தமிழ் சினிமா சில காலங்களாகவே பெண்களுக்கு மரியாதை தரும் படங்களை கொடுத்து வருகின்றது. இறைவியை தொடர்ந்து பெண்கள் வாழ்க்கையை மையப்படுத்தி இன்று உலகம் முழுவதும் வெளிவந்துள்ள படம் தான் ஒரு நாள் கூத்து.
அட்டகத்தி தினேஷ், மியா ஜார்ஜ், நிவேதா, ரித்விகா, கருணாகரன், ரமேஷ் திலக் என பல நட்சத்திரங்கள் நடிப்பில் அறிமுக இயக்குனர்நெல்சன் இயக்கியுள்ள படம் தான் ஒரு நாள் கூத்து.
கதைக்களம்
படத்தின் ஆரம்பத்திலேயே ஒரு பரபரப்பான விபத்துடன் தொடங்குகிறது. யாருக்கு விபத்து என தெரிவதற்குள் ப்ளாஷ்பேக் ஆரம்பிக்கின்றது. அட்டகத்தி தினேஷ் மற்றும் நிவேதா ஐடியில் பணிபுரிந்து ஒருவரை ஒருவர் காதலிக்கின்றனர்.
அவ்வப்போது செல்லமாக சண்டை, ஈகோ மோதல் பின் சந்தோஷம் என ஜாலியாக செல்கிறது இவர்கள் காதல். ஆனால், திருமண பேச்சு எடுத்தால் தினேஷ் தன் குடும்ப சூழ்நிலை கூறி பின் வாங்குகிறார்.
அதேபோல் படித்துவிட்டு பல வருடமாக திருமணமே ஆகாமல் இருக்கும் மியா ஜார்ஜ், இந்த வருடமாவது திருமணம் ஆகிவிடுமா என்ற ஏக்கத்தில் வாழ்கிறார்.
RJ வாக ரித்விகாவும் கிட்டத்தட்ட மியா ஜார்ஜ் போல் திருமணத்திற்கு ஏங்கும் கதாபாத்திரம். இந்த மூன்று கதாபாத்திரங்களின் விருப்பமும் நிறைவேறியதா என்பதை இயக்குனர் கொஞ்சம் ஜாலியாகவும், கொஞ்சம் எமோஷ்னலாகவும் கூறியிருப்பதே ஒரு நாள் கூத்து.
படத்தை பற்றிய அல்சல்
என்ன தமிழ் சினிமா திருந்திவிட்டதா, பெண்களை பற்றி பேசும் படங்கள் தொடர்ந்து வருகிறதே, இதற்காகவே நெல்சன் அவர்களுக்கு பூச்செண்டு கொடுத்து வரவேற்கலாம். அட்டக்கத்தி தினேஷ்-நிவேதா காதல், இன்றைய ட்ரண்ட் ஐடி காதலை அழகாக காட்டியுள்ளார். நிவேதா, தினேஷை விடவும் முடியாமல், வீட்டிலும் சமாளிக்க முடியாமல் நன்றாக நடித்துள்ளார். ஆனால், தினேஷ் இன்னும் எத்தனை நாட்களுக்கு தான் இதே ரியாக்ஷனை கொடுப்பீர்கள்?.
படத்தில் பலரையும் கவரும் கதாபாத்திரம் மியா ஜார்ஜாக தான் இருக்கும். அத்தனை அழகு, வசனம் குறைவு, தன் முகபாவனைகளாலே கவர்கிறார். தன் அப்பாவின் பேச்சை மீற முடியாமல் ஒரு கூட்டிற்குள் அடைந்த பறவை போலான தன் கதாபாத்திரத்தை மிகவும் யதார்த்தமாக நடித்துள்ளார்.
ரமேஷ் திலக் மிகவும் ஜாலியான பையன், டேக்இட் ஈசி பாயாக கலக்குகிறார். இந்த படத்தில் கொஞ்சம் டீசண்டாக இருக்கிறார், இப்படியே நடிங்க ரமேஷ். ரித்விகாவும் எப்போதும் ஒரு சோகமான முகம், இறுதியில் ஒரு முடிவை துணிந்து எடுத்துவிட்டு, இதற்கு தானா இந்த திருமணம் எல்லாம் என்று பேசும் இடம் கிளாஸ்.
ஆனால், இத்தனை அழகாக சென்ற படத்தில் வேண்டுமென்றே டுவிஸ்ட் வைக்கிறேன் பாருங்கள் என்பது போல் இருக்கிறது கிளைமேக்ஸ் நெல்சன். யதார்த்தத்தை விட்டு மிகவும் விலகி நிற்கின்றது, அதிலும் கிளைமேக்ஸில் ரமேஷ் திலக் செய்வது, அவரின் கதாபாத்திரமும் அந்த இடத்தில் ஏதோ டுவிஸ்ட் வைக்க வேண்டும் என்பதற்காக அவரை பயன்படுத்தியது போல் உள்ளது. யதார்த்த லாஜிக் மீறல் என்று கூறலாம்.
கருணாகரன் இனி சீரியஸ் படம் தான் நடிப்பேன் என்று முடிவு எடுத்துவிட்டார் போல. ஆனாலும் நன்றாக நடிக்கின்றார், தொடர்ந்து இதுபோலவும் நடியுங்கள், சார்லீ இந்த கலைஞனை யாரும் மறக்க வேண்டாம், ஸ்கீரினில் வந்தாலே யதார்த்தமாக சிரிக்கவும் வைக்கிறார், சிந்திக்கவும் வைக்கிறார்.
ஜஸ்டின் பிரபாகரன் இசையில் தினேஷ்-நிவேதாவிற்கு வரும் டூயட் பாடல் இன்னும் பல வருடங்களுக்கு ஹிட் மெலோடி லிஸ்டில் இடம்பெறும். பின்னணி இசையில் ஒரு சில காட்சிகளில் இசையே வசனத்தை விட ஆக்ரமிப்பு அதிகம். கோகுலின் ஒளிப்பதிவு மூன்று கதைகளையும் நன்றாக வித்தியாசப்படுத்தி காட்டுகின்றது.
க்ளாப்ஸ்
படத்தின் முதல் பாதி, அத்தனை செண்டர் ஆடியன்ஸுகளுக்கும் பிடிக்கும்படி உள்ளது.
திருமணம் என்பது சாதாரணம் இல்லை, அதேநிலையில் உங்கள் இஷ்டத்திற்கு பெண்கள் திருமண விஷயத்தில் விளையாடாதீர்கள் என்பது போன்ற கருத்துக்களை அழுத்தமாக கூறியிருக்கிறார்கள்.
பாலசரவணனின் காமெடி பல இடங்களில் சிரிப்பை வரவைக்கின்றது. இரண்டாம் பாதியிலும் பயன்படுத்தியிருக்கலாம்.
பல்ப்ஸ்
முதல் பாதியில் இருந்து விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் இல்லாமல் போனது.
மியா ஜார்ஜ் அப்பா எப்படிப்பட்ட மாப்பிள்ளையை தான் விரும்புகிறார், எதற்காக அவரின் திருமணத்திற்கு சம்மதிக்காமல் இருக்கிறார் என்பதை அழுத்தமாக கூறவில்லை.
பெண்கள் பற்றிய படம் இருந்தாலும் பல இடங்களில் பாலசரவணன் ‘இந்த பொண்ணுங்களே இப்படி தான்’ என்று பேசுவது தேவையா?
மொத்தத்தில் திருமணம் என்பது சாதாரண விஷயமில்லை இதில் எத்தனை கஷ்டம் உள்ளது. அதிலும் பெண்கள் எத்தனை கஷ்டத்தை கடந்து வருகிறார்கள் என்பதை கூறியதற்காகவே ஒரு நாள் கூத்தை ரசிக்கலாம்.