பவள விழாக் காணும் ஈழத்துக் கலையுலக ஆளுமை தாசீசியஸ் பேசுகிறார்...! கானா பிரபா


ஈழத்து நவீன நாடக வரலாற்றிலே புதிய போக்கினை நிறுவிய நாடக நெறியாளர், ஊடகர் ஏ.சி. தாசீசியஸ் அவர்கட்கு இது பவள விழா ஆண்டு.

கனடிய இலக்கியத் தோட்டத்திற்கான தேர்வுக்குழு 2006ஆம் ஆண்டுக்கான இயல் விருது வழங்கியது.  அவ்வேளையில், 'தமிழ்நாதம்" இணையத் தளத்திற்காகச் தாசீசியஸ் அவர்களைப் பேட்டி கண்டேன்.
தன்னுடைய நூலிலும் இந்த நேர்காணலை அவர் குறிப்பிட்டதோடு மெல்பர்னில் வாழும் மூத்த நாடகக் கலைஞர் சிசு நாகேந்திரன் வழியாக எனக்கு அனுப்பியும் வைத்தார் தாசீசியஸ் அவர்கள்.

அந்தச் செவ்வியின் ஒலி வடிவம்


எழுத்து வடிவத்தின் ஒரு பகுதி கீழே
முழுப் பகிர்வையும் வாசிக்க

திரு தாசீசியஸின் நேர்காணலை எழுத்துலக தர்மப்பிரகாரம் சுருக்கியளிக்க என் மனம் இடங்கொடுக்கவில்லை. எமது படைப்பாளிகளின் வாழ்வியல் தரிசனத்தை ஆவணமாக்கும் முயற்சியின் ஒரு கட்டமாக, இதனை எந்தவிதமான வெட்டல் கொத்தல்களுமின்றி அப்படியே சமர்ப்பிக்கின்றேன்.




கானா பிரபா: ஈழத்திலே நவீன நாடக வரலாற்றை நிறுவி, ஒரு புதிய போக்கை நிறுவி ஒரு சாதனையைப் படைத்திருக்கின்றீர்கள். இந்த வேளையிலே, நாடகத்துறையிலே உங்களுடைய ஆரம்பம் எப்படி இருந்தது என்று கூறுவீர்களா?
தாசீசியஸ்: நவீன நாடகத்துறையிலே ஒரு புதிய போக்கை நிறுவினேன் என்று நீங்கள் கூறும்போது, அது முதன்முதலில் என்னிடமிருந்து தோன்றியது என்கிற ஒரு மாயையை ஏற்படுத்திவிடக்கூடாது. ஒரு தொடர்நடவடிக்கையின், ஒரு சங்கிலிக்கோர்வையின் அங்கமாக, வளையமாக இடையிலே சேர்ந்தவன் நான். என்னுடைய அந்தப் பங்களிப்புக் காத்திரமானதாக, துடிப்புமிக்கதாக இருந்திருக்கலாம், அவ்வளவேதான்! நாடகத்தில் எனது பிரவேசம் என்பது, சிறுபிராயத்தில் எனது ஊரில் நான் பார்த்த நாட்டுக் கூத்துக்கள்தான். அவைதான் எனக்குள் அந்த அறிமுகத்தைத் தந்தன. நாடகங்கள் பழகுவதும், மேடையேற்றுவதும் கிராமச்சூழலில் தொடர்ச்சியாக நடந்துகொண்டு வருபவை. அவை எம் வாழ்வுடன் இரண்டறக் கலந்துவிடுகின்றன.

நான் பிறந்த காலத்தில், அதாவது ஆயிரத்துத் தொள்ளாயிரத்து நாற்பதில், கிராமத்தில் வானொலியோ, திரைப்படமோ பெரிதாக இருந்ததில்லை. அவற்றிற்கு நாங்கள் நகரங்களுக்குத்தான் செல்லவேண்டும். ஆகவே, நாட்டுக்கூத்துக்கள், நாட்டுப்பாடல்கள்தான்; மக்களின் அன்றாட வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்களோடு எங்களை இணைத்தன. அவர்கள் பாடும் பாடல்களைக் கவரவைத்தன. இங்கேதான் என்னுடைய நாடக ஆர்வம் தொடங்கியது. பள்ளிக்கூடத்தில், குறிப்பாக, இளவாலை புனித ஹென்றிஸ் கல்லூரி ஆசிரியர்கள் என்னுடைய நாடக ஆர்வத்தை வளர்த்தார்கள். அங்கு ஆண்டுதோறும், தவணைதோறும் நாடகங்கள் நடைபெறும். அவற்றில்; நான் பங்கெடுப்பேன். என்னுடைய அந்த ஆசிரியர்களை இப்போ நினைவுகூருகின்றேன். என்னுடைய நாடக இயக்கத்தின் ஆரம்பத்தில் எனக்கு வழிகாட்டிய அண்ணாவிமார்களை, ஆசிரியர்களை, என்னோடு இணைந்து நடித்தவர்களை எல்லாம் நான் நினைவுகூருகின்றேன்.

கனடாவிலே எனக்கு இந்த விருது வழங்குவதுபற்றி அறிவித்த அன்று, அந்த அறிவித்தலுக்குச் சற்று முன்னர்தான் எங்கள் ஊர்ப்பகுதியில் விமானம் குண்டுகள் பொழிந்து, வீடுகள் நாசமாக்கப்பட்ட செய்தியும் கிடைத்திருந்தது. அதைக் கேட்டுக்கொண்டிருக்கிறபொழுது, இந்தச் செய்தியும் வந்ததில், உடனடியாக கிடைக்கக்கூடிய மகிழ்ச்சி எனக்கு இருக்கவில்லை. ஓர் அதிர்ச்சியோடு இருந்த எனக்கு, ஏதோ ஒரு செய்திபோல்தான் இவ்விருதுச் செய்தி பட்டது. யாருக்கோ கூறப்படும் செய்தியாக அதை உள்வாங்கப் பலமணி நேரம் எனக்குப் பிடித்தது. நாடகத் தொடக்கம் அதிர்வுகள்தான். அதுபோல், இந்தச் செய்திகூட எனக்கு அதிர்வுதான். அந்த அதிர்வும் ஒரு வழிகாட்டியாக, ஒரு ஈடுபாட்டை எனக்குத் தருவதாக சொல்லலாம்.

கானா பிரபா: இதே வேளை ஈழத்திலே ஒரு மரபு ரீதியான ஒரு நாடகக் கலாசாரம் வளர்ந்து கொண்டிருந்த வேளையிலே நவீன நாடகங்களைத் தேடிப்போய், அவற்றை உள்வாங்கி மேடையேற்ற வேண்டும் என்ற ஆர்வம் உங்களுக்கு எப்படித் தோன்றியது?

மேலும் வாசிக்க

No comments: