இன்குலாப் பேசுகிறார்-- நான் இன்குலாப் ஆனேன்...

.

நான் இன்குலாப் ஆனேன்...
மத்தியக் கிழக்கு ஆசியாவில் இன்குலாப் என்ற சொல், காலனியத்துவத்தை எதிர்த்து போராடக்கூடிய மக்களுடைய சொல்லாக இருந்தது. தமிழ்நாடு, இந்தியா எனும் எல்லைகளைத் தாண்டியும் போராடும் மக்கள் உச்சரிக்கும் பொதுச் சொல்லாக ‘இன்குலாப்’இருப்பதால் என் மகனுக்கு அந்தப் பெயரைச் சூட்டினேன்.
ஒரு கவிஞனாக அந்தப் பெயரை நண்பர்கள் எனக்குப் பரிந்துரைத்தபோது, அந்தப் பெயருக்கு நான் தகுதியுடையவனா என்பதில் தயக்கமும் அச்சமும் இருந்தது. அதற்குரிய புரட்சிகரமான வாழ்க்கையை இன்றும் என்னால் அமைத்துக்கொள்வதற்கு இயலவில்லை. ஆனால் அந்த வாழ்க்கை எனக்கு லட்சியமாக இருந்தது. நண்பர்கள் அந்தப் பெயரைப் பாதுகாப்பானது இருக்கட்டும் என்று கூறினார்கள். ஆனால், அந்தப் பெயரிலேயே என்னுடைய ‘விடியல் கீதங்கள்’ கவிதைகளை நண்பர்கள் வெளியிட்டும்விட்டார்கள். அதனால் அந்தப் பெயரே நிலைத்துவிட்டது.
என்னைச் செதுக்கியவர்கள்
ஒருவகையில் நான் பள்ளிக்கூடத்தில் உருவாக்கப்பட்டவன். பள்ளியில் உள்ள பாடங்களால் அல்ல. ஆசிரியர்களுடைய சிந்தனை முறைகளினால்தான் நான் ஈர்க்கப்பட்டேன். சங்கரவள்ளிநாயகம் என்ற ஆசிரியர் என் வகுப்புக்கே வந்தது கிடையாது. ஆனால், விழா நாட்களில் அவர் மேடையில் சிறப்பாகப் பேசுவார். அவர் நிகழ்த்திய உரைகள் என்னை மாற்றின. இப்படிதான் சுப்பையா என்ற ஆசிரியர் எனது தன்மான உணர்வை வளர்த்தெடுத்தார்.


வன்முறையும் உயிர் வதையும்
என்னளவில் மானுடம் உயிர் வதைபடுவதில் உடன்பாடில்லை. வன்முறை சார்ந்த போராட்டத் தேவையே இருக்கக் கூடாது, ஆனால், அதிகாரம் தன்னை வன்முறையில் நிலைநிறுத்திக்கொள்வதோடு தன்னை எதிர்ப்போரையும் வன்முறையை நோக்கித் தள்ளுகிறது. ஆயுதத்தை எதிரி தீர்மானிக்கிறான் என்று புரட்சியாளர்கள் சொல்வதுண்டு. வன்முறையையும் எதிரிதான் தீர்மானிக்கிறான்.
புரட்சியும் மாற்றமும்!
புரட்சியே வராது என்று மூடுண்ட சமூகங்களாகக் கருதப்பட்ட அரபு நாடுகளில்கூட வசந்தம் வந்துள்ளது. எனவே, சமூகம் என்பது மாற்றத்துக்குரியது. எனக்கு மாற்றத்தில் நம்பிக்கை இல்லை என்று சொல்லுபவர்கள் உண்மையில் மாற்றத்தைக் கவனிக்காதவர்கள் என்றே நான் சொல்வேன் அல்லது மாற்றத்திற்கு எதிரானவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள் ஒரு மாற்றத்தை, மாற்றத்தின் தீவிர கதியான புரட்சியை அதன் பயனாகிய விடுதலையை அடையாளம் காண முடியாது.
கம்யூனிஸம் தோற்றுவிட்டது, இனி தாராளமயம்தான் என்று கூறுபவரிடம் நான் மேற்சொன்ன போராட்டங்கள் எப்படி சாத்தியமானது என்று கேட்க வேண்டும். இந்தியாவின் உச்சியில் நேபாளத்தில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்று கேட்க வேண்டும். மக்கள் போராடக்கூடிய கட்டாயத்தை உலக அரசியலும் இந்திய அரசியலும் உருவாக்கிக்கொண்டுதான் இருக்கின்றன. நீங்கள் விரும்பாவிட்டாலும் அதை ஏற்கக்கூடிய கட்டாயத்தை வரலாறு ஏற்படுத்தியே தீரும்.
- ஷங்கர், வைகறை எடுத்த பேட்டிகளிலிருந்து...

Nantri: http://tamil.thehindu.com/

No comments: