இலங்கைச் செய்திகள்


மஹிந்த ஆட்சிக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட 1500 அரச வாகனங்கள் எங்கே.?

 தென்பகுதி  மீனவர்களுக்கு அனுமதிப்பத்திரம்  வழங்கிய  அதிகாரிகளுக்கு  கடுமையான  ஒழுக்காற்று  நடவடிக்கை 

 துருக்கி வெளிவிவகார அமைச்சர் இலங்கை வந்தார்

ஜப்பானில் குழந்தைகளை தூக்கி கொஞ்சிய மஹிந்த

இலங்கை ஏனைய  நாடுகளுக்கு முன்னுதாரணம் : துருக்கி வெளிவிவகார அமைச்சர் தெரிவிப்பு 

சோமவன்ச அமரசிங்க  காலமானார்

 மட்டக்களப்பில் தபால் ஊழியர்கள் பாரிய ஆர்ப்பாட்டம்

சோமவன்ச அமரசிங்கவின் உடல் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது

அலவி மௌலானாவின் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டது

கடுமையான நடவடிக்கை எடுங்கள் : நீதிபதி இளஞ்செழியன்

யாழ்.தெல்லிப்பழையில் தற்காலிகமாக தங்கியுள்ள குடும்பங்களை மீள் குடியேற்றுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்

கச்சதீவை யாரும் உரிமை கோர முடியாது

யோஷித்தவுக்கு நீதிமன்றம் பிணை அனுமதி

சிறப்பு விசாரணைப் பிரிவில் கம்மன்பில 

மாணவர்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டம்

மனித உரிமைகள் ஆணையாளருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்திப்பு

 இலங்கை - இந்திய உறவு பாதிக்கப்படவில்லை : கடும்போக்காளர்களே தவறாக பிரசாரம் : யாழில் ஜனாதிபதி

துரையப்பா மைதானம் பொருளாதாரத்தின் அடையாளம் : காணொளி காட்சி மூலம் மைதானத்தை திறந்து வைத்து மோடி தெரிவிப்பு
மஹிந்த ஆட்சிக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட 1500 அரச வாகனங்கள் எங்கே.?

13/06/2016 மஹிந்த ஆட்சிக்காலத்தின்போது,  பயன்படுத்தப்பட்ட 1500 அரச வாகனங்கள் காணாமல் போய்யுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநயக்க தெரிவித்தார்.
இவ்வாறு  காணாமல் போய்யுள்ள அனைத்து வாகனங்களும் அப்போதைய ஜனாதிபதி அலுவலகத்தில் பயன்படுத்தப்பட்டதாகவும், அதைப்பற்றி கூறாது அவர்கள் இன்று அரசாங்கத்தை விமர்சிப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
வாகன இறக்குமதியாளர்களுடன் இன்று  இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நிதி அமைச்சர்  மேற்கண்டவாறு தெரிவித்தார்.  நன்றி வீரகேசரி 

தென்பகுதி  மீனவர்களுக்கு அனுமதிப்பத்திரம்  வழங்கிய  அதிகாரிகளுக்கு  கடுமையான  ஒழுக்காற்று  நடவடிக்கை

14/06/2016 வடக்கில் மீன்பிடிப்பதற்கு  “தடையுத்தரவை”  மீறி  தென்பகுதி  மீனவர்களுக்கு அனுமதிப்பத்திரம்  வழங்கிய  அதிகாரிகளுக்கு எதிராக  கடுமையான  ஒழுக்காற்று  நடவடிக்கைகள்  எடுக்கப்படும் என  அமைச்சர்  மஹிந்த  அமரவீர  தெரிவித்துள்ளார்.
வட கடலில் சட்ட விரோதமாக மீன்பிடிக்கும்  எவராக  இருந்தாலும்   தராதரம் பார்க்காமல் கைதுசெய்யுமாறு கடற்படையினருக்கும், ரோந்து  பிரிவினருக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும்   அமைச்சர்  தெரிவித்தார். 
கடந்த வெள்ளிக்கிழமை  கடற்தொழில் நீரியல் வளத்துறை  அமைச்சில் அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கும்  வடமாகாண  ஆளுனர் மற்றும் வடக்கின் மீனவர் சங்க  பிரதிநிதிகளுக்கும்  இடையிலான   பேச்சுவார்த்தைகளின் போதே  அமைச்சர்  மஹிந்த  அமரவீர இந்த  உத்தரவுகளை  பிறப்பித்துள்ளார். 
தெற்கிலிருந்து சம்பிரதாயபூர்வமாக  வடக்கிற்கு சென்று  அனுமதிப்பத்திரம்  பெற்று  மீன்பிடிப்பவர்கள் அத்தோடு வடகடலில்  சட்டவிரோதமாக மீன்பிடிப்பவர்கள்,  இந்திய மீனவர்களின் அத்து மீறல்கள் போன்ற விடயங்கள் தொடர்பாக இப்பேச்சுக்களின் போது  கவனம் செலுத்தப்பட்டுள்ளது. 
இதன்போது  புதிதாக தென்பகுதி  மீனவர்களுக்கு  அனுமதிப்பத்திரம்  வழங்க  வேண்டாமென  அமைச்சர் உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில்  அதனை மீறி புதிய  அனுமதிப்பத்திரங்கள்  வழங்கியிருப்பது தொடர்பில் இப்பேச்சுக்களின் போது  அமைச்சருக்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 
இதன்போது அவ்வாறு  அனுமதிப்பத்திரங்கள் வழங்கிய  அதிகாரிகளுக்கு எதிராக  ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனத் தெரிவித்த  அமைச்சர், வடபகுதி  மக்கள் நாம் அங்கு  செல்லும் போது  மலர் மாலைகள் அணிவித்து  வரவேற்கின்றனர். நாமும் அம்மீனவர்களின்  பிரச்சினைகளை  தீர்ப்பதற்கு  உறுதிமொழிகளை வழங்குகின்றோம்.  
அவை  நிறைவேற்றப்படாத போது அம்மக்கள்   நாம் பொய்களை கூறுவதாகவே நினைப்பார்கள். 
எனவே வடபகுதி மீனவர்களின் வாழ்வாதாரம்  பாதிக்கும் விதத்தில் நடவடிக்கைகளை முன்னெடுத்த அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும். 
சம்பிரதாயபூர்வமாக  தெற்கிலிருந்து வடக்கு  சென்று மீன் பிடிக்கும் மீனவர்களை விடுத்து புதிய அனுமதிகளை வழங்குவதற்கு  இடமளிக்க முடியாது என்றும்  இப்பேச்சுக்களின் போது அமைச்சர் மஹிந்த அமரவீர உறுதியளித்தார்.     நன்றி வீரகேசரி துருக்கி வெளிவிவகார அமைச்சர் இலங்கை வந்தார்

14/06/2016 துருக்கியின் வெளிவிவகார அமைச்சரான மெவுலட் கெவுசொக்ளு தனது 2 நாள் உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று மாலை 4.30 மணிக்கு இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
11 பிரதிநிதிகளுடன்  விசேட விமானத்தின் மூலம் இலங்கையை வந்தடைந்துள்ளார்.
குறித்த விஜயத்தின் போது  ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் மற்றும் சபாநாயகர் போன்றோரை சந்தித்து கலந்துரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி 


ஜப்பானில் குழந்தைகளை தூக்கி கொஞ்சிய மஹிந்த

14/06/2016 முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ கடந்த வெள்ளியன்று ஜப்பானிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டார்.
குறித்த விஜயத்தில்  அந்நாட்டு குழந்தைகளை தூக்கி  அவர் கொஞ்சி விளையாடிய  புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகியுள்ளது.
நன்றி வீரகேசரி 
இலங்கை ஏனைய  நாடுகளுக்கு முன்னுதாரணம் : துருக்கி வெளிவிவகார அமைச்சர் தெரிவிப்பு 

15/06/2016 இலங்கையின் நல்லிணக்கம் மற்றும் புரிந்துணர்வு செயற்பாடுகள் சர்வதேச நாடுகளுக்கு முன்னுதாரணமாக விளங்குகின்றன. அந்தவகையில்  இலங்கையின் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு பங்களிப்பு வழங்க துருக்கி அரசாங்கம் எந்நேரத்திலும் தயாராக இருக்கின்றது   என  துருக்கியின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மேவ்லூட் சவுஸ்வோக்லி தெரிவித்தார்.
தேசிய அரசாங்கத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி செயற்பாடுளில் பாரிய வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.  அந்தவகையில் துருக்கி ஜனாதிபதியின் இலங்கை விஜயமானது இவ்வருடத்தில் நாட்டிற்கு முக்கிய அம்சமாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை எனவும்  அவர் நம்பிக்கை வெளியிட்டார். 
இலங்கை வந்துள்ள துருக்கி வெளிவிகார அமைச்சர் மேவ்லூட் சவுஸ்வோக்லி  இன்று வெளிவிவகார அமைச்சில்  அமைச்சர் மங்கள சமரவீரவை சந்தித்து பேச்சு நடத்தினார்.   இலங்கை மற்றும் துருக்கி நாடுகளுக்கிடையிலான வர்த்தக பரிமாற்றல் மற்றும் பரிந்துணர்வு ஒப்பந்தங்கள கையெழுத்திடும் நிகழ்வும் இடம்பெற்றது.    
இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே துருக்கியின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மேவ்லூட் சவுஸ்வோக்லி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.    நன்றி வீரகேசரி 


சோமவன்ச அமரசிங்க  காலமானார்

15/06/2016 மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்க தனது 73 ஆவது வயதில் காலமானார்.
ராஜகிரியவில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில்  காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது.


நன்றி வீரகேசரி 
மட்டக்களப்பில் தபால் ஊழியர்கள் பாரிய ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு பிரதம தபால் நிலைய ஊழியர்கள் மற்றும் தபால் பயிற்சி நிலைய ஊழியர்கள் இன்று பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மட்டக்களப்பு பிரதம தபால் நிலைய நுழைவாயிலின் முன்னால் இடம்பெற்ற ஆர்பாட்டம் காரணமாக தபால் நிலைய அன்றாட பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.
மேலதிக கொடுப்பனவுகைளை வழங்குமாறும் அரச ஊழியர்களுக்கான மோட்டார் சைக்கிள்களை வழங்குமாறும் மேலும் பல கோரிக்கைகளை முன்வைத்தும் இப்போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தபால் ஊழியர்கள் சங்கம் இப்போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தபால் நிலைய  அதிகாரிகள் ஊழியர்கள் சிற்றூழியர்கள் உட்ப பலர் இப்பேராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி 

சோமவன்ச அமரசிங்கவின் உடல் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது

16/06/2016 மறைந்த முன்னாள் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் சோமவன்ச அமரசிங்கவின் உடலை அவரது உறவினர்களிடம் கையளிக்க வேண்டுமென கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
வெலிக்கடை பொலிஸாருக்கு குறித்த உத்தரவினை நீதவான் பிறப்பித்துள்ளார்.
இவரது இறுதிக்கிரியைகளை மேற்கொள்வதற்கு மக்கள் விடுதலை முன்னணி, முன்னிலை சோஷலிஸ கட்சி மற்றும் தேசிய சுதந்திர முன்னணி ஆகிய கட்சிகள் ஆர்வம் செலுத்தி வருகின்றன.
இதேவேளை சோமவன்ச அமரசிங்கவின் உடலுக்கு அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்லி செலுத்தி வருகின்றனர்.
நன்றி வீரகேசரி 


அலவி மௌலானாவின் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டது

16/06/2016 முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானாவின் ஜனாஸா இன்று (16) நல்லடக்கம் செய்யப்பட்டது.
இவரது ஜனாஸா இன்று மாலை 3.30 மணியளவில் தெஹிவளை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அலவி மௌலானா 2002 ஆண்டு தொடக்கம் 2015 ஆண்டுவரை மேல்மாகாண ஆளுநராக பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை அலவி மௌலானாவின் ஜனாஸாவிற்கு பல அரசியல் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.
நன்றி வீரகேசரி 


கடுமையான நடவடிக்கை எடுங்கள் : நீதிபதி இளஞ்செழியன்

16/06/2016 யாழ்ப்பாணத்தில் குற்றச் செயல்கள் ஒழிந்து அமைதி நிலவுகின்ற இக்காலப்பகுதியில் அமைதியை சீர்குலைப்பதற்கு சில சக்திகள் முயற்சி செய்கின்றன. இவ்வாறு செயற்படுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதிதாக கடமையேற்றுள்ள சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் கோரிக்கை விடுத்தார்.
யாழ். மாவட்டத்திற்கான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக கடமையேற்றுள்ள கஸ்ரன் ஸ்ரனிஸ்லஸ்,  நீதிபதி முன்னிலையில் ஆஜராகிய போதே நீதிபதி இளஞ்செழியன் மேற்படி கோரிக்கையை விடுத்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த நீதிபதி,
யாழ்ப்பாணத்தில் கடந்த மாதங்களாக குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளன. குற்றச் செயல்களை கட்டுப்படுத்தக் கோரி பலத்தரப்பினரும் வலிறுயுறுத்தி வருகின்றனர்.
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் கடத்தல்கள் மிக நுட்பமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் வடக்கு கடற்பரப்பில் உள்ள படகுகள் சோதனைக்குட்படுத்தப்பட வேண்டும்.
 குறிப்பாக யாழில் தற்போது வாள்வெட்டு சம்பவங்கள் குறைவடைந்துள்ளன. குழு மோதல்கள் குறைவடைந்துள்ளன.
எனினும் தற்போது சில சக்திகள் அமைதியை சீர்குலைக்கும் வகையில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றன. இதனை ஆரம்பத்திலேயே இனங்கண்டு இல்லாதொழிக்க வேண்டும்.    நன்றி வீரகேசரி 


யாழ்.தெல்லிப்பழையில் தற்காலிகமாக தங்கியுள்ள குடும்பங்களை மீள் குடியேற்றுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்

16/06/2016 காங்கேசன்துறை சீமெந்து கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமாக 65 ஹெக்டேயர் காணியை சுவீகரித்து யாழ். தெல்லிப்பழை பிரதேசத்தில் தற்காலிகமாக தங்கியுள்ள 400 இடம்பெயர்ந்த குடும்பங்களை உடனடியாக மீள் குடியேற்றுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான கயந்த கருணாதிலக்க தெரிவித்தார். 
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 
அவர் மேலும் குறிப்பிடுகையில் 
வடக்கு கிழக்கு மாகாணங்களில் 2016 மார்ச் இறுதிவரையில் 251,000 இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர். எனினும், வடக்கு கிழக்கு மாகாணங்களில் இன்னமும் 14,000 குடும்பங்கள் மீள்குடியேற்றப்படவுள்ளன . 
இக்குடும்பங்களில் 11,000 குடும்பங்கள் யாழ்ப்பாண மாவட்டத்திலேயே இருக்கின்றன. தற்போது யாழ் மாவட்டத்தில் 1,109 குடும்பங்கள் தெல்லிப்பழை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள 31 நலன்புரி நிலையங்களில் வாழ்கின்றன . 
இந்த 1,109 குடும்பங்களில் 641 குடும்பங்கள் காணியற்ற குடும்பங்களாக அறிக்கையிடப்பட்டுள்ளன. நலன்புரி நிலையங்களினூடாக இடம்பெயர்ந்த குடும்பங்களை மீள்குடியேற்றுதல் தொடர்பாக யாழ்ப்பாணம் காங்கேசன்துறை சீமெந்து கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமாக 65 ஹெக்டேயர் காணி அடையாளம் காணப்பட்டுள்ளது. 
குறித்த இடத்தில் யாழ். தெல்லிப்பழை பிரதேசத்தில் உள்ள 400 இடம்பெயர்ந்த குடும்பங்களை உடனடியாக மீள் குடியேற்ற முடியும். எனவே குறித்த காணியினை விடுவித்து அதனை அரச உடைமையாக்கி உடனடியாக பகிர்ந்தளிப்பதற்கு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு மீள்குடியேற்றம் மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 
பாலாவி விமான நிலையம் அபிவிருத்தி சுற்றுலா விடுதியாக தோற்றம் பெற்றுள்ள கல்பிட்டிய பிரதேசத்தில் சுற்றுலா தொழில்முயற்சி மேம்பாட்டிற்காக பாலாவி விமானநிலையம் பாரிய பங்களிப்பை ஆற்றி வருகின்றது. எனினும் அதன் தொழிற்பாடுகள் தற்போது முடக்கப்பட்டுள்ளன. எனவே குறித்த விமான நிலையத்தின் அபிவிருத்திக்காக திறைசேரியினால் 750 ரூபா நிதியினை பெற்று 26 ஹெக்டேயர் தனியார் காணியொன்று விமானநிலைய அபிவிருத்திக்காக மேலதிகமாகவும் பெறப்படவுள்ளது. இது தொடரபில் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா வினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.   நன்றி வீரகேசரி 


கச்சதீவை யாரும் உரிமை கோர முடியாது

16/06/2016 கச்சதீவை மீண்டும்  இலங்கையிடமிருந்து யாரும் உரிமை கோர முடியாது.  கச்சதீவு என்பது  இரண்டு நாடுகளுக்கு இடையில்  தீர்க்கப்பட்ட விவகாரமாகும்.  அதனை மீண்டும்  கிளற முடியாது.  இந்திய உச்சநீதிமன்றம் அது தொடர்பில் தெளிவான தீர்ப்பை  அளித்துள்ளது. அந்தவகையில் யாரும் கச்சத்தீவை கேட் க முடியாது  என்று  அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித்த சேனாரட்ன தெரிவித்தார். 
கச்சதீவை இந்தியா மீளப்பெற வேண்டும் என்று    தமிழக முதல்வர் ஜெயலலிதா    நீண்டகாலமாக  கோரிவருகின்றார். ஆனால் அது முடியாத காரியம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.  
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே   அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 
கச்சதீவை இலங்கையிடமிருந்து மீண்டும்  பெற்றுக்கொள்ள இந்திய மத்திய அரசாங்கம்  நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா  இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் இது தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்னவென்றும் கேள்வி எழுப்பப்பட்டது.  
அமைச்சர் தொடர்ந்து பதிலளிக்கையில் 
பதில் கச்சதீவை இந்தியா மீளப்பெற வேண்டும் என்று    தமிழக முதல்வர் ஜெயலலிதா    நீண்டகாலமாக  கோரிவருகின்றார்.  அது முடிந்துபோன விடயமாகும்.  அதனை மீண்டும்  இலங்கையிடமிருந்து யாரும் உரிமை கோர முடியாது.  கச்சதீவு என்பது  இரண்டு நாடுகளுக்கு இடையில்  தீர்க்கப்பட்ட விடயமாகும். அதனை மீண்டும்  கிளற முடியாது.  இந்திய உச்சநீதிமன்றம் அது தொடர்பில் தெ ளிவான தீர்ப்பை  அளித்துள்ளது. அந்தவகையில் யாரும் கச்சத்தீவை கேட் க முடியாது. இது மீண்டும் கிளறப்பட முடியாத வகையில் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட ஒருவிடயமாகும் என்றார். 
நேற்று முன்தினம் டில்லியில் பிரதமர் மோடியை சந்தித்திருந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா  கச்சதீவை இலங்கையிடமிருந்து மீண்டும்  பெற்றுக்கொள்ள இந்திய மத்திய அரசாங்கம்  நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கை உள்ளிட்ட பல்வேறு  கோரிக்கைகளை  முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி யோஷித்தவுக்கு நீதிமன்றம் பிணை அனுமதி

முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவின் மகன்  யோஷித ராஜபக்ஷவுக்கு கல்கிசை நீதிமன்றம் பிணை அனுமதிவழங்கியுள்ளது.
தெஹிவளை, மிஹிந்து மாவத்தையில் வீடு அமைப்பு  தொடர்வபான வழக்கு இன்று கல்கிசை  நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டபோதே பிணை அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.    நன்றி வீரகேசரி சிறப்பு விசாரணைப் பிரிவில் கம்மன்பில 

16/06/2016 பிவிதுறு ஹெலோ உறுமயவின் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில சிறப்பு விசாரணை பிரிவில் இன்று (16) ஆஜரானர்.
இன்று காலை 9 மணியளவில் உதய கம்மன்பில சிறப்பு விசாரணைப்பிரிவிற்கு பிரசன்னமாகியிருந்தார்.
அவுஸ்திரேலியாவில் உள்ள தனியார் நிறுவனமொன்றுக்கு சட்டவிரோதமாக பங்குகளை விற்பனை செய்தார் என்ற குற்றம் தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காகவே அவர் அழைக்கப்பட்டுள்ளார்.
நேற்று (15) சிறப்பு விசாரணைப் பிரிவிற்கு வாக்குமூலமளிப்பதற்கு உதய கம்மன்பில அழைக்கப்பட்டிருந்த போதிலும் சுகயீனம் காரணமாக அவர் சமுகமளித்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி மாணவர்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டம்

16/06/2016 மட்டக்களப்பு, கல்குடாக் கல்வி வலயத்துக்கு உட்பட்ட கதிரவெளி விக்னேஸ்வரா கனிஷ்ட வித்தியாலயத்திலிருந்து இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் அல்லது அவர்களுக்கு பதிலீடாக ஆசிரியர்களை இவ்வித்தியாலயத்தில் நியமிக்க வேண்டும் என்று கோரி அவ்வித்தியாலய மாணவர்களும் பெற்றோரும் இன்று   காலை வீதியில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மட்டக்களப்பு -திருகோணமலை பிரதான நெடுஞ்சாலையை வழிமறித்து இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதால், சிறிது நேரம் இந்நெடுஞ்சாலை ஊடான போக்குவரத்து தடைப்பட்டிருந்தது. 
குறித்த பாடசாலையில் கற்கின்ற 425 மாணவர்களுக்கு ஒன்பது ஆசிரியர்களே கற்பித்து வந்தனர்.
இந்நிலையில், இந்த ஆசிரியர்களில் இரண்டு பேருக்கு மட்டக்களப்பு நகரப் பாடசாலைக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாகவும் இவ்வாறு இடமாற்றம் வழங்கப்பட்டவர்களை மீண்டும் தமது வித்தியாலயத்துக்கு திருப்பித்தர வேண்டும்.
அல்லாவிடின், இவர்களுக்குப் பதிலீடாக ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களும் பெற்றோரும்; தெரிவித்தனர். 
இந்நிலையில், ஆர்ப்பாட்ட இடத்துக்கு வருகைதந்த வாகரைக் கோட்டக் கல்வி அதிகாரி எஸ்.பரமேஸ்வரனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனும் மாணவர்களுடனும் பெற்றோருடனும் கலந்துரையாடினார்.
இதன்போது, இடமாற்றப்பட்ட  ஆசிரியர்களுக்குப் பதிலீடாக இரு ஆசிரியர்களை அடுத்த இரு வாரங்களுக்குள் வழங்குவதாக இவர்கள் உறுதியளித்தனர். 
இதனையடுத்து, ஆர்ப்பாட்டத்தில்; ஈடுபட்ட மாணவர்களும் பெற்றோரும் ஆர்ப்பாட்டத்தைக் கைவிட்டுச் சென்றனர்.  நன்றி வீரகேசரி 
மனித உரிமைகள் ஆணையாளருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்திப்பு

16/06/2016 ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹுசைனுக்கும் பிரதான எதிர்கட்சியான தமிழ்த்  தேசியக் கூட்டமைப்பிற்குமிடையிலான முக்கிய சந்திப்பொன்று இன்றைய தினம் ஜெனீவாவில் நடைபெற்றுள்ளது.
இந்தச் சந்திப்பின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் பங்கேற்றார். 
இச்சந்திப்பின் போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 31ஆவது கூட்டத்தொடரில் இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், மனிதாபிமானச் சட்ட மீறல்கள்  குறித்து அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட தீர்மானம் இலங்கை அரசாங்கம் உட்பட நான்கு நாடுகள் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்டடிருந்தது. 
இத்தீர்மானத்தின் பிரகாரம் அரசாங்கம் தனது பொறுப்புக்கூறும் கடப்பாட்டிற்கமைவாகவும் ஐ.நா உட்பட சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதிக்கமைவாகவும் ஏற்படுத்தப்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து மேற்படி சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டிருந்ததாக தெரியவருகின்றது.  நன்றி வீரகேசரி 
இலங்கை - இந்திய உறவு பாதிக்கப்படவில்லை : கடும்போக்காளர்களே தவறாக பிரசாரம் : யாழில் ஜனாதிபதி

18/06/2016 இலங்கை இந்திய உறவில் எவ்விதமான பாதிப்புக்களும் இல்லை. இந்திய இலங்கை மேம்பாட்டிற்காக கூட்டிணைந்து தேசிய, சர்வதேச ரீதியில் பல நடவடிக்கைகள் தொடரப்படவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
சில கடும்போக்காளர்களே இலங்கை இந்திய உறவை தவாறான பிரசாரம் செய்வதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சுட்டிக்காட்டினார். 
இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியில் புனரமைக்கப்பட்ட யாழ்.அல்பிரட் துரையப்பா விளையாட்டு மைதானத்தை இன்று சனிக்கிழமை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து திறந்து வைத்த பின்னர் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், 

இந்திய இலங்கை நட்புறவானது நீண்டகாலமாக இருந்து வருகின்றது. இலங்கை இந்திய நட்புறவில் முக்கிய தருணம் இதுவாகும். இந்த நாளின் முக்கியத்துவத்தை போன்றே நாளை தினம் நடைபெறும் பொசன் பண்டிகையானது பௌத்த மக்களுக்கு முக்கியமானதாகின்றது. பௌத்த மதம் இந்தியாவிலிருந்தே இலங்கைக்கு வந்திருந்தது. 
நீண்டகாலமாக இந்தியாவினுடைய நட்புறவின் காரணத்தால் பல்வேறு உதவிகள் கிடைத்து வருகின்றன. நீண்டகாலமாக யுத்தம் நீடித்த நிலையில் அந்த யுத்தம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டு சமாதனம் சூழல் ஏற்படுத்தப்பட்ட நிலையில் பல்வேறு அபிவிருத்திகளுக்காக இந்திய அரசாங்கம் தொடர்ச்சியான உதவிகளை வழங்கி வருகின்றது. 
இந்திய நட்புறவின் காரணமாக எமது பொருளாதாரம் உட்பட பல்வேறு துறைகளில் எமது மேம்பாடுகள் தொடர்ந்த வண்ணமுள்ளன. இரு நாடுகளின் மேம்பாட்டிற்காக தேசிய ரீதியிலும், சர்வதேச ரீதியில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதோடு எதிர்காலத்திலும் அதனை தொடரவுள்ளோம். 
இலங்கை இந்திய உறவை சில கடும்போக்காளர்கள் தவறாக பிரசாரம் செய்கின்றனர். இரு நாடுகளுக்கிடையிலான உறவில் எவ்விதமான பதிப்புக்களும் இல்லை. அவர்கள் பல்வேறு கருத்துக்களை முன்வைத்தாலும் கூட நாம் இரு நாடுகளுக்கும் நன்மை பயக்கும் வகையிலேயே செயற்பாடுகள் தொடரப்படவுள்ளன.    நன்றி வீரகேசரி துரையப்பா மைதானம் பொருளாதாரத்தின் அடையாளம் : காணொளி காட்சி மூலம் மைதானத்தை திறந்து வைத்து மோடி தெரிவிப்பு

18/06/2016 யாழ். துரையப்பா மைதானம் வெறும் செங்கல் மற்றும் மணலால் கட்டப்பட்டதல்ல. இது இருநாட்டினதும் ஒருங்கிணைப்பு உத்வேகம் மற்றும் பொருளாதார வளர்ச்சியின் அடையாளமாகும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியா சார்பில் 15 கோடி ரூபா செலவில் யாழ்ப்பாணத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ள விளையாட்டு அரங்கத்தை டெல்லியில் இருந்த படியே பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் இன்று காலை 10 மணியளவில் திறந்து வைத்து உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
காணொளி காட்சி மூலம் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த வருடம் இலங்கை சென்ற போது யாழ்ப்பாண மக்கள் என்னை அன்போடு வரவேற்றமை மறக்க முடியாத சம்பவமாகும். இலங்கை மக்களுடன் ஒன்றிணைந்த செயற்படுவதனால் இந்நாள் எனக்கு மறக்க முடியாத அனுபவத்தை தருகின்றது.
இந்த நிகழ்வானது இலங்கை மற்றும் இந்தியாவிற்கான உறவை பலப்படுத்தும். ஐ.நாவின் யோகா தினத்திற்கு இலங்கைதான் முதலில் ஆதரவளித்தது. 
நாம் இலங்கையின் அனைத்து அபிவிருத்தி நடவடிக்கைகளுடனும் இணைந்து செயற்பட தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

நன்றி வீரகேசரி