இன்று பேராசிரியர் செ.யோகராசா அவர்களுக்கு பணி நயப்பு விழா - எம்.கே.முருகானந்தன்.

.
இன்று (24 .09.2016)பேராசிரியர் செ.யோகராசா அவர்களுக்கு பணி நயப்பு விழா மட்டக்களப்பு நகர மண்டபத்தில் நடைபெற்றது. 
எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள். 

எத்துணை இனிய நாட்கள் அவை. ஒரு பெரிய இலக்கிய வட்டமே எம்மிடை இருந்தது.

தெணியான், குப்பிளான் ஐ சண்முகம், யோகராசா, நந்தினி சேவியர், கலாமணி, ரஞ்சகுமார், ரமணி, ஆனந்தமயில், புலோலியூர் சதாசிவம், புலோலியூர் இரத்தினவேலோன், அனாதரட்சகன், நட்சத்திரன் செவ்விந்தியன், குலசிங்கம், இரகுவரன், மரியாம்பிள்ளை வரதராஜன், ..... இன்னும் இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.

எல்லோருமே வேறு வேறு இலக்கியப் பின்னணிகளைக் கொண்ட ஆளுமைகள். ஆயினும் வடமராட்சி மண்ணில் ஒன்று சேர்ந்து ரசித்தோம், இலக்கியம் பேசினோம், விவாதித்தோம், இயங்கினோம்.

அவர்களுள் நண்பர் யோகராசா முற்றிலும் வித்தியாசமானவர். என்றுமே நினைவில் நிற்பவர். தத்துவப் பாதைகளில் சிக்கிக் கொள்ளலாமல் நல்ல இலக்கியங்களை ஆழ்ந்து ரசிப்பவர். விரிந்த தேடலும் பரந்த வாசிப்பும் அவரது முதன்மை விருப்புகளாகும். நுணுக்கமான பார்வை கொண்டவர், எந்தவித இசங்களுக்குள்ளும் மாட்டுப்படாமல் தன் கருத்துக்களை தெளிவாக முன் வைப்பவர். இதனால் பலராலும் மதிக்கப்படுபவராக இருந்தார். இன்றும் இருக்கிறார்.


யோகராசா இயல்பாகவே மென்மையான மனிதர். உரத்துப் பேசாதவர். ஏத்தகைய கருத்து முரண்பாடுகள் இருந்தாலும் எல்லோருடனும் இனிமையாகப் பேசி நல்லுறவைப் பேணும் பண்பாளர். முகம் முறியப் பேசி அறியாதவர்.

தனது கருத்துக்களை ஆணித்தரமாக முன்வைத்தாலும். மாற்றுக் கருத்துக்களையும் மதிப்பளித்து பொறுமையோடு செவிமடுப்பர். தவறுகளையும் போதாமைகளையும் முகத்தில் அடித்தாற்போல சொல்லாமல் இங்கிதமாக முன் வைப்பவர். பேராசிரியர் ஆனபோதும் தன் புலமையை வெளிப்படுவதை முன்னலைப்படுத்தாது மற்றவர்கள் இலகுவில் புரிந்து விளங்கக் கூடிய மொழியில் கருத்தாடல் செய்பவர். இதனால் இவரது ஆழமான கட்டுரைகளைப் படிப்பது கூட இனிய அனுபவங்களாக அமைகிறது.

ஈழத்து இலக்கியத் துறைக்கு இவரது பங்களிப்பு முக்கியமானது. தனது ஆய்வுக் கட்டுரைகள் மூலமாக வெளித் தெரியாத பல விடயங்களை தேடிக் கண்டறிந்து பதிவு செய்துள்ளதை குறிப்பிடலாம். ஈழத்து முதல் பெண் கவிஞராக மீனாட்சியம்மாள் நடேசையரை இனங்கண்டு வெளிப்படுத்தியமை முக்கியமானது.

ஈழத்து இலக்கிய வரலாறு, புகலிட இலக்கியம், போரிலக்கியம், பெண்ணிய இலக்கியம் நாட்டார் இலக்கியம், சிறுவர் இலக்கியம் போன்ற பல்வேறு துறை சார்ந்த இவரது ஆய்வுகள் மிகவும் பெறுமதி வாய்ந்தவை. அவற்றில் பல முன்னோடிப் பதிவுகளாக அமைவதையும் சுட்டிக் காட்ட வேண்டும்.

புல இலக்கியக் கூட்டங்களில் பங்கு பற்றுகிறார். அங்கு அவர் ஆற்றும் உரைகள் மிகவும் பெறுமதியானவை. மற்றவர்களைப் போல தருணத்திற்கு ஏற்றவாறு மேம்போக்காக இவரது உரைகள் இருப்பதில்லை. தனது தேடல்களில் ஆழமாகவும் உன்னிப்பாகவும் அவதானித்த மனப்பதிவுகளை உரைகளாக செய்கிறார் இதனால் அவை அனைத்துமே ஆய்வுக் கட்டுரைகளாகவே அமைகின்றன. உண்மையில் காத்திரமான உரைகளை நாடும் இலக்கிய கூட்டங்கள் மற்றும் ஆய்வு அமர்வுகளில் இவரே மிகவும் வேண்டப்படும் தரவாளராக இருக்கிறார்.

எமது நட்பின் ஆரம்பக் காலங்களில் அவர் விக்னேஸ்வராக் கல்லூரி ஆசிரியராக இருந்தார். மலையகம,; கிழக்கு பல்கலைக் கழக விரிவுரையாளர் பேராசிரியர் பீடாதிபதி என நெடும் பயணம் செய்திருக்கிறார். பல இடர்களையும் சவால்களையும் குழிதோண்டல்களையும் உறுதியோடு எதிர்கொண்டே இந்த உயர் நிலையை அடைய முடிந்திருக்கிறது.

இருந்தபோதும், எங்கு வாழ்ந்தாலும் எத்தகைய உயர்ச்சி அடைந்தாலும் தன் மண்ணின் தொடர்பைப் பேணுபராக இருக்கிறார். அதனால்தான் பேராசிரியர் யோகராசா என்றும் எல்லோருக்கும் 'எங்கள் யோகராசா' ஆகவே இருக்கிறார். எனது குடும்ப நண்பராக இருப்பது எங்கள் எல்லோருக்குமே மகிழ்ச்சி தருகிறது.

அவரது துணைவியாரும் மகளும் அவருக்கு கிடைத்த பெரும் பொக்கிசங்கள். அவரது உயர்ச்சிகள் அனைத்தினதும் பங்காளிகள் மட்டுமல்ல பங்களிப்பாளர்களாவும் இருக்கிறார்கள்.

அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.


எம்.கே.முருகானந்தன்.

No comments: