.
அப்பாவின் தோழேறி
அவர்மார்பில் உதைத்துநிதம்
துப்பிநாம் நின்றாலும்
சுகமுடனே அதையேற்பார்
நித்திரையில் எமையணைத்து
நீங்காமல் அவர்படுப்பார்
நினைத்துநாம் பார்த்துவிடின்
நெக்குருகி நிற்போமே !
தோழேறி நின்றநாம்
தோழளவு வளர்ந்தபின்பும்
தன்தோழில் எமைத்தாங்கும்
தருமசீலர் அப்பாவே
எம்குறையைத் தம்குறையாய்
ஏற்றுநின்று காக்குமவர்
என்றுமெங்கள் நெஞ்சினிலே
இறைவனென இருக்கின்றார் !
புழுதிதனில் புரண்டாலும்
புன்முறுவல் காட்டிடுவார்
அழுதுநாம் பார்த்துவிடின்
அவருருகிப் போய்விடுவார்
தெருவதனில் சண்டைசெய்தால்
திருந்துதற்கு வழிகாண்பார்
ஒருபொழுதும் சினங்காட்டா
உத்தமராம் எங்களப்பா !
அப்பாவின் கைபட்டால்
அனைத்துமே துலங்கிவிடும்
அவர்கையைப் பற்றியதால்
அகமகிழ வாழுகின்றோம்
அளவறிந்து வாழுவென்று
அவருரைத்து நின்றதனால்
அமைதியுடன் வாழுகிறோம்
அப்பாவை அகத்திருத்தி !
அன்புதந்த அப்பாவை
அறமுரைத்த அப்பாவை
அறிவுடையார் அருகணைய
அழைத்துச்சென்ற அப்பாவை
ஆருமற்ற அனாதையென
அகமதிலே விட்டுவிடின்
ஆண்டவனே எமைப்பாரார்
அடைந்திடுவோம் நரகமதை !
உலகமெலாம் அப்பாவை
உயர்த்திநிற்கும் தினமாக
உவகையுடன் கொண்டாடி
ஊர்வலமும் செய்திடுவோம்
நித்தமே எமைநினைத்து
அத்தனையும் ஈந்தளித்த
சொத்தான அப்பாவை
சுமையென்றல் முறையாமோ
எத்தனையே இடர்தாங்கி
எமைஉயர்த்தி விட்டவரை
இல்லத்தில் நாம்வைத்துப்
என்றுமே வணங்கிநிற்போம் !