கலாநிதி க.குணராசா வழங்கிய "சூளவம்சம் கூறும் இலங்கை வரலாறு" புத்தக மதிப்பீடு கானா பிரபா


செங்கை ஆழியான் என்ற புனைபெயரில் நாவல்களை, சிறுகதைகளைப் படைத்த கலாநிதி குணராசா அவர்கள் தன்னுடைய சொந்தப் பெயரில் மாணவருக்கான புவியியல், வரலாற்றுப் புத்தகங்களை ஆக்கியளித்துள்ளார். இவற்றில் பாரியார் கமலா குணராசாவும் இணைந்து படைத்த வெளியீடுகளும் அடக்கம்.
"சூளவம்சம் கூறும் இலங்கை வரலாறு" நூல் மாணவருக்கு மட்டுமன்றி இலங்கை வரலாற்றை அறிந்து கொள்ள முனைவோருக்கான பொதுவான படைப்பாக அமைந்திருக்கிறது.

பெளத்த பிக்குகளால் பேணிப் பாதுகாக்கப்பட்ட "மகா வம்சம்" என்ற இலங்கை வரலாற்று நூல் அளவுக்கு இந்த "சூளவம்சம்" குறித்த பரவலான அறிமுகம் கிடைக்கவில்லை. அதையே தன் முன்னுரையின் வழியாக விளக்கி வைத்திருப்பது சிறப்புச் சேர்க்கிறது.

தீப வம்சம் என்ற நூலின் மிகத்திருத்தமான வடிவமாகக் கொள்ளப்படும் மகா வம்சம் 100 அதிகாரங்களைக் கொண்ட நூல். பாளி மொழியில் இருந்து ஜேர்மன் மொழிக்கு மொழி பெயர்த்த வில்லியம் கெய்கர் என்பவர் இதிலுள்ள 37 அதிகாரங்களை "மகா வம்சம்" என்றும் ஏனைய 38 தொட்டு 100 வரையான அதிகாரங்களை "சூளவம்சம்" என்றும் வகுத்திருக்கிறார். இதையே முழுத் திரட்டாக மகா வம்சம் என்றே பாளி மொழியிலிருந்து நேரடி ஆங்கில மொழி பெயர்ப்புச் செய்த ஜோர்ஜ் ரேனர் குறிப்பிட்டுமிருக்கிறார்.கெய்கரின் மகா வம்சத்தில் புத்தரின் இலங்கை விஜயத்தில் இருந்து ஆரம்பித்து முக்கியமாக கி.மு 484 இலிருந்து கி.பி. 362 ஆம் ஆண்டு வரை விஜயனில் இருந்து 58 வது மன்னனான மகாசேனன் வரை எடுத்துச் செல்லப்படும் அதே வேளை மகாசேனனின் மகன் ஶ்ரீ மேகவண்ணனில் இருந்து ஶ்ரீ விக்ரமசிங்கன் வரையான ஆட்சிக்காலத்தைக் கூறுகின்றது இந்த சூள வம்சம். அதாவது கி.மு 362 இலிருந்து கி.பி. 1815 வரையான காலப்பகுதியை இது அடக்குகிறது. 

சூள வம்சத்தை எடுத்தாய்ந்த கலாநிதி க.குணராசா அவர்கள் மகா வம்சத்தோடு ஒப்பிடும் போது சூள வம்சத்தில் குறிப்பிடப்படும் நம்பகத்தன்மைக்கான ஐய்யப்பாடு குறைவு என்றும் அதற்கு ஏதுவாக வரலாற்றுச் சான்று பகிரும் கல்வெட்டுகள் துணை நிற்பதாக கெய்கரை மேற்கோள் காட்டிக் குறிப்பிடுகிறார். இந்த நூலைப் படிக்கும் போது நடைமுறை வாழ்வுக்கு மீறிய அமானுஷ்ய சக்தி பொருந்தியவர்களாக சில மன்னர்களின் குணாதிசியங்களை வெளிப்படுத்தும் போது சூள வம்சம் குறிப்பிடும் வரலாற்றுப் பகிர்வுகள் மீதான நம்பகத்தன்மை கேள்விக் குறியாக அமைகிறது.
உதாரணத்துக்கு ஒன்று, புத்ததாசன் என்ற மன்னன் குறித்த வரலாற்றில் வருகிறது. நீர்ப்பாம்பு ஒன்றின் முட்டையுடன் நீர் அருந்திய ஒருவனுடைய உடம்புக்குள் நீர்ப்பாம்பு வளர்ந்து விட்டதாகவும் அதை வெளியே எடுக்க, மருத்துவக் கலையில் சிறந்து விளங்கிய புத்ததாசன் அவன் வாயருகே இறைச்சித் துண்டை வைத்து வெளியே எடுத்ததாகவும் அதை விட மோசமான புனைவாக 
நீரோடு அருந்திய தவளை முட்டை அந்த மனிதனுக்குள் மண்டையோட்டுக்குள் தவளையாக வளர்ந்து விடவும், புத்ததாசன் அவனின் கபாலத்தைத் திறந்து தவளையை நீக்கி விட்டு மீளவும் கபாலத்தை மூடி விட்டான் என்ற வரலாற்றைப் படிக்கும் போது சிரிப்பு மூட்டுகிறது.
ஆகவே இந்த நூலைப் படிக்கும் போது புனைவு, மெய்த்தன்மை கொண்ட வரலாறு என்று பகுத்தாய்ந்து படிக்கும் பொறுப்பை வாசகன் சுமக்க வேண்டியிருக்கிறது.

மகா வம்சத்தில் பாட்டுடைத் தலைவனாக அமையும் துட்ட காமினி  போல சூள வம்சத்தில் மகா பராக்கிரமபாகு பாட்டுடைத் தலைவனாகப் போற்றப்படுகிறார். மகா பராக்கிரமபாகுவின் வளர்ச்சி, ஆளுமைத் திறன் போன்றவற்றை இந்த நூல் விபரிக்கும் திறன் வழியாக அதனைப் பூரணமாக ஏற்றுக் கொள்ள முடிகிறது.

மகா வம்சத்தின் தொடர்ச்சியாக அமையும் சூள வம்சத்தின் ஆரம்பம் மகாசேனன் என்ற மன்னனிடமிருந்து தொடரும் அவனது ஶ்ரீ மேக வண்ணனில் ஆரம்பித்து கண்டி இராச்சியத்தை ஆண்ட ஶ்ரீ விக்கிரம ராஜசிங்கனின் ஆட்சியை ஆங்கிலேயர் கைப்பற்றும் வரையான காலப்பகுதியை உள்ளடக்குகிறது இந்த நூல்.

இலங்கையின் தொன்மையும் நீண்ட ஆளுகைக்குட்பட்ட இராசதானியாக விளங்கிய அனுரதபுரத்திலிருந்து பல்வேறு நில ஆளுகைகள் சமய, சமூக, பொருளாதாரச் சூழல், பெளத்தத்தின் உட்பிரிவுகளாக விளங்கிய தேரவாத பெளத்தம் மற்றும் மகாயான பெளத்தம் இவற்றை மையப்படுத்திய ஆட்சியும் அதன் பெறு பேறாய் அமைந்த பெளத்த பிக்குகளுக்கிடையேயான உட்பகைகள் ஆட்சி மாற்றம் வரை செல்வாக்குச் செலுத்தியதை உணர முடிகின்றது.

அக்கால கட்டங்களில் அரசாண்ட மன்னர்கள் எழுப்பிய விகாரைகள், பெளத்த சின்னங்கள் இந்த நூலில் இருந்த போதிலும் அடிக்குறிப்புகளில் அவற்றை அமைத்த  மன்னர் பெயர் இல்லாததும், வெவ்வேறு பக்கங்களில் கலந்திருப்பதும் இந்த நூல் வாசிப்போட்டத்தோடு துணை புரியவில்லை.

இதிகாசங்களில் படித்தவாறு போலவே சூளவம்சம் எடுத்துப் பகிரும் மன்னராட்சிகளின் பின்னணியில் சூதும் வாதும் கலந்தே பயணப்பட்டிருக்கிறது. வாரிசுகளுக்கிடையில் சண்டை, வெவ்வேறு இராச்சியங்களுக்கு இடையிலான பகை, இந்த எல்லா இராச்சியங்களையும் கட்டியாள வேண்டும் என்ற மிதப்பில் மண்ணாசை கொண்டு போரிட்டோர் என்ற பொது அடிப்படையிலேயே இலங்கையின் மன்னராட்சி முறைமை காலத்துக்குக் காலம் இயங்கி வந்திருக்கிறது.

சூள வம்சம் கூறும் மன்னராட்சிகளுக்கு முந்திய காலம் குறித்து மகா வம்சம் சொல்லியிருப்பதைப் படிக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது. அதற்கு முக்கிய காரணியாக எல்லாளன் உள்ளிட்ட தமிழ் மன்னர்களை இந்தப் பெளத்த சமூகம் எப்படிப் பார்த்திருக்கிறது, பொலநறுவையில் நிலவிய இந்து மரபு குறித்த அவர்களின் நோக்கு எப்படி அமைந்திருக்கிறது.  என்ற ஆர்வமே மேலெழுகிறது. அத்தோடு இந்த சூள வம்சம் சமகாலத்தில் யாழ்ப்பான இராசதானியில் நிலைபெற்றிருந்த தமிழ் மன்னர்கள் குறித்த வரலாற்றுப் பக்கம் எட்டிப் பார்க்கவில்லை எனத் தெரிகிறது.

சூள வம்சத்தை மூல நூலாகப் படிக்கும் சாதாரணன் இந்து மதம் மீதும், தமிழர் மீதும் சினம் கொள்ளத் தக்க வகையில் எழுதப்பட்ட குறிப்புகளே விஞ்சியது எனும் அளவுக்குக் கொடுங்கோலராகச் சித்தரிக்கபடுகிறார்கள். 
சேனாதிபதி சேனனின் கிளர்ச்சியைத் தொடர்ந்து அவன் அநுராதபுரத்தில் தமிழர்களிடம் ஆட்சியைக் கையளித்த பின்னர் நிகழ்ந்தவைகளில் இவ்வாறான விபரணை வருகிறது 
//தமிழர்கள், இராச்சதர்கள் போல நாட்டினை நாசமாக்கினர். நாட்டு மக்களிடமிருந்து தமக்குத் தேவையானவற்றைப் பறித்துக் கொண்டனர் //

ஐந்தாம் மகிந்தனின் ஆட்சியில் அவனது படையிலுள்ள வீரர்களின் நடத்தை குறித்து இப்படியொரு குறிப்பு
// அவனது படையிலுள்ள கேரள வீரர்கள் (தமிழர்) தம் கரங்களில் வேல்களையும், வாள்களையும் ஏந்தி, அரண்மனை வாயிலில் பலாத்காரமாக அமர்ந்து "வேதனத்தைத் தருவதற்கு முன் அரசன் உணவருந்தக் கூடாது" எனக் குரலெழுப்பினர்.//


கலிங்க தேசத்து மன்னன் மாகனின் முற்றுகை எடுத்த போது
 // நாங்கள் கேரளத்தின் பூதங்கள் என்றவாறு இலங்கை வாழ் மக்களின் 
உடைகள், ஆபரணங்களைக் கொள்ளையிட்டனர். சிங்கள மக்களுக்குச் சொந்தமான மாடுகளையும், எருமைகளையும் அபகரித்துக் கொண்டனர்.//

//தன் தந்தையைக் கொலை செய்த குற்றத்துக்காக சீதாவாக்கை இராச்சியத்தை ஆண்ட இராஜசிங்கன் பிக்குகளின் தலைவரிடம் பரிகாரம் வேண்டவே அவர் சொன்னதில் திருப்தி இல்லாது சிவனை வழிபடுகிறவர்களின் ஆலோசனையில் அவன் உடல் முழுதும் சாம்பலைப் பூசிச் சைவனாகினான். பிக்குகள் சிலரை எரியூட்டிக் கொலை செய்தான். பெளத்தத்தின் புனித நூல்களை எரித்ததோடு சேத்தியங்களை இடித்துத் தள்ளினான். பிக்குகள் தம் அங்கிகளைக் களைந்து தலை மறைவாகி, ஊரை விட்டு ஓடினர்.//

பூர்வீகத் தமிழரைப் பற்றிய அசட்டைத் தன்மையோடே அவர்கள் குறித்த முழுமையான தேடலும் பதிவும் இல்லாது அமைந்த வரலாற்று நூல் இது.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இராச தந்திர உறவுகள் எவ்வாறு இரு நாட்டு ஆட்சி அதிகாரங்களுக்குத் துணை போனது என்பதும் வரலாற்றின் வழி வெளிப்படுகிறது. பாண்டிய மன்னன் ஶ்ரீமாற வல்லபனுடன் முரண்பட்ட அவன் மகன் வரகுணன் என்ற இளவரசன் தந்தைக்கு எதிராகக் கலகம் செய்து இலங்கைக்கு வர, அவனுக்கு வேண்டிய படையுதவிகளை அனுப்பி ஶ்ரீமாற வல்லபனைக் கொல்லுமாறு இரண்டாம் சேனன் பணித்தான். இதற்கு முன் சேனனின் மாமன் முதலாம் சேனன் ஆட்சியில் பாண்டிய மன்னன் அனுரதபுரத்துக்குப் படையெடுத்து புத்தர் சிலை மற்றும் சொத்துகளைச் சூறையாடினான் என்ற பழைய பகையும் இரண்டாம் சேனனி. வன்மத்துக்குக் காரணமாக அமைந்தது. அவ்வாறே பாண்டிய மன்னன் கொல்லப்பட்டு, இலங்கையிலிருந்து கவரப்பட்ட திரவியங்கள், மதுரையில் கொள்ளையிடப்பட்ட பொருட்களோடு அவன் சேனாதிபதி நாடு திரும்பினான்.
மதுரை வரை தன் படையோடு சென்று போரிட்டு வென்ற வரலாற்றை அறிகையில் ஆச்சரியமே எழுகிறது. 
அதே போல இலங்கையின் வடபகுதியான உத்தரதேசத்தின் நாகதீபத்தைக் கைப்பற்றிய சோழ மன்னன் வல்லபனை மகிந்தன் தன் சேனாதிபதியை அனுப்பி வெற்றிவாகை சூட வைத்து இரு அரசர்களுக்கும் நட்பு உடன்படிக்கை எழுந்த சம்பவமும் குறிப்பிடத்தக்கது.சோழ மன்னன் இராஜராஜனின் படையெடுப்பும் மோசமாகச் சித்தரிக்கப்படுகிறது.விலை மதிப்பற்ற சொத்துகளை இராஜராஜன் படைகள் சூறையாடியதாகவும், சமாதான உடன்படிக்கை என்று சொல்லி ஏமாற்றிச் சிறை வைத்ததாகவும், தந்த தாதுக் கோயிலை அழித்ததோடு விகாரைகளில் உள்ள தங்கச் சிலைகள், ஆபரணங்களைச் சூறையாடினர் என்று தொடரும் வரலாற்றில் இந்த நிகழ்வை "குருதி குடிக்கும் பூதங்கள் போல" என்ற சொலவாடை வழியாக விபரிக்கப்படுகிறது.இவ்வாறு இராஜராஜனின் பொல நறுவை ராஜ்ஜியம் ஒரு சில பத்தியோடு கடக்கிறது.)


"என்னைக் காலவாவிக்கு அழைத்துச் செல் அங்கு என் புதையலைக் காட்டுகிறேன்" என்று தன் மகன் காசியப்பனுக்குச் சொல்லிய தாதுசேனன் "அந்த வாவியில் குளித்து விட்டு நீரைக் கையில் ஏந்தி "இது தான் நான் தேடிய புதையல்" என்று சொல்லி மரணத்தைச் சந்திக்கும் வரலாற்றுப் பதிவு ஏற்கனவே சிறு வயதில் வரலாற்றுப் பாடத்தில் படித்தது. இம்முறை படிக்கும் போது இந்த மன்னர்கள் குளம் கட்டுவதையும், வாவிகளையும் அமைப்பதையும் எவ்வளவு தூரம் தம் ஆட்சியின் முக்கிய தேவையாக உணர்ந்தார்கள் என்பதை நிரூபிப்பதாக உணர முடிகிறது. அதே நேரம் ஆட்சியதிகாரத்துக்கு வரும் எந்த மன்னனும் பெளத்த சாசனத்தைப் பின் பற்றி அதன் வழி புதிய புதிய விகாரைகளை எழுப்பவும், புனருத்தாரணம் செய்வும், பெளத்த பிக்குகளுக்கான வசதி வாய்ப்புகளைச் செய்து கொண்டுக்கவும் அமையும் அரசே நல்லாட்சி என்று இந்த நூல் பூடகமாகச் சொல்கிறது. இதனை இன்றைய ஆட்சியாளர்களுடனும், நடைமுறைகளுடனும் கூட ஒப்பிட முடிகிறதில்லையா?

சூளவம்சத்தின் பாட்டுடைத் தலைவன் பராக்கிரமபாகுவின் வரலாற்றுப் பக்கங்களில் "ஒரு குடையின் கீழ்" இலங்கை முழுவதையும் கொண்டு வருவதற்காக அவனின் படிப்படியான வளர்ச்சியும்,கைக்கொண்ட ராஜதந்திர முறைமைகளும் சற்றே விரிவாகப் பகிரப்படுகின்றன.
"வதிவிடத்தினைச் சுற்றியுள்ள நிலம் கூட மனிதனுக்குப் பயன் தராது வீணே கிடக்கக்கூடாது" என்ற அவன் இலக்கு நோக்கி அவன் பயணித்திருக்கிறான். அவன் கட்டியெழுப்பிய வெளி நாட்டுத் தொடர்புகளும் விபரிக்கப்படுகின்றன.
தன்னிடம் அடைக்கலம் புகுந்த பாண்டிய மன்னன் பராக்கிரமனுக்காக, இலங்காபுரத் தண்ட நாயக்கனை அனுப்பி ஆட்சியைப் பிடித்த இன்னோர் பாண்டிய இளவரசன் குலசேகரன் படைகளோடு சண்டையிட்டு மீண்ட கதையும் விபரிக்கப்படுகிறது.


கலாநிதி குணராசா அவர்களால் அளிக்கப்பட்டிருக்கும் "சூள வம்சம் கூறும் இலங்கை வரலாறு" (வெளியீடு :கமலம் பதிப்பகம் , வெளிட்ட ஆண்டு 2008) 171 பக்கங்கள் கொண்ட சிறு வரலாற்று நூல் தான். ஆனால் இந்த நூலைப் படிக்க ஆரம்பிக்கும் போது எழும் பெருஞ் சிக்கல் மன்னர் பெயர்கள். உதாரணமாக நமக்கெல்லாம் பரவலாகத் தெரிந்த சீகிரியக் குகை ஓவியங்களை அமைத்த காசியப்பன் என்ற ஒரே மன்னனை நினைத்திருக்க இங்கே காசியப்பன்கள் வந்து போகிறார்கள். சந்ததி வழியாக அன்றி ஆட்சி உரிமை வழியாகவும் அமையும் ஒரே பெயர் ஆனால் இரண்டாம் மூன்றாம் என்ற அடைமொழியோடு குறிப்பிடப்படும் மன்னர்கள் என்று ஏகத்துக்கும் இந்த வரலாற்றுத் தடத்தில் இருப்பதால் இந்த மாதிரியான வரலாற்று நூலைப் படிக்க மிகவும் உதவியாக அமையும் காரியமாகப் பின்வரும் உத்தி இருக்கும் என நினைக்கிறேன்.
அதாவது முதலாவது அத்தியாயத்தில் இருந்தே ஆட்சியதிகாரம் நிலைபெற்ற நகரங்களைச் சிறு தாளில் குறித்து வைத்துக் கொண்டு அந்த நகரங்களில் சந்ததி வழியாக ஆட்சியமைத்தோர், படையெடுப்பின் வழியாக ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டேர் குறித்த பெயர்களை Family Tree என்ற அமைப்பில் குறிப்பெடுத்துக் கொண்டே வாசிக்க ஆரம்பித்தால் இலகுவாக அமையும்.

இன்றுள்ள ஒரு குடையின் கீழ் ஆட்சி என்ற முறைமைக்கு முந்திய, ஐரோப்பியர் வருகையோடு தொலைந்து போன பல இராச்சியங்கள் கொண்ட அந்தப் பழைய வரலாற்றுப் பக்கங்கள் பல்வேறு நூல்களின் வழியாக வெவ்வேறு தரிசனங்களாக வெளிப்பட்டிருக்கின்றன. இந்த நூல்கள் அனைத்தையும் இயன்றவரை தேடிப் படிப்பதன் மூலமே வரலாற்றின் மெய்த்தன்மையை உணர முடியும். அந்த வகையில் "சூளவம்சம் கூறும் இலங்கை வரலாறு" நூலும் வாசிக்க வேண்டியதொன்று.

No comments: