உலகச் செய்திகள்


சுற்றுலாப் படகு கவிழ்ந்தது : 13 பேர் பலி.!

மரணத்துக்கு முன்னர் ராம்குமார் அனுப்பிய கடிதம் : பீதியில் பொலிஸார்.!

காவிரி நீரை மீண்டும் 10 நாட்களுக்கு திறந்துவிட உத்தரவு

குளத்தில் கவிழ்ந்த பஸ் ; 35 பேர் பலி

ஐக்கிய நாடுகள் சபையில் தனது கடைசி உரையில் ஒபாமா கூறியது இது தான் !

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் ; ஹிலாரி-டிரம்ப் நேரடி விவாதம்

பிரித்தானியாவின் குட்டி இளவரசருக்கு மண்டியிட்ட கனடிய பிரதமர்











சுற்றுலாப் படகு கவிழ்ந்தது : 13 பேர் பலி.!

19/09/2016 தாய்லாந்தில் நாட்டின் வடக்கு பெங்காங்கில் இருந்து 80 கிலோ மீற்றர் தொலைவில் சுற்றுலா நகரான ஆயுத்தயா நகரில் ஓடும் சாயோ ப்ரயா ஆற்றில் படகு சவாரி செல்வது வழக்கம்.
இந்நிலையில், நேற்று சுமார் 100 பேரை ஏற்றிக் கொண்டு படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது இந்த படகின் அருகில் மற்றொரு படகு சென்று கொண்டிருந்தபோது, அந்த படகின் மீது மோதிக் கொள்ளாமல் இருப்பதற்காக படகோட்டி படகை திருப்பினார். 
அப்போது, எதிர்பாராத விதமாக, படகு அருகில் இருந்த பாலத்தின் கான்கீரட் பில்லர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இதில், 33 பேர் காயம் அடைந்துள்ளனர்.
இதனால் அப்பகுதி மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.  நன்றி வீரகேசரி 















மரணத்துக்கு முன்னர் ராம்குமார் அனுப்பிய கடிதம் : பீதியில் பொலிஸார்.!

19/09/2016 சுவாதி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் சிறையில் நேற்று மரணமடைந்தார். இது தற்கொலை என்று பொலிஸார், சிறைத்துறை தரப்பில் கூறப்பட்டாலும், பலரும் இது கொலை என சந்தேகத்தை எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்று கடந்த 10ஆம் திகதி சிறையில் உள்ள ராம்குமாருக்கு அவரது வழக்கறிஞர் மூலம் அனுப்பி ஒரு கடிதத்தை அனுப்பி ராம்குமாரின் பதிலை பெற்றுள்ளது. 
தற்போது ராம்குமார் இறந்துவிட்டதால், சிறையில் இருந்து ராம்குமார் அனுப்பிய அந்த கடிதத்தை அந்த தொலைக்காட்சி தற்போது வெளியிட்டுள்ளது. அதில் உள்ள தகவல்களால் பொலிஸார் பீதியில் உள்ளனர்.
அந்த கடிதத்தில், சுவாதி என்ற பெண் யாரென்றே எனக்கு தெரியாது நான் சுவாதியை ஒரு தலையாக காதலித்தேன் என்று கூறுவதில் உண்மை இல்லை. இந்த விஷயத்தில் என்னை எதற்காக கைது செய்தனர் என்பது எனக்கு தெரியாது, ஆனால் இந்த விவகாரத்தில் பெரிய தலைகள் சம்பந்தப்பட்டுள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சுவாதியின் குடும்பத்தினர் மற்றும் அவரது நண்பர்கள் யாரையும் எனக்கு முன்னதாக தெரியாது என கூறியுள்ளார். சுவாதியை நான் பின் தொடர்ந்து செல்லவில்லை. இந்த வழக்கில் சாட்சியமாக இருக்கும் பிலாலையும் எனக்கு தெரியாது.
உண்மையான குற்றவாளியை காப்பாற்றவே என்னை குற்றவாளியாக்க பொலிஸார் முடிவு செய்துள்ளனர். மேலும் என்னை கைது செய்ய வந்தபோது பொலிஸாரே எனது கழுத்தை அறுத்தனர். இந்த கொலையின் உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டும். என பல்வேறு பரபரப்பு தகவல்களை ராம்குமார் அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.    நன்றி வீரகேசரி 













காவிரி நீரை மீண்டும் 10 நாட்களுக்கு திறந்துவிட உத்தரவு

19/09/2016 காவிரி நதியை எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் 10 நாட்களுக்கு 3 ஆயிரம் கன அடி திறந்துவிடுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
காவிரி நதி நீர் தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்த வழக்கை செப்டம்பர் 5 ஆம் திகதி விசாரித்த உச்ச நீதிமன்றம், காவிரி நதியில் இருந்து தமிழகத்துக்கு 10 நாள்களுக்கு தினமும் விநாடிக்கு 15,000 கன அடி தண்ணீர் திறந்துவிடுமாறு உத்தரவிட்டது. 
இதனால் கர்நாடகாவை போராட்டக் களத்துக்கு இட்டுச் சென்றது. இதனிடையே, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி கடந்த 7-ஆம் திகதி அதிகாலை 12 மணி முதல் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே உச்ச நீதிமன்றம் மேற்கண்டவாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதேவேளை, செப்டம்பர் 20-க்குப் பிறகும் காவிரி நீரை தமிழகத்துக்குத் திறந்துவிடுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தால், ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலைச் சந்திக்க கர்நாடக முதல்வர் சித்தராமையா முடிவெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி












குளத்தில் கவிழ்ந்த பஸ் ; 35 பேர் பலி

20/09/2016 இந்தியாவில் பீகார் மாநிலம் மதுபானி மாவட்டத்தில் தனியார்  பஸ் ஒன்று குளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 35 பேர் பலியாகியுள்ளனர்.
பீகார் மாநிலம் மதுபானி மாவட்டத்தில் இருந்து சிதாமார்கி நோக்கி பயணித்த தனியார் பயணிகள் பஸ் ஒன்று நேற்று காலையில் புறப்பட்டு சென்றது. பஸ்சில் 60க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.
குறித்த பஸ் பாசிதா கிராமத்துக்கு அருகே சென்ற போது திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியினை விட்டு விலகி வீதியின் ஓரத்தில் இருந்த 25 அடி ஆழமான குளத்தில் வீழ்ந்து மூழ்கியதாக தெரிவிக்கப்படுகின்றது. 
இதுபற்றிய தகவலறிந்து அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். 
எனினும் இக்கோர விபத்தில் 35 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். மேலும், குறித்த சம்பவத்தில் பலியானவர்களின் சடலங்கள் அனைத்தும் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றனர்.
நன்றி வீரகேசரி












ஐக்கிய நாடுகள் சபையில் தனது கடைசி உரையில் ஒபாமா கூறியது இது தான் !

20/09/2016 ஐக்கிய நாடுகள் சபையில் 71 அமர்வில் அமெரிக்க ஜனாதிபதியாக பராக் ஒபாமா நிகழ்த்திய இறுதி உரையில், உலக நாடுகளுக்கு இடையில் கூடுதலான அளவில் வெளிப்படைத் தன்மை மற்றும் ஒத்துழைப்பு வேண்டும் என தெரிவித்துள்ளார்.
நியூயோர்க்கில், உலக தலைவர்கள் முன் பேசிய ஒபாமா, உலகமயமாக்கலின் நலன்களை சமமாக பகிர்ந்து அமைக்கும் வரை , அடிப்படைவாதம் மற்றும் வெறுப்பு வளர இடம் இருக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
உலக நாடுகள், வர்த்தகத்தில் தங்கள் நலன்களைப் பாதுகாத்துக் கொள்வது, தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்வது போன்ற நடவடிக்கைகளை எடுக்கக்கூடாது என்றார்.
மேலும், தங்களைச் சுற்றி பாதுகாப்பு அரண்களை அமைத்த நாடுகள், சிறையில் உள்ளதைப் போல் இருக்கின்றன என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
நன்றி வீரகேசரி










அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் ; ஹிலாரி-டிரம்ப் நேரடி விவாதம்

25/09/2016 அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வருகிற நவம்பர் 8 ஆம் திகதி நடைப்பெறவுள்ளது. குறித்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் டிரம்பும் போட்டியிடுகின்றனர்.
உத்தியோகபூர்வ வேட்பாளராக இருவரும் அறிவிக்கப்பட்டதும் தீவிரமான தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர்.
இதுவரை இருவரும் நேருக்கு நேராக மோதும் நேரடி விவாத நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.இந்நிலையில் நேரடி விவாதம் நாளை (26) தொடங்குகின்றது.இந்த நேரடி விவாதம் 4 கட்டங்களாக நடைபெறவிருக்கின்றது. 
முதல்கட்டமாக நாளை (திங்கட்கிழமை) நியூயோர்க்கில் உள்ள ஹோப்ஸ்டரா பல்கலைக்கழகத்தில் இரவு 9 முதல் 10.30 மணி வரை இவ்விவாதம் இடம்பெறுகின்றது.
அதில் இருவரும் அமெரிக்காவின் நிலை, செயல்படுத்த உள்ள திட்டங்கள், அமெரிக்க பாதுகாப்பு ஆகிய 3 தலைப்புகளின் கீழ் நேரடியாக பேசி தங்களின் கருத்துக்களை தெரிவிக்க உள்ளனர்.
கடந்த 1960 ஆம் ஆண்டுக்கு பிறகு அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முதன் முறையாக ஒரு பெண் போட்டியிடுகிறார். எனவே நாளை நடைபெறும் இந்த நேரடி விவாதம் வரலாற்று சிறப்புமிக்கதாக அமையுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
நன்றி வீரகேசரி












பிரித்தானியாவின் குட்டி இளவரசருக்கு மண்டியிட்ட கனடிய பிரதமர்

25/09/2016 கனடாவிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள பிரித்தானியாவின் குட்டி இளவரசர் ஜோர்ஜை, அந்நாட்டு பிரதமர் ஜெஸ்டின் ரூடோ மண்டியிட்டு வரவேற்றுள்ளார்.
பிரித்தானியா இளவரசர் குடும்பம் அரச குடும்ப சுற்றுப்பயணமாக கனடா சென்றுள்ளனர். அப்பொழுது விக்டோரிய சர்வதேச விமான நிலையம் வந்த இளவரசர் வில்லியம்ஸ், இளவரசி கேட், குட்டி இளவரசர் ஜோர்ஜ், குட்டி இளவரசி சார்லோட் ஆகியோரை கனடிய பிரதமர் ஜெஸ்டின் ரூடோ, அவரது மனைவி சோபி உட்பட பலர் நேரில் வந்து வரவேற்றனர்.
இச்சந்தரப்பத்தில், வில்லியம்ஸ், கேட் ஆகியோரை விட பிறந்து 16 மாதமே ஆன குட்டி இளவரசி சார்லோட், இளவரசர் ஜோர்ஜ் ஆகியோர் பார்வையாளர்களை கவர்ந்தனர்.
இளவரசர் ஜோர்ஜை, கனடிய பிரதமர் மண்டியிட்டு வரவேற்ற நிகழ்வு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்ததுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நன்றி வீரகேசரி







No comments: