.
வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த விசாரணை, ஆஸ்கர் விருதுக்கு இந்தியாவின் சார்பாகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
விசாரணை படத்தின் திரைக்கதைக்குச் சொந்தக்காரர் கோயம்புத்தூரைச் சேர்ந்த ஓர் ஆட்டோ ஓட்டுநர். அவர் மு.சந்திரகுமார். தனது அனுபவங்களை 5 நூல்களாகவும், ஏராளமான கட்டுரைகளாகவும், சிறுகதைகளாகவும் படைத்துள்ளார் அவர். தினமணி கதிர் இதழுக்காக சில மாதங்களுக்கு முன்பு சந்திரகுமார் அளித்த பேட்டி:
கோவை பாலுரங்கநாதபுரம் எனது பூர்வீகம். 10-ம் வகுப்பு வரை பயின்ற நான், மெக்கானிக்காக வேலையைத் தொடங்கினேன். பிறகு கட்டடத் தொழில், மூட்டைத் தூக்குதல் போன்ற உடல் உழைப்புத் தொழில்களைச் செய்தேன். பின்னர் ஹோட்டல் தொழிலாளியாக பல ஊர்களில் பணியாற்றினேன். நிலையான தொழில் வேண்டும் என்பதால் ஆட்டோ ஓட்டத் தொடங்கினேன். சிறுவயதில் தினமும் மாலையானதும் கை-கால் கழுவி, விளக்கு வைத்து, படிக்க வேண்டும் என்ற பழக்கம், வாசிப்பு ரசனை உள்ள எனது தாத்தா, எனது அம்மாவிடம் இருந்து எனக்குக் கற்பிக்கப்பட்டது. திருமந்திரம், திருவருட்பா, சிலப்பதிகாரம், அசுவமேத யாகம், பஞ்ச தந்திரக் கதைகள் போன்ற ஏராளமான நூல்கள் வீட்டில் இருந்தன. 10-வது வயதிலேயே இவற்றை முடித்த நான் பிறகு படக்கதைகள், அம்புலிமாமா, கோகுலம் தொடங்கி, கல்கி, சாண்டில்யன், ஜெயகாந்தன், அசோகமித்ரன் என வளர்ந்து, உலக இலக்கியங்களான மாக்சிம் கார்க்கி, தஸ்தாவெஸ்கி, டால்ஸ்டாய் என ரசனை மாறியது.
கதைகளில் இருந்து அரசியலுக்கும், அங்கிருந்து தத்துவத்துக்கும், பின்னர் மானுட விடுதலையை நோக்கியும் என் பாதை விரிந்தது. கடந்த காலம் எனக்குக் கற்பித்த துன்ப, துயரம், அனுபவங்கள் காரணமாகவும், அந்த புரிதலின் அடிப்படையிலும் ஆட்டோ தொழிலாளி பணியுடன் இடதுசாரி இயக்கங்களுடன் தொடர்பு ஏற்பட்டது. அதனால், தொழிலாளர்கள், அவர்களின் உரிமைகள், சாதாரண மனிதர்களின் மீதும் அவர்களின் அடிப்படை உரிமைகள் மீதும் அதிகாரம் செலுத்தும் பிரச்னைகளுக்கு எதிரான போராட்டங்கள் அவசியமானது. அப்போது, போராட்டங்களுடன் இணைந்து மக்களுக்கு ஏதாவது சொல்ல வேண்டுமே என்ற உந்துதல் ஏற்பட்டது. ஏற்கெனவே நான் படித்தவற்றை, மக்களிடம் கூற வாய்ப்பு இருந்தாலும் எனது சொந்தக் கருத்தைப் பேசுவது, ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைக் குரலாக இருக்கும் என்று
கருதினேன்.
சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி ஆந்திரம் சென்றேன். குண்டூர் மாவட்டம் கொத்தப்பேட்டையில் ஒரு கடையில் வேலை செய்தேன். பகலில் வேலை, இரவில் சினிமா, சாலையோரத்தில் தூக்கம் என்று மொழியற்ற சூழலில், ஆதரவற்ற சில நண்பர்களுடன் வாழ்ந்தேன். சந்தேகத்தின் அடிப்படையில் 4 நண்பர்களுடன் பிடிபட்ட நான், காவல்நிலையத்தில் 13 நாள் சட்ட விரோதக் காவலில் வைக்கப்பட்டு கொடூரத் தாக்குதல்களுக்கு ஆளானேன். எனது குண்டூர் சிறை அனுபவங்களை கடந்த 2005-ல் "லாக்கப்' என்ற பெயரில் நூலாக எழுதினேன். அது 2006-ல் பதிவுகள் பதிப்பகம் மூலம் வெளியானது. லாக்கப் நூல் வெளிவந்துமே கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியது. முற்றிலும் வேறுபட்ட கதைக் களத்தை கொண்டிருப்பதாக கலை, இலக்கியவாதிகளால் பேசப்பட்டது. எனது பெயரும் ஆட்டோ சந்திரனில் இருந்து மாறி லாக்கப் சந்திரனானது. அநீதி, ஆதிக்கம், அதிகாரம், தனிமைப்படுத்தப்பட்ட மானுடம் இவற்றை அடையாளம் கொண்டு சொந்த வாழ்வு அனுபவத்தையே லாக்கப்பில் பதிவு செய்திருந்தேன்.
"லாக்கப்' எனது நண்பர் தங்கவேலன் மூலமாக இயக்குநர் வெற்றிமாறன் கைகளுக்குக் கிடைத்தது. நான்கு கருங்கல் சுவருக்குள் நடந்து முடிந்த கொடூரம், யாருக்கும் கேட்காது என்று நினைத்திருந்த எனது அவலக் குரல் இப்போது எல்லோருக்கும் கேட்கத் தொடங்கியுள்ளது. திரைக் கதைக்கு என்று ஒரு மொழி இருப்பதைப் போல் திரை மொழியில்தான் படம் உருவாகியுள்ளது. "விசாரணை' எதை உலகிற்கு உரக்கச் சொல்ல வேண்டுமோ அதை அப்படியே வெளிக் கொண்டு வந்துள்ளது.
சர்வதேச திரைப்பட விழாவில் 2 ஆயிரம் படங்களுடன் விசாரணையும் திரையிடப்படும் என்ற தகவலே எனக்குப் பெருமையை ஏற்படுத்திய நிலையில், கதாசிரியர் என்ற முறையில் என்னையும் அழைத்துச் சென்று மேடையில் அறிமுகப்படுத்தினார் வெற்றி மாறன். அங்கு திரையிடப்பட்ட மற்ற படங்களைப் பார்த்த பிறகு விசாரணை படத்துக்கு உயரிய விருதான தங்கச் சிங்கம் விருது கிடைக்கும் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் மனித உரிமைகள் பிரிவில் விருது கிடைத்தது'' என்கிற சந்திரகுமார் தற்போது, விசாரணை படம் நிச்சயம் ஆஸ்கர் விருதை வெல்லும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்.
Nantri Thinamani
No comments:
Post a Comment