.
ஒரிரு தினங்களுக்கு முன் ATBC யின் காலை நிகழ்ச்சியை கேட்டுக் கொண்டிருந்தேன். 40 ஆண்டுகளுக்கு மேலாக நடனக் கலை அனுபவம் கொண்டவரும் நடனம் சம்பந்தப்பட்ட பல
புத்தகங்களைத் தந்தவரும் பல அரச விருதுகள் பெற்றவருமான கார்த்திகா கணேசர்
நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருந்தார்.
ஒவ்வொரு விடயத்திலும் அவருக்கென ஒரு தனிப் பார்வை
இருக்கும். தனிக் கோணம் தெரியும். ஒரு விடயத்தை ஒருவர் சொல்கிறார் என்பதற்காக
அன்றி அது சம்பந்தமாக தன்னுடய சொந்த ஆராய்ச்சியில் தனக்குச் சரியெனப் படுவதை
சபையில் துணிந்து சொல்லி தன் தரவை சரி என நிறுவ வல்லவர்.
அந்தக் காலை நிகழ்ச்சி பற்றிச் சொன்னேன் அல்லவா? சலங்கை இட்டாள் ஒரு மாது... பாடல் தெரிவு செய்யப் பட்டு ஒலிபரப்பாகிக்
கொண்டிருந்தது. அழகான பாடல், இசை, குரல் என அந்தப் பாடலுக்கென அமைந்த எல்லாமாக நம்
மனதிலும் ஒரு நடனமாது ஆடிக் கொண்டிருந்தாள். அதைத் தவிர வேறு அபிப்பிராயம் எதுவும்
எழாத காலை நேர நிர்மலத்திற்குத் தோதான அழகிய பாடல்.பாடல்
முடிந்ததும் பாடலுக்கான அபிப்பிராயம் கார்த்திகாவிடம் இருந்து வந்தது. ”பாவம் இந்த டி. ராஜேந்தர். கலையை ரசிக்காமல் பெண்ணை இப்படி விரசமாக
ரசிக்கிறாரே!”
இதை அவர் சொன்ன போது அட, ஆமால்ல என்று தோன்றிய அதே கணம் பானுமதி
அம்மையார் 1956ம் ஆண்டில் பாடிய ’அழகான பொண்ணு நான் அதுக்கேத்த கண்ணு தான்...’ பாடல் நினைவுக்கு வந்தது. அதில் ஒரு வரி வரும். ‘அங்கொண்ணு சிரிக்குது ஆந்தை போல் முழிக்குது; ஆட்டத்த ரசிக்கவில்லை ஆளத்தான்
ரசிக்குது...’ கார்த்திகா அவர்களின் பார்வை வீச்சும் அதன் கோணமும் சிலிர்ப்பூட்டியது.
சாதாரண கண்கள் சாதாரணமாய் பார்த்து விட்டுக் கடந்து
போகும் ஒன்று எவ்வாறு கலைஞர்களின் கண்ணுக்கு பொட்டென பட்டு விடுகிறது என்பதில்
தான் கலை பரினமிக்கிறது.
இவருடய மாணவிகளின் வருடாந்த நாட்டிய நிகழ்வு கடந்த 4.9.16 மாலை 6 -
9 மணிவரை ரெட்கம் மண்டபத்தில் நடந்ததினைக் கண்டு களிக்கும்
சந்தர்ப்பம் எனக்கு வாய்த்தது. சரியாக 6.00 மணிக்கு மண்டபம் நிறைந்து
விட்டது. அலங்காரம் செய்யப் பட்ட சிறுமிகள், அம்மாமார் என எந்த ஓட்ட ஆட்டங்களும் வெளியில் இல்லை. கமராக்காரர்
வீடியோக்காரர் என எந்த இடைஞ்சல்களும் கெடுபிடிகளும் மேடைக்கு அருகே இல்லை.
தீவிர ரசிகர்களுக்கு ரசிக்க எந்த இடைஞ்சலும் செய்து
விடாத அந்த முன்னேற்பாடுகள் - அதில் அவர்
காட்டிய சிரத்தை நிச்சயமாக எடுத்துக் கூறவும் பாராட்டவும் தக்கது. பலரும்
செய்யத் தவறுகிற விடயம் அது. இதற்கு நன்றிகளும் பாராட்டுகளும் கார்த்திகா.
கார்த்திகா. கணேசரின் நடன குருவான வழுவூராரின்
வழிவந்த நடன நிகழ்வு என்ற சிறு அறிமுகத்தோடு நிகழ்வு ஆரம்பமானது. அதிலும்
கார்த்திகாவுக்கென இருக்கும் தனித்த முத்திரை ஒவ்வொரு நடன நிகழ்விலும் தெரிந்தது.
மிகக் கச்சிதமான நடன அலங்காரங்கள், உடை வடிவமைப்புகள், நிறத்தெரிவுகள், நடன வடிவமைப்புகள். சலிப்பு எதுவும் வந்து விட
முடியாத படிக்கான நடனக் கோர்வைகள்.
அவற்றில் தெரிந்த லாவன்யம், எழில்,முகபாவம், பாங்கு, பார்வை, வீச்சு இவைகள் எல்லாவற்றிலும் கார்த்திகாவின் கை வண்ணம் மிளிரக்
கண்டேன். கூடவே வழி நடத்திய பின்னணிக் குரலும் மொழியும் மதுரம்!
அன்னிய மண்ணில் பிறந்த ஒரு பாரத தோற்றத்தை
வெளியேயும் அன்னிய மண்ணின் சிந்தனையை அகப் பண்பாடாகவும் கொண்ட ஒரு மாணவிக்கு
இந்தியப் பெண்ணின் நாணத்தை நடனத்துக்குள் கொண்டுவர ஒரு ஆசிரியருக்கு எத்தனை
பிரயத்தனங்கள் வேண்டும் என்று எப்போதும் நான் வியப்பதுண்டு. அதற்கு ஒரு அசாத்தியப்
பிரயத்தனம் வேண்டும். அந்த அசுர சாதனையை இந் நடன நிகழ்வில் மாணவிகளூடாக நடத்திக்
காண்பித்திருந்தார் கர்த்திகா.
புஜபலம் காட்டி அம்பு விடுகிறான் ஒரு வீரன்.
முகத்தின் அத்தனை பெருமை மிளிர்கிறது. வில்லினை முறுக்கேற்றி நீட்டுகிறான்.
வில்லினை நாணேற்றுகிறான். வில்லு பறக்கும் அந்தக் கணம் தோளிலே ஒரு அதிர்வு! அந்தக்
கணம் ஒரு கச்சித அழகு. முழுமையான பயிற்சியினாலும் அம்பு விடும் நுட்பம் தெரிந்த
ஒருவராலும் மாத்திரம் கொண்டு வர முடிந்த முழுமை அது!
குச்சுப்புடி நடன வடிவில் கொலுவைத்து வருகிறார்
ஸ்ரீ ரங்க நாதர். கஸ்தூரிப் பொட்டும் முத்தாரமும் போட்டு வரும் அழகு முத்திரையில்
பொட்டும் முத்தாரமும் நாமே போட்டுக் கொண்டதைப் போல ஒரு தோற்றம்! பிரமை!!
பொதுவாக கிருஷ்னரைக் காண்பிக்கும் போது பக்கவாட்டாக
கைகளைக் கொண்டு சென்று விரல்களால் புல்லாங்குழல் இசைப்பதை காட்டுவதே நடன வழக்கு!
கார்த்திகா அதை மாற்றி மயிலிறகு கிரீடத்தில் மிளிர்வதை நடன முத்திரையில் காட்டியது
அவரது தனித்துவத்தை வெளிப்படுத்திய ஒரு சிறு தோற்ற அழகு!
மத்தளத்தின் ஓசைக்கு ஏற்ப பாத அசைவுகளை செய்து ஒரு
கூத்து வடிவினப் போல தன்னை அறிமுகம் செய்த படி வருதல் குச்சுப்புடி நடனத்தின்
சிறப்பு என அறிகிறேன். ஹரிருக்மினி என ஆரம்பிக்கும் பாடலுக்கு ஒரு குச்சுப்புடி
நடனம். ருக்மணி மண்டபத்துக்குள் பிரவேசிக்கிறார். அவர் கிருஷ்னரின் ஆசை நாயகி
அல்லவே! அவர் முறைப்படி திருமணம் செய்து கொண்ட குலப்பெண். அதனால் அவரது நடன
அசைவுகளில் பாத அசைவுகளில் ஒரு வித ராஜ கம்பீரம்! ஒரு வித சமூக அங்கீகாரம் கொடுத்த
சரிவழி வந்த அழகின் துலக்கம்! அப்படி ஒவ்வொரு பாத்திரத்திற்குமான தனித்துவமான பாத
அசைவுகள், தோற்ற வார்ப்புகள், முக பாவனைகள்.
தாம்பாளத்தில் ஏறி நின்ற படி தலையிலே செம்பு வைத்து
ஆடும் ஒரு வகை நடனம்! தரங்கம் என அது அழைக்கப் படுகிறதாம். தரங்கம் என்பது கடல்
அலை. அது கடல் அலையின் மேலே ஆடப்படுவதான பாவனையைக் கண் முன்னே கொண்டு வரக் கூடியது
இந்த வகை நடனம். இதற்கு ஆர்வம், முழுமையான பயிற்சி, ஈடுபாடு இவைகள் இன்றி இந் நடனத்தை ஆடுதல் மிகக் கடினம். ஓரிளம் பெண் அதனை
புன்னகை மாறா முகத்தினளாய் ஆடிப் போனாள். சில இடத்தில் பயிற்சியின் போதாமை தெரிந்த
போதும் அதை ஆடத் துணிந்ததைக் குறிப்பிட்டாக வேண்டும். வரும் காலத்தில் இவர் இந்
நடனத்தில் தேர்ந்த நர்த்தகியாவார் என்பதனை இந் நிகழ்ச்சி காட்டிச் சென்றது.
தீராத விளையாட்டுப் பிள்ளைக்கு கண்ணனின் சிரிப்பும்
ராதையின் செல்லச் சிணுங்கலும் என்னவெனச் சொல்வது? கண்ணனின் குறும்புச் சிரிப்பு அலாதியான அழகு! பாரதி ஒரு பாடலில் சொல்வான் ’சோலைமலரொளியோ உனது சுந்தரப் புன்னகைதான்’ உடனே எனக்கிந்த பாடல் வரியே நினைவுக்கு வந்தது. ஓரிடத்தில் அவ் விடலைச் சிறுமி
கைகளினால் மூடிக் கொண்டு ஒரு குறுஞ்சிரிப்பு சிரித்தாள். அதன் அழகு அழகிய மலர்
ஒன்றை இலை மறைத்து நிற்பதைப் போல அமைந்திருந்தது. அந்தச் சோலை மலரொளி இது தான்!
கண்டவர்கள் அதை உணர்ந்திருப்பர். நடனத்தைத் தாண்டி அழகு சுடர் விட்ட இடம் அது!
அழகாய் அது மிளிர்ந்த்து.
ராதை அதற்கு ஈடு கட்டி இருந்தார் என்பதையும் இங்கு
குறிப்பிட்டாக வேண்டும். அவரது உதடு பிரியாத புன்னகையோடு கண்களில் காட்டிய
மனத்தாங்கல் அற்புதமாய் அவர் முகத்தில் வெளிப்பட்டிருந்தது. சபாஷ் மாணவிகளே! இது தம்
பாவனையால் தம் திறமைகளை மாணவிகள் புலப்படுத்திய பிரதேசம்! இந்த இடத்தில் தான்
ஆசிரியரும் மாணவியும் கலையும் சங்கமமாகிறார்கள். கலை தனித்து மிளிர்கிறது.
சுவாமி ராரா வைச் சொல்லாமல் போக முடியுமா? சிருங்கார ரசம் சொட்டச் சொட்ட நன்கு பயிற்சி பெற்ற ஆடலில் தேர்ச்சி பெற்ற
அணங்கு ஆடிய நடனம். உச்சம் பெற்ற சிருங்கார பாவனைகள், முகத்தில் தான் எத்தனை கணத்துக்குக் கணம் மாறும் பாவனைகள்! புன்னகை, வெட்கம்,சீ
போ எனும் பாவம், சோபிதம் பெருமை, காதல், போதை....கோபமும் புன்னகையும் ஒரு கணத்தில் மாறும் அற்புதம்!!
எனினும் எனக்கு பிடித்த வகைகளில் ‘ஒரு முறை வந்து பார்த்தாயா’ நடனத்தையும் இப்பாடலையும் பற்றிக் குறிப்பிடாமல்
அப்பால் செல்ல இயலாது. இந்தப் பாடலுக்கென தனிப்பட ஒரு அழகு உண்டு. அதனை ஆசிரியர்
நடனம் முடிந்த பிறகு குறிப்பிட்டுச் சொல்லி இருந்தார். அது ஒரு மலையாள சினிமாவில்
வந்த தமிழ் நாட்டுப் மாதினை வர்ணிக்கும் பாடல். மாணிக்க வாசக மொழி பேசும்
சிலப்பதிகார சிலம்புடை நங்கையே பழமுதிர் சோலையின் கொஞ்சலாய் வந்தவளே....என அமையும்
அது.
பாடகர்கள் சித்திராவும் ஜேசுதாஸ் அவர்களும்.
குரலில் தான் எத்தனை பாவங்கள்... ஒரு வித ஏமாற்றமும் கோபமும் கலந்த குரலாக வரும்
அப்பாடல் ஓரிடத்தில் காணாதவரைக் கண்டவுடன் அப்படியே இறங்கி வந்து ஏன் என்ற
கேள்வியை குரலுக்குள் மறைத்து வைத்த படி அன்பு நிரம்ப குரல் மெல்ல இறங்கி வந்து
மீண்டும் கேட்கும்’ ஒரு முறை வந்து பார்த்தாயா ? என்று ஒரு கேள்வி. பின்னணி இசை
ஒத்துழைக்க பாடகி சித்திரா கலையாடிய தருணம் அது! குரலில் அப்படி ஒரு உணர்வுப்
பாவனை!!
ஆஹா...., அதற்கு இந் நர்த்தகி
காட்டும் விழி நீட்டி நாடி உயர்த்தி கண்களில் திடீரெனத் தோன்றிய கனிவு பொங்க அந்தக் கேள்வி பாவனை வடிவில்! ஆஹா.....இந்த
இடம் இலக்கியமும்,இசையும் , நடனக் கலையும் இணைந்த ஒரு சங்கமம்! அற்புத சங்கமம்!
இப்பாடலைத் தெரிவு செய்ததன் மூலம் கார்த்திகாவின்
தெரிவுத் தரம் துலங்கிறென்றே சொல்வேன். இப்படி இன்னுமொரு அற்புத தமிழ் பாடல்
இருக்கிறது. அற்புதக் கவிஞன் வாலி இயற்றியது. ’மதுரையில் பறந்த மீன் கொடியை உன் கண்களில் கண்டேனே...’ என ஆரம்பிக்கும் தமிழ் மாதை வர்ணிக்கும் பாடல். வருகிற
முறை நடக்க இருக்கும் ஆண்டு நிகழ்வில் இந்தப் பாடலுக்கு ஒரு நடன விருந்து தர
வேண்டும் என்று ரசிக உரிமையோடு இந்த இடத்தில் விண்ணப்பித்துக் கொள்ளுகிறேன்.
அது போல பாரதி தன் பாஞ்சாலி சபதத்தில் சரஸ்வதியை வணங்கிப்
பாடும் பாடல் கூட இந்த வகை சார்ந்து வரும்.
“வேதத் திரு விழியாள் – அதில்
மிக்க பல்லுரை எனும் கருமையிட்டாள்
சீதக் கதிர் மதியே – நுதல்
சிந்தனையே குழல் என்றுடையாள்
வாதத் தருக்கமெனும் – செவி
வாய்ந்த நற் துணிவெனும் தோடணிந்தாள்
போதமென் நாசியினாள் – நலம்
பொங்கு நல் சாஸ்திர வாயுடையாள்
கற்பனைத் தேனிதழாள் – சுவைக்
காவியமெனும் மணிக் கொங்கையினாள்
சிற்ப முதல் கலைகள் பல
தேமலர்க் கரமெனத் திகழ்ந்திருப்பாள்
ஒன்றுக்கொன்று சளைத்ததல்லாத சுமார் 20 நடன நிகழ்வுகள்...அலாரிப்பு மல்லாரி என ஆரம்பித்து குச்சுப்புடி, ஜதீஸ்வரம்,
தில்லானா,
தரங்க நடனம், காலிங்க நர்த்தனம், தமிழ், ஹிந்தி, சமஸ்கிருத,
தெலுங்கு,
தமிழ், மலையாளப் பாடல்கள், என வகைகள் கூட்டி ஒன்றுக்கொன்று இடைவெளி இல்லாத
சம்பிருதாயப் பேச்சுகள் சடங்குகள் எதுவும் இல்லாத விறுவிறுப்பான நடனக் களிப்பாக
அது இருந்தது. சரியான நேரத்திற்கு ஆரம்பித்து சரியான நேரத்திற்கு அது முடிந்தது
என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.
தனிப்பட்ட முறையில் கலைகளை ரசிக்க விரும்பும் ஒரு
பார்வையாளர் என்பதைத் தாண்டி நடனம் பற்றி எனக்கதிகம் தெரியாது என்ற போதும்
எனக்குப் பல பார்வை முரண்பாடுகள் உண்டு என்பதையும் நான் இங்கு குறிப்பிட்டாக
வேண்டும்.
நடன சம்பிருதாயங்களைப் புறக்கணித்து பார்வையாளர்களை
வெறுமனே ’டான்ஸ் பாக்க வந்திருக்கிறீங்கள்; இந்தாங்கோ, பாத்திட்டுப் போங்கோ’ என்ற வகையான மன அபிப்பிராயத்தை எனக்கு இந் நிகழ்வு
ஏற்படுத்தி இருந்தது. ஒரு கலைப்படைப்பு கண்ணுக்கு விருந்தாய் மட்டும் அமையாமல் அது
கருத்துக்கும் ஆத்மாவுக்கும் சுகத்தை நல்குவதாய்; ஆசுவாசத்தை அளிப்பதாய் இருக்க
வேண்டும் என்பது என் அடங்கா அவல்.
அது எந்தப் பண்பாடு சார்ந்த கலை வடிவங்களுக்கும்
பொருந்தும். ஒரு குங்ஃபு கலை அந்த நாட்டுக்குரிய பண்பாட்டையும் அதற்குள் பிரதி
பலிக்கிறதே அதைப் போல....
பாரத பண்பாடு, அதன் அறம் சார்ந்த ஆத்மானுபவம் பொதுவாக நடன நிகழ்வில் ஆரம்பத்திலேயே
தொனிக்கும். அது நடனம் ஆரம்பிக்கு முன் நாம் உதைக்கப் போகும் பூமித்தாயை தொட்டு வணங்குவதில்
இருந்து ஆரம்பிக்கும். அதன் பின்னரான மாதா,பிதா,குரு தெய்வ வணக்கங்களில் கொஞ்சம் பாரதப் பண்பாட்டுக்குள்ளே வரும். பிறகு
புஷ்பாஞ்சலியில் அது பரிமளிக்கும். பிறகு மெல்ல மெல்ல ஆசிரியரின் கற்பனை திறனுக்குள்ளும்
பிள்ளைகளின் தனித்தன்மையிலும் கலை விரிந்து மணம் பரப்பும். இறுதியாக மீண்டும் பூமியை
வணங்கி இடம் தந்த மேடையை வணங்கி, வந்த சபையை வணங்கி நிறைவு பெறும்.
இவைகள் பாரதக் கலைகளைக் காண்கின்ற கண்களுக்கு
வாய்க்க வேண்டும். எந்த வேர் வழி எத்தகைய ஆழ அகல வழி அக்கலை வந்ததென்பதும் அது
எத்தகைய பண்பாட்டை ஏந்தி நிற்கிறது என்பதும் காண்கின்ற கண்ணுக்கு புலப்பட
வேண்டும். அப்போது தாம் முழுமையான கல்யாணச் சாப்பாடு சாப்பிட்ட திருப்தி வரும்! :)
(இது என் தனிப்பட்ட விடுபட்ட இடம் என நான் கருதும் அபிப்பிராயம். பலருக்கு அதில்
பல்வேறு அபிப்பியாயங்கள் இருக்கலாம் என்பதையும் நினைவு கூருகிறேன்.)
பல பாடல்கள் பிற மொழிப் பாடல்கள். பொருள் தெரியாமல்
கண்ணுக்கு மட்டும் காட்சியாய் நடனம் அமைவதில் எனக்கு உடன் பாடில்லை. குறைந்த
பட்சம் ஒரு சிறு அறிமுகமாவது நடனத்துக்கு முன் கொடுத்திருந்தால் நமக்கு அதை
இன்னும் உன்னிப்பாகப் பார்க்கவும் ரசிக்கவும் வாய்ப்பு அதிகரித்திருக்கும். கண்ணில்
இருந்து கருத்தை அது சென்றடைந்திருக்கும். குறைந்த பட்சம் பின்னணியிலேனும்
ஓரிரு நிமிடம் குச்சுப்புடி என்றால் என்ன? அதன் தனித்துவம்
யாது? அது பரதத்தில் இருந்து எவ்வாறு வேறு படுகிறது? தரங்க நடனம் சுட்டுவது என்ன போன்ற விடயங்களைத் தெளிவு படுத்தி இருக்கலாமோ
என்று தோன்றியது. அறிவுக்கும் புரிந்துணர்வுக்கும் அனுபவம் செய்தலுக்கும் கொஞ்சம்
தீனி தந்திருக்கலாமோ குருவே?
அமெரிக்க அதிபர் ஒபாமா பேசுகின்ற போது அவர் ஒரு
வசனத்தை பேசி விட்டு சற்று நேரம் விடுவார். அந்த இடவெளி மக்கள் சொன்னதைக்
கிரகித்துக் கொள்வதற்கான நேரம். அதே நேரம் இடமும் வலமுமாய் தன் மக்களைப்
பார்ப்பார். புரிந்து கொள்கிறார்களா என்பதை பொறுப்பாக அவதானிப்பார். அது ஒரு
சபைக்கு முக்கியமானது. கலைக்கும் அது தேவை. பார்வையாளனையும் ஆசிரியரையும்
பிணைக்கும் கயிறு அது. அது கலா அனுபவம் சென்றடையும் பாதை!
பிள்ளைகளுடய; பெற்றோருடய பல மணி நேர அர்ப்பணிப்பு, பயிற்சி, அதற்கான அலங்கார ஏற்பாடுகள், செலவுகள் என அவர்கள் கொடுத்தது நிறைய. குறைந்த பட்சம் நிகழ்ச்சி முடிந்த
பின்னராவது மாணவிகளை அவர்கள் பெயர் கூறி தனித்தனியாக மேடைக்கு அழைத்திருக்கலாம்.
அவர்களின் ’களைப்பை’ போக்கியிருக்கும் பானமாய் அது இருந்திருக்குமெல்லோ?
இவைகள் எல்லாம் எனக்குச் செலவுக் கணக்கில்
இருந்தாலும் இலவசமாய் கிடைத்த ஒரு விருந்தில் வரவே அதிகம். இலவச விருந்தில் இவைகளை
எல்லாம் சொல்ல எனக்கென்ன அருகதை இருக்கிறது என்ற குற்ற உணர்வும் எனக்கு எளாமல்
இல்லை. என்றாலும் சொல்ல வேண்டி இருப்பது அறத்தின் பாற்பட்டது.
சொல்லி விடுவது எளிது. ஒரு நிகழ்வை நடத்தி முடிப்பதன்
பின்னால் உள்ள சிரமங்களை; களைப்புகளை; அதன் பாடுகளை நானறிவேன். அந்த பாரிய
களைப்பினை போக்க வல்ல ஒரு குறிப்பாக இது இல்லை எனினும் அனுபவ ஞானமும் தனித்துவமான
பார்வை வீச்சும் கொண்ட கலைஞியே உன் அபார ஆற்றலுக்கும் உன் பார்வையைத் துணிந்து
முன் வைக்கும் உன் துணிச்சலுக்கும் என் முழங்கால் மடித்து தொப்பி களற்றி என்
மரியாதைகள் உரியதாகுக!
வேண்டும் மீண்டும் மீண்டும்...
1 comment:
வாசகர்களுக்கு வணக்கம்.
ஒரு சிறு திருத்தத்தை இங்கு சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.
ஒரு ரசிகையாக எனக்கதிகம் நடன நுணுக்கங்கள்; பெயர்கள் சொல்லும் அர்த்தங்கள் பற்றி எதுவும் தெரியாது.
அலாரிப்பு என்ற முதலாவது நடன வகை இறைவனுக்கும் குருவுக்கும் சபைக்கும் வணக்கம் கூறும் வகையைச் சார்ந்தது என ஒரு நடன ஆசிரியர் மூலம் இன்று அறிந்து கொண்டேன். அதனை இந் நிகழ்வில் மாணவிகள் முதலாவதாக ஆடி இருந்தார்கள்.
ஆகையினால் நடன சம்பிருதாயங்கள் புறக்கணிக்கப் பட்டன என்ற கூற்று தவறு என்பதை இத்தால் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
புதிதாக ஒரு பாடம் இன்று பயின்று கொண்டேன்.
Post a Comment