மீரியபெத்தை மண்சரிவு : பாதிக்கப்பட்டவர்களுக்கு தீபாவளிக்கு முன்னர் வீடுகள்
கிளிநொச்சி சந்தை வணிகர்களோடு களத்தில் கரச்சி பிரதேச சபை
மலையக மக்களுக்கான காணி உரிமையை வழங்கக் கோரி கையெழுத்து வேட்டை
கிளின்டன் பூகோள அமையத்தின் வருடாந்த மாநாட்டின் விசேட அழைப்பாளராக ஜனாதிபதி
ஜனாதிபதியை சந்தித்தார் இந்திய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர்
அவுஸ்திரேலிய பிரதமர் ஜனாதிபதியை மைத்திரியை சந்தித்தார்
இலங்கை பற்றிய உலகத் தலைவர்களின் சாதகமான நிலைப்பாடு தொடர்பில் நான் மகிழ்ச்சியடைகின்றேன் : ஜனாதிபதி
மோடியுடன் தொலைபேசியில் உரையாடிய மைத்திரிபால : காரணம் வெளியாகியது.!
இலங்கையில் தற்போது ஏற்பட்டுவரும் மாற்றங்கள் உலகிற்கு ஒரு முன்மாதிரியாகும்: ஒபாமா
நல்லாட்சி மற்றும் நல்லிணக்க முயற்சிகளில் ஜனாதிபதியின் அர்ப்பணிப்புக்கு ஐநா பொதுச் செயலாளர் பாராட்டு
அமெரிக்க - இலங்கை கடற்படைத் தளபதிகள் சந்திப்பு
சம்பள பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி ; ஒரு ரூபாவையேனும் அதிகரிக்க முடியாது
பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக ஹட்டனில் கவனயீர்ப்பு போராட்டம்
மீரியபெத்தை மண்சரிவு : பாதிக்கப்பட்டவர்களுக்கு தீபாவளிக்கு முன்னர் வீடுகள்
19/09/2016 மண்சரிவு இடம்பெற்று 2 வருடங்கள் நெருங்கியுள்ள நிலையில் தீபாவளிப் பண்டிகைக்கு முன்பதாக ஒக்டோபர் 22ஆம் திகதி வீடுகளை கையளிப்பதற்கு தாம் நடவடிக்கை எடுக்கப்போவதாகவும், வீடுகளில் காணப்படுகின்ற மின்சாரம், நீர், குறைப்பாடுகளை விரைவில் நிவர்த்தி செய்து மக்களிடம் உத்தியோகப்பூர்வமாக கையளிக்கப் போவதாகவும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.
மீரியபெத்த மக்களுக்கு நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற வீடுகளை மக்களிடம் கையளிப்பது தொடர்பிலான கலந்துரையாடலொன்று இன்று மக்கள்தெனிய பிரதேசத்தில் இடம்பெற்றது. இதன் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன் போது கருத்து தெரிவித்த அமைச்சர் திகாம்பரம்,
கொத்மலை பகுதியில் நான் எனது அமைச்சரவையின் கீழ் வீடுகளை குறுகிய காலத்தில் கட்டி முடித்துள்ளேன்,
ஆனால் இங்கு வீடுகளை கட்டி முடிப்பதில் சிரமம் காணப்படுகிறது.
இதற்கு காரணம், இப்பிரதேசம் ஒரு அமைச்சிற்கு கீழ் வந்திருந்தால் 6 மாதத்தில் அல்லது 1 வருடத்தில் வீடுகளை கட்டி முடித்திருக்கலாம்.
ஆனால் இங்கு பலதரப்பட்ட நிறுவனங்களின் தலையீட்டில் வீடுகள் நிருமாணிக்கப்பட்டு வருவதால் தாமதம் நிலவுவதாகவும் அமைச்சர் இதன் போது தெரிவித்திருந்தார்.
கொஸ்லாந்தை மீறியபெத்த பிரதேசத்தில் 2014.10.29 அன்று இடம்பெற்ற பாரிய மண்சரிவில் உயிர் நீத்த மக்களின் உறவினர்கள் தொடர்ந்தும் பூனாகலை மாகந்த தொழிற்சாலையில் தங்கி உள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
கிளிநொச்சி சந்தை வணிகர்களோடு களத்தில் கரச்சி பிரதேச சபை
19/09/2016 கிளிநொச்சி பொதுச் சந்தையில் அண்மையில் ஏற்பட்ட தீ விபத்தினால் அனைத்து உடைமைகளையும் இழந்து நிர்க்கதியான நிலையில் உள்ள பொதுச் சந்தை வியாபாரிகளுக்கு அத்தியாவசிய தேவைகளை கரச்சி பிரதேச சபையினர் செய்துவருகின்றனர்.
இதேவேளை, அவர்களுக்கு உந்துசக்தியாக சந்தை வணிகர்கள் மற்றும் கிளிநொச்சி வணிகர்கள் அவர்களுக்கான உணவு வகைகளை வழங்கி வருகின்றனர்.
இன்றைய தினமும் கிளிநொச்சி கரச்சி பிரதேச சபைச் செயலாளர் கம்சனாதனின் முயற்சியில் கரச்சி பிரதேச சபையின் நிதி உதவியிலும் கிளிநொச்சி வர்த்தகர்களது ஆதரவுடனும் இருபத்து இரண்டு தற்காலிக கடைத்தொகுதி ஒன்று அமைக்கப்பட்டு வருகின்றது. இக் கடைகள் பழக்கடை வியாபாரிகளுக்கு ஒதுக்கப்பட்டு நாளையதினம் மீளவும் பழக்கடைத் தொகுதி இயங்கவுள்ளது.
கிளிநொச்சி பொதுச் சந்தையில் ஏற்ப்பட்ட தீவிபத்தின் போது இராணுவத்தினர், பொலிஸார், கிளிநொச்சி, கரச்சி பிரதேச சபையின் செயலாளர், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள், வணிகர்கள், பொதுமக்கள் எனப் பலரும் குறித்த இடத்திற்கு குறுகிய நேரத்திற்குள் வருகை தந்து உதவிகளைச் செய்தனர்.
இதேவேளை, கரச்சி பிரதேச சபையின் செயலாளர், அவருடன் சில பிரதேச சபையின் பணியாளர்களும் இரவுபகலாக சேவையில் ஈடுபட்டிருந்தனர் அவர்களுக்கு தமது நன்றிகளை பாதிக்கப்பட்ட சந்தை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
நன்றி வீரகேசரி
மலையக மக்களுக்கான காணி உரிமையை வழங்கக் கோரி கையெழுத்து வேட்டை
20/09/2016 பெருந்தோட்ட சமூக காணி உரிமைக்கான மக்கள் இயக்கம், மலையக மக்களுக்கான காணி உரிமையை வழங்கக் கோரி, ஒரு இலட்சம் கையொப்பங்களைத் திரட்டி ஜனாதிபதிக்கு வழங்கும் நடவடிக்கையில் ஊவா மாகாணத்தில் பண்டாரவளை, ஹப்புத்தளை, பதுளை ஆகிய நகரங்களில் கையெழுத்து வேட்டையொன்று இடம்பெற்றது.
பெருந்தோட்ட சமூக காணி உரிமைக்கான மக்கள் இயக்கத்தின் இணைப்பாளர் எஸ்.டி.கணேசலிங்கம் தலைமையில் மேற்படி கையெழுத்து வேட்டை இடம்பெற்றது.
மேற்படி நடவடிக்கையின் முன்னோடி நடவடிக்கையாக தோட்டங்கள் தோறும் பொது மக்களின் கையொப்பங்களை திரட்டும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு, நகரங்களை இலக்கு வைத்து கையொப்பங்களை பெறும் நடவடிக்கையின் நான்காம் கட்டமாக ஊவா மாகாணத்தில் நடைபெற்றதாக பெருந்தோட்ட சமூக காணி உரிமைக்கான மக்கள் இயக்கத்தின் இணைப்பாளர் எஸ்.டி.கணேசலிங்கம் இதன்போது தெரிவித்தார். நன்றி வீரகேசரி
கிளின்டன் பூகோள அமையத்தின் வருடாந்த மாநாட்டின் விசேட அழைப்பாளராக ஜனாதிபதி
20/09/2016 நியூயோர்க் Sheraton New York Times Square ஹோட்டலில் நேற்று இடம்பெற்ற கிளின்டன் பூகோள அமையத்தின் 2016 வருடாந்த மாநாட்டின் விசேட அழைப்பாளராக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கலந்து கொண்டார்.
'சமநிலையைக் கடந்து நிலையான அபிவிருத்திக்காக பெண்களுடைய வலுவைப் பாதுகாத்தல்' என்பதை இவ்வருடத்தின் பிரதான தொனிப்பொருளாக கிளின்டன் பூகோள அமையம் கொண்டுள்ளது. 12 நாடுகளின் தலைவர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
கிளின்டன் மன்றத்தின் உப தலைவர் செல்ஸியா கிளின்டன் இக்கூட்டத்தின் ஆரம்ப உரையினை நிகழ்த்தினார்.
உலகலாவிய ஒற்றுமையினை உறுதிப்படுத்துவதற்கு இலங்கை வழங்கிவரும் பங்களிப்புக்கு இம்மாநாட்டின்போது பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
இத்தாலிய பிரதமர் Matteo RENZI மற்றும் சுவீடனின் பிரதமர் Stefan Löfven உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர். நன்றி வீரகேசரி
ஜனாதிபதியை சந்தித்தார் இந்திய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர்
21/09/2016 ஐக்கிய நாடுகள் சபையின் 71 ஆவது பொதுச்சபை கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்கு நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இந்திய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் எம்.ஜே.அக்பருக்குமிடையில் சந்திப்பு நேற்று நியூயோர்க் நகரில் இடம்பெற்றது.
இச் சந்திப்பில் இரு நாட்டு இராஜதந்திர உறவுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அண்மையில் கஷ்மீரில் இடம்பெற்ற வன்முறையினால் பலர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு இலங்கை அரசாங்கத்தின் சார்பிலும் இலங்கை மக்களின் சார்பிலும் அனுதாபங்களைத் தெரிவித்த ஜனாதிபதி, பிராந்தியத்திலுள்ள அனைவரும் இவ்வாறான வன்முறைகளை இல்லதொழிப்பதற்கு ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இதேவேளை அச்சம்பவம் ஏற்படுவதற்கு காரணமான நிலைமை தொடர்பில் ஜனாதிபதிக்கு அமைச்சர் விளக்கமளித்தார்.
அவ்வாறான சிக்கலான நிலைமைகளில் மிகுந்த பொறுமையாகவும் கலந்துரையாடல்களுடாகவும் அவற்றை அணுகுவதன் மூலமே சாத்தியமான தீர்வுகளை இவ்வாறான பிரச்சனைகளுக்கு பெற்றுக்கொள்ள முடியுமென்று ஜனாதிபதி இச்சந்தர்ப்பத்தில் தெரிவித்தார்.
இலங்கையில் சில கூட்டு முயற்சிகளை மேற்கொள்வதில் ஏற்பட்டிருக்கின்ற தாமதங்கள் தொடர்பாக சுட்டிக்காட்டிய இந்திய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர், அத்திட்டங்களுக்கு முன்னுரிமையளித்து அவற்றை முன்னெடுக்க துரிதமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.
இதற்கு பதிலளித்த ஜனாதிபதி, முன்மொழியப்பட்டுள்ள திட்டங்கள் தொடர்பில் தான் தொடர்ச்சியாக ஆராய்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
இவ் இருதரப்பு சந்திப்பின்போது இரு நாடுகளுக்குமிடையிலான மீனவர் பிரச்சனைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன் இரு அரசாங்கங்களும் மனிதாபிமான முறையில் இப்பிரச்சினையை பார்க்கவேண்டும் எனக்குறிப்பிட்ட ஜனாதிபதி, சட்டவிரோதமாக எல்லைதாண்டும் மீனவர்கள் கைது செய்யப்படும்போது அவர்களை சாத்தியமான வழிகளில் விரைவாக விடுதலை செய்வதற்கு அந்தந்த நாட்டு அரசாங்கள் நடவடிக்கையெடுக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.
இதேவேளை எல்லைதாண்டி மேற்கொள்ளப்பட்டுவரும் மீன்பிடி நடவடிக்கைகளால் சுற்றுச்சூழல் மற்றும் கடல் வளங்களில் ஏற்படும் நீண்டகால பாதிப்பு தொடர்பில் இலங்கை அரசாங்கமும் வடக்கின் மீனவர்களும் கவலையடைந்திருப்பதாகவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.
ஆகவே மீனவ சமூகத்தினரை உள்ளடக்கி இப்பிரச்சினைக்கான ஆரம்பத் தீர்வுகளை விரைவாக் கண்டறியவேண்டும் எனவும் குறிப்பிட்டார். அதற்கு மத்திய அரசின் உதவியினை அவர் வலியுறுத்தினார். நன்றி வீரகேசரி
அவுஸ்திரேலிய பிரதமர் ஜனாதிபதியை மைத்திரியை சந்தித்தார்
21/09/2016 அவுஸ்திரேலிய பிரதமர் மல்கம் டேர்ன்புள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் 71 ஆவது பொதுச்சபை கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்கு நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதிக்கும் அவுஸ்திரேலிய பிரதமருக்குமிடையிலான சந்திப்பு நேற்று பிற்பகல் நியூயோர்க் நகரில் இடம்பெற்றது.
இலங்கையின் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு அவுஸ்திரேலியா அரசாங்கம் வழங்கிவரும் உதவிகளுக்கு நன்றிகளையும் பாராட்டுக்களையும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இதன்போது தெரிவித்தார்.
இதேவேளை, இலங்கை அரசாங்கமும் ஜனாதிபதியும் ஆட்கடத்தல்களை கட்டுப்படுத்துவதற்கு அவுஸ்திரேலியாவுக்கு ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பில் தன்னுடைய நன்றியினைத் தெரிவித்த அவுஸ்திரேலியப் பிரதமர், அவுஸ்திரேலிய அரசாங்கமானது மிகுந்த வெளிப்படையான மனிதாபிமான கொள்கைகளை கொண்டுள்ளது எனவும் உண்மையான குடியேற்றவாசிகளை வரவேற்பதாகவும் தெரிவித்தார்.
எவ்வாறாயினும் சில குற்றவாளிக்குழுக்களால் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் ஆட்கடத்தல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்கள் தொடர்பில் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிலை அவுஸ்திரேலியாவுக்கு மாத்திரமல்லாது முழுப் பிராந்தியத்திற்கும் பொருந்தும் எனக் குறிப்பிட்ட அவர், இது தொடர்பில் இலங்கை தனது பூரண ஒத்துழைப்பை தமக்கு வழங்குவது தொடர்பில் தனது மகிழ்ச்சியினையும் தெரிவித்தார். நன்றி வீரகேசரி
21/09/2016 இலங்கையில் பொருளாதார அபிவிருத்தி, சூழல் பாதுகாப்பு மற்றும் நல்லிணக்கம் போன்றவற்றுக்காக முன்னெடுத்துவரும் நடவடிக்கைகள் தொடர்பாக இன்று ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தொடரில் உரையாற்றும்போது உலகத் தலைவர்களுக்கு எடுத்துரைக்க இருப்பதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நியூயோர்க் Loews Regency ஹோட்டலில் நேற்று மாலை இலங்கை ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பிரேசில் ஜனாதிபதி இன்று பொதுச்சபையில் உரையாற்றும்போது தெரிவித்ததைப்போன்று, சட்டவிரோதமான போதைப்பொருள் கடத்தலைத் தடுத்தல் தொடர்பில் கூடிய அவதானத்தை செலுத்தவுள்ளதுடன் தான் முன்னெடுத்துவரும் போதைப்பொருளுக்கு எதிரான பிரச்சார நடவடிக்கைகள் தொடர்பிலும் பொதுச்சபையில் விளக்கமளிக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
ஐநா பொதுச் செயலாளர் பான் கீ மூனினால்; ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மதிய போசன நிகழ்விலும் கலந்துகொண்ட ஜனாதிபதி, அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா, பொதுச் செயலாளர் பான் கீ மூன் உள்ளிட்ட பல தலைவர்களுடன கலந்துரையாடல்களை மேற்கொண்டார். இலங்கையில் தெளிவான மாற்றம் ஒன்று தென்படுகின்றது என ஜனாதிபதி ஒபாமா இதன்போது தெரிவித்தார். அதேவேளை பான் கீ மூன், இலங்கையின் பல்வேறு துறைகளிலும் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் தொடர்பில் தன்னிடம் வாழ்த்துத் தெரிவித்ததாக குறிப்பிட்ட ஜனாதிபதி, இலங்கை தொடர்பில் எல்லோருமே பாராட்டுக்களைத் தெரிவித்ததோடு அவர்களுடைய இந்த சாதகமான பிரதிபலிப்புக்கள் தொடர்பில் தாம் மிகுந்த மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்தார்.
தற்போது எந்தவொரு நாடும் இலங்கையுடன் வெறுப்புடனோ அல்லது பகைமையுணர்வுடனோ இல்லையெனவும் அனைத்து நாடுகளும் நட்புறவுடன் கூடிய சாதகமான நிலைப்பாட்டுடனேயே உள்ளதாகவும் தெரிவித்த ஜனாதிபதி, உலகத்தலைவர்களுடைய இந்த சாதகமான நிலைப்பாட்டை இலங்கைக்கு திரும்பிச் செல்லும்போது தான் எடுத்துச் செல்வேன் எனவும் மேலும் தெரிவித்தார்.
உலக வெப்பமயமாதல் தொடர்பான பாரிஸ் பிரகடனத்திற்கு பல நாடுகள் ஒப்புதல் அளித்தமை தொடர்பில் தான் மகிழ்ச்சியடைந்திருந்ததாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்களை பாதுகாக்கும், பொருளாதார ரீதியில் பலம்மிக்க தேசமாக இலங்கையை மாற்றுவதற்கு முழுமையாக தன்னை அர்ப்பணிப்பதாகவும் ஜனாதிபதி; தெரிவித்தார். நன்றி வீரகேசரி
மோடியுடன் தொலைபேசியில் உரையாடிய மைத்திரிபால : காரணம் வெளியாகியது.!
21/09/2016 அண்மையில் இந்தியாவின் ஜம்மு காஸ்மீர் இராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட பாரிய தீவிரவாத தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் இரங்கல் வெளியிட்டுள்ளார்.
தொலைபேசி மூலம் இந்திய பிரதமரை தொடர்பு கொண்டு உரையாடிய ஜனாதிபதி சம்பவத்தில் கொல்லப்பட்ட எல்லைப் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த படையினரின் குடும்பங்களுக்கு இரங்கல் வெளியிட்டுள்ளார்.
பிராந்தியத்திலிருந்து பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க நீடித்து நிலைக்கக்கூடிய திட்டமொன்று வகுக்கப்பட வேண்டுமென இதன்போது ஜனாதிபதி தெரிவித்துள்ளார். நன்றி வீரகேசரி
21/09/2016 இலங்கையில் தற்போது ஏற்பட்டுவரும் மாற்றங்கள் உலகிற்கு ஒரு முன்மாதிரியாகும் எனக் குறிப்பிட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, இலங்கையின் எதிர்காலப் பயணத்திற்குத் தேவையான முழுமையான உதவிகளை வழங்க தாம் தயாராகவுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் சபையின் 71 ஆவது கூட்டத்தொடரில் பங்குபற்றும் அரச தலைவர்களுக்காக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த விசேட பகல் போசன விருந்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவைச் சந்தித்தபோதே அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதேநேரம் ஐக்கிய நாடுகள் சபையின் 71 ஆவது பொதுச்சபைக் கூட்டத்தொடரில் பங்குபற்றும் அரச தலைவர்களுக்காக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இராப்போசன விருந்துக்கும் ஜனாதிபதிக்கு விசேட அழைப்பு கிடைக்கப்பெற்றுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபையில் உரையாற்றும் இறுதி சந்தர்ப்பம் இதுவாகும் என்பதோடு, மாநாட்டில் உரையாற்றிய அவர், பயங்கரவாத செயற்பாடுகளை வன்மையாகக் கண்டித்துள்ள அதேநேரம் இந்த பிரச்சினையிலிருந்து விடுபடுவதற்கு ஒரு பூகோள ஒத்துழைப்பின் அவசியத்தையும் வலியுறுத்தினார். நன்றி வீரகேசரி
நல்லாட்சி மற்றும் நல்லிணக்க முயற்சிகளில் ஜனாதிபதியின் அர்ப்பணிப்புக்கு ஐநா பொதுச் செயலாளர் பாராட்டு
22/09/2016 நல்லாட்சி மற்றும் நல்லிணகம் தொடர்பில் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அர்ப்பணிப்புடன் செயற்படுவருவதை சுட்டிக்காட்டிய ஐநாவின் பொதுச் செயலாளர் பான் கீ மூன், ஜனாதிபதியின் அம்முயற்சிகளுக்கு தன்னுடைய பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் அவர்களுக்குமிடையில் நேற்று (21) நியூயோர்க் நகரில் விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றபோதே பான் கீ மூன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தாம் இலங்கைக்கு வருகை தந்திருந்த சமயத்தில் இலங்கை அரசும், இலங்கை மக்களும் வெளிப்படுத்திய பேரன்பான வரவேற்புக்கும் உபசரிப்பிற்கும், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கும், இலங்கை அரசுக்கும் தனது நன்றியினை இச்சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொண்டார்.
இலங்கைக்கும் ஐநா சபையின் உறுப்பு நாடுகளுக்கும் பான் கீ மூன் ஆற்றிய சேவைகளைப் பாராட்டிய ஜனாதிபதி, விசேடமாக பாரிஸ் மாநாட்டினூடாக அவர் ஆற்றிய சேவையினையும் இதன்போது நினைவுகூர்ந்தார்.
ஐக்கிய நாடுகள் அனுசரணை மற்றும் வழிகாட்டலில் இலங்கைக்கு உதவிகளை வழங்கிய அனைத்து அமைப்புக்களுக்கும் நிறுவனங்களுக்கும் ஜனாதிபதி இச்சந்தர்ப்பத்தில் தனது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்.
நன்றி வீரகேசரி
அமெரிக்க - இலங்கை கடற்படைத் தளபதிகள் சந்திப்பு
22/09/2016 ஐக்கிய அமெரிக்க கடற்கட்டுப்பாட்டு தளத்தின் பசுபிக் பிராந்திய கட்டளைத் தளபதி அட்மிரல் ஜோன் எம். ரிச்சட்சன் மற்றும் இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இதன் போது இரு நாட்டு கடற்பாதுகாப்பு மற்றும் கூட்டுப் பயிற்சி உள்ளிட்ட இரு தரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
நன்றி வீரகேசரி
சம்பள பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி ; ஒரு ரூபாவையேனும் அதிகரிக்க முடியாது
22/09/2016 தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் இன்று இடம்பெற்ற பேச்சுவார்தையில் இறுதி செய்யப்பட்டு கூட்டு ஒப்பந்தம் கைசாத்திடப்படும் என்று உறுதியாக அறிவிக்கப்படிருந்த போதிலும் முதலாளிமார் சம்மேளனாத்தின் விட்டுகொடுக்கா தன்மையினால் பேச்சுவார்த்தை மற்றும் சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட அனைத்து செயற்பாடுகளும் தோல்வியில் முடிந்துள்ளன.
அமைச்சர்களான ஜோன் செனவிரட்ன இநவீன் திசாநாயக்க ஆகியோரின் ஆலோசனைகளை முற்றாக நிராகரித்த சம்மேளனம் ஒரு ரூபாவையேனும் அதிகரிக்க முடியாது என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தனர். அத்துடன் தொழிற்சங்க பிரதிநிதிகளின் கோரிக்கைகளுக்கும் செவிசாய்க்க தயாரில்லை என்ற நிலைப்பாட்டையும் வெளிப்படுத்தினர்.
கூட்டு ஒப்பந்தம் புதுப்பிக்கபட வேண்டுயேயானால் தற்போது நடைமுறையில் உள்ள 620 ரூபாவை உள்ளடக்கியதாகவே கைசாத்திடப்பட வேண்டும் என்றும் முதலாளிமார் சம்மேளனம் அமைச்சர் ஜோன் செனவிரட்னவிடமும் தொழிற்சங்க பிரதிநிதிகளிடமும் திட்டவட்டமாக தெரிவித்தனர்.
இதனால் பேச்சுவார்த்தையில் கலந்துக்கொண்ட அமைச்சர் ஜோன் செனவிரட்ன மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் கடும் அதிருப்தியுடன் பேச்சுவார்த்தை மேசையிலிருந்து வெளியேறியுள்ளதாக தெரியவந்துள்ளது.
நன்றி வீரகேசரி
பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக ஹட்டனில் கவனயீர்ப்பு போராட்டம்
24/09/2016 மலையக தமிழ் இளைஞர்களுக்கு எதிராக பொலிஸாரால் அரங்கேற்றப்படும் அடிதடி அராஜகத்தை கண்டித்து அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ் இளைஞர்கள் வீதிக்கு வருவதற்கு அஞ்சப்படும் சூழ்நிலையை மீண்டும் இந்நாட்டில் அரங்கேற்ற இடம் கொடுக்க வேண்டாமென மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கணகராஜ் தெரிவித்தார்.
அட்டன் நகரில் நேற்று மாலை சிகையலங்கார நிலைய ஊழியர் ஒருவர் அட்டன் பொலிஸ் அதிகாரி ஒருவரால் தாக்கப்பட்டதை கண்டித்து அட்டன் நகரில் இன்று பகல் இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
புஸ்ஸல்லாவ பொலிஸ் நிலையத்தில் தோட்டப்பகுதி தமிழ் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு உயிரிழந்ந சம்பவம் மனதில் இருந்து அகன்று செல்வதற்கு முன் அட்டனில் இளைஞன் ஒருவர் பொலிஸாரால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த வேளையில் இவ்விரு சம்பவங்களையும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வன்மையாக கண்டிப்பதோடு நடந்தேறிய தாக்குதல் சம்பவத்துக்கு உரித்தான அதிகாரிக்கெதிராக நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொள்ளவேண்டுமென இதன் போது அவர் வலியுறுத்தினார்.
No comments:
Post a Comment