நல்லூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம் இன்று (08/08/2016)
அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம்
அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுவிக்கக் கோரி யாழில் ஆர்ப்பாட்டம்
தயா மாஸ்டர் சற்றுமுன்னர் கைது.!
மூன்று இலட்சம் டொலர்களை வைப்பிலிடும் வெளிநாட்டவருக்கு 10 வருட கால வதிவிட வீசா : அரசாங்கம் அறிவிப்பு
யாழ். பல்கலைக் கழகத்தின் விஞ்ஞானப் பீடத்தின் கல்வி நடவடிக்கைகள் இன்று மீண்டும் ஆரம்பம்
பிள்ளையானுக்கு மீண்டும் விளக்கமறியல்.!
சர்வதேச இஸ்லாமிய மாநாடு இன்று கொழும்பில் ஆரம்பம்
நல்லூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம் இன்று (08/08/2016)
08/08/2016 வரலாற்றச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
பல்லாயிரக்கணக்கான முருக பக்தர்களின் “அரோகரா” கோசத்துக்கு மத்தியில் இன்று கொடியேற்றத்துடன் வருடாந்த உற்சவம் ஆரம்பமானது.
நன்றி வீரகேசரி
அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம்
08/08/2016 சிறைகளில் விடுதலைக்காக போராடிவரும் அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுவிக்கக் கோரி கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அரசியல் கைதிகளை விடுதலை செய்யவதற்கான தேசிய அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் இப் போராட்டங்கள், யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாகவும் நடைபெற்று வருகின்றது.
ஆட்சி மாற்றத்தின் பின்பாக பல தடவைகள் அரசியல் கைதிகள் தமது விடுதலையினை வலியுறுத்தி உண்ணாவிரப் போராட்டத்தினை நடத்தியுள்ளனர். எனினும் அப் போராட்டங்களுக்கு நியாயபூர்வமான தீர்வினை வழங்குவதற்கு அரசாங்கம் மறுத்து வருகின்றது.
இவ்வாறானதோர் சூழ்நிலையில் அனைத்து அரசியல் கைதிகளையும் நிபந்தனைகள் இன்றியும் விடுவிக்கக் கோரி, அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான தேசிய அமைப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுவிக்கக் கோரி யாழில் ஆர்ப்பாட்டம்
08/08/2016 அரசியல் கைதியாக தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் படுகொலைசெய்யப்பட்ட அரசியல் கைதி டெல்ருக்சனின் 4 ஆவது ஆண்டு நினைவு தினத்தினை நினைவு கூர்ந்தும் சிறைகளில் விடுதலைக்காக போராடிவரும் அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுவிக்கக் கோரியும் யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அரசியல் கைதிகளை விடுதலை செய்யவதற்கான தேசிய அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் இப் போராட்டங்கள், இன்று திங்கட்கிழமை கொழும்பில் வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு முன்பாகவும் யாழ்ப்பாணத்தில் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாகவும் நடைபெற்று வருகின்றன.
ஆட்சி மாற்றத்தின் பின்பாக பல தடவைகள் அரசியல் கைதிகள் தமது விடுதலையினை வலியுறுத்தி உண்ணாவிரப் போராட்டத்தினை நடத்தியுள்ளனர்.
எனினும் அப் போராட்டங்களுக்கு நியாயபூர்வமான தீர்வினை வழங்குவதற்கு அரசாங்கம் மறுத்து வருகின்றது.
இவ்வாறானதோர் சூழ்நிலையில் அனைத்து அரசியல் கைதிகளையும் நிபந்தனைகள் இன்றியும் விடுவிக்கக் கோரி, அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான தேசிய அமைப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளது.
அதனடிப்படையில், கடந்த ஆட்சியில் அரசியல் கைதியாக தடுத்து வைக்கப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்ட டெல்ருக்சனும் விடுதலைக்காக ஏங்கிய தருணத்திலேயே ஈவிரக்கமின்றி படுகொலை செய்யப்பட்டார்.
அவ்வாறாக சிறைச்சாலைகளில் படுகொலை செய்யப்பட்ட டெல்ருக்சன் மற்றும் நிமலரூபன் போன்றோரின் படுகொலைக்கு இன்றும் கூட நீதி கிட்டவில்லை.
இந் நிலையில் இவ்வாறான சிறைச்சாலைப்படுகொலைகளின் விசாரணைகளைத் துரிதப் படுத்தக் கோரியும் அப் படுகொலைகளுக்கு நீதியைக் கோரியும் தற்போதும் விடுதலைக்காக தவிக்கும் அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலைசெய்யக் கோரியுமே குறித்த போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதேவேளை சிறையில் அரசியல் கைதியாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த சமயம் படுகொலை செய்யப்பட்ட டெல்ருக்சனின் நினைவு தினத்தினை முன்னிட்டு யாழ்ப்பாணம் பாசையூர் புனித அந்தோனியார் தேவாலயத்தில் திங்கட்கிழமை காலை 6 மணிக்கு திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
தயா மாஸ்டர் சற்றுமுன்னர் கைது.!
10/08/2016 தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் பேச்சாளர் தயா மாஸ்டர் என்றழைக்கழைப்படும் தயாநிதி சற்றுமுன்னர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, அவரை நிபந்தனையுடன் கூடிய பிணையில் செல்ல வவுனியா மேல் நீதிமன்றம் அனுமதித்துள்ளது.
5 இலட்சம் ரூபா காசுப்பிணை மற்றும் தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான 4 அரச ஊழியர்களின் சரீரப் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
எனினும், சரீரப் பிணை வழங்குபவர்களை நீதிமன்றம் பார்வையிட வேண்டும் என தெரிவித்து, அவர்களை நாளை நீதிமன்றத்தில் ஆஜராக்குமாறு உத்தரவிட்டதுடன், அதுவரையில் தயா மாஸ்டரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் பாலேந்திரன் சசி மகேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் அடிப்படையில் தயா மாஸ்டருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இணைந்து கொள்ள முன்னதாக தயா மாஸ்டர் ஆங்கில ஆசிரியராக கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது தயா மாஸ்டர் சரணடைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
மூன்று இலட்சம் டொலர்களை வைப்பிலிடும் வெளிநாட்டவருக்கு 10 வருட கால வதிவிட வீசா : அரசாங்கம் அறிவிப்பு
10/08/2016 இலங்கையில் 3 இலட்சம் டொலர்களை வைப்பு செய்யும் வெளிநாட்டவர்களுக்கு 10 வருட காலத்துக்கான வதிவிட வீசாவை வழங்குவதற்கான சட்டமூலம் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது என்று அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அமைச்சர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்
அந்நியச் செலவாணிகளினை அதிகமாக எமது நாட்டுக்கு கொண்டு வரும் முதலீட்டாளர்களுக்கு வதிவிட வீசாவினை வழங்க 2016ம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்டது.
அந்த யோசனையை நடைமுறைப்படுத்துவதற்காக சிறப்பு வைப்புக்கணக்கு சட்டத்தினை அறிமுகப்படுத்த வேண்டி உள்ளது. பிரேரிக்கப்பட்டுள்ள சிறப்பு வைப்புக்கணக்கு சட்டத்தின் மூலம் 300,000 அமெரிக்க டொலர்களை இங்கு வைப்பிலும் வெளிநாட்டவர்களுக்கு 10 வருட வதிவிட விசாவினை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ,
அதற்காக குறித்த தொகையினை 10 வருட காலத்துக்கு குறித்த சிறப்பு வைப்புக்கணக்கில் பேண வேண்டும். அவ்வாறு வெளிநாட்டவர் இங்கு தங்கியிருக்கும்போது எந்தத் தொழிலையும் செய்ய முடியாது. பல நன்மைகளை கொண்டுள்ள சிறப்பு வைப்புக்கணக்கு சட்டத்தினை சட்டமாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பணியை சட்ட வரைஞர் திணைக்களத்திடம் ஒப்படைப்பதற்கு நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நன்றி வீரகேசரி
யாழ். பல்கலைக் கழகத்தின் விஞ்ஞானப் பீடத்தின் கல்வி நடவடிக்கைகள் இன்று மீண்டும் ஆரம்பம்
10/08/2016 யாழ். பல்கலைகழகத்தில் விடுமுறை வழங்கப்பட்ட விஞ்ஞானப் பீட மாணவர்களின் கல்வி நடவடிக்கை இன்று மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
கடந்த 10 ஆம் திகதி இரு மாணவர் குழுக்களிடையே ஏற்பட்ட மோதலினை அடுத்து மாணவர்களுக்கு காலவரையரையற்ற விடுமுறை வழங்கப்பட்டது.
இதேவேளை குறித்த மோதலில் காயமடைந்த மாணவர்கள் தற்போது வைத்தியசாலையில் இருந்து வீட்டுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாகவும் அவர்கள் நலமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு சில பீடங்களின் கல்விநடவடிக்கைகள் கடந்த வாரங்களில் ஆரம்பமாகியமை குறிப்பிடத்தக்கது. எனினும் மோதலுடன் தொடர்புடைய விஞ்ஞான பீடம் இன்று மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. நன்றி வீரகேசரி
பிள்ளையானுக்கு மீண்டும் விளக்கமறியல்.!
11/08/2016 முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தனை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு, இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2005.12.25 ஆம் திகதி மட்டக்களப்பு மரியாள் தேவாலயத்தில் நத்தார் ஆராதணையில் கலந்து கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பாக கடந்த 09.10.2015 அன்று கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டுவந்தமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
சர்வதேச இஸ்லாமிய மாநாடு இன்று கொழும்பில் ஆரம்பம்
11/08/2016 சவூதி அரேபியா, மக்காவை தலைமையகமாகக் கொண்டியங்கும் உலக முஸ்லிம் லீக் (ராபிதா அல் ஆலம் அல் இஸ்லாமி) அமைப்பு ஏற்பாடு செய்துள்ள சர்வதேச இஸ்லாமிய மாநாடு இன்று கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது. அலரி மாளிகையில் காலை 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ள பிரதான நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரதம அதிதியாக கலந்துகொள்ளவுள்ளார்.
'முஸ்லிம்களும் சகவாழ்வுக்கான வாய்ப்பும்' எனும் தொனிப்பொருளில் நடைபெறவுள்ள குறித்த மாநாட்டில் தாய்லாந்து, பங்களாதேஷ், பிலிப்பைன்ஸ், இந்தியா, தாய்வான், நேபாளம், பாகிஸ்தான், கம்போடியா, மியன்மார், சீனா, சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து ஏராளமான பேராளர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
சகவாழ்வை ஏற்படுத்தி உலக சமாதானத்தை நிலைநாட்டுவதனை அடிப்படையாகக் கொண்ட குறித்த மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க உள்ளிட்ட கல்விமான்கள் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கவுள்ளனர். இன்றும் நாளையும் நடைபெறவுள்ள இம்மாநாட்டுக்கான பணிகளை இலங்கை இஸ்லாமிய நிலையம் மேற்கொண்டு வருகிறது. மேலும் ஆரம்ப நிகழ்வு தவிர்ந்த ஏனைய நிகழ்வுகள் விளையாட்டமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment