சிறைபட்ட மழை..வித்யாசாகர்

.

ழைபெய்த மறுநாள்
சாபத்தைப்போல திடீர் அறிவிப்பு வரும்
இன்று பள்ளிக்கூடம் உண்டென்று..
விடாது பெய்த பேய்மழை
அப்பாவிற்கு பயந்தோடும் பிள்ளைகளைப்போல
ஓடி ஒரு மேகத்துள் ஒளிந்திருக்கும்..
தெருவோரம் தவளைமீன்கள்
பாதி இறந்திருக்கும், தவளைகள்
மல்லாக்க விழுந்து கொஞ்சம் உயிர்த்திருக்கும்..
சாலையோரமெலாம் தேங்கிய நீரில்
முகமெட்டிப் பார்த்து, காலலைய – விடுமுறை
விடாத மழையை மிதித்தவாறே செல்வோம்..
வேலிமுள் துளிர்களை
சாலையோர புங்கைமரக் கிளைகளை இழுத்துஇழுத்து
இலையுதிரும் மழைத்துளியை நெஞ்சுக்குள் சேமிப்போம்..
பச்சைபசேல் மரந் தாண்டி தாண்டி
உதிர்ந்தப் பூ வாசம் கடந்து
உள்ளே தேசியகீதம் ஒலிக்கத் துவங்கும்..



மனதெல்லாம் போடாத கணக்கும், மறந்துப்போன
மின்காந்தத்தின் பதிலும்; ஆசிரியரின் அடிபோலவே
சுளீர் சுளீரென்று வலிக்கும்.. 
அம்மா விட்டுவந்த நியாபகமும்
அப்பாவோடு சிரித்து விளையாடிய நேற்றையப் பொழுதும்
புத்தகப்பையோடு தலையில் கணக்கும்..
வேகவேகமாய் நடக்கையில் ஆலிண்டியா அரேடியாவில்
‘அந்திமழை பொழிகிறது’ இறுதி பாடலும், வசந்த் அன் கோ
விளம்பரமும் ஒலிக்கும்..
நேரத்தை வழியெல்லாம் சொல்லும் வானொலி
வீட்டிற்கு வீடு தெருக்களில் ஒலித்துக்கொண்டிருக்க
அவசரமாய் ஓடி பள்ளிக்கூடத்து வாசலில் நிற்கையில்
‘மழை சோ..வெனப் பெய்யும்’
அந்த மழைக்குத் தெரியாது
இத்தனை வருடங் கழித்து இப்படி யொரு கவிதையுனுள்
அந்த மழை என்னிடம் கைதாகுமென்று!!

No comments: