செய்திகளுக்கான அச்சு ஊடகத்தினூடாக ஒரு செய்தியாளரின் கதை
வீ.ஆர். வரதராஜா நினைவுகள்
வீரகேசரியால் எனக்குக்கிடைத்த நண்பர்கள் அதிகம். ஊடகத்துறையானது நண்பர்களையும் எதிரிகளையும் சம்பாதித்துக்கொடுக்கும். ஆனால், பொருளாதார ரீதியில்தான் சம்பாத்தியம் குறைவானது.
வீரகேசரிக்கு நூறு வயது
விரைவில் நெருங்கவிருக்கிறது. மகாகவி பாரதியின் உற்ற நண்பர்
வ.ராமசாமி
(வ.ரா) அவர்களும் முன்னொரு காலத்தில் இதில் ஆசிரியராக
பணியாற்றியவர்தான். புதுமைப்பித்தனுக்கும்
பிறிதொரு காலத்தில் அச்சந்தர்ப்பம் வந்தது. ஆனால், அவர் சினிமாவுக்கு
வசனம் எழுதச் சென்னைக்குச் சென்றமையால், இலங்கைக்கு வரவில்லை.
கே.பி. ஹரன், அன்டன் பாலசிங்கம்,
செ.கதிர்காமநாதன், கே.வி. எஸ்.வாஸ், காசிநாதன், கோபாலரத்தினம், க. சிவப்பிரகாசம்,
டேவிட் ராஜூ, பொன். ராஜகோபால், சிவநேசச்செல்வன்,
நடராஜா, கார்மேகம், டி.பி.எஸ். ஜெயராஜ், அஸ்வர், கனக. அரசரத்தினம், சுபாஷ் சந்திரபோஸ் உட்பட பலர் பணியாற்றிய
பத்திரிகை வீரகேசரி.
வீரகேசரி குடும்பத்தில் இருந்த சிலரைப்பற்றி ஏற்கனவே எழுதியிருக்கின்றேன்.
மின்னஞ்சல் - இணையத்தள வசதிகள் இல்லாத அக்காலத்தில்
அங்கு பணியாற்றியவர்களின் வாழ்க்கையை இன்று நினைத்துப்பார்க்கும்பொழுது சுவாரஸ்யங்களும் துயரங்களும் கெடுபிடிகளும் சவால்களும் நெருக்கடிகளும்தான் நினைவுகளில் வந்து அலைமோதுகின்றன.
அத்தகைய ஒரு கால கட்டத்தில்தான் வரதராஜா
வீரகேசரியில் இணைந்திருந்தார்.
அவர் அங்கு
அலுவலக நிருபராக பணியாற்றினார். எனக்கு வீரகேசரியுடனான தொடர்பு 1972
இலிருந்து தொடங்கியது. அப்பொழுது நீர்கொழும்பு பிரதேச நிருபராகவே
அங்கு இணைந்தேன்.
அதன்பின்னர் 1977 இல் வீரகேசரியில்
ஒப்புநோக்காளர் (Proof Reading)
பிரிவில் ஏற்பட்ட வெற்றிடத்தையடுத்து அதற்கு விண்ணப்பித்து நேர்முகத்தேர்வில் தெரிவுசெய்யப்பட்டேன். அவ்வேளையில் என்னுடன் தெரிவானவர்தான் தனபாலசிங்கம்.
இவர்தான் பின்னாளில் வீரகேசரி ஆசிரிய பீடத்திலும்
அதற்குப்பின்னர், தினக்குரலிலும் இணைந்து, தினக்குரலின் பிரதம ஆசிரியரானவர். அதன் பிறகு
வீரகேரியின் வெளியீடான சமகாலம்
இதழில் ஆசிரியரானார். ஆனால், சமகாலம்
தற்பொழுது வெளியாவதில்லை என்று அறியமுடிகிறது.
வரதராஜாவுடன் 1977 இன்பின்னர் நெருக்கமாகப்பழகும் கால கட்டம் தொடங்கியது.
அவர் எழுதும்
செய்திகளை , நீதிமன்றச் செய்திகளை ஒப்புநோக்கியிருக்கின்றேன்.
ஆசிரிய பீடத்தில் நான் இணைந்த
பிற்பாடு அவர் தரும் செய்திகளை
செம்மைப்படுத்தியுமிருக்கின்றேன்.
இந்த செம்மைப்படுத்தல்
என்பது ஒருவகையில் Team
Work
தான். நிருபர் எழுதுவார். அதனை துணை
ஆசிரியர் செம்மைப்படுத்தி (Editing) தலைப்புத்தருவார். அதன்பின்னர் செய்தி ஆசிரியர்
மேற்பார்வயிட்டு, அவசியம் நேர்ந்தால், திருத்தங்கள் செய்வார். அதன்பின்னர் அச்சுக்குச்செல்லும். குறிப்பிட்ட செய்திகள் அச்சுக்கோர்க்கப்பட்ட பின்னர் அவற்றின் முதல் Proof இரண்டாம்
Proof
என்பன ஒப்புநோக்காளர்களிடம் செல்லும். அவர்கள் பிழை திருத்தம் செய்தபின்னர் அவை, பக்க வடிவமைப்பாளரிடம்
செல்லும். செய்தி ஆசிரியரின் ஆலோசனைகளுக்கு அமைய பக்கங்களை தயாரிப்பார். முழுப்பக்கமும் தயாரானதும் முழுமையான Page
Proof எடுக்கப்படும்.
அதனையும் ஒப்புநோக்காளர்கள் பார்த்துத் திருத்துவார்கள். அதன் பின்னர்
செய்தி ஆசிரியரோ அல்லது ஆசிரியபீடத்தைச்சேர்ந்த
ஒருவரோ மேலோட்டமான பார்வை பார்த்த
பின்னர், மீண்டும் அச்சுக்கூடத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
அதிலிருக்கும்
பிழைகளையும் அச்சுக்கோப்பாளர் அல்லது பக்க
வடிவமைப்பாளர் திருத்தியபின்னர் மற்றும் ஒரு ஊழியர்
மஞ்சள் நிறத்தில் அமைந்த ஒரு
அட்டையில் அந்த முழுப்பக்கத்தையும்
அழுத்தி ஒரு புதிய வடிவம்
எடுத்துக்கொடுப்பார். அதன்பின்னர்
அச்சுக்கூடத்தில் ஒரு இயந்திரத்துள்
செலுத்தப்பட்டு அந்த அட்டையில் பழுக்கக்காய்ச்சிய ஈயம் படரவிடப்பட்டு
வளைவான ஒரு ஈயப்பிளேட் தயாராகும்.
அனைத்துப் பக்கங்களும் இவ்வாறு தயாரானதும் முறைப்படி
அவை பெரிய ரோட்டரி
இயந்திரத்தில் பொறுத்தப்பட்டு பத்திரிகை அச்சாகும். விநியோகப்பிரிவு ஊழியர்கள் அதன்பின்னர் விநியோக வேலைகளை ஆரம்பிப்பார்கள்.
இதிலிருந்து வாசகர்கள் ஒரு பத்திரிகையின்
பிறப்பை புரிந்துகொள்வார்கள்.
இவ்வாறு வரதராஜா போன்ற நிருபர்கள்
எழுதும் செய்திகள் பலரதும் கைபட்டுத்தான் வாசகரிடம் சென்றது. இது அந்தக்காலம்.
ஆனால், இன்று யாவும் கணினி,
டிஜிட்டல் முறைக்கு வந்துவிட்டன.
அத்துடன் செய்திக்காக கடுமையாக உழைக்கவேண்டியதில்லை. Download
Journalism காலத்தில்
நாம் இன்று வாழ்கின்றோம்.
அதாவது, ஏதும் இணையத்தளங்களிலிருந்து பொறுக்கி எடுத்து
எழுதும் இதழியல் கலாசாரம் வந்துவிட்டது.
வரதராஜா அன்றைய பின்னணியில் பலரதும் நண்பராக விளங்கியமைக்கு அன்றைய அச்சு
ஊடகத்தொழிலும் காரணம். அவருக்கு பத்திரிகையாளர்கள், நிருபர்கள், ஆசிரியர்கள், அச்சக ஊழியர்கள் அலுவலகத்தினுள்ளே பெருகியிருந்தனர்.
அத்துடன் வெளியே நீதிமன்ற
ஊழியர்கள், சட்டத்தரணிகள், நீதியரசர்கள், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள், குற்றவாளிகள், சந்தேக நபர்கள் என்ற ரீதியில்
பலருடனும் பழகும் சந்தர்ப்பங்கள்
அவருக்கு கிடைத்தன.
அதேசமயம் அவருடைய முகத்தைப்பார்க்காத ஆயிரக்கணக்கான வாசகர்கள், அவர் எழுதும்
செய்திகளினால் வீ. ஆர்.
வரதராஜா என்ற பெயரையும் நன்கு தெரிந்துவைத்திருந்தார்கள்.
இவ்வாறு வரதராஜா மட்டுமல்ல பல பத்திரிகையாளர்களும்
மக்கள் மத்தியில் பிரபல்யத்துடன் வாழ்ந்தார்கள்.
நீதிமன்றச்செய்திகள் எழுதுவதுதான்
வரதராஜாவின் முக்கிய பணியாக இருந்தமையால், அவர் நிதானமாகவும்
பொறுப்புணர்வுடனும் இயங்கினார். நீதிமன்றச் செய்திகளில் தவறுகள் நேர்ந்துவிடக்கூடாது.
நீதிமன்றங்களில் நடக்கும் வாதங்கள் தமிழ், சிங்களம்,
ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் நடக்கலாம். அதனால் செவிக்கூர்மையுடன் கண்ணும் கருத்துமாக இருந்து எழுதவேண்டும்.
வரதராஜா
பணியாற்றிய காலகட்டம் இலங்கை அரசியல்
வரலாற்றில் நெருக்கடியானது. 1977, 1981, 1983 ஆகிய காலங்களை
நாம் மட்டுமல்ல, முழு உலகும்
மறக்காது. 1958 வன்செயலுக்குப்பின்னர் தென்னிலங்கையிலும் மலையகத்திலும் வாழ்ந்த அப்பாவித்தமிழ்மக்கள் உடைமைகளை இழந்து, அகதிகளாகி கப்பல் ஏறியகாலம். மக்கள் தங்கள்
தாயகம் விட்டு புலம்பெயர்ந்த காலம்.
இலங்கைக்கு பொருளாதார ரீதியில் 60
சதவீதம்
அந்நிய செலாவணியை தேடிக்கொடுத்த மலையக தோட்டத்தொழிலாளர்கள்
நாடற்றவர்களாக்கப்பட்டதுடன் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்ட காலம்.
மலையகத்திலிருந்து தமிழர்கள் அகதிகளாக விரட்டப்பட்டு வன்னிக்காடுகளில் குடியேறிய காலம். இவை
அனைத்துக்கும் உச்சமாக தமிழ் தீவிரவாத
இளைஞர்கள் ஆயுதம் ஏந்தியகாலம்.
அதனால் சிறைப்பிடிக்கப்பட்ட இளைஞர்கள் கொழும்பு நான்காவது மாடியிலும் - பூசா, பனாகொடை
முதலான பல இராணுவ
முகம்களிலும் தடுத்துவைக்கப்பட்ட காலம்.
இத்தகைய துன்பியல் காலத்தில் மக்களுக்கு உண்மையான செய்திகளைத் தரும் பொறுப்புவாய்ந்த
பத்திரிகையாளராக பணியாற்றியவர் வரதராஜா. சுருக்கமாகச் சொன்னால் கூர்மையான கத்தியின் மேல் நடக்கும்
காலத்தில், கத்திக்கும் காலுக்கும் சேதம் இன்றி
நடந்து திரிந்தவர்தான் வரதராஜா.
அச்சுறுத்தல்,
கொலைப்பயமுறுத்தல், கடத்தப்படுதல் என்பன பத்திரிகையாளர்கள் நாளாந்தம் சந்திக்கும் அரசியலாகும். இவ்வளவு பிரச்சினைகளுக்கு மத்தியிலிருந்துதான் மக்களுக்கு செய்திகள் கிடைக்கின்றன.
அதனால் ஒரு
பத்திரிகையாளனின் ரிஷிமூலம் என்பது பஞ்சணை
மெத்தையல்ல. அவன் நடந்து திரியும்
பாதைகளில் அரசியல்வாதிகளின் கண்ணிவெடிகள் இருக்கும். அவற்றை எச்சரிக்கையுடன் கடந்து செய்தி
சேகரிக்கவேண்டும்.
வரதராஜா , வீரகேசரியில் பணியாற்றிய காலத்தில் அரசு பல
அடக்குமுறைச்சட்டங்களை அமுல்படுத்தியிருக்கிறது.
அவசரகாலச்சட்டம், பயங்கரவாத தடைச்சட்டம், புலித்தடைச்சட்டம் ஆகியனவற்றுடன் நீதியரசர் சன்சோணி தலைமையில் ஆணைக்குழு, உட்பட பல
ஆணைக்குழுக்களை வைத்திருந்தது.
சந்தேகத்தின்பேரில் கைதாகி தடுத்துவைக்கப்பட்டிருப்பவர்கள்
பற்றிய செய்திகள் வீரகேசரியில் வருவதனால், அவர்களின் பெற்றவர்கள் உறவினர்கள் வீரகேசரியை தொடர்புகொண்டு வரதராஜா போன்ற பத்திரிகையாளர்களை
சந்தித்து உதவி கேட்பார்கள். வரதராஜாவும் தம்மாலியன்ற உதவிகளை மனிதநேய அடிப்படையில் செய்துகொடுப்பார். சட்டத்தரணிகளை சந்திப்பதற்கும் சட்ட ஆலோசனைகளைப்பெற்றுக்கொடுப்பதற்கும் அவர் பலருக்கும்
உதவியிருப்பதை பார்த்திருக்கின்றேன்.
அந்த வகையில் வரதராஜா ஒரு மனிதநேய
சமூகச்செயற்பாட்டாளராகவும் இயங்கியவர்.
நாம் பல
வருடகாலம் நண்பர்களாகப் பழகியிருந்தபோதும்
எமது பூர்வீகம் பற்றி பரஸ்பரம்
பேசிக்கொண்டதில்லை.
வரதராஜா யாழ்ப்பாணத்தில் வசாவிளான் பகுதியில் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் வாழ்ந்த ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளையின்
வழித்தோன்றல் என்ற தகவல் அவருடைய
மரணத்தின் பின்னரே எனக்கு தெரியவந்தது.
ஆசுகவி கல்லடி
வேலன் பற்றி பல
சுவாரஸ்யமான கதைகள் பதிவாகியிருக்கின்றன. இவர் பற்றி இரசிகமணி கனகசெந்திநாதன் தமது ஈழத்து
இலக்கிய வளர்ச்சி என்ற நூலிலும் எழுதியுள்ளார். வரதராஜா வீரகேசரியில் பணியாற்றிய காலகட்டத்தில் இணைந்தவர்தான் ஸ்ரீநடராஜா
என்பவர்.
இவரும் கல்லடி வேலனின் பேரன்தான். ஆனால், இவர்
மாத்திரமே தன்னை கல்லடி வேலனின் பேரன் என்று
மார்தட்டிக்கொண்டிருந்தார். அத்துடன் இவர், நாடக,
திரைப்படக்கலைஞர் விஜயேந்திரனின் தம்பி. விஜயேந்திரன் எழுத்தாளர். இலங்கை இந்தியத்தயாரிப்பான சிவாஜிகணேசன் நடித்த பைலட் பிரேம்நாத் படத்திலும் நடித்தவர்.
ஸ்ரீநடராஜா மற்றுமொரு இலங்கை - இந்தியக்கூட்டுத்தயாரிப்பான ஜெய்சங்கர் நடித்த இரத்தத்தின்
இரத்தமே படத்தில் நடித்திருப்பவர்.
ஆயினும்,
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வரதராஜா கல்லடிவேலன் பரம்பரையில் தான் வந்திருப்பதாக
பெருமைபேசிக்கொண்டிருக்கவில்லை என்பதும் அவருடைய தனித்துவம்.
வரதராஜா செய்திகளுடன் மித்திரனில் தொடர்கதைகளும் எழுதியவர். அவை இலக்கியத்தரமானதல்ல.
ஆனால், அவருடைய வாழ்க்கைத்தேவைகளுக்கு ஊதியம் தந்தவை. அத்துடன்
அவ்வப்போது வீரகேசரியில் பத்தி எழுத்துக்களும்
எழுதினார்.
1983
இன்பின்னர் இவரும் மற்றும்
ஒரு பத்திரிகையாளரான வீரகேசரியின் உதவி ஆசிரியர்
சேதுபதியும்
தத்தம் குடும்பத்தினருடன் ஜெர்மனிக்கு புலம்பெயர்ந்தனர்.
இவர்களுக்காக வீரகேசரி குடும்பம், கொழும்பு
கொள்ளுப்பிட்டி ரண்முத்து ஹோட்டலில் நடத்திய பிரியாவிடை விருந்தில்தான் இறுதியாக சந்தித்தேன்.
அதன்பின்னர்
சந்திக்கவே இல்லை என்பது
மனதை அழுத்தும் சோகம். வரதராஜா, ஜெர்மனிக்குச்சென்ற பின்னரும் பத்திகள்
எழுதினார். ஆனால், அவை ஊதியம் எதிர்பார்த்து எழுதப்பட்டவையல்ல. ஜெர்மனியில் வெளியாகும் இந்து மகேஷ் என்ற எழுத்தாளர்
நடத்திய பூவரசு இதழிலும் இவருடைய ஆக்கங்களை
பார்த்திருக்கின்றேன்.
எமக்கிடையே கடிதப்போக்குவரத்தும் இருந்தது. ஆனால், எமக்குள்ள வேலைப்பளுக்களினால் தொடரவில்லை.
தனது குடும்பத்திற்காக அவர் ஜெர்மனியில் உழைத்தார். அந்த உழைப்பு அவருக்கு ஊதியத்தை தந்திருந்தாலும்,
உடல் உபாதையையும் இறுதியில் மரணத்தையுமே தந்திருப்பதாக அறிய முடிகிறது.
தொழிற்சாலையின் உட்புறச் சுற்றுச்சூழல் அவருக்கு
நூரையீரல் கோளாறை பரிசாக தந்திருக்கிறது.
வீரகேசரி குடும்பத்திலிருந்து இவரும் விடைபெற்றுவிட்டார்.
செய்திகளை எழுதிய வரதராஜா
இன்று செய்தியாகிப்போனார்.
letchumananm@gmail.com
----0----
No comments:
Post a Comment