்ட நீதிபதியுமான மாணிக்கவாசகர் கணேசராஜா முன்னிலையில் இன்று இவர்களை ஆஜர்படுத்தியபோதே நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா, கஜன் மாமா எனப்படும் கனகநாயகம் மற்றும் இராணுவப் புலனாய்வு உத்தியோகஸ்தர் எம்.கலீல் ஆகியோருக்கே விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கடந்த 2005ஆம் ஆண்டு மட்டக்களப்பு புனித மரியாள் இணைப் பேராலயத்தில் நடைபெற்ற நத்தார் நள்ளிரவு ஆராதனையில் கலந்து கொண்டிருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் கடந்த 11.10.2015 அன்று சந்தேக நபரான சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட 04 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் எதிர்வரும் டிசம்பர் 14ஆம் திகதிவரை 4 பேரினதும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.   நன்றி வீரகேசரி












முல்லைத்தீவு ஒதியமலை படுகொலை : 32ஆம் ஆண்டு நினைவுதினம் அனுஷ்டிப்பு!

02/11/2016 முல்லைத்தீவு, ஒதியமலை கிராமத்தில் 1984.12.02 அன்று இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட 32 அப்பாவி தமிழ் மக்களின் 32ஆம் ஆண்டு  நினைவு தினம் இன்று  படுகொலை  நடைபெற்ற இடத்தில் இராணுவத்தால் இடித்து அழிக்கப்பட்ட  நினைவுத்தூபி ,அமைத்திருந்த இடத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.
படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவுகள் தீபம் ஏற்றியும் ஒதியமலை பிள்ளையார் ஆலயத்தில் விசேட ஆராதனையில் ஈடுபட்டும்  தமது உறவுகளை நினைவு கூர்ந்தனர். 
இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா  மற்றும் வட மாகாண சபையின் பிரதி அவைத்தலைவர் 
கமலேஸ்வரன்  உறுப்பினர்களான ஜி.ரி. லிங்கநாதன், து. ரவிகரன் ஆகியோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
1984.12.02 ஆண்டு அதிகாலையில் இராணுவ சீருடையில் கிராமத்திற்குள் புகுந்த இராணுவத்தினர்  ஒதியமலை கிராமத்திலுள்ள வீடுகளில் இருந்த ஆண்களை ஒரு இடத்திற்கு கூட்டிச் சென்று சுட்டு  படுகொலை செய்திருந்தனர்.
இந்த  படுகொலை செய்யப்பட்ட மக்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுத்தூபியை இராணுவத்தினர் இடித்து அழித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி












No comments: