.
வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த விசாரணை, ஆஸ்கர் விருதுக்கு இந்தியாவின் சார்பாகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
1957 முதல் சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான விருதுக்காக இந்தியப் படங்கள் அனுப்பப்படுகின்றன. ஆனால், இதுவரை ஆஸ்கார் விருதுக்காக ’மதர் இந்தியா’, ’சலாம் பாம்பே’, ’லகான்’ ஆகிய 3 இந்தியப் படங்கள் மட்டுமே ஆஸ்கார் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டு இறுதிக்கட்டம் வரை (டாப் 5) சென்றுள்ளன.
இதுதான் அனைவரும் அறிந்த புள்ளிவிவரம். ஆனால் 1957ல் ஆரம்பித்து ஆஸ்கருக்காக அனுப்பப்பட்ட படங்களின் பட்டியலைப் பார்த்தால் பல சுவாரசியப் புள்ளிவிவரங்கள் தென்படுகின்றன.
1957ல் ஆரம்பித்து இதுவரை 48 இந்தியப் படங்கள் ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டுள்ளன. அவற்றில் 31 ஹிந்திப் படங்கள். (ஹேராம் உள்ளிட்ட 5 படங்கள் ஹிந்தியுடன் சேர்த்து இன்னொரு மொழிப் படமாகவும் குறிப்பிடப்பட்டுள்ளன.)
ஹிந்திக்கு அடுத்து அதிகமாக ஹாலிவுட் விருதுக்கு அனுப்பப்பட்டதில் தமிழுக்கு இரண்டாமிடம். இதுவரை விசாரணையுடன் சேர்த்து 9 தமிழ்ப் படங்கள் ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டுள்ளன. சிறந்த கலைப்படங்களை எடுக்கும் வங்காளம், மராத்தி, கன்னடம், மலையாளம் மொழிப் படங்களை விடவும் தமிழுக்குக் கூடுதல் வாய்ப்பு என்பது ஆச்சரியமாக இருக்கிறது. முதல்முதலில் தேர்வான தமிழ்ப் படம், தெய்வ மகன் (1969). கடைசியாக, ஹேராம் (2000).
1987 முதல் 2000 வரை மட்டும் 7 தமிழ்ப் படங்கள் ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்த 14 வருட காலகட்டத்தில் கிட்டத்தட்ட சமஅளவில் தமிழும் (7) ஹிந்தியும்(6) தேர்வாகியுள்ளன. 1993, 1994 வருடங்களில் இரண்டு ஹிந்திப் படங்கள் தேர்வாயின. உடனே அடுத்த இரண்டு வருடங்கள் (1995, 1996) தமிழ்ப் படங்கள் தேர்வாகின. ஆஸ்கர் தேர்வு என்கிற வகையில் தமிழ் சினிமாவுக்குப் பொற்காலமான காலகட்டம் அது.
1985 முதல் 2000 வரை கமல் கதாநாயகனாக நடித்த 7 படங்கள் ஆஸ்கருக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்தப் பெருமை வேறு எந்த இந்திய நடிகருக்கும் இல்லை. (அமீர் கான் படங்கள் - 4) கமலின் ஆஸ்கர் கனவு தீவிரமாக இருந்த சமயம் அது. இருந்தாலும் குணா, மகாநதி, அன்பே சிவம் போன்ற கமலின் முக்கியமான படங்களுக்கு இந்தப் பாக்கியம் கிட்டவில்லை.
மணிரத்னத்தின் 2 படங்கள் (நாயகன், அஞ்சலி) தேர்ந்தெடுக்கப்பட்டதில் ஆச்சரியம் இல்லை. ஆனால் மிக ஜனரஞ்சகமாக படங்கள் எடுக்கும் ஷங்கரின் இரு படங்களுக்கும் (இந்தியன், ஜீன்ஸ்) இந்தப் பெருமை கிடைத்ததுதான் இன்னொரு ஆச்சரியம்.
2 மலையாளப் படங்கள் மட்டுமே ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. ஒரு தெலுங்குப் படத்துக்காவது இந்த கௌரவம் கிடைத்தாலும் (ஸ்வாதி முத்யம்), தேசிய விருதுகளில் முன்னிலை வகிக்கும் கன்னடத் திரையுலகுக்கு ஒருமுறைகூட இந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்தமுறை கன்னடப் படமான திதிக்கு நிறைய ஆதரவு இருந்தது. ஆனாலும் விசாரணையைத் தாண்டி அதனால் தேர்வாகமுடியவில்லை.
2000க்குப் பிறகுதான் தமிழில் வித்தியாசமான முயற்சிகள் அதிகம் நடக்கின்றன. ஆனால் கடந்த 15 வருடங்களாகத் தமிழ்ப் படங்கள் ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்படாமல் இருந்தன. தற்போது, அந்தக் குறையை விசாரணை படம் போக்கியுள்ளது.
Nantri Thinamani
No comments:
Post a Comment