திரும்பிப்பார்க்கின்றேன் - முருகபூபதி

.

ஆளுமைகளின்   உள்ளத்துணர்வுகளை  பதிவுசெய்த கடித  இலக்கியம்
இயல்புகளை  இனம்காண்பித்த  இலக்கிய  உறவில்  ஒரு ஞானத்தந்தை    தலாத்து  ஓயா  கணேஷ்
   
                                                                 

மின்னஞ்சல்  யுகம்  வந்த பின்னர்  காகிதமும்  பேனையும்  எடுத்து கடிதம்  எழுதி  தபாலில்  அனுப்பும்  வழக்கம்  அரிதாகிவிட்டது. தொலைபேசி,   கைப்பேசி,  ஸ்கைப்,  டுவிட்டர்,  வைபர்,  வாட்ஸ்அப்  முதலான   சாதனங்கள்  விஞ்ஞானம்  எமக்களித்த வரப்பிரசாதமாயிருந்தபோதிலும் , அந்நாட்களில்  பேனையால் எழுதப்பட்ட   கடிதங்கள்  தொடர்பாடலை  ஆரோக்கியமாக  வளர்த்து மனித   நெஞ்சங்களிடையே  உணர்வுபூர்வமான  நெருக்கத்தையே வழங்கிவந்தன.
உலகம்  கிராமமாகச் சுருங்கிவரும்  அதே  சமயம்  மனித  மனங்களும் இந்த   அவசர  யுகத்தில்  சுருங்கிவருகின்றன.
இலக்கியங்கள்   மனிதர்களை  செம்மைப்படுத்தி மேன்மையுறச்செய்துள்ளன.    அவ்வாறே  கடித  இலக்கியங்களும் படைப்பாளிகளிடத்தே    அறிவுபூர்வமாகவும்  உணர்வு  பூர்வமாகவும் நெருக்கத்தையும்    தேடலையும்   வளர்த்து வந்துள்ளன.
இலங்கையில்   மலையகம்  தலாத்துஓயாவில்  வாழ்ந்து  மறைந்த இனிய   இலக்கிய   நண்பர்  கே.கணேஷ் -  சுவாமி விபுலானந்தர், சிங்கள  இலக்கிய  மேதை  மார்டின்  விக்கிரமசிங்கா   ஆகியோருடன் இணைந்து   ஒருகாலத்தில்  அகில  இலங்கை எழுத்தாளர்   சங்கத்தை ஸ்தாபித்தவர்.   பின்னர்  இலங்கை  முற்போக்கு  எழுத்தாளர் சங்கத்தை 1950 களில்  உருவாக்கியவர்.



அப்பபொழுது   நான்  இந்த  உலகத்தையே  எட்டிப்பார்க்கவில்லை.   கே. கணேஷ்   ஈழத்து  தமிழ்  இலக்கிய  முன்னோடி,   படைப்பாளி, மொழிபெயர்ப்பாளர்.
எனக்கும்   அவருக்கும்  இடையே  மலர்ந்த  உறவு  தந்தை -  மகனுக்குரிய   நேசத்தை  உருவாக்கியிருந்தது.   இதுபற்றி  விரிவாக முன்னர்   எழுதிய  காலமும்  கணங்களும்  என்ற  தொடர்பத்தியில் குறிப்பிட்டிருக்கின்றேன்.



நான்   அவுஸ்திரேலியாவுக்கு 1987  இல்  வந்தபின்னர்,  அவர்  எனக்கு ஏராளமான   கடிதங்கள்  எழுதியிருக்கிறார்.  மாதம்  ஒரு  கடிதமாவது அவரிடமிருந்து  வந்துவிடும்.   நானும்  உடனுக்குடன்   பதில்  எழுதுவேன்.    இடைக்கிடை   தொலைபேசியிலும்  பேசிக்கொள்வோம். அவர்  மறையும்  வரையில்  எனக்கு  கடிதங்கள் எழுதிக்கொண்டிருந்தார்.   அக் கடிதங்களை   தனி நூலாகவும் தொகுக்கமுடியும். 
பல   நூல்களின்  ஆசிரியர்.   பல  வெளிநாட்டு  இலக்கியங்களை தமிழுக்குத்தந்தவர்.   கனடா  இலக்கியத்தோட்டத்தின்  இயல்விருது பெற்றவர்.
----------------------------------------------
அடுத்த   ஆண்டு  பெப்ரவரி   மாதம்  வந்தால்  நான்  இலங்கையிலிருந்து   அவுஸ்திரேலியாவுக்கு   புலம்பெயர்ந்து  வந்து  30  வருடங்களாகிவிடும்.     ஏறக்குறைய  மூன்று  தசாப்த  காலத்துள் காலத்துள்    ஆயிரத்துக்கும்   மேற்பட்ட   கடிதங்களை   முன்பு எழுதியிருக்கின்றேன்.   ஆனால்,  கணினி  யுகம்   வந்தபின்னர்   மின்னல் வேகத்தில்    கடிதங்களை    பதிவுசெய்து  அனுப்பிக்கொண்டிருக்கும் அவசர   வாழ்க்கைக்கு  பலியாகியவர்களில்  நானும்  ஒருவன்.



தற்போதைக்கு   இந்த  மின்னஞ்சலுடன்  நின்றுகொள்வதுதான் மனதுக்கு   ஆறுதலாக  இருக்கிறது.  என்னிடம்  முகநூல் இல்லையென்பதால்  எனது  முகமும்  மறந்துபோய்விடும்  என்று  ஒரு நண்பர்   சொன்னார்.
முகநூல்களினால் முகவரிகளைத் தொலைத்துக்கொண்டிருப்பவர்களுக்கு   மத்தியில்  எனது   மனதில் ஆழமாகப்பதிந்த   மூத்த   இலக்கிய   முகங்களை   அடிக்கடி நினைத்துப்பார்க்கின்றேன்.
 ஏற்கனவே  எனக்கு  வந்த  பல  இலக்கிய  ஆளுமைகளின்  கடிதங்களை   பொக்கிஷம்  போன்று  பாதுகாத்து  வருகின்றேன்.  சில வருடங்களுக்கு   முன்னர்  கடிதங்கள்  என்ற   நூலையும் வெளியிட்டேன்.   அதில்  சுமார் 80   படைப்பாளிகளின்   இலக்கிய  நயம் மிக்க  கடிதங்கள்  பதிவாகியுள்ளன.
இன்றும்   என்னோடு  பயணித்துக்கொண்டிருக்கும்  கே. கணேஷ் எழுதிய  கடிதங்களின்  வரிசையில்  ஒரு  சிலதை  இங்கு பதிவுசெய்கின்றேன்.
  தலாத்து ஓயா,  இலங்கை.
    06-05-1995
அன்புசால்   நண்பர்  பூபதிக்கும்  குடும்பத்தினருக்கும் திருவரங்கப்பெருமான்  எல்லா  நலன்களையும்  அருள்வதாக.
எப்பொழுதும்   உடனுக்குடன்  பதிலெழுதும்  பழக்கமுள்ள  எனக்கு, உங்களது   மடல்   கிட்டிப்பல   திங்கள்கள்    ஆகியும்  பதில்  எழுதாமை, குந்திக்கிடந்த  உளச்சோர்வே  அன்றி  அசிரத்தை   அல்ல.   என் உள்ளத்தில்   எப்பொழுதும்   உறையும்  உங்களது  நினைவு  பசுமையாக    உறைந்துள்ளது. “ இருவேறு உலகத்து இயற்கை திருவேறு தெள்ளியராவதும்  வேறுஎன்ற  நிலையில், ‘'பொருளில்லாருக்கு இவ்வுலகம்    இல்லாதநிலையில்  இடைத்தட்டு   வாழ்க்கையின் இன்னலின்   இடுக்கியில்  அகப்பட்ட  நிலையில்,   பணவீக்கம்  பெருகிய நிலையில்,    அச்சமூகப்போக்கிற்கு,   ஈடுகட்டும்   நிலையில் கண்ணியம்,   கட்டுப்பாடு  நேர்மை    அனைத்தையும்  காற்றில் போக்கிவிட்ட  ‘உலகத்தோடு   ஒட்ட  ஒழுகும்மானுடர்களுடன்  ஒத்து ஓடமுடியாத  நிலையில்,   வாய்மை,   நேர்மை   என்ற  முள்வேலியை அமைத்துத்திணறும்   நிலை.   இவையே    சுணக்கங்கட்குக்  காரணம்.
ராஜஸ்ரீகாந்தனிடம்,   தராஷ் செவ்சென்கோவ்,  பிராங்கோ  நூற்கள் அளித்தேன்.   அவை    உங்களுக்குச்  சேர்க்கப்பட்டதாகத் தெரிவித்தார். நீங்களும்  என்னைக்குறித்து  எழுதிய  வரிகள்,  நீங்கள்  அனுப்பியதைப் படித்தேன்.  கடந்தகால   நினைவுகள்   தெம்பையளித்தன.
நமது   அன்பர்  விதாலி ஃபூர்ணிக்கா    மறைந்ததும்   ஈடுசெய்ய முடியாத   இழப்பாகும்.   உங்களது   இணைப்பால்  இணைந்த  அவர் நட்பு    தராஷ்,    பிராங்கோ   தமிழாக்கங்கட்கு  காரணமாயின.  குறிப்பாக     அவரது  இடைவிடாத  தூண்டுதல்கள்,    ஊக்குவிப்புகள் மறக்கமுடியாதவை.    இருநூற்களையும்   அவர்  காணக்கிடைக்க  நான்  கொடுத்துவைக்கவில்லை.
விபவிசுதந்திர   இலக்கிய   அன்பர்கள்,    எனக்கு,   தராஷின் நூலிற்கு    அளித்த  சன்மானமும்   பாராட்டும்  அவருக்கும் உங்களுக்கும்   உரியதே.
உங்களுக்கு  வேலை  கிட்டியதா ?  இல்லாதிருந்ததை  அறிந்து  பெரிதும் துயருற்றேன்.   குபேரபுரி  சேர்ந்தாலும்  நமக்கு கொடுத்துவைத்ததுதான்    கிட்டுகிறது.  மாத்தளை சோமு இங்குவந்து சென்றார்.  திருச்சியில்  இருப்பதாக  அறிகிறேன்.  ஜூனில் ஆஸ்திரேலியா  வருவதாக  அறிகிறேன்.  நூல்  வெளியீடுகளில் முழுக்கவனம்  செலுத்துவதால்போலும்,   ஒரு  மடலும்  இதுவரை இல்லை.   அவர்  ஆர்வத்தைப் பாராட்டுகிறேன்.
உங்கள்  வேலை,  குடும்பம்  குறித்தும்  இலக்கியப்பணிகள்   குறித்தும் எழுதுங்கள்.    நிச்சயம்  உடனுக்குடன்   மடல் விடுவேன். குடும்பத்தினருக்கு,   என்  உளமார்ந்த  அன்பு  கூறவும்.  பிள்ளைகள் படிப்பு   குறித்தும்  எழுதுங்கள்.   எனது  திட்டங்கள்,  போக்குகள்  அடுத்த மடலில்.   தராஷ்,  பிராங்கோ  நூல்கள்  குறித்து  எடைபோட்டு எழுதுங்கள்.   அன்புள்ள அன்பன்   கே.கணேஷ்
 தலாத்துஓயா
   16-01-2002
அன்புமிகு   பூபதிக்கு,  அரங்கப்பெருமான்  திருவருள் கூட்டுமாறுவேண்டி   வரைவன.
அங்கு  உங்களது  நலனையும்  முகுந்தன்,  பிள்ளைகள்  நலன்களையும் அறிய  ஆவல்.
எண்பத்திமூன்றாம்   அகவையை  எட்டிப்பிடிக்கும்  நிலையில் முதுமையின்   கூறுகள்  தலைகாட்டி,  நோய்கள்  பல  தொல்லைதர, கொழும்பில்  மருத்துவமனையில்  தங்கி,  நிபுணர்கள்  பார்வையில் சிகிச்சைபெற்று,   இங்கு  வீடுவந்து,   திருச்சி  பாஷையில் ‘குந்திக்கொண்டு (குந்திக்கிட்டு)   இருக்கிறேன்.
ஓத்தவயதினர்கள்   ஒவ்வொருவராய்  மறுஉலகம்  போய்விட்ட நிலையில்,  தொ.மு.சி. ரகுநாதன்  போன்றோர்  மறைந்ததை அறிந்திருப்பீர்கள்.    உங்கள்  நாட்டில்  (அவுஸ்திரேலியாவில்)  எம் மதிப்பிற்குரிய   லக்ஷ்மண  அய்யர்,   நண்பர்  ‘சுந்தாவணக்கத்துக்குரிய   ஸ்ரீ  கைலாசநாதக்குருக்கள்  என இணை சேரமுடியா   விரிசல்கள்   விரிந்துவருகின்றன.   நடமாடத்தடுமாற்ற நிலையில்   ஒரு  துணையுடன்  வெளிச்செல்லவேண்டிய  நிலையில் பயணத்திற்கு    முவ்வுருளி  வாடகைக் கிராக்கிக்கு ஈடுசெய்யவேண்டிய     தடுமாற்றம்,  மருத்துவக்கூலி,  மருந்துகளின் அதீத    விலையேற்றங்கள்,  திக்குமுக்காடச்செய்கின்றன.   எனினும் மருத்துவர்களின்   நிபுணத்துவம்  பணநாட்டத்தினூடே  வணிகத்துவ கீழ்நிலைக்கு    இறங்கிவிட்டனர்.  நோயாளிகள்பாடு  திண்டாட்டமாக நிலவுகிறது.
ராஜஸ்ரீகாந்தனும்   பாவம்.  கல்லீரல்  நோயினால்  பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளதாக    அறிகிறேன்.   நேரில் கண்டு  ஆறுதல்  கூற வாய்ப்பின்மையால்,    தொலைபேசியில்  நலனறியவேண்டிய  நிலை. தம்பையா,    தீவிர  அரசியல்வாதி  ஆகிவருகிறார். நியாயவாதியாகத்திகழ்கிறார்.   பல  அன்பர்கள்,   அறிஞர்கள்  முழுநேரப்பணியாளர்களாக    ஆக்கப்பட்டுவிட்டனர்.
இந்நிலையில்  தனிமைப்படுத்தப்பட்ட  நிலையில்  குவிந்துள்ள நூல்களே    பொழுதைப்போக்க  உதவுகின்றன.   உங்கள்  ‘கடிதங்கள் நூலை   கணேசலிங்கனின்  செல்வன்  குமரன்  வீடு தேடிவந்து புத்தாண்டு    நாளில்  கொணர்ந்து  அளித்தார்.   புத்தாண்டுப் பரிசாக அமைந்தது.    உங்களது  உளப்போக்கையும்  மற்றைய எழுத்தாளர்களது    முயற்சிகள்,   சாதனைகள், வராலாற்றுத்துணுக்குகள்   பழம்  நினைவுகளைத்தூண்டின.
ராஜஸ்ரீகாந்தன்,    உங்கள்  பிள்ளைகள்    நீர்கொழும்பு  வந்திருந்ததைத் தெரிவித்திருந்தார்.   எனது  தற்போதைய  ‘குந்தல்’  நிலையில்  சென்று    நலன்விசாரிக்கவும்  கூடவில்லை.
உங்களது   சமூகப்பணியும்   இலக்கியப் பங்களிப்பும் பிரமிக்கச்செய்கின்றன.    பதில்  மடலை  எதிர்பார்க்கும்,
அன்பு   மறவா   அன்பன்  கே.கணேஷ்.
 தலாத்துஓயா
  24-X-2003
கெழுதகை  அன்பர்  பூபதிக்கும்  குடும்பத்தினருக்கும்  எம்  தென்திசை நோக்கி   இலங்கைக்கு  அருள்கூறும்  திருவரங்கப்பெருமான்  எல்லா நலன்களையும்  நல்குவதாக.
இப்பொழுதெல்லாம்   ராஜஸ்ரீகாந்தனுடன்  தொடர்புகொள்வது அரிதாக    உளது.   வாழ்க்கைப் போராட்டத்தில்   இறங்கியுள்ளமை காரணிகள்.    தப்பித்தவறி   தொடர்புகொண்டதில்  உங்கள்  நலன் விசாரித்தபொழுது , பைபாஸ்  சிகிச்சை  செய்துகொண்டதாக அறிந்தேன்.   உடன்  உங்களுக்கு  நலனறிய  நேரடித்தொடர்பு தொலைபேசி   மூலம்  முயன்றேன்   பலமுறை.  அனைத்து தொடர்புகளிலும்   அம்முறையில்  மின்னூடக  (கணினி)  தொடர்பு ஒலியே கேட்டது. அடிக்கடிகேட்டு  சோர்ந்துபோனேன்.
மின்னூடகங்கள்  மிகைப்பட,  எம்போன்ற  இடைத்தட்டு பேர்வழிகளுக்குத்தான்   இடைஞ்சல்  தோன்றுகிறது.   கையெழுத்தை விடுத்து   தட்டெழுத்து  மடல்கள்  கூட  தவிர்க்கப்படுகின்றன. மின்னஞ்சல்   வழித்தடையால்  நத்தை  அஞ்சல்வழி நாடவேண்டியுள்ளது.   நவீனத்துவப்போக்கில்  பத்தாம்பசலியாக ஒதுங்கும் நிலை.
போகட்டும்.  உங்கள்   உடல்நிலை   குறித்தும்  பிள்ளைகள்,  மாலதி அம்மாள்   நலங்கள்  குறித்தும்  மேலாக  வாழ்க்கை  நடத்த வருவாய்க்கான   தொழில்  வசதிகள்  குறித்தும்  எழுதுங்கள்.
கையெழுத்தே   தலையெழுத்தாகக்  கொண்ட  நிலையில்  அன்பர்கள் எனது   ஆறுதசாப்த  கால  அரசியல்,  இலக்கிய  அனுபவங்கள், நிகழ்வுகள்   நட்புக்கொண்ட  அறிஞர்கள்  நண்பர்கள்  ஆகியவர்கள் குறித்து   பதிவுசெய்யத்தூண்டுகிறார்கள்.   ஏதோ  பிள்ளையார்சுழி போட   முயன்றுகொண்டிருக்கிறேன்.
சோமு    இங்கு  பாவம்  அவர்  பைபாஸ்  நோயாளி.  எனினும் நடந்துவந்து   சென்றதில்   நெகிழ்வுற்றேன்.   திருச்சியில்  தங்கி விரைவில்   அவுஸ்திரேலியா  திரும்புவார்.  பத்மனாப  அய்யர்,  சு.ரா, நித்தி   இணைந்து  தமிழ்ப்பிரசுரங்கள்  வெளியிட -  வினியோகிக்க ஒரு   நிறுவனம்  அமைக்க  முயற்சிக்கிறார்கள்.
அவுஸ்திரேலியா,    கனடா,  இலங்கை,  தமிழகம்  அனைவரும்  சிறுசிறு வேற்றுமை   உணர்வுகளை  மூட்டை  கட்டிவைத்துவிட்டு  ஒன்று சேர்ந்தால்    தமிழுலகம்  செய்த  பாக்கியமாக  அமையும்.
தமிழனின்    நான்   உணர்வு  மழுங்கவேண்டும்.  பொதுமை  உணர்வு ஓங்கவேண்டும்.    காலம்  வழிசொல்லத் தூண்டுகிறது.
அன்பு மறவா  அன்பன்   கே.கணேஷ்.
----------
கே. காணேஷ்  அவர்கள்  2004  ஆம் ஆண்டு  மறைந்தார்.   அவரது  கனவுகள் அவர்   எழுதிய    கடிதங்களில்   வாழ்கின்றன.

-----0----

No comments: