ஏனையவர்களிலிருந்து கார்த்திகா வேறுபடும் விதம் – 17

.
                                                                       -நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர்


   எமது விடுமுறையைக் கழிக்க சென்னை சென்றிருந்தோம், வழமையாக தங்கும் தமிழ் புத்தகாலய அதிபர் கண.முத்தையா அவர்கள் வீட்டில் தங்கியிருந்தோம். அவரின் மருமகன் அகிலன் கண்ணன் (எழுத்தாளர் அகிலனின் மகன்) கோரஸ் இசை கேட்போம் வாங்கோ எனக் கூட்டிப்போனார். ஆழ்வார்பேட்டை ரஞ்சன் தெருவை அடையும் பொழுதே இசை காற்றில் மிதந்துவந்தது. இசை கேட்டுக்கொண்டிருந்த வீட்டினுள் நுழைந்ததும் ஆஜானுபாகுவான ஒரு 60 வயது மதிக்கத்தக்கவர் இசை நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருந்தார். இளம் வயதினரான ஆண்களும் பெண்களுமாக பாடிக்கொண்டிருந்தனர். கண்ணன் இசை நிகழ்ச்சியை நடத்திக்கொண்டிருந்த M.B. ஸ்ரீனிவாசனிடம் சென்று, நாம் இலங்கையில் இருந்து வந்துள்ளோம் எமக்காக பாரதி பாடல்களைப் பாடமுடியுமா எனக் கேட்டார். அந்த இசைக்குழு பாரதத்தின்  செப்புமொழி 18-இலும் பாடும் திறமை படைத்தவர்கள், எமக்காக பாரதி பாடல்களைப் பாடினார்கள்.




    சட்டச்சட சட சட்டட்டா என பாரதியின் மழைப்பாடல் 20 குரல்கள் மழையை தம் குரல்களால் வரவழைத்துவிட்டார்கள். அண்டம் குலுங்கிய மழையுடன் ஆரம்பமாகி zzz zzz என தூவானத்துடன் மழை ஓய்ந்தது. இவ்வாறாக ஒவ்வொரு பாடலும் எம்முள்ளே விதம் விதமான உணர்வை ஏற்படுத்தியது. வாத்திய இசையாக ஒரு மிருதங்கம் மட்டுமே. அத்தனையும் குரல்களின் ஜாலம்.

    பாரதியின் உணர்ச்சிகள் குமுறிக் கொப்பளித்தன. வா.ரா. பாரதி பற்றி எழுதியதை படித்திருந்தேன். பாரதியின் உணர்விலே கவிதை தோன்றி அதைப் பாடியவுடன் அவர் களைத்து நிலத்திலே படுத்துவிடுவாராம். அத்தனை உணர்ச்சிவேகத்துடன்தான் கவிதை வெளிவரும். அதையே கண.முத்தையா அவர்கள்துப்பாக்கியில் இருந்து தோட்டா வெளியேறும்பொழுது துப்பாக்கியை அதிரவைத்தே வெளியேறும். அதே போன்றதே உணர்ச்சிமிக்க கவிஞனின் உள்ளத்தில் இருந்து தோன்றும் கவிதையின் வேகமும்.’


     இவ்வாறாக தோன்றிய கவிதைகட்கு பாரதியின் உணர்வு கெடாது இசை அமைத்திருந்தார், நான்கு மலையாளப் படங்களுக்கு சிறந்த இசை அமைப்பாளர் என்ற விருதைப் பெற்ற M.B. ஸ்ரீனிவாசன். இசைக்குழுவின் பயிற்சி நிறைவுபெற்றதும் எமக்கு தேனீர் வழங்கினார் M.B. ஸ்ரீனிவாசன். வழமையான சென்னை டம்பிளர் காப்பியல்ல, மேற்கத்திய பாணியிலே தேனீர் கூஜா, பால், சர்க்கரை தனித்தனியே cup & saucer-இல் அருந்திக் கொண்டிருக்கையில் என்னையும் மீறி, ‘இந்த இசையை எமக்குத் தருவீர்களா, நான் இதை நடனமாக அமைக்க விரும்புகிறேன்என்றேன். M.B.S. என்னை சிறிது உற்றுநோக்கினார். பின்புஇந்தியா பூராவும்இந்த இசையை நாம் பாடி உள்ளோம், எத்தனையோ நடனக் கலைஞர்கள் இதைக் கேட்டுள்ளனர், யாரும் இதை நாட்டியமாக்க கேட்கவில்லை. ஆனால் நீங்கள் துணிந்து கேட்டுவிட்டீர்கள், தருகிறேன்என்றார். தொடர்ந்து studio-வில் ஒலிப்பதிவு நடைபெற்றது. பாடிய 20 பெயர்களில் பாரதியின் கொள்ளுப்பேரன் ராஜ்குமார் பாரதியும் இருந்தார். என்னிடமும் என் கணவரிடமும் M.B.S. ‘பாரதியின் இசைக்கு நான் விலைமதிக்க விரும்பவில்லை. நீங்கள் விரும்பியதைக் கொடுங்கள்என்றார். நாம் இருவரும் பாரதியின் பாடலுக்கு விலை மதிப்போமா? அல்லது பாரதியையே இசைவடிவாக எமக்குக் காட்டும் M.B.S. இசைக்கு விலை மதிப்போமா? நாம் விடுமுறை செலவுக்குக் கொண்டுபோன அத்தனைப் பணத்தையும் அவர் கையில் கொடுத்துவிட்டோம். இசைநாடாவை அவர் என் கையில் தரும்போது கூறியது, ‘பாரதிக்கு துரோகம் பண்ணிவிடாதே அம்மாஆமாம். அவர் பாரதியின் உணர்வுகளே சிறிதும் கெடாது இசை உருவாக்கிவிடவேண்டும் என்ற உணர்வுடன் செயல்பட்டு வெற்றியும் கண்டவர். அதே உணர்வு கெடாது நாட்டியம் அமைத்துவிடவேண்டும் என எண்ணுவது யதார்த்தமே.


    இலங்கை திரும்பியதும் M.B.S.-இன் பாரதி பாடல்களை நடனமாக அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தேன். அந்தச் சமயம், நான் இலங்கை அரசின் இந்து தமிழ்வளர்ச்சி திணைக்கழகத்தின் ஆலோசகராகவும் இருந்தேன். இதர திணைக்கழகத்தின் அமைச்சராக இருந்தவர், திரு.ராஜதுரை. இவர்கள் பாரதி நூற்றாண்டு விழாவை அமோகமாகக் கொண்டாடத் திட்டம் வகுத்தனர். நான் அமைச்சர் ராஜதுரையை தொலைபேசியில் அழைத்து, ‘என்னிடம் பாரதி பாடலுக்கான அற்புதமான இசை உண்டு. இந்த இசையுடனான பாடல்களுக்கு நடனம் அமைத்தவண்ணம் உள்ளேன். இதை விரும்பினால் கேட்டுப் பாருங்கள் என்றேன். இசையைக் கேட்ட அவர் என்னை தொலைபேசியில் அழைத்துஅம்மா, இது ஒரு அற்புதமான இசை, இந்த இசை அமைப்பாளரை எனது பாரதி நூற்றாண்டு விழாவிற்கு அழைக்கவேண்டும்என்றார். பாரதி நூற்றாண்டு விழாவிற்கு M.B. ஸ்ரீனிவாசன் அரச விருந்தினராக வருகை தந்திருந்தார்.


     அமைச்சர் ராஜதுரை அவரைக் காணவிரும்பி அழைத்திருந்தார். அமைச்சர் M.B.S. –இடம்நீங்கள் ஒரு மலையாளி, உங்களுக்கு எங்கள் தமிழர் பிரச்சனை புரியாதுஎன்றார். M.B.S. ஆழ்ந்த குரலில்நான் ஒரு மானாமதுரை தமிழன், தமிழனாக உள்ளதனால்தான் என்னால் பாரதியை உணர்ந்திருக்க முடிகிறதுஎன்றார். M.B.S. ஒரு தமிழன் மட்டுமல்ல, சுதந்திரப் போராட்ட வீரர். பாரதி பாடல்களைத் தெருவிலே பாடுவது சட்டவிரோதமாக இருந்த காலத்திலே கல்லூரி மாணவர்களையும் சேர்த்து பாரதி பாடல்களை தெருத்தெருவாக முழங்கியவர். அவர் ‘BRIGHTON HOTEL’-இல் அரச விருந்தினராகத் தங்கியிருந்தபோது யாழ் கல்லூரி அதிபர் ஒருவர் M.B.S. உடன் கல்லூரியிலே படித்தவர், ‘அடே, M.B. அன்று தெருத்தெருவாக பாரதி பாடல்களைப் பாடினோம். இன்று இசை அமைப்பாளனாய் வந்துள்ளாய்எனக்கூறி அவரை பழைய ஞாபகங்களுடன் சென்று பார்த்தார்.


   M.B.S. சாத்வீகப் போராளியல்ல, ஆயுதப்போர் வேண்டும் எனப் போராடிய இயக்கத்தவர். அதனால் அவர் பொலீசாரிடம் பட்ட அடியால் முதுகெலும்பில் ஏற்பட்ட பாதிப்பு இறுதிவரை அவர் நிமிர்ந்து நிற்பதற்கு தோலினாலான ஒரு பட்டையை அணிந்துவந்தார். இவர் World Food & Agriculture Organisation-இல் உயர்பதவி வகித்தவரின் மகன். இளவயதில் பெற்றோருடன் பல நாடுகட்கும் சென்றவர்.  Indian people’s Theatre என்ற இயக்கத்தில் இணைந்து உழைத்தவர். கலைகள் மூலம் சுதந்திரப் போராட்ட உணர்வை மக்களிடம் ஊட்டுவதே IPTA-வின் நோக்கம். அதே இயக்கத்தில் இணைந்து உழைத்த ஒரு முஸ்லிம் மங்கையைத் திருமணம் செய்துகொண்ட, ஒரு ஐயங்கார் பரம்பரையில் தோன்றியவர். இத்தகைய பின்னணியைக் கொண்டவராலேயே பாரதியின் உணர்வுகளைப் புரிந்து இசை அமைக்க முடியும் என எண்ணுகிறேன்.

       எனது பாரதி பாடலுக்கான நாட்டியத்தைகவிஞன் கனவுஎன்ற பெயரில் பாரதி நூற்றாண்டு விழாவிலே மேடை ஏற்றினேன். வருகை தந்திருந்த M.B.S.-உம்பாரதீய இசைஎன்ற தலைப்பிலே உரையாற்றினார். எனது நாட்டிய அமைப்பின் பல அம்சங்களையும் பாராட்டியவர், அந்த நாட்டிய அமைப்புக்கு முற்றுமுழுதாகப் பருத்தி ஆடைகளையே பயன்படுத்தியிருந்தேன். ஆடை அலங்காரத்தில் பல வர்ணங்களே உடைக்கு அழகூட்டியது, அதையும் அவர் பாராட்டினார்.

     இந்து தமிழ்வளர்ச்சி அமைச்சால் நடத்தப்பட்ட விழாவிற்கு அமைச்சர் தொண்டமானும் வந்திருந்தார். அவர் அமைச்சர் ராஜதுரை மூலம் எமது குழுவை நுவரேலியாவில் நிகழ்ச்சி நடத்தும்படி அழைத்தார். நாமும் நுவரெலியா சென்றோம். எனக்குத் துணையாக திருமதி புனிதம் பசுபதியும், திருமதி ஈஸ்வரி பாலசுப்ரமணியமும் வந்திருந்தனர். பகல் முழுவதும் நுவரெலியாவை சுற்றி வந்தோம். சுவரொட்டிகள் எமது வருகையை அறிவித்தவண்ணம் பல இடங்களில் காணப்பட்டன.


      M.G. ராமச்சந்திரனின் தங்கக் கரங்களால் பரிசைப் பெற்றநாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர் வருகைதர இருக்கிறார்என அறிவித்திருந்தது. இது எமக்கு சிறிது வேடிக்கையாகவும் இருந்தது.

     மாலை மண்டபத்தில் கூட்டம் அலைமோதியது. ஒவ்வொரு பாடலுக்கான நடனத்தின் முன் நான் மேடையில் தோன்றி சில விளக்கங்கள் கொடுப்பதாகவே நிகழ்ச்சியை அமைத்திருந்தேன். அவ்வாறு கூறுவதால் பார்வையாளர் மனதில் மேலும் உணர்வை ஊட்ட முடிந்தது. இவ்வாறு நிகழ்ச்சியில் நான் தோன்றும்பொழுது கூட்டத்தின் ஆரவாரம் வானைப் பிளந்தது. நான் மீண்டும் தோன்றும்போது கூட்டத்தின் கூச்சல் அதிகரித்தது. நான் பேசுவது கூட அவர்கள் காதுகளில் கேட்டிராது. நான் மேடையில் தோன்றி விளக்கம் கொடுக்காமலேயே நிகழ்ச்சியைத் தொடர்ந்து நடத்தினேன். மலையக மக்களின் மனநிலையைப் புரிந்துகொண்ட அமைச்சர் தொண்டமான், எனது பாதுகாப்பைக் கருதி, நிகழ்ச்சி நிறைவடையும் முன்பே என்னை நாம் தங்கியிருந்த Rest House–இற்கு தனது மெய்க்காப்பாளருடன் அவரது காரிலேயே அனுப்பிவைத்தார்எனது மாணவியரை திருமதி புனிதம் பசுபதிதிருமதி ஈஸ்வரி பாலசுப்ரமணியம் ஆகியோரின் பொறுப்பில் விட்டுச்சென்றேன். நிகழ்ச்சியின் பின் அமைச்சர் தொண்டமானும் அமைச்சர் ராஜதுரையும் எமக்கு விருந்தளித்தனர். அதில் எம்மிடம் எனது பாதுகாப்பிற்காக மறுநாள் அதிகாலையில் நாம் கொழும்பு திரும்ப ஆவன செய்துள்ளதாக கூறினார்கள்.

     தமிழர் கூட்டணியில் இருந்து பிரிந்தவர் அமைச்சர் ராஜதுரை. அதனால் கூட்டணியினர் அவரில் வெறுப்புற்றிருந்தனர். அவரால் நடத்தப்பட்ட பாரதி நூற்றாண்டு விழாவை எவ்வாறேனும் தூற்றவேண்டும், பாரதியின்பாரத தேசமென்று பெயர் சொல்லுவார்என்ற பாடலை நாட்டியமாக்கியபோது அணிவகுப்பில் இந்திய தேசியக்கொடியை ஏந்தியவர் முன்செல்ல, அணிவகுப்பு தொடரும். அதற்கான இந்திய தேசியக்கொடியை இந்திய தூதரகத்தில் Defence Attache-யாக இருந்தவர் மகள் என்னிடம் நடனம் கற்றுவந்தாள். அதனால் இந்திய தூதரகம் சென்று அவரிடம் இருந்து தேசியக்கொடியைப் பெற்றேன். தமிழர் கூட்டணிக்கு ஆதரவானசுதந்திரன்பத்திரிகை எனது நாட்டியத்தில் இந்திய தேசியக்கொடியை நிலத்தில் போட்டு புழுதியில் புரட்டியதாக வேண்டுமென்றே புரளிபண்ணியது. இது எனக்கு பெரும் தலைவலியாகிவிட்டது. இந்திய தேசியக்கொடியை அவமதித்தவள் என்ற அவப்பெயர் வராது தடுக்கவேண்டும்.

     இந்த அவதூறைப் போக்குவதற்காக இலங்கையில் அப்பொழுது இந்தியத் தூதுவராக பதவி வகித்த Thomas Abraham தலைமையில் மீண்டும்கவிஞன் கனவுமேடையேறியது. இதுலயனல் எவண்ட்அரங்கில் நடைபெற்றது. இந்தியத் தூதரகத்தில் இருந்து பெற்ற அதே இந்திய தேசியக்கொடியையேபாரத தேசமென்று பெயர் சொல்லுவார்என்ற பாடலில் பயன்படுத்தினேன்.

    நாம் சென்னையில் வாழ்ந்த காலத்தில் M.B.S.-இன் இசைக்குழு பாட, ‘கவிஞன் கனவு’ MADRAS MUSEUM THEATRE-இல் நடைபெற்றது. இது என் மனதில் நிறைந்த நிகழ்ச்சி.

   எனது திறமையை நன்குணர்ந்த M.B.S. சென்னை cadets-இற்கு அகில இந்தியப் போட்டிக்கான நடனம் கற்பிப்பதற்கு என்னை சிபாரிசு செய்தார். விவசாயிகள் நடனம் ஒன்றை உருவாக்கினேன். நிலத்தைக் கொத்தி பண்படுத்துவது, நெல் விதைப்பது, வளர்ந்த நெல்லை அறுவடை செய்வது, நெல்லை காற்றிலே தூற்றி முறம் (சுளகு) கொண்டு புடைத்துக் குவித்து மூட்டையாகக் கட்டிக் குவிப்பது எனcadets இளம்பெண்களும் ஆண்களுமாக ஆடினார்கள். அகில இந்தியாவுக்கும் பொதுவான ஆடலாக அமைய நாம் மொழியைப் பயன்படுத்தவில்லை. 12 இளம் cadets-இன் குரலே அத்தனைக்கும் இசை வழங்கியது. M.B.S. பாணியிலான கோரஸ் இசை. படைப்பு அற்புதமாக அமைந்தது.

    அகில இந்தியற்கான நடனப்போட்டியில் எமது ஆடல் மூன்றாம் இடத்தைப் பெற்றது. இதுவே M.B.S.  உடன் நான் இணைந்து தயாரித்த இரண்டாவது தயாரிப்பும் இறுதியுமாக அமைந்துவிட்டது. திடீரென M.B.S.  மாரடைப்பால் காலமானார்.

     M.B.S. என்ற சிறந்த இசை அமைப்பாளரை சினிமா உலகு மட்டுமல்ல இழந்தது. பாடசாலைதோறும் இசையைப் பரப்புவதால் இசை பட்டிதொட்டிதோறும் பரவும் என உழைத்த மாபெரும் உள்ளம் படைத்த கலைஞனபாடசாலை மாணவருக்குக் கோரஸ் இசை கற்பிக்கும்போதே மாரடைப்பால் காலமானார். இவர் வாழ்ந்த காலத்திலேயே இவரது சேவையைப் பாராட்டி அகில இந்திய அங்கீகாரத்தையும் பெற்றவர் M.B.S.  நாமும் எமது இனிய நண்பனை இழந்தோம்.
                                                        &&&&



     

No comments: