விழி பிதுங்கி - எச்.ஏ. அஸீஸ்

.

அதி நவீன  தொலைநோக்கி  ஒன்றில்
வான்வெளிக்கு  அப்பால்
பால்வெளியையும்  கோள்களையும்
பார்வையிட  செய்தாய்
எரி வெள்ளி  ஒன்று  ஓடுவதைக் கண்டேன்
எங்கு போய்  அது  தொலைந்தது
எங்கும்  காணேன்
செந்தணல்  போலவும்
தெறித்த  பால்  துளி  போலவும்
கசிந்து  உறைந்த  அமுதினைப்  போலவும்
அங்கு  காண்பவை
அனைத்துமே  விந்தைகள்
எங்கும்  விரவிய  நீலமும்  கறுப்பும்
இணைந்தொரு  போர்வையை  விரித்ததா
அண்டம்  சுருங்கி  அதிலே  துயின்றதா
கோள்களே  கோள்களே
மினுங்கும்  துகள்களே
ஆள்புலம்  அறிவனோ
கீழ் புலம்  கிடப்பவன்
அதி நவீன  தொலை நோக்கி
அதை விலக்கி  நேர் பார்த்தேன்
என் விழி  பிதுங்கி  வெளியே
ஒரு பூகோளம்  போல
ஒரு துகள்  விழுந்தே
விழி  பிதுங்கி
துடித்துப் போனேன்
துளி துளியாய்  வழிவதென்ன
கண்ணீராமோ
ஆள்புலம்  அறிவனோ

கீழ் புலம்  கிடப்பவன்