வாழ்வை எழுதுதல் - முருகபூபதி


உறவுகளைத்தேடவும்  இணைக்கவும்  பாதை  திறக்கும் ஊடகங்கள்
பெறுமதியானவர்களை   வாழும்பொழுதே கௌரவிக்காமல்,  மறைந்த  பின்னர்  நடத்தும்  சடங்குகள்   சுயதிருப்தியன்றி   வேறில்லை
                                                                     

தமிழ்நாட்டில்   1967  இல்  நடந்த  சட்டசபைத்தேர்தலில்  எம்.ஜீ.ஆர். படுத்துக்கொண்டே   ஜெயித்தவர்  என்று  இன்றும்  சொல்லப்படுகிறது. அக்காலப்பகுதியில்  அவர்  நடிகவேள்  எம்.ஆர்.ராதாவினால்  சுடப்பட்டு,  சிகிச்சைக்காக  மருத்துவமனையில்  இருந்தவேளையில் பறங்கிமலைத்தொகுதியில்   வெற்றியடைந்தார்.
அதற்குப்பிறகு,    பல  வருடங்களின்  பின்னர்  அவர்,  அமெரிக்காவில் சிகிச்சை   பெற்றவேளையிலும்  நடந்த  ஒரு  தேர்தலில் வெற்றிபெற்றார்.
இந்தச்சம்பவங்கள்   அண்மையில்  எனது  நினைவுக்கு வந்தமைக்குக்காரணம்,   அவுஸ்திரேலியா  சிட்னியில்  ஒரு  முதியோர் இல்லத்தில்   அமைதியாக  படுத்திருக்கும்  தகைமைசார்  பேராசிரியர் பூலோகசிங்கம்   குறித்து  எழுதப்பட்ட  பதிவுதான்.



இங்கு  எம்.ஜீ.ஆரையும்  பூலோகசிங்கத்தையும்  ஒப்பு  நோக்குவதல்ல இந்தப்பதிவு.   ஒருவர்  நோய்  உபாதையில்  படுக்கையில்  இருந்தாலும் சமூகத்தில்   முக்கியமானவராயின்  அவர்  எவ்வாறு கவனத்திற்குள்ளாகின்றார்   என்பதற்காகத்தான்  சொல்கின்றேன்.
பூலோகசிங்கம்  நீண்டநாட்களாக  அங்கு  படுக்கையில்  இருக்கிறார்.  அதே முதியோர்   இல்லத்தில்  அவர்  தங்கியிருந்த  அறையில்   மற்றுமொரு படுக்கையில்,  உறங்கிக்கொண்டிருந்த  அவருடைய  துணைவியாரும்  திடீரென்று   அவரைவிட்டு  நிரந்தரமாக  விடைபெற்றதன் பின்னர், தனிமை,  முதுமை,  இயலாமையில்  படுக்கையே  தஞ்சமாக  வாழ்ந்து  நனவிடை தோய்ந்துகொண்டிருக்கும்   பேராசிரியர்  பூலோகசிங்கம் பற்றிய   பதிவை  இலங்கையிலிருந்து  வெளியாகும்  ஞானம்  இதழில் அட்டைப்பட   அதிதி  கட்டுரைக்காக  எழுதியிருந்தேன்.



பூலோகசிங்கம்   அவர்களின்  நிலைமை   கவலைக்கிடமாக இருப்பதாக   அவுஸ்திரேலியா  வருகைதந்த  ஞானம்  ஆசிரியர்  தி. ஞானசேகரனுக்குச்சொன்னதும்   அட்டைப்பட  அதிதி  ஆக்கத்தை எழுதித்தருமாறு   கேட்டுக்கொண்டார்.
நானும்  எழுதி  ஞானம்  2016  ஜூன்  இதழில்  வெளியானது.  பின்னர் அந்த   ஆக்கம்,   ஜெர்மனியிலிருந்து  வெளியாகும்  தேனீ, கனடாவிலிருந்து    வெளியாகும்  பதிவுகள்,   தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும்    திண்ணை,    அவுஸ்திரேலியா   தமிழ் முரசு   ஆகிய இணையத்தளங்களிலும்  பலரது  முகநூல்களிலும்  பதிவேற்றம் கண்டது.
இலங்கையில்   இந்த  ஆக்கத்தை  படித்த  வவுனியாவைச்சேர்ந்த மருத்துவர்   மதுராகன்  செல்வராஜா  என்பவர்,  என்னுடன் தொடர்புகொண்டு   நீண்ட  காலமாக  தொடர்பற்றிருக்கும்  தமது உறவினர்   பேராசிரியர்  பூலோகசிங்கத்தை   நேரில்  வந்து பார்ப்பதற்கு   தயாராகியிருப்பதாக  மின்னஞ்சல்  அனுப்பியதுடன் மேலதிக    தகவலும்   கேட்டிருந்தார்.
நான்    வசிப்பது  மெல்பனில்.   பேராசிரியர்  இருப்பது  சிட்னியில். அதனால்   சிட்னியில்  வதியும்  இலக்கிய  நண்பர்  திருநந்தகுமாருடன் தொடர்புகொண்டு,  வவுனியா  மருத்துவருக்கு  தகவல்  தந்தேன்.
திருநந்தகுமார்   தாமதமின்றி  பேராசிரியரை  பார்த்துவிட்டு,  அவருடன்   ஒரு  செல்ஃபி  படமும்  எடுத்து  அனுப்பியிருந்தார்.  இது இவ்விதமிருக்க,   பேராசிரியரிடம்  முன்னர்  பல்கலைக்கழகத்தில் பயின்ற   சில  மாணவர்களும்  அந்த  ஆக்கத்தை  படித்திருக்கின்றனர்.
பேராசிரியை   சித்திரலோகா  மௌனகுரு  தொடர்புகொண்டு  தானும் அவரிடம்   கொழும்பு  பல்கலைக்கழகத்தில்  படித்ததாகவும், எல்லோரும்  தன்னை  சித்திரா  என்றுதான்  அழைப்பார்கள்.  ஆனால்,  பேராசிரியர்   பூலோகசிங்கம்  மாத்திரம்  தன்னை  சித்திரலேகா   என்று  முழுப்பெயரும்  செல்லி  அழைப்பார்  என்று குறிப்பிட்டிருந்ததுடன்  அவர்  குறித்து   அன்புடன்   விசாரிப்பதாக எழுதியிருந்தார்.
இவ்வாறெல்லாம்   அவர்  பற்றி  வெளியுலகில்  உரையாடல்கள் தொடர்ந்தபோதிலும்,   ஞானம்  இதழில்  இப்படி  ஒரு  ஆக்கம் தன்னைப்பற்றி    வந்ததே  தெரியாமல்  இருந்த  பேராசிரியருக்கு குறிப்பிட்ட   இதழை  சேர்ப்பிப்பதற்கு  நடவடிக்கை  எடுத்தேன்.
ஞானம்  ஆசிரியர்,  ஞானம்  இதழை  சிட்னியில்  வதியும் தமது   மகன்  ராஜசேகரனிடம்   தபாலில்  சேர்ப்பித்தார்.   அங்கு  வதியும்   இலக்கிய  நண்பர்  பத்திரிகையாளர்  சுந்தரதாஸை தொடர்புகொண்டு  அவ்விதழை  பேராசிரியரிடம்  சேர்ப்பிக்குமாறு சொன்னேன்.
இறுதியாக   நான்  அவருடன்  சென்றுதான்  பேராசிரியரை   அந்த முதியோர்   இல்லத்தில்  பார்த்தேன்.   அன்று  என்னைக்கண்டவுடன்  அணைத்துக்கொண்டு  குமுறிக்குமுறி  அழுததை மறக்கமுடியவில்லை.
ஒரு   காலத்தில்  இந்தச்சிங்கம்,  மேடைகளில்  சிம்ம  கர்ஜனையில் முழங்கியதையும்   மறக்கமுடியாது.    வாழ்க்கையில்  முதுமை தவிர்க்கமுடியாதது.    அதிலும்  அவ்வேளையில்  வரும்   தனிமையும் இயலாமையும்   கொடுமையானது
அளவெட்டியில்   கவிஞர்  மகாகவி  உருத்திரமூர்த்தியின்  வீட்டின் அருகே   ஒரு  குடிசையில்  தனிமையில்  வாடிய  மூத்த  எழுத்தாளர் .செ.முருகானந்தன்,   போர்   உக்கிரமாக  தொடர்ந்து  மக்களும் இடம்பெயர்ந்த    சூழ்நிலையில்  மனிதநேயம்  மிக்க சிலரால் ஒரு   வயோதிபர்  இல்லத்தில்  சேர்ப்பிக்கப்பட்டார்.
அவருடைய   பெயரில்  வாழ்ந்த  மற்றும்  ஒருவர்  இறந்ததும்,  எங்கள் எழுத்தாளர்தான்   மறைந்துவிட்டார்  என  நம்பிக்கொண்டு அனுதாபச்செய்திகள்   வெளியிட்டவர்களும்  இருக்கிறார்கள்.
ஆனால்,  வெளியில்  இத்தகைய  அமளிகள்  நடப்பது  தெரியாமலேயே இடத்துக்கிடம்   இடம்பெயர்ந்து  இறுதியில்  எங்கோ  மறைந்தார்  .செ. முருகானந்தன்.
பல   வருடங்களுக்கு  முன்னர்  வீரகேசரியில்  இலக்கியப்பலகணி பத்தியில்,     தமிழகத்தில்  வாழ்ந்த  திருகோணமலையைச் சேர்ந்த கவிஞரும்  விமர்சகருமான  தருமு  சிவராம்  பற்றி  அவருடைய படத்துடன்   ஒரு  ஆக்கம்  எழுதியிருந்தேன்.
அதனைப்படித்த   ஒருவர் - அவருடைய  உறவினர்  எனச்சொல்லிக்கொண்டு   மறுநாளே  வீரகேசரிக்கு  வந்துவிட்டார்.
உறவுகளைத்  தேடித்தருவதற்கும்  இணைப்பதற்கும்  ஊடகங்கள் இவ்வாறும்    தொடர்புகளை   ஏற்படுத்தியுள்ளன.


இலங்கையில்   இடப்பெயர்வு  வாழ்க்கையில்தான்  அத்தகைய  சோகம்    என்றில்லை.    அவுஸ்திரேலியா  போன்ற  வசதிபடைத்த புலம்பெயர்    நாடுகளிலும்  முதுமை  - தனிமை  - இயலாமை கொடுமையானதுதான்.
நண்பர்   சுந்தரதாஸ்,   ஞானம்  இதழுடன்  பேராசிரியரை பார்க்கச்சென்றார்.    ஞானம்  இதழில்  அவருடைய  படம் இருப்பதைப்பார்த்ததும்    அவருடைய  முகம்  மலர்ந்திருக்கிறது.
சிறிதுநேரம்    பக்கங்களை  புரட்டிப்பார்த்து  வாசித்துள்ளார்.
பின்னர்   என்னுடன்  தொடர்புகொண்ட  சுந்தரதாஸ்,  சில ஆண்டுகளுக்கு   முன்னர்  பார்த்தவேளையில்  அவர்  இருந்த தோற்றத்திற்கும்    தற்போதைய  நிலைக்கும்  வித்தியாசம் இருப்பதாகவும்   அவரில்  மலர்ச்சியான  மாற்றங்களை அவதானிப்பதாகவும்    சொன்னார்.
பெறுமதியான    மனிதர்கள்  வாழும்பொழுதே  உரிய  கௌரவம் பெறல்வேண்டும்.   அவர்கள்  மறைந்த  பின்னர்  மற்றவர்களினால் தரப்படும்   கௌரவங்களும்,   அஞ்சலிகளும்,   விருதுகளும்  அந்த மற்றவர்கள்   மாத்திரம்  பெற்றுக்கொள்ளும்  சுயதிருப்தி என்பதைத்தவிர  வேறில்லை.
இச்சந்தர்ப்பத்தில்   ஞானம்  ஆசிரியர்  ஞானசேகரனுக்கும், திருநந்தகுமார்   மற்றும்  சுந்தரதாஸ்  உட்பட  பேராசிரியர்  குறித்து அக்கறையோடு    தொடர்புகொண்டவர்களுக்கும்  எனது  மனமார்ந்த நன்றியைத்   தெரிவிக்கின்றேன்.
letchumananm@gmail.com


----0---

No comments: