உள்ளத்தால் உயர்ந்துநிற்பார் ! - எம். ஜெயராமசர்மா .... மெல்பேண் ...

.
image1.JPG

  உடல்குறையை உளமிருத்தா
         ஊக்கமதை உளமிருத்தி
         செயற்கரிய பலவாற்றி
          திறலுடனே விளங்கிநின்று 
          நலமுடனே இருக்கின்றோம்
          என்றுலகை வியக்கவைக்கும் 
           மாற்றுத்திறன் மிக்காரை
           மனமார வாழ்த்திநிற்போம் !

           ஆண்டவன் படைப்பினிலே
           அரைகுறையாய் பிறந்தாலும்
           ஆண்டவனே வியந்துநிற்க
            அவர்செயல்கள் ஆற்றுகிறார்
            வேண்டாதார் எனவொதுக்கும்
             நிலையதனைத் தகர்த்தெறிந்து
             வியக்கவே  வைத்துநிற்கும்
             மேனிலையை வாழ்த்திடுவோம் !

            ஊனமுற்றார் எனவழைக்கும்
            வார்த்தைதனை பொய்யாக்கி
            வானமென உயர்ந்துநின்று
             வகைதொகையாய் பலவாற்றி 
             தேர்ந்தெடுத்த வாழ்க்கைதனை 
             சிறப்புடனே வாழவெண்ணி
              சீராகவாழும் அவர்
              செம்மையினை வாழ்த்திடுவோம் !



               நெஞ்சமதில் உறுதிகொண்டு
                துஞ்சாமல் பலதொட்டு 
                வஞ்சமிலா மனத்துடனே
                வாழவெண்ணி வாழுமவர்
                 ஊனமுற்றோர் எனக்கூறும்
                 வட்டமதை விட்டுவிட்டு
                 வாழ்நாளை மகிழ்வாக்கும்
                 மனத்திடத்தை வாழ்த்திநிற்போம் !

         ஊனமது உடலில்லை உள்ளத்தில் இருக்கிறது 
         ஞானமது வந்துவிட்டால் நம்முணர்வும் விழித்துவிடும் 
         உள்ளமெலாம் ஊனம்வைத்து ஊனமதை நாம்பழித்தால்
         ஊனமுற்றார் ஊனமுறார் உள்ளத்தால் உயர்ந்துநிற்பார் !
                 

No comments: