ஒரு சகாப்தம் மீளாத் துயிலில் ஆழ்ந்துவிட்டது.....அப்துல் ஹமீத்

.

எங்கள் தாய்வீடாகிய இலங்கை வானொலியில் 'வானொலி மாமா' என அழைக்கப்பட்டவர்கள் பலருண்டு.
ஆனால் ஒரே ஒரு 'வானொலி அக்கா' மட்டுமே இருந்திருக்கிறார்.
அவரும் இன்று மறைந்துவிட்டார் என்ற இழப்புச்  செய்தி அவுஸ்திரேலியாவிலிருந்து வந்து நம் நெஞ்சங்களை சோகத்தில் ஆழ்த்திவிட்டது.
நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை......
கவி பாரதி, 'புதுமைப்பெண்ணை' வர்ணித்த இந்த வரிகளை நினைக்குந்தோறும், எமது மனக்கண்ணில் தோன்றும் உருவத்தின் பெயர்தான்-
"பொன்மணி குலசிங்கம்"
1960 ம் ஆண்டு 'சிறுவர் மலர்' நிகழ்ச்சிக்குப் போனபோது அந்நிகழ்ச்சியின் 'நிலையத் தயாரிப்பாளராக' அவரை சந்தித்த நாள்முதல் தமிழ் சேவையின் பணிப்பாளராக அவர் வந்தபின்னும்.....  ஏன் கடைசியாக அவுஸ்திரேலியாவில், நடைதளர்ந்த நிலையில் ( ஆனால் கம்பீரம் சற்றும் குறையாத நிலையில்) சந்தித்தபோதும், அந்த அன்னையை 'அக்கா' என்றுதான் உரிமையோடும் பாசத்தோடும் அழைத்திருக்கிறேன்.


அம்மா என்று அழைக்காமல் அக்கா என்று அழைத்தது ஏன்?
60 பதுகளில்,  மழலைகளுக்காக அவர் 'ஓடிவிளையாடு பாப்பா' நிகழ்ச்சியை நடத்தியபோதும் - அவர் 'வானொலி அக்கா'
பின், மகளிருக்காக 'மாதர் பகுதி' நிகழ்ச்சியை நடத்தியபோதும்- அவர் 'வானொலி அக்கா'தான்.
வானொலி வரலாற்றில் தமிழ் சேவையின் பணிப்பாளராக அவர் பணியாற்றிய காலம் - ஒருபொற்காலம்.
ஒலிபரப்பு உதவியாளர்களாக தமிழ் இளைஞர்கள் பலர் வேலைவாய்ப்பினைப் பெறவும் பின்னாளில் அவர்கள் மிகச் சிறந்த நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களாகப் பரிணமிக்கவும் வித்திட்டவர்.
வானொலி நிலயத்திற்கென, தமிழ் மெல்லிசை வாத்திய இசைக்கலைஞர் குழுவினரை முதன்முதலில் உருவாக்கியவர்.
வடக்கைச் சேர்ந்த இசைக்கலைஞருக்கென யாழ்ப்பாணத்திலேயே ஒரு ஒலிப்பதிவுக் கலையகத்தை நிர்மாணித்தவர். யாழ் பகுதியிலே ஒரு ஒலிபரப்பி நிலையம் (transmitter) அமைப்பதற்கும் காரணியானவர்.
6 மணியோடு நிறைவுபெற்ற தமிழ் வர்த்தக ஒலிபரப்பினை இரவு 10 மணிவரைக்கும் விரிவு படுத்தியவர்.
தென்னிந்தியாவுக்கென தனியாக ஒரு வர்த்தக ஒலிபரப்புச் சேவையை ஆரம்பித்து பெரும் வருமானத்தை ஈட்ட வழிவகுத்தவர்.
மத்தியகிழக்கு நாடுகளுக்காவும் தனியாக நிகழ்ச்சிகளை ஒலிபரப்ப வழிவகுத்தவர்.
ரூபவாஹினி ஆரம்பிக்கப்பட்டபோது உத்தியோகபூர்வமாக நடனமேதை 'சித்ரசேன' அவர்களது நாட்டிய நாடகம் ஒளிப்பதிவு செய்யப்பட்டாலும், அதற்கு முதல் நாளே 'Know your culture' என்ற பெயரில் 'பரதநாட்டியம்' பற்றிய ஒரு விவரணச் சித்திரத்தை முதன்முதலாக தயாரித்துச் சாதனை செய்தவர்(அந்நிகழ்ச்சிக்கு உதவித் தயாரிப்பாளர் என்ற பெருமையினையும் எனக்கு ஏற்படுத்தித் தந்தவர்)
எம்போன்றவர்களை ஊக்குவித்து கொழும்பிலும் யாழ்மண்ணிலும் நாடக விழாக்களை நடத்திச் சாதனை புரிந்தவர்.
திறமை உள்ளவர்கள் யாராயிருப்பினும் தட்டிக்கொடுத்து ஊக்குவித்த அந்த அன்னையைப்பற்றிய நினைவுகள் அடுக்கக்காய் வந்து நெஞ்சில் அலைமோதுகின்றன.
இனக்கலவரத்தின் பின்னரும் கூட, இரண்டாம் தரக் குடிமக்கள், போன்ற தாழ்வு மனப்பான்மை இன்றி, வானொலி நிலையத்தில் நாம் தலைநிமிர்ந்து நடக்கும் தைரியம், அவர் தமிழ் சேவையின் பணிப்பாளராக  பணியாற்றிய காலம்வரை தொடர்ந்தது என்பதை, எமது சமகாலத்தில் பணியாற்றிய அனைவருமே இப்போது நன்றியோடு நினைவு கூர்வர் என நம்புகிறேன்.
'பிறப்பவர் எல்லோரும் என்றோ ஓர்நாள் இறப்பது நியதி'
என்ற உண்மையை உணர்ந்து உள்ளத்தைத் தேற்றி, அந்த அன்னையின் ஆன்மா நற்பேறு அடையப் பிரார்த்தனை செய்வோம்.
குடும்ப உறவுகளுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.
அப்துல் ஹமீத்

No comments: