.
சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்
சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்
அந்த ஊரின் மத்தியில் என்றும் பசுமையாக நின்றது, வானுற ஓங்கி வளர்ந்திருந்த ஓர் அரச மரம். அரச மரத்தின் கீழே, பெரும்பாலான நேரம் மரத்தைப் போலவே அசையாமல், நேர்கொண்ட பார்வையுடன் வீற்றிருந்தார் ஒரு சாமியார்.
மரத்தின் வயசு அவ்வூரில் யாருக்கும் தெரியாது. சாமியாரின் வயதும் தெரியாது.
அவ்வூரில் இருந்த முதியவர்கள், தாம் பிறந்த காலத்திலிருந்தே அவர் அங்கே இருந்ததாகச் சொன்னார்கள். தம் தகப்பன் பாட்டன் கூட அரசமரத்தடிச் சாமியாரைப் பற்றிக் கூறியிருந்ததாகவும் சொன்னார்கள். அப்படிச் சொன்ன முதிவர்களில் பலர் இப்போது போய் விட்டார்கள். சாமியார் இன்னும் அங்கேயே இருந்தார்.
சாமியாரின் தோற்றம் கொஞ்சம் முதியவர் போலவே இருந்தது. ஆனால் அவரது முதுமை அதிகரித்து வந்ததற்கான அறிகுறி எதுவுமில்லை. பெரும்பாலும் நரைத்திருந்த தலையிலும் நீண்ட தாடியிலும் மிஞ்சியிருந்த கறுப்புக் கேசங்கள் பல தசாப்தங்களாக அப்படியே இருந்தன. சுருங்கியிருந்த கண்களில் இருந்த தீட்ஷண்யமும் கொஞ்சமும் குறைவதாக இல்லை.
சாமியார் வாய் திறந்து பேசுவது மிகவும் அபூர்வம். அறிவுரை அல்லது அருள்வாக்கு நாடி அவரிடம் வந்தவர்களுக்கெல்லாம் புன்னகை தவிர அவரிடம் பதில் வேறில்லை. ஆனால், சில வேளை யாராவது அரச மரத்தைக் கடந்து போகும் போது சம்பந்தா சம்பந்தமின்றி ஓரிரு வார்த்தைகள் சொல்வார். பெரும்பாலும் அவர் வார்த்தைகளின் அர்த்தம் யாருக்கும் புரிவதில்லை. அவ்வூரில் இருந்த சில முதியவர்கள், 'ஆயிரம் பிறை கடந்த பின்பு தான் அர்த்தம் புலப்படும் அவரது வார்த்தைக்கு' என்று சொன்னார்கள்.
மற்றும்படி சாமியார் மௌனமாகப் பார்த்துக் கொண்டே இருந்தார் - ஓடுகிற ஆற்றின் நடுவே நிற்கும் ஒரு பாறை போல. கால தேவனின் நீதி மன்றத்தில் ஒரு சாட்சி போல.
அந்த ஊரிலே செல்லையா என்றொரு ஏழை விவசாயி இருந்தான். முப்பாட்டன் காலத்தில் இருந்த நிலத்தைத் தலை முறை தலை முறையாகப் பங்கு போட்டு வந்ததால், வான் பொய்த்த போது வயிற்றைக் கழுவுதற்கு விற்றதால், வேறு புது நிலம் வாங்கிச் சேர்க்காததால், இவனுக்கு மூன்று பரப்பும் முக்கால் குழியும் எஞ்சிற்று. அந்தச் செம்பாட்டு நிலத்தைக் கிண்டிக் கொண்டு காலம் கடத்தினான். வெளியிலோ கடுங்கோடை- வெய்யிலினால் அல்ல; வெள்ளையர் அரசாட்சி செய்யும் கொடுமைச் சிறப்பினால்!*
செல்லையாவிற்குத் தன் தொழிலில் மகிழ்ச்சி இல்லை. ஒவ்வொரு நாளும் விடிகாலையில் எழுந்து வயலில் வெட்டி முறிய வேண்டி இருந்தது. வான் பொய்த்து விட்டால் வயலில் பயிர்கள் கருகின. இறைக்கலாம் என்றாலோ துலா மிதிப்பில் இடுப்பு ஒடிந்தது. கண்ணே போலக் காத்துப் பயிரை வளர்த்து விட்டாலோ, வாடும் பயிருக்கு வார்க்காத முகில் கதிர்கள் சூடும் பயிர்மேல் சோவென்று கொட்டி* அறுவடைக் காலத்தில் வயலை அழித்தது.
இத்தனைக்கும் தப்பி அறுவடை நடந்து விட்டாலோ, அந்த வருடம் ஊரில் எல்லோருக்கும் நல்ல அறுவடையாக இருக்கும். வியாபாரிகள் தானியத்தை அநியாய விலைக்குக் கேட்பார்கள். சென்ற வருடம் துலா மிதிப்பின் போது கால் சறுக்கி விழுந்து செல்லையாவின் சகலன் செத்துப் போனான். செல்லையா நெடு மூச்சு விட்டான். "இது என்னடா தொழில்" என்று நினைத்தான்.
செல்லையாவின் மகன் சுப்பிரமணியம். செல்லையா கண்ணுக்குக் கண்ணாக அவனை வளர்த்தான். 'என்னைப் போல நீ கஷ்டப் படாமல், நாலு எழுத்துப் படிச்சு அரசாங்கத் தொழில் செய்ய வேணும்" என்று அடிக்கடி சொல்வான். அந்த நாளில் 'சுதேசிகளுக்கு' வெள்ளைக்காரன் கொடுத்த அதி உயர்ந்த தொழில் ஆசிரியத் தொழில். தன் மகனை ஒரு 'வாத்தியார்' ஆக்கி நாலு பேர் மதிக்கும்படி வாழ வைக்க வேண்டுமென்பது செல்லையாவின் அந்தரங்கக் கனவு.
செல்லையாவின் ஊர்ப் பாடசாலையில் ஐந்தாம் வகுப்புக்கு மேல் வகுப்புகளில்லை. எட்டாம் வகுப்பு 'பிரெப்' பாசு பண்ணினால்தான் 'ரெயினிங் கொல்லீச்சு' நுழைவுத் தேர்வு எழுத முடியும். செல்லையா மகனுக்கு வெள்ளை வெளேரென்ற நாலு முழ வேட்டி அணிவித்து, வெற்றுடம்பில் நார்ப்பட்டுச் சால்வையைப் போர்த்தி, பின் குடுமி கட்டுவித்து, பக்கத்தூர் மகா வித்தியாலயத்திற்கு நடத்தி அழைத்துச் சென்ற முதல் நாள், அரச மரத்தடியில் வீற்றிருந்த சாமியார் கவனமாக உற்றுப் பார்த்தார்.
செல்லையா ஒரு கும்பிடு போட்டான்.
"நிற்பானேல் நன்றே. நெடும் பயணம் ஆய் விடுமோ?" என்று சிரித்துக் கொண்டே சொன்னார் சாமியார்.
செல்லையாவுக்குப் புரியவில்லை. கொஞ்சம் பயமாகவும் போய் விட்டது. மகனுடன் நழுவி விட்டான்.
அப்புறம்....
சுப்பிரமணியம் 'ரெயினிங் கொல்லீச்சு' படிப்பு முடித்து, பக்கத்தூர்த் தமிழ்ப் பாடசாலையில் ஆசிரியர் ஆகி விட்டான். ஒரு 'ரலி' சயிக்கிளை வாங்கிக் கொண்டு வேலைக்குப் போய் வரத் தொடங்கினான். 'வாத்தியார் மாப்பிள்ளை' என்ற மதிப்புடன் திருமணமும் நடந்து விட்டது. வரகுணன் என்ற மகன் பிறந்தான். செல்லையா சென்று விட்டான்.
நாட்டிலே கோடை போய் ஒரு தற்காலிகக் குளிர் வந்தது. வெள்ளையர்கள் கப்பலேறிப் போய் விட்டார்கள். பல்கலைக் கழகங்கள் வந்தன. கல்லூரிப் படிப்பு திறமையுள்ள எல்லோருக்கும் கிடைக்கலாயிற்று. உபாத்தியாயர்கள் கோலோச்சிய ஊரிலே ஓரிரு 'டொக்டர்' களும் 'இஞ்சினியர்' களும் முளை விடத்தொடங்கினர். அவ்வளவு படிக்காதவர்களும் பல வழிகளிலே பணம் தேடத்தொடங்கினர்.
சுப்பிரமணியம் தன் தொழிலில் அதிருப்தியை உணரலானான். சயிக்கிள் விளக்கிப் பல மைல்கள் வேலைக்குப் போக வேண்டி இருந்தது. ஆசிரியர் என்ற வார்த்தைக்கு இருந்த மதிப்புப் போய், 'தமிழ் வாத்தி' என்பது சிரிப்புக்கு உரிய பதமாக மாறி வந்ததாகத் தெரிந்தது. விலை வாசி உயர்வோடு சம்பளம் உயரவில்லை. 'மிச்சம் மிச்சம்' என்று இருந்த வருமானம் 'ஏதோ போதும்' என்ற நிலைக்கு இறங்கிப் பின் "பற்றாது குடும்பச் செலவுக்கு" என்ற நிலைக்கு வந்தே விட்டது. மாணவர்களும் முன் போல் மதிப்பதில்லை. "இது என்ன தொழில்" என்று சுப்பிரமணியம் சலித்தான்.
சுப்பிரமணியம், தன் மகனை ஓர் எஞ்சினியர் ஆக்க வேண்டும் என்று தீர்மானித்து விட்டான். நகரத்தில் இருந்த கொல்லேச்சில் விடுதியில் தங்க வைத்துப் படிப்பித்தான். வரகுணனும் நன்றாகப் படித்துப் பொறியியல் துறையில் பல்கலைக் கழகம் சென்று விட்டான்.
'எஞ்சினியர் மாப்பிள்ளை' என்ற பூரிப்போடும் கொழுத்த சீதனத்தோடும் மகனுக்குக் கலியாணம் செய்து வைத்தான் சுப்பிரமணியம். நீர்ப்பாசனத் துறையில் சில வருடங்கள் வேலை செய்தான் வரகுணன். அவனது சிநேகிதர்கள் பலர் 'நைஜீரியா' சென்று உழைக்கப் புறப்பட்டனர். இவனுக்கும் இருப்புக் கொள்ளவில்லை. மனைவியையும் இழுத்துக் கொண்டு புறப்பட்டு விட்டான்.
பயணப் பொதிகளுடன் அவர்கள் தாண்டிச் செல்லுகையில் அரச மரத்தடிச் சாமியார் குறுஞ்சிரிப்போடு பார்த்துக் கொண்டிருந்தார்.
'இல்பொருள் அதனையே...' என்று முணுமுணுத்தார்.
வரகுணன் அவரைப் பொருட்படுத்தவில்லை. போய் விட்டான்.
அப்புறம்....
வரகுணன் நைஜீரியாவில் இருந்து கனடாவுக்குப் போய் விட்டான். பெரிய பொறியியல் கம்பெனி ஒன்றில் அதிகாரி நிலைக்கு வந்து விட்டான். சயிக்கிளில் போய் வந்த காலங்களை மறந்து, இப்போது 'டொயோட்டா' கார் ஓடுபவர்களை ஏழைகளாக நினைக்கப் பழகி விட்டான். காலை எழுந்ததும் அவன் மனத்தில் வரும் கேள்வி 'இன்றைக்கு வேலைக்குப் போவது அவுடியிலா அல்லது பி. எம்மிலா?" என்பதாக இருக்கும். வரகுணன் பிள்ளைகளும் படித்துத் தங்கள் தங்கள் தொழில்களில் ஈடுபட்டு விட்டனர்.
இருந்தும்....
வரகுணன் தன் வேலையில் நிறைவின்மையைக் காணலானான். எந்த நேரமும் அலுவலகத்தில் அடைந்து கிடைக்க வேண்டி இருந்தது. சூரியனையே காண்பதில்லை. செயற்கை வெப்பமாக்கிகளும் குளிரூட்டிகளும் எரிச்சலூட்டலாயின. பசுமையும் பூக்களும் எப்போதாவது ஒரு நாள் தான் கண்ணில் பட்டன. வேலைக்குச் சென்று தனி அறையில் கணனி முன் குந்தினால் சில நாட்களில் மனிதர் எவருடனும் நேருக்கு நேர் பேசாமலேயே (ஈ-மெயில்கள், டெலி - கான்பரன்ஸ் நீங்கலாக) வீடு திரும்பினான். அப்படியே பேசினாலும் சுற்றி இருப்பவர்களில் பலர் பதவி ஆசையும் பண ஆசையும் மிகுந்தவர்களாகவும் பொய் முகங்களை அணிந்தவர்களாகவும் தோன்றினர்.
இதுவும் போக, தன் வேலையின் அர்த்தம் வரகுணனுக்குப் புரியவில்லை. தனியார் கம்பெனி இலாபம் சம்பாதிக்கும் மாபெரும் இயந்திரமாகத் தெரிந்தது. அதன் இலாபத்தை அதிகரிப்பதற்காகப் பொய்யும் புனைசுருட்டும் பேசவேண்டிப் பல சமயம் அவனுக்கு நேர்ந்தது. இடியக்கூடிய கட்டிடங்களுக்கும் உடையக்கூடிய பாலங்களுக்கும் அங்கீகாரம் அளித்தான் வரகுணன். தன் வேலையானது தனக்குச் சம்பளத்தையும் முதலாளி மாருக்கு லாபத்தையும் தவிர வேறு யாருக்கும் ஏதும் நன்மை தரவில்லை என்று வரகுணன் எண்ணலானான். 'ஹெக், வாட் ஈஸ் திஸ் ஜாப்' என்று நினைத்தான்.
காரசாரமான ஒரு 'போர்ட் மீட்டிங்' முடிவடைந்த கடுங்குளிர் இரவொன்றில் வரகுணன் களைப்புடன் தன் வீட்டுக்குப் போனான். 'ஒன்லைனில்' தனது வங்கிக் கணக்கைத் திறந்து பார்த்தான். சில மனக்கணக்குகள் போட்டான். தாய் நாட்டில் தனது உறவினர் ஒருவருக்குப் 'போன்' செய்தான்.
'எனக்கு நிலம் வேண்டும். பல பரப்புகள் - இல்லை பல ஏக்கர்கள் நிலம் வேண்டும்' என்றான்.
அடுத்த தைத்திங்கள் பிறந்த போது, வரகுணன் தன் மனைவியுடன் தாய் நாட்டுக்குப் போய் விட்டான். மூக்கில் விரல் வைத்த ஊரவர்களிடம் , 'இனி மேல் இஞ்சை தான் இருக்கப் போறன். தோட்டம் செய்யப் போறன்' என்று சொல்லி விட்டான்.
பொழுது புலராத அதிகாலை வேளையொன்றில், வரகுணன் வயற்காட்டுக்குக் கிளம்பிப் போனான்.
அவனது நிலம் அவனை வரவேற்றது.
'ஐயா வேலை நடப்பதைப் பார்த்து விட்டுப் போக வந்திருக்கிறார்' என்று எண்ணிய வேலையாட்கள், அவன் உழவு இயந்திரத்தில் ஏறிக் கொண்டதும் திகைத்தனர்.
முதன் முதலாகத் தனது சொந்த நிலத்தை உழுதான். மழை பெய்து குளிர்ந்திருந்த நிலத்தை உழுது புரட்டியதும் 'கும்' மென்று ஒரு வாசம் எழுந்தது. கணவனுடன் அன்று தான் வாழத் தொடங்கிய புதுமணப் பெண்ணின் வாசனையென அது அவன் மூக்கில் நுழைந்தது.
கிழக்கு வெளுத்து வந்தது. தென்றல் இதமாக மேனியை வருடிச் சென்றது. கிளிகள் கீச்சிட்டுக் கொண்டு உயரே பறந்தன. வயல் கிணற்றில் இருந்து இறைத்து விட்ட தண்ணீர் குதூகலக் கும்மாளத்துடன் வாய்க்காலில் விரைந்து வந்தது.
இளங்காலையை அவன் அதிசயமாகப் பார்த்தான். மேல் நாட்டில் வழமையாக அந்நேரம் அவன் படுக்கையை விட்டு எழுந்திருப்பது கூட இல்லை.
பக்கத்து வயலில், ஏர் பூட்டி உழவு செய்யும் ஏழை உழவன் பாடுகிறான்.
"மூலை வரம்போரம் - செல்லா நீ முடுகி வளை நல்ல கண்டே!
ஓடி நட கண்டே - செல்லா நீ உன் உறுதி உள்ள காலாலே"
கரகரப்பு மிகுந்த, சங்கீதப் பயிற்சி அற்ற குரல். ஆனால் அவன் குரலில் தனது எருதுகளின் மேலுள்ள பாசமும், காலை நேரத்தின் இயல்பான சந்தோஷமும் வழிகின்றன. கடைக் கண்ணால் அவனைப் பார்த்துப் புன்னகை செய்து கொண்டே நாற்று நடுகைக்குத் தயார் செய்கிறாள் உழத்தி.
வரகுணன் ஒரு நெடு மூச்சு விட்டான். 'ஆகா, இது அல்லவா தொழில்'என்று நினைத்தான்.
மாலையில், உழைத்த களைப்புடன் அவன் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த போது, அரச மரத்தடிச் சாமியார் கண் திறந்து அவனைக் கவனமாகப் பார்த்தார். குறும்புச் சிரிப்போடு திருவாய் மலர்ந்தார்.
"சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்."
-----
* மகாகவி து. உருத்திரமூர்த்தி அவர்களின் கவிதை வரிகளைத் தழுவியது.
No comments:
Post a Comment