உலகச் செய்திகள்


ஏமனில் சவுதி கூட்டுப்படை விமான தாக்குதல்: 14 பேர் உயிரிழப்பு

பாக்தாத் வைத்தியசாலையில் பயங்கர தீ ; 11 குழந்தைகள் பலி

குலென் விவகாரம்: அமெரிக்காவுக்கு துருக்கி எச்சரிக்கை: புதின் - எர்டோகன் சந்திப்பு

ஏமனில் சவுதி கூட்டுப்படை விமான தாக்குதல்: 14 பேர் உயிரிழப்பு

09/08/2016 சவுதி கூட்டுப்படை ஏமனில் நடத்திய தாக்குதலில், தொழிற்சாலையில் பணிபுரிந்து கொண்டிருந்த பொது மக்கள் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் ஆயுத போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் ஏமன் அரசுக்கு ஆதரவாக சவுதி கூட்டுப்படை வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது. சமீபத்தில் ஐ.நா. நடத்திய அமைதி பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்து மீண்டும் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன


இந்நிலையில்,சவுதி கூட்டுப்படை சனாவில் நேற்று இரவு தொடங்கி இன்று அதிகாலை வரை நடந்திய விமான தாக்குதலில், உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் இரவுப்பணியில் இருந்த 14 பேர் கொல்லப்பட்டதாக தொழிற்சாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நன்றி வீரகேசரி
பாக்தாத் வைத்தியசாலையில் பயங்கர தீ ; 11 குழந்தைகள் பலி

10/08/2016 ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள பிரசவ வைத்தியசாலையில் இன்று ஏற்பட்டபயங்கர தீவிபத்தில் சிக்கி  11  குழந்தைகள் பலியாகின.


பாக்தாத் நகரின் மேற்கு பகுதியில் யார்முக்  அரசு பிரசவ வைத்தியசாலையில் இன்றுஏற்பட்ட மின்கசிவால்  வளர்ச்சியடையாத குழந்தைகளை வைத்து பராமரிக்கும் சிறப்புசிகிச்சை பகுதியில் திடீரென்று தீ பிடித்தது.

குறித்த தீயில் சிக்கி  11 குழந்தைகள் உயிரிழந்தனமூச்சுதிணறலால் பாதிக்கப்பட்ட 26  குழந்தைகள் உடனடியாக பாக்தாத் நகரில் உள்ள இதர அரசு வைத்தியசாலைகளுக்குஅனுப்பி வைக்கப்பட்டன என அந்நாட்டின் சுகாதாரத்துறை செய்தி தொடர்பாளர்அஹமத் அல் ருடெய்ன் தெரிவித்துள்ளார்.
நன்றி வீரகேசரி
குலென் விவகாரம்: அமெரிக்காவுக்கு துருக்கி எச்சரிக்கை: புதின் - எர்டோகன் சந்திப்பு

10/08/2016 பயங்கரவாதி ஃபெதுல்லா குலெனை துருக்கியிடம் ஒப்படைக்க மறுப்பதன் மூலம் அமெரிக்கா - துருக்கி இடையேயான நீண்ட கால நட்புறவு பலி கடா ஆகக் கூடாது என்று துருக்கி எச்சரித்தது.erdogan

அந்த நாட்டில் கடந்த மாதம் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி தோல்வியில் முடிந்தது.

ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியின் பின்னணியில் ஃபெதுல்லா குலென் என்னும் மத குரு இருப்பதாக துருக்கி கூறி வருகிறது. தற்போது அதிபராக உள்ள எர்டோகனுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்ட பிறகு இவர் துருக்கியிலிருந்து 1999-இல் வெளியேறி அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் அருகே வசித்து வருகிறார்.

அவருடைய ஆதரவாளர்கள்தான் நாட்டில் குழப்பத்தை விளைவிப்பது, ஆட்சிக் கவிழ்ப்பு உள்ளிட்டவற்றில் ஈடுபடுவதாக துருக்கி குற்றம்சாட்டி வருகிறது. அவரை "தேடப்பட்டுவரும் பயங்கரவாதி' என்று துருக்கி அறிவித்தது.

இந்நிலையில், துருக்கி சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சர் பக்கீர் போஸ்டாக் தலைநகர் அங்காராவில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

அமெரிக்காவில் ஏதேனும் வன்முறை நிகழ்ந்து, அதற்கு காரணமானவர் துருக்கியில் அடைக்கலம் தேடுவதை அமெரிக்கா ஏற்குமா? அதிபர் ஒபாமா குடும்பத்துடன் ஓய்வெடுப்பதற்கு வெளியூர் சென்றிருக்கும்போது படுகொலை முயற்சி நடந்தால், வெள்ளை மாளிகையில் குண்டு வீச்சு நடந்தால், அப்பாவிப் பொதுமக்கள் மீது ராணுவ பீரங்கிகளை ஏற்றிக் கொல்வது, ஹெலிகாப்டரிலிருந்து மக்களை நோக்கிச் சுடுவது - இவற்றுக்கெல்லாம் காரணமானவர் துருக்கியில் மறைந்திருந்தால் - அமெரிக்கா அதனை எவ்வாறு ஏற்றுக் கொள்ளும்?

இவையெல்லாம் துருக்கி அதிபருக்கு கடந்த மாதம் நேர்ந்தன.

துருக்கியும் அமெரிக்காவும் நட்பு நாடுகளாக இருந்து வருகின்றன. ஆனால் இன்றைய நிலையில், துருக்கி மக்களிடையே அமெரிக்காவுக்கு எதிரான மனநிலை அதிகமாக இருக்கிறது. அது வெறுப்புணர்வாக மாறுவதற்குள் ஃபெதுல்லா குலெனை துருக்கியிடம் ஒப்படைக்க வேண்டும்.

அப்படி திருப்பி அனுப்பாவிட்டால், இரு நாடுகள் இடையேயான நீண்ட கால நட்புறவு பலி கடாவாகிவிடும். அமெரிக்கா அதனை அனுமதிக்கக் கூடாது என்றார் அவர்.

புரட்சியைத் தூண்டிய குற்றத்துக்காக, ஃபெதுல்லா குலெனை கைது செய்யும் உத்தரவை துருக்கி நீதிமன்றம் பிறப்பித்தது. ஆனாலும், வெறும் புகார்களின் பேரில் குலெனை நாடு கடத்த முடியாது என்றும், அவர் பயங்கரவாதி என்பது குறித்து உறுதியான சான்று இருந்தால்தான் அவரை துருக்கிக்கு திருப்பி அனுப்புவோம் என்றும் அமெரிக்கா திட்டவட்டமாக கூறிவிட்டது.

ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டதாக, முப்படைகளைச் சேர்ந்த மூத்த தளபதிகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான வீரர்கள் தேசத் துரோக குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், கல்வி, நீதித் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் நாடு முழுவதும் பதவி நீக்கம் செய்யப்பட்டனர். நாடு முழுவதும் 16,000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதின் - எர்டோகன் சந்திப்பு

ரஷிய பயணம் மேற்கொண்ட துருக்கி அதிபர் எர்டோகன், செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் அந்நாட்டு அதிபர் விளாதிமீர் புதினை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த சந்திப்பு குறித்து புதின் கூறுகையில், துருக்கியில் சிக்கலான அரசியல் சூழல் நிலவும் நேரத்தில் ரஷியப் பயணம் மேற்கொண்டுள்ளதன் மூலம், இரு நாடுகளிடையேயான உறவைப் புதுப்பிக்க எர்டோகன் தயாராக இருக்கிறார் என்பதைக் காட்டுகிறது என்றார். இரு நாடுகளிடையே வர்த்தக உறவை மேம்படுத்த விரும்புவதாக புதின் தெரிவித்தார்.

தங்கள் வான் எல்லைக்குள் ஊடுருவியதாக, ரஷிய போர் விமானத்தை துருக்கி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சுட்டு வீழ்த்தியது. இதைத் தொடர்ந்து இரு நாடுகள் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. அந்த செயலுக்கு மன்னிப்பு கேட்பதாக எர்டோகன் தெரிவித்ததும் புதின் அதை ஏற்றார்.

துருக்கியில் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி நடைபெற்றதையடுத்து அமெரிக்காவுடன் மனக்கசப்பு ஏற்பட்ட நிலையில், ரஷியாவுடன் உறவை மேம்படுத்த துருக்கி முனைந்துள்ளது    நன்றி தேனீ 


No comments: