.
இளம் இயக்குநர்கள் பத்துப் பேரின் முக்கியமான நேர்காணல்கள் இடம்பெற்றிருக்கும் ‘மாற்று சினிமா: நிழலா? நிஜமா?’ என்ற புத்தகத்திலிருந்து சில பகுதிகள் இங்கே கொடுக்கப்பட்டிருக்கின்றன. (என்ன, புத்தகத்தில் எழுத்துப் பிழைகளும், எடிட்டிங்கில் அக்கறை செலுத்தாததும் சற்றே உறுத்துகின்றன!) 10 இயக்குநர்களிடமிருந்தும் ஆளுக்கொரு கேள்வி-பதில் என்று சுருக்கமாக இங்கே கொடுத்திருக்கிறோம்.
சென்சார் விதிமுறைகள் குறித்து உங்களது பார்வைகள்?
‘தென்மேற்கு பருவக் காற்று’ உள்ளிட்ட படங்களின் இயக்குநர் சீனு ராமசாமி:
புரட்சிகரமான கருத்துகள், சமூக மாற்றத்தை உந்தித் தள்ளுகிற கருத்துகள், இந்த அமைப்பைக் கேள்வி கேட்கிற கதைகள், எது வந்தாலும் தணிக்கையில் தடை செய்கிறார்கள்… இந்திய நாட்டுடன் நட்பு நாடுகளாக இருப்பவற்றை விமர்சிக்க முடியாது. அரசியல் காரணமாக பாகிஸ்தானை விமர்சனம் பண்ணலாம், ஆனால் இலங்கையை விமர்சிக்க முடியாது… சென்சார் தேவையில்லை என்று சொன்னால் மக்கள் பார்க்க கூடாத படங்களெல்லாம் திரையரங்கத்திற்கு வந்துவிடும்… பகுத்தறிவுவாதிகள், முற்போக்கு சிந்தனையாளர்கள், நிறைய படித்தவர்கள் கொண்ட குழுவினரால் திரைப்படங்கள் சென்சார் செய்யப்பட வேண்டும்.
சினிமா ரசனையை மேம்படுத்த என்ன செய்யலாம்?
‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ இயக்குநர் பாலாஜி தரணிதரன்:
ஒருசில பள்ளிகளில் வகுப்பறைகளில் வகுப்பெடுக்கும்போது சினிமாக்களைப் பற்றிப் பேச மாட்டார்கள். ஆனால், அதைத் தவிர்த்து, கேண்டீன், ஆண்டுவிழா, பாத்ரூம் என்று அத்தனை இடங்களிலும் சினிமாவைப் பற்றிப் பேசுவார்கள். எப்படி ஆங்கிலத்திலும் தமிழிலும் பாடப் புத்தகங்களில் நல்ல சிறுகதைகள், கவிதைகள் இருக்கின்றதோ, அதே போன்று, சினிமாக்களைப் பற்றிய ஒரு பகுதியும் வேண்டும்… சரியான ரசனையோடு பார்க்கப்படும்போது, சினிமா இன்னும் தரமாக வளரும் என்பது என் நம்பிக்கை.
‘மதுபானக் கடை’ படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் அளித்த பிறகு நீங்கள் அதற்காகப் போராட்டம் நடத்தினீர்களா?
‘மதுபானக் கடை’ இயக்குநர் கமலக்கண்ணன்:
நாம் அரசாங்கம் தரும் சான்றிதழ் அறம் சார்ந்தது என்று எண்ணுகிறோம், யதார்த்தத்தில் அது பாரபட்சம் பார்ப்பதாக இருக்கிறது. ‘மதுபானக்கடை’ மாதிரியான படத் திற்கு ‘ஏ’ சான்றிதழும், ‘கலகலப்பு’ மாதிரியான படத்திற்கு ‘யூ’ சான்றிதழும் வரிவிலக்கும் தருகிறார்கள்… குடியை ஊக்கு விக்கும் படத்திற்கு ‘யூ’ சான்றிதழ் வழங்கும்போது என் படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கியது கோபத்தைத் தருகிறது.
‘மூடர் கூடம்’ ஒரு கொரிய படத்தின் காப்பி என்று சொல்வது குறித்து?
‘மூடர் கூடம்’ இயக்குநர் நவீன்:
தமிழ் ஸ்டுடியோ கூட இது அந்தப் படத்தின் காப்பிதான் என்று எழுதியிருக்கிறார்கள்… ‘அட்டாக் த கேஸ் ஸ்டேஷன்’ படமும் இணையத்தில் கிடைக்கிறது. இரண்டையும் பார்த்தாலே வித்தியாசம் தெரிந்துவிடும்… இன்னும் சிலர், இது கே. பாலச்சந்தர் எடுத்த ‘நாணல்’ படத்தின் ரீமேக்கா என்று கேட்டார்கள்… பிரசன்ன விதானகே, இலங்கை திரைப்பட இயக்குநர் படத்தைப் பார்த்துவிட்டு… பாராட்டியவர் “நவீன் நீங்க ‘கூல் த ஷாக்’ என்ற படம் பார்த்திருக்கிறீர்களா? ரோமன் போலன்ஸ்கி இயக்கிய படம்” என்றார். “சார்… இதை எப்படி மிஸ் பண்ணேன்னு தெரியலை” என்றேன்… இப்போது இது எதனுடைய காப்பி? சொல்லப்போனால் இந்தப் படத்தில் இன்னும் நூறு படமிருக்கின்றன… என்னைப் பொறுத்தவரை எந்தப் படத்தின் பாதிப்பும் இல்லாமல் ஒரு கதையை எழுதிவிட யாராலும் முடியாது… ‘மூடர் கூடம்’ என் குழந்தை. அதனுள் பாயும் குருதி என்னுடையது. அதன் மரபணுக்கள் என்னுடையவை.
தயாரிப்பாளர் கையில் இருக்கும் சினிமா இயக்குநருக்கு ஏற்றவாறு மாறுமா?
‘தெகிடி’ இயக்குநர் அருண் தேவா:
பணம் போடும் எந்தவொரு துறையாக இருந்தாலும் இப்படி ஒரு கட்டுப்பாடு இருக்கும்… குறும்படங்கள் எடுத்த எல்லா இயக்குநர்களும் அவர்களேதான் தயாரிப்பாளர் களாகவும் இருக்கிறார்கள். இதில் எத்தனை பேர் தங்கள் குறும்படங்களைத் தாங்கள் நினைத்த மாதிரி எடுத்தார்கள் என்று கேட்டால் அதன் எண்ணிக்கை மிகக் குறைவு.
ஈமு கோழி போன்ற மோசடியில் அதிகம் பாதிக்கப்பட்ட கீழ் நடுத்தர வர்க்க மக்களுக்கு (சதுரங்க வேட்டை) படத்தில் எந்த முக்கியத்துவமும் கொடுக்கப்படவில்லையே?
‘சதுரங்க வேட்டை’ இயக்குநர் வினோத்:
நான் ஏமாந்தவர்களின் கதையை எடுக்கவில்லையே. ஏமாற்றுபவனின் கதையை அல்லவா எடுத்திருக்கிறேன்.
‘பண்ணையாரும் பத்மினியும்’ குறும்படத்துக்கும் ‘பண்ணையாரும் பத்மினியும்’ திரைப்படத்துக்கும் உள்ள வேறுபாட்டை எவ்வாறு பார்க்கிறீர்கள்?
‘பண்ணையாரும் பத்மினியும்’ இயக்குநர் அருண்குமார்:
ஒரு சிறுகதையை, திரைப்படமாகத் திரைக்கதை அமைத்து எடுப்பது என்பது வேறு. ஆனால், ஒரு குறும்படமாகப் பத்து நிமிடத்தில் எடுத்த படத்தின் விஷயத்தை இரண்டு மணி நேரப் படமாக எழுதுவதில் நிறைய பிரச்சினைகள் உள்ளன… ஒருவேளை நீங்கள் என் குறும்படத்தைப் பார்க்காது வந்திருந்தால் உங்களுக்கு இப்படித் தோன்றியிருக்காது.
பிடித்த எழுத்தாளர்கள்? பிடித்த புத்தகங்கள்?
‘காக்கா முட்டை’ இயக்குநர் மணிகண்டன்:
யுவன் சந்திரசேகரின் ‘மணற்கேணி’ மிகவும் ரசித்துப் படித்த புத்தகம். அது சிறுகதைக்கும் சின்ன கட்டுரைக்கும் நடுவில் பயணிப்பது… மிகவும் தேர்ந்தெடுத்து வார்த்தைகளைப் பயன்படுத்தியிருப்பார்… ஒரு எழுத்தாளர் எப்படித் தேர்ந்தெடுத்து வார்த்தைகளைப் பயன்படுத்துகின்றார். அப்படியெனில் படம் எடுக்கின்ற நாம் எப்படியெல்லாம் ஒவ்வொரு காட்சியையும் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்த வேண்டும்... இதில் கவனம் வேண்டும் என்பதை நினைவில் கொள்ள இந்தப் புத்தகம் உதவியது.
‘மதயானைக் கூட்டம்’ படத்தின் இறுதியில் வீரத் தேவர் (வேல. ராமமூர்த்தி), கதாநாயகனைக் கொன்றுவிட்டு, கூரையின் மேலிருந்து கம்பீரமாக நிற்பது போலக் காட்டியிருப்பீர்கள்? அடுத்த காட்சியில் விஜியின் அலறல் சப்தமும் உடன் இணைந்து வருகின்றது. இதன் மூலம் பார்வையாளர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்பியது?
‘மதயானைக் கூட்டம்’ இயக்குநர் விக்ரம் சுகுமாரன்:
அந்தச் சம்பவம் நடந்த பிறகு அந்தப் பெண்ணின் அலறல் அவளுடையதல்ல, என்னுடைய அலறல். இந்தப் படத்திற்கு ஏன் நான் ‘யானைக்கூட்டம்’ என்று பெயர் வைத்திருக்கக் கூடாது? ஆனால், நான் ‘மதயானைக்கூட்டம்’ என்று பெயர் வைத்திருக்கிறேன். “ஏன் இப்படிப் பெயர் வைத்திருக்கிறீர்கள், நாங்கள் என்ன மதம் பிடித்தா அலைகிறோம்?” என்ற கேள்வியை அவர்கள் கேட்பார்கள் என்று பார்த்தால், அதையும் பெருமையாகத்தான் நினைக்கிறார்கள். இதில் என்ன உங்க ளுக்குப் பெருமை என்றுதான் படம் நெடுக நான் கேட்டிருக்கிறேன்.
‘ஜிகர்தண்டா’ படத்தில் சங்கிலி முருகன் கதாபாத்திரம் சத்யஜித் ரே மாதிரி படம் எடுக்க முடியாது என்று சொல்வது போல வரும். இது எதார்த்த சினிமா செய்ய ஆசை யிருக்கும் இளம் படைப்பாளிகளுக்கு எதிர்மறையாக உருவாகும் வாய்ப்பு உள்ளதே?
‘ஜிகர்தண்டா’ உள்ளிட்ட படங்களின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்:
அவர், “இங்கே முதல் படத்திலேயே எல்லோரும் சத்யஜித் ரே ஆகிவிட வேண்டும் என்ற கனவில்தான் வருகிறார்கள். நீ புத்திசாலி என்றால் சமரசம் செய்து முதல் படத்தில் ஜெயித்துவிட்டுப் பிறகு நீ நினைக்கிற மாதிரியான படங்களை எடு” என்று கார்த்திக்கைத் தெளிவுபடுத்தும் கதாபாத்திரம்… சமரசம் செய்யாமல் எடுக்க நினைத்துத் தோற்றுப்போன அந்தக் கதாபாத்திரம், குழப்பத்தில் இருக்கும் இளம் படைப்பாளியான கார்த்திக்கிற்குத் தன்னைப் போல் ஒரு நிலைமை வந்துவிடக் கூடாது என்ற ஆதங்கத்தில் சொல்வது… ஆக, சும்மா சமரசம் செய்ய மாட்டேன் என்று போலியாக அலையாமல், சின்னச் சின்ன சமரசம் செய் என்கிற பழனியின் (சங்கிலி முருகன்) அறிவுரையை கார்த்திக் ஏற்றுக்கொள்கிறான்.
மாற்று சினிமா: நிழலா? நிஜமா?
தொகுப்பு: எஸ். தினேஷ்
விலை: ரூ. 180
வெளியீடு: பேசாமொழி பதிப்பகம், சென்னை-600 020.
தொடர்புக்கு: 984069823
Nantri: http://tamil.thehindu.com/