ஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன்

.

கவிஞர் இன்குலாப் 


ஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன் 
பறவைகளோடு எல்லை கடப்பேன் 
பெயர் தெரியாத கல்லையும் மண்ணையும் 
எனக்குத் தெரிந்த சொல்லால் விளிப்பேன் 

நீளும் கைகளில் தோழமை தொடரும் 
நீளாத கையிலும் நெஞ்சம் படரும் 
எனக்கு வேண்டும் உலகம் ஓர் கடலாய் 
உலகுக்கு வேண்டும் நானும் ஓர் துளியாய் 

கூவும் குயிலும் கரையும் காகமும் 
விரியும் எனது கிளைகளில் அடையும் 
போதியின் நிழலும் சிலுவையும் பிறையும் 
பொங்கும் சமத்துவப் புனலில் கரையும்! 

எந்த மூலையில் விசும்பல் என்றாலும் 
என் செவிகளிலே எதிரொலி கேட்கும் 
கூண்டில் மோதும் சிறகுகளோடு 
எனது சிறகிலும் குருதியின் கோடு! 

சமயம் கடந்து மானுடம் கூடும் 
சுவரில்லாத சமவெளி தோறும் 
குறிகளில்லாத முகங்களில் விழிப்பேன் 
மனிதம் என்றொரு பாடலை இசைப்பேன்!

No comments: