தோல்விகளைப் பிரச்சினைகளாகப் பார்க்காமல் எல்லாவற்றையும் அனுபவங்களாய்ப் பார்க்கலாம்.

.
தோல்விகளைப் பிரச்சினைகளாகப் பார்க்காமல் எல்லாவற்றையும் அனுபவங்களாய்ப் பார்க்கலாம். இதுவே நமது வாழ்க்கைத் தத்துவமாக இருக்கட்டும்
கல்விக் கடன் வசூலிக்க வந்த கார்ப்பரேட் ஈட்டிக்காரர்களின் நெருக்கடி, மிரட்டல் ஆகியவற்றுக்குத் தூக்கில் தொங்கி பதில் சொன்ன பொறியியல் பட்டதாரி மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த லெனின்...
பி.எஸ்.ஜி மருத்துவமனை மாடியிலிருந்து கீழே குதித்துத் தற்கொலை செய்துகொண்ட‌ மருத்துவப் பட்டமேற்படிப்பு மாணவி லட்சுமி....
ஃபேஸ்புக்கில் தன்னை ஆபாசமாய்ச் சித்தரித்ததைத் தடுக்க முயன்று, காவல்துறையினரால் அலைக்கழிக்கப்பட்டு மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட வினுப்பிரியா...
வாழத் தொடங்கும் முன்னரே மரணத்தின் வாசலைத் தட்டிய இளம்வயதினரின் சமீபத்திய‌ தற்கொலை நிகழ்வுகள், அதிவேகமாய் ஓடிக்கொண்டிருக்கும் இயந்திர நகரத்தை உலுக்கிச் சற்றே கவனத்தைத் திசைத் திருப்புகிற நிகழ்வாய் அமைந்திருக்கின்றன‌.
2014-ல் பல்கலைகழக மானியக் குழு உதவியோடு நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் (96 கல்லூரிகள், 4646 மாணவர்கள்) 12.20 சதவீத மாணவர்கள் தற்கொலைக்கு முயன்றதாகவும், 15.45 சதவீதத்தினர் தங்களுக்குத் தற்கொலை எண்ணங்கள் இருப்பதாகக் கூறியதும் பதிவாகியுள்ளது.
இவ்வாறான‌ தற்கொலைகள் நடக்கும்போதெல்லாம், பிரச்சினைகளைக் கையாளும் திறன் இல்லாமல் போவது, அதீத மனஅழுத்தம் போன்ற காரணங்களால் தற்கொலைகள் நிகழ்கின்றன என்று பூசி மெழுகப்படுகிறது. ஆனால் அது உண்மைதானா?
உயிர்- உள்ளம்- சமூகம் ஆகிய மூன்று கோணங்களிலிருந்து நாம் ஆய்வு செய்தால் மட்டுமே தற்கொலைகள் பற்றிய சரியான புரிதலும், அதைத் தடுப்பதற்குச் சரியான‌ வழிமுறையும் கிடைக்கும்.


தற்கொலை எண்ணம் ஏன்?
நெருக்கடிகளின் தாக்கத்தினால் தற்கொலைக்கு முயற்சிப்ப‌வருக்கு ஒருவித ‘உளவியல் வலி' ஏற்படுகிறது. அந்த வலி மேலோங்கி அதைக் குறைப்பதற்கான வழிதேடும் நடவடிக்கையில் அவர்கள் ஈடுபடுவார்கள். அப்போது அவர்களின் சிந்தனை முறையில் பல மாற்றங்கள் நிகழும்.
அதாவது, ஒரு பிரச்சினைக்கு மாற்றுத் தீர்வுகள் இல்லவே இல்லை என்கிற எண்ணம் தோன்றுவது, இம்மியளவுகூட பிரச்சினை குறையாது என்கிற பயம் உள்ளிட்டவை எனக்குள்ள பிரச்சினைகள் இன்றே, இப்போதே முழுமையாய்த் தீர வேண்டும் அல்லது நான் தற்கொலை செய்துகொள்ளவேண்டும் என்ற முடிவை நோக்கி ஒருவரைத் தள்ளுகின்றன.
சூழலே காரணம்
உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் ஆகியவை தனிநபர் மனநிலையில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்திவருகின்றன‌. பள்ளி, கல்லூரிகளில் தனிநபர்த்தன்மை அதாவது 'இன்டிவிஜுவலிஸம்' முன்னிறுத்தப்படுகிறது. தவிர ‘டீம் ஸ்பிரிட்' எனும் குணம் அறவே ஒழிக்கப்பட்டுவிட்டது. ‘நீ ஜெயிக்கப் பிறந்தவன்/ள்' என்கிற மந்திரம் மட்டும்தான் அவர்களுக்குக் கற்பிக்கப்படுகிறது.
பட்டம் பெற்று வேலை தேடும் படலத்தில், அந்த வறட்டுத் தன்னம்பிக்கை மந்திரங்கள் மீண்டும் மீண்டும் மனதில் ஒலிக்கும். இந்த நிலையில்,நெருக்கடிகள் வ‌ரும்போது, பிரச்சினைக்கு வெளியிலிருந்து அவற்றை அணுகாமல், பிரச்சினையின் முழுத் தன்மையையும் புரிந்துகொள்ளாமல், பிரச்சினைக்குள்ளிருந்தே அணுகுவதால், ‘உளவியல் வலி' ஏற்படும். அது தற்கொலைக்கு வழிவகுக்கும்.
ஆக, தற்கொலைகளுக்குக் காரணம் மூளையில் ஏற்படும் வேதி மாற்றங்கள் மட்டுமே அல்ல. நாம் சார்ந்திருக்கும் சமூகச் சூழலும் மிக முக்கியக் காரணம்! இதைத்தான் ‘இயற்கைக்கு முரணாகத் தற்கொலைகள் தோற்றமளித்தாலும், தற்கொலைகளை உற்பத்தி செய்வது சமூகத்தின் இயற்கை குணமாகவுள்ளது' என்கிறார் மார்க்ஸ்.
எப்படி மீள்வது?
தினக் கூலிகளாய், பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் எப்படி அந்தப் பூக்காரம்மாவால் சிரிக்க முடிகிறது? எப்படி இடுப்பொடிய‌ வீட்டு வேலை செய்யும் அந்தப் பெண்ணால் அமைதியாகப் பேச முடிகிறது? மாற்றுத் திறனாளிகளால் எப்படி நம்பிக்கையுடன் உலவ முடிகிறது? அவர்கள் எப்படி நெருக்கடிகளைக் கையாளுகிறார்கள்? எந்தப் பல்கலைக்கழகத்தில் அதற்கு முனைவர் பட்டம் பெற்றார்கள்?
இன்றைய பொழுது என் கையில், இன்றைய சூழலில் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்யலாம். அதை மகிழ்ச்சியோடும் உறுதியோடும் செய்யலாம். தோல்விகளைப் பிரச்சினைகளாகப் பார்க்காமல் எல்லாவற்றையும் அனுபவங்களாய்ப் பார்க்கலாம். இதுவே நமது வாழ்க்கைத் தத்துவமாக இருக்கட்டும்.
‘நீ நூலகத்துக்கு போ!
நான் தெருவில் இறங்கப் போகிறேன்.
வாழ்க்கையை நான்
வாழ்க்கையிலிருந்தே கற்றுக்கொண்டேன்'
என்ற பாப்லோ நெருடாவின்
கவிதை வரிகள்தான், மருத்துவர்களின் ‘ப்ரிஸ்கிரிப்ஷனை' விட‌ இன்று முக்கியத் தேவையாய் இருக்கின்றன‌.

கட்டுரையாளர், கீழ்ப்பாக்கம் அரசு மனநலக்காப்பகத்தில் மனநல மருத்துவர்.

No comments: