ஆகாஷ்வாணி: இந்திய வானின் அசரீரி!

.
இன்று உலகின் மிக முக்கிய ஊடகமாகச் செயல்பட்டுவருகிறது அகில இந்திய வானொலி


லையனல் பீல்டன் சென்னை வானொலி நிலையத்துக்கு வந்தபோது எடுத்தபடம். அருகில் அன்றைய நிலைய இயக்குநர் விக்டர் பரஞ்சோதி| படம். ‘தி இந்து' ஆவணக்காப்பகம்

‘ஆகாஷ்வாணி! செய்திகள் வாசிப்பது…’ என்று கனத்த மெளனத்தை உடைத்துக்கொண்டு ஒலிக்கும் குரலுடன் தொடங்கும் வானொலிச் செய்திகளைக் கேட்டு வளர்ந்தவர்களுக்கு, ஒலியுலகின் பொற்காலமான ‘அகில இந்திய வானொலி’யின் நாட்கள் என்றென்றும் நினைவில் இருக்கும். இன்றைக்கு, 418 நிலையங்களைக் கொண்டு உலகின் மிக முக்கிய ஊடகமாக செயல்பட்டுவருகிறது அகில இந்திய வானொலி. உலகின் மிகப் பெரிய பல்வேறு மொழி ஒலிபரப்புகளைக் கொண்ட ஒரே வானொலி எனும் தனித்த பெருமையும் உண்டு.
இந்தியாவில் வானொலி சேவை 1923-லேயே தொடங்கப்பட்டது. எனினும், ‘அகில இந்திய வானொலி’ என்ற பெயர் வைக்கப்பட்டது 1936 ஜூன் 8-ல்தான். அந்தப் பெயரை வைத்தவர் அகில இந்திய வானொலியின் முதல் இயக்குநரான லையனல் பீல்டன். அதன்படி, அகில இந்திய வானொலி தொடங்கப்பட்டதன் 80-ம் ஆண்டு இது. அதற்கு முன்னர் ‘இந்தியன் ஸ்டேட் ப்ராட்காஸ்டிங் சர்வீஸ்’ என்றே அது அழைக்கப்பட்டது. அகில இந்திய வானொலியின் லச்சினையை உருவாக்கியதும் லையனல் பீல்டன்தான். அப்போதைய வைஸ்ராய் கொடுத்த 2,50,000 ரூபாயை வைத்துக்கொண்டு, தனது முழு உழைப்பையும் பயன்படுத்தி, அகில இந்திய வானொலியை வளர்த்தெடுத்தவர் அவர்.
ஹிட்லரும் செய்திகளும்
இரண்டாம் உலகப் போர் தொடங்கிய பின்னர், வானொலியின் முக்கியத்துவத்தைப் பலரும் புரிந்துகொண்டனர். ஹிட்லர் தன்னுடைய பரப்புரைக்கு வானொலியைத் திறமையாகப் பயன்படுத்தியதன் விளைவாக உலக நாடுகளின் கவனம் வானொலியின் பக்கம் குவிந்தது. குறிப்பாக, சிற்றலை வானொலிகளின் பணி அளப்பரியது.
உலக அளவில் ஏற்பட்ட இந்தப் போக்குகள் அகில இந்திய வானொலியிலும் தாக்கம் செலுத்தின. உள்நாட்டு மொழிகள் தவிர, வெளிநாட்டு மொழிகளிலும் ஒலிபரப்பியாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. செய்தி அறிக்கை முதலில் ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்டு, பின்னர் இந்திய மற்றும் வெளிநாட்டு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு ஒலிபரப்பப்பட்டது. இன்றும் அதே நடைமுறைதான் தொடர்கிறது. பீல்டன் செய்தி அறிக்கைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தார். முதல் செய்தி ஆசிரியராகப் பணியாற்றிய சார்லஸ் பார்ன்ஸ் அவரது கனவுகளைப் பூர்த்திசெய்தார்.


1936 முதல் செய்திச் சுருக்கம் ஒலிபரப்பானது. தேசிய மற்றும் வெளிநாட்டு சேவைக்குத் தேவை ஏற்பட்டது. அதற்காக, சக்திவாய்ந்த ஒலிபரப்பிகள் அமைக்கப்பட்டன. நாள் ஒன்றுக்கு 27 செய்தி அறிக்கைகள் அன்றைய காலகட்டத்தில் ஒலிபரப்பப்பட்டன.
1962, 1965 மற்றும் 1971 ஆகிய காலகட்டங்களில் நடைபெற்ற போர்கள், இந்தியா முழுவதும் உள்ள நேயர்களை ஒரே குடையின் கீழ் கொண்டுவந்தன. கள நிலவரங்களை நாட்டின் மூலைமுடுக்குகளுக்குக் கொண்டுசென்ற ஒரே ஊடகமாக வானொலி மட்டுமே அப்போது இருந்தது. அந்தச் சமயத்தில் அகில இந்திய வானொலியைக் கேட்கும் நேயர்கள் கணிசமாக உயர்ந்தனர்.
காந்தியின் குரல்
மகாத்மா காந்தி அகில இந்திய வானொலிக்கு ஒரு முறைதான் வந்துள்ளார். அதன் பின்னணி சோகமானது. தேசப் பிரிவினையின்போது இரு தரப்பிலும் நிகழ்ந்த கலவரங்கள் காந்தியைக் கலங்கச் செய்துவிட்டன. கலவரங்களை அடக்க காந்திக்குக் கிடைத்த வழிகளில் ஒன்றுதான் வானொலி உரை. 1947 நவம்பர் 12-ல் நாட்டு மக்களுடன் காந்தி முதலும் கடைசியுமாக உரையாற்றினார். எனினும், வெவ்வேறு நிகழ்ச்சிகளில் அவர் ஆற்றிய உரைகளை அகில இந்திய வானொலி ஒலிபரப்பிவருவது குறிப்பிடத் தக்கது.
அந்தச் சூழ்நிலையில்தான் வானொலியின் முக்கியத்துவத்தை அறிந்து ஆறு நிலையங்களை 25 நிலையங்களாக உயர்த்தியது அரசு. அடுத்த 25 வருடங்களில் அகில இந்திய வானொலி 86 நிலையங்களைத் தொடங்கி சாதனை படைத்தது. இன்றைக்கு அகில இந்திய வானொலி 91 பேச்சு வழக்கு மொழிகளில் ஒலிபரப்பிவருகிறது. இது உலகின் எந்த நாட்டின் பொதுத்துறை வானொலியும் செய்யாத ஒரு சாதனை.
திரையிசைக்குத் ‘தடா’
நேருவின் அமைச்சரவையில் ஒலிபரப்புத் துறை அமைச்சராக இருந்த பி.வி.கேஸ்கர் பாரம்பரிய இசையை மட்டுமே வானொலியில் ஒலிபரப்ப வேண்டும் என்று கறார் காட்டினார். திரையிசைக்கு வாய்ப்பே தரப்படவில்லை. அந்தக் காலகட்டத்தில் திரையிசையை மட்டுமே வைத்து ரசிகர்களைத் தன் பக்கம் ஈர்த்திருந்தது இலங்கை வானொலி. எனவே, நேயர்கள் அகில இந்திய வானொலியில் செய்திகளை மட்டும் கேட்டுவிட்டு, இலங்கை வானொலியின் பக்கம் சென்றுவிடுவது வழக்கமாக இருந்தது. சுதாரித்துக்கொண்ட அகில இந்திய வானொலி, திரையிசைக்கு உரிய முக்கியத்துவம் தரத் தொடங்கியது.
1957-ல் திரை இசையை மையப்படுத்தி விளம்பரதாரர்களைக் கவர்வதற்காக அகில இந்திய வானொலியால் தொடங்கப்பட்டதுதான் ‘விவிதபாரதி’. அதில் ஒலிபரப்பான ‘ஹவா மகால்’, ‘சைய கீத்’, ‘சங்கீத் சரிதா’, ‘சர்கம்’ மற்றும் ‘பர்மைஸ் கீத்’ போன்ற நிகழ்ச்சிகள் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவை.
அப்போதெல்லாம், இன்று போல் நினைத்த மாத்திரத்தில் வேறு ஒரு ஊடகத்தை நேயர்கள் மாற்றிக்கொள்ள முடியாது. எனினும், பலரது வீடுகளில் சிற்றலை வானொலிப் பெட்டி இருந்ததால், பெரும்பாலானோர், அகில இந்திய வானொலிகளின் செய்திகளை வெளிநாட்டு வானொலிகளின் செய்திகளோடு ஒப்பிட்டுப் பார்த்துக்கொண்டனர். இதனால், செய்தி அறிக்கைகள் தயாரிப்பு, அவற்றை வாசிப்பவர்களின் உச்சரிப்பு ஆகியவற்றில் பெரும் சவால்கள் எழுந்தன. எனினும், இதுபோன்ற சவால்கள்தான் அகில இந்திய வானொலியின் வளர்ச்சிக்கு உரமாக அமைந்தன.
மறக்க முடியாத குரல்கள்
வானொலி அறிவிப்பாளர்களான சச்தேவ் சிங் மற்றும் மெல்வில் டி மெல்லோ ஆகியோரின் கம்பீரக் குரல்கள் மறக்க முடியாதவை. சுதந்திர தினம் மற்றும் குடியரசுத் தினங்களில் அவர்கள் தந்த நேரடி வர்ணனை பெரும் வரவேற்பைப் பெற்றது. விளையாட்டு வர்ணனையாளர்களான பியர்சன் சுரிதா, சுரேஷ் சரய்யா, ஏ.எஃப்.எஸ். தல்யார்கான், ரவி சதுர்வேதி, ஆனந்த் ராவ் மற்றும் பெர்ரி சர்வாதிகாரி ஆகியோரின் நேரடி வர்ணனைகள் நேயர்களை அந்தந்த விளையாட்டு அரங்கங்களுக்கே கொண்டுசென்றன எனலாம். சுராஜித் சென், லோதிகா ரத்னம், தேவகி நந்தன் பாண்டே, மற்றும் வினோத் காஷ்யப், தமிழ் செய்தி வாசிப்பாளர்களான சாம்பசிவம், ராமமூர்த்தி, பூர்ணம் விஸ்வநாதன் சரோஜ் நாராயண் சாமி, விஜயம் ராஜாராம் என்று தங்களது பங்களிப்புகளால் அகில இந்திய வானொலிக்குப் பெருமை சேர்த்தவர்களின் பட்டியல் மிக நீண்டது!
இன்று தனியார் பண்பலை வானொலிகள் பல வந்துவிட்டாலும் அகில இந்திய வானொலியின் சேவைகள் என்றும் தனித்து நிற்கின்றன. மணிப்பூர் மாநிலத்தில் அகில இந்திய வானொலி செய்துவரும் சேவை ஓர் உதாரணம். இன்றும் அந்தப் பகுதிகளில் வாழும் 30 லட்சம் மக்களுக்காக 30 வெவ்வேறு பேச்சுவழக்கு மொழிகளில் தனது சேவையைச் செய்துவருகிறது.
சரி, ‘ஆகாஷ்வாணி’ என்ற பெயர் எப்போது வைக்கப்பட்டது? 1938-ல் ரவீந்திரநாத் தாகூர் அகில இந்திய வானொலிக்கு அந்தப் பெயரை வைத்தார். அதற்கு முன்னதாகவே அதே பெயரில் மைசூர் மகாராஜா ஒரு தனியார் வானொலியை நடத்திவந்தார். ஆனால், தாகூரின் வழியாக இந்தியா முழுவதும் சென்றடைந்த ஆகாஷ்வாணி எனும் பெயர் தேசத்தின் பெருமைகளுள் ஒன்றாக உயர்ந்ததுதான் வரலாறு!
- தங்க.ஜெய்சக்திவேல், உதவிப் பேராசிரியர், இதழியல் மற்றும் தொடர்பியல் துறை, சென்னைப் பல்கலைக்கழகம், தொடர்புக்கு: ardicdxclub@yahoo.co.in
Nantri http://tamil.thehindu.com/