அஞ்சலி: வியட்நாம் வீடு சுந்தரம் - காவிரியின் மைந்தன்

.

அழுத்தமான கதைகளும் மறக்க முடியாத வசனங்களும் கோலோச்சிய அந்தக் காலத்துத் திரைப்படங்களில் தனக்கென்று தனி இடம் பிடித்தவர் ‘வியட்நாம் வீடு’ சுந்தரம். தமிழ் சினிமா நாடகத்தின் பாதிப்பிலிருந்து முற்றிலுமாக விடுபடாத அந்தக் காலகட்டத்தில் நாடக அரங்கிலிருந்து சினிமாவுக்கு வந்த திறமைசாலிகளில் ஒருவர் சுந்தரம்.
சிவாஜி கணேசன் நடிப்பில் 1970-ல் வெளியான ‘வியட்நாம் வீடு’ படத்தின் மூலம் கதை, வசனகர்த்தாவாக அறிமுகமானவர். இவர் பி.கே.சிவசாமி, தர்மாம்பாள் இணையரின் மகனாக 1943-ம் ஆண்டு ஜூலை 31 அன்று தஞ்சாவூரில் பிறந்தார்.
தாயாரின் ஊரான தஞ்சையில் தொடக்கக் கல்வி பயின்ற சுந்தரம் தந்தையின் ஊரான திருச்சியில் பள்ளிக் கல்வியைத் தொடர்ந்தார். குடும்பச் சூழ்நிலை காரணமாகப் படிப்பைப் பாதியில் விட்டுவிட்டு வேலையில் சேர்ந்தார்.
சென்னையில் டன்லப் டயர் கம்பெனியில் 18 வயதில் மெஷின் மேனாக வேலைக்குச் சேர்ந்த இவரைச் சமூக நாடகங்கள் ஈர்த்துக்கொண்டன. வேலை முடிந்ததும் ராஜா அண்ணாமலைபுரத்தில் இருந்த ‘யூனைடெட் அமெச்சூர் ஆர்ட்டிஸ்ட்ஸ்’ நாடகக் குழு அலுவலகத்துக்குச் சென்றுவிடுவார்.
அந்த நாடகக் குழுவின் நிறுவனர் ஒய்.ஜி. பார்த்தசாரதியின் அன்பைப் பெற்று அனைவரது தேவைகளையும் கவனித்துக்கொள்ளும் புரொடக்‌ஷன் பாயாகத் தனது கலை வாழ்க்கையைத் தொடங்கியவர் பிறகு காஸ்டியூம் கண்ட்ரோலராக உயர்ந்தார். ஆனால் அவரது எண்ணம் நாடகத்துக்கும் திரைக்கும் எழுத வேண்டும் என்பதே. இதனால் இரவில் கண் விழித்து நீண்ட நேரம் நாடகங்களை எழுத ஆரம்பித்தார். என்றாலும் டயர் கம்பெனி வேலையை அவர் விடவில்லை.
எம்.ஜி.ஆரின் ஆசி சிவாஜியின் அரவணைப்பு

தனது 19-வயதில் சுந்தரம் எழுதிய, ‘பிள்ளையார் மாப்பிள்ளை யார்?’ என்ற நாடகம் ராஜா அண்ணாமலை மன்றத்தில் 1962-ல் அரங்கேறியது. அதற்குத் தலைமை வகித்தார் எம்.ஜி.ஆர். முழு நாடகத்தையும் கண்டு ரசித்த எம்.ஜி.ஆர்., “மிகப் பெரிய எழுத்தாளராக வருவாய்” என்று வாழ்த்திவிட்டுச்சென்றார்.
அடுத்த சில ஆண்டுகளில், 1965-ல் சுந்தரம் எழுதி முடித்த நாடகம்தான் ‘வியட்நாம் வீடு’. இது சிவாஜியின் நடிப்பில் 1967-ல், ஆகஸ்ட் 15,16,17 ஆகிய மூன்று தினங்கள் சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில், அரங்கேறியது. சிவாஜியின் புதிய நாடகம் என்பதால் நாடக ரசிகர்கள், சபாக்களின் நிர்வாகிகள், நாடக நடிகர்கள் என ஏராளமானோர் குவிந்தனர். நாடகத்தை பாராட்டித் தீர்த்தனர்.
சிவாஜிக்குக் கழுத்து கொள்ளாத அளவுக்குப் பாராட்டு மாலைகள் விழ, அவற்றைக் கழற்றி சுந்தரம் கழுத்தில் போட்ட சிவாஜி, “சுந்தரமாக இருந்த இவன், இனி, வியட்நாம் வீடு சுந்தரமாக மாறுவான்” என்று மேடையில் அறிவித்தார். எம்.ஜி.ஆர். வாழ்த்திய அதே ராஜா அண்ணாமலை மன்றத்தில் சிவாஜியின் வாழ்த்தும் இணைந்துகொண்டது. இந்தியாவின் முக்கிய நகரங்கள் உட்படப் பல இடங்களில் ஆயிரம் முறைக்கு மேல், ‘வியட்நாம் வீடு’ நாடகம் மேடையேறிச் சாதனை படைத்தது.
சிறு வயதில்

திரைப் பயணம்
மேடையில் அசுர சாதனை படைத்த ‘வியட்நாம் வீடு’ நாடகத்தைத் தனது சொந்தத் தயாரிப்பில் திரைப்படமாக உருவாக்கி பி.மாதவன் இயக்கத்தில் நடித்தார். படம் மிகப் பெரிய வெற்றிபெற்றது. இதையடுத்து இவரது நாடகங்கள் ‘ஞான ஒளி’, ‘கௌரவம்’ என்ற திரைப்படங்களாயின. ‘கௌரவம்’ படத்தை இவரே இயக்கினார். ‘வியட்நாம் மூவீஸ்’ என்ற பெயரில் படத் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி, இந்தப் படத்தைத் தயாரித்ததன் மூலம் ஒரு தயாரிப்பாளராகவும் உருவெடுத்தார்.
கிறிஸ்தவப் பின்னணி கொண்ட கதை என்றாலும் பிராமணப் பின்னணி என்றாலும், சிவாஜிக்குக் கச்சிதமாகப் பொருந்தக்கூடிய திரைக்கதைகளை எழுதிச் சாதனை படைத்த எஸ்.சுந்தரம், சிவாஜியின் கடைசி நாட்கள் வரை அவருக்கு நெருக்கமான நண்பராக விளங்கினார். எம்.ஜி.ஆருக்கும் வெற்றிகரமான பல திரைக்கதைகளை எழுதினார்.
கடைசிப் படம்
திரைக்கதை ஜாம்பவான்களின் பட்டியலில் தனியிடம் பிடித்த சுந்தரம், ‘நம்ம வீட்டு தெய்வம்’ படத்தின் மூலம் புன்னகை அரசி கே.ஆர்.விஜயாவை அம்மன் வேடத்தில் முதன்முதலாக நடிக்கச் செய்து அவருக்குத் திருப்புமுனையை ஏற்படுத்தித்தந்தார். திரைப்படம், தொலைக் காட்சி இரண்டிலும் 2013-வரை தொடர்ந்து நடித்துவந்தார். அவர் கடைசியாக ‘வந்தா மலை’ என்கிற படத்தில் வடசென்னைப் பகுதி தாதாவாக நடித்திருந்தார். அந்தப் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில், “இதுதான் நான் நடிக்கும் கடைசிப் படமாக இருக்கலாம்” என்று பேசினார் ‘வியட்நாம் வீடு’ சுந்தரம். அப்படியே அமைந்துவிட்டது.

No comments: