ஜூன் 17ஆம் திகதி வாஞ்சிநாதன் நினைவு தினம் - முருகபூபதி

.
  
விடுதலைப்போராட்டங்களில்  உறைபொருளும் மறைபொருளும்
கலெக்டர்  ஆஷ்துரை -  உரும்பராய்   சிவகுமாரன் பார்வையில்   சாதி   அமைப்பு
                                            



அந்த  இளைஞனுக்கு  அன்று  25  வயது.  அவன் படித்த  பட்டதாரி. தென்னாட்டில்  பிரிட்டிஷாருக்கு  எதிராக  வன்முறைப் பாதையைத் தேர்ந்தெடுத்தான்.   அத்துடன்  பிரிட்டிஷ்  அதிகார  வர்க்கத்திடம் சிக்க நேர்ந்தால்  தற்கொலைப்பாதைக்கும்   அவன்  தயாராகவே  இருந்தான்.
அவன்   பெயர்  வாஞ்சிநாதன்.   இயற்பெயர்   சங்கரன்.   சனாதன மரபில்  வாழ்ந்த  பார்ப்பாணியர்  குலத்தில்  ரகுபதி  அய்யர் என்பவருக்கும்   ருக்மணி  அம்மாளுக்கும்  திருநெல்வேலி செங்கோட்டையில்  1886  இல்  பிறந்த   இந்த மகனின் ஆவியும்,  அவன்  சுட்டுக்கொலை  செய்த  திருநெல்வேலி  மாவட்ட  ஆட்சியாளர் (கலெக்டர்)  ஆஷ்துரை  என்பவரது  ஆவியும்  பிரிந்த  தினம்  ஜூன் 17 ஆம்   திகதி
திருவனந்தபுரத்தில்   மேற்கல்வியைத் தொடர்ந்து,  பட்டதாரியாகிய வாஞ்சிநாதன்   திருமணம் முடித்தவர்.  படிப்பின்  பின்னர்  வன இலாகாவில்  பணியாற்றியவாறு  தென்னாட்டில்  பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு   எதிராக  குரல் கொடுத்து  போராடிய கப்பலோட்டிய  தமிழன் வா. . சிதம்பரப்பிள்ளை,  சுப்பிரமணிய  சிவா, வா.வே.சு.  அய்யர்  ஆகியோரின்  கருத்துக்களினால் ஆகர்ஷிக்கப்பட்டவர்.    புதுவையில்  பாரதியார்  தஞ்சம்  அடைந்திருந்த  காலப்பகுதியில்  வா.வே.சு.  அய்யரின் மறைவிடத்திலேயே   வாஞ்சிநாதனும்  தங்குவது  வழக்கம்.



இன்று  105  வருடங்களாகிவிட்டன.  பாரதி,  வா.வே.சு. அய்யர், சுப்பிரமணிய  சிவா   நூற்றாண்டுகள்  வந்தது போன்று வாஞ்சிநாதனின்  நூற்றாண்டும்  கடந்து சென்று விட்டது.
வரலாறுகள்   மறுவாசிப்புக்குரியன.
அன்றைய  இந்திய  சுதந்திர போராட்டத்தின்  வரலாற்றையும் இன்றைய   ஈழப்போராட்டத்தின்  வரலாற்றையும்   ஒப்புநோக்கினால்  நாம்   குறிப்பிடும்  மறுவாசிப்பில்   பொதிந்துள்ள  உண்மைகளையும்  உறைபொருளையும்   மறைபொருளையும்  சுவாரஸ்யமான முரண்நகைகளையும்   சீர்தூக்கிப்பார்க்கலாம்.  சிந்தித்துப் பார்க்கலாம்.
பாரதியும்   அரவிந்தரும்  சுப்பிரமணிய சிவாவும்  வெளிப்படையாக  ஆயுதப்போராட்டத்தில்    ஈடுபடாவிட்டாலும்,   தாம்  எழுதிய  சில கட்டுரைகளில்   அதனை   வலியுறுத்தியுள்ளனர்.  அரவிந்தர்  தாம் நடத்திய   வந்தேமாதரம்  பத்திரிகையில்,   "  படைக்கலம்  தாங்கி எழுவதே   ஒடுக்கப்பட்ட  மக்களுக்குரிய  மூன்றாவது  வழியாகும். வெற்றியடைய  வாய்ப்பு  இருப்பின்  இதுவே  எதிர்காலத்திலும்  உரிய வழியாகும்.   ஏனெனில்,  இதுவே  மிக  விரைவாகவும்  கைமேலும் பூரண  பலன்  அளிக்கவல்லது "  -   என்று எழுதியிருக்கிறார்.


புதுச்சேரியில்  தலைமறைவு  வாழ்க்கை  வாழ்ந்த  பாரதி,  அங்கிருந்து வெளியிட்ட   இந்தியா   பத்திரிகையில் "  ஒருவன்  தன்  நியாயமான சுதந்திர  சம்ரஷணைக்காகத்  தனக்குத்  தீங்கிழைக்க  வரும்  அயலான்  மீது  செய்யும்  எந்தப்பலாத்காரமான  காரியமும்  உலக தர்மத்தையொட்டிச் சரியானதே " -  என்று  எழுதியதுடன்  நில்லாமல், பகவத்கீதையையும்   துணைக்கு  அழைத்துள்ளார்.  "சுதந்திரமடைய  யுத்தம்  செய் "  என்பது  பாரதியின்  வாக்கு.

மதுரை  நீதிமன்றில்  தோன்றிய  சுப்பிரமணிய சிவா,  "  எனது  மதம் பாரதீயமாகும்.   இதன்  அக்கிரதேவதை  பாரதமாதாவாகும்.  நான்  ஒரு ஸந்யாசி.   எத்தகைய  பலன்  நேரிடுமோ  என்று  கவலைப்படாமல் சத்தியத்தைப்பிரசாரம்   செய்வதே  எனது  தர்மம்.  எப்பொழுது  எங்கே சுதந்திரம்   நசுக்கப்படுகிறதோ , நசுக்கப்பட  முயற்சிக்கப்படுகிறதோ அப்பொழுது  அங்கே  என்னால்  முடிந்த  வன்மையுடன்  எனது எதிர்ப்புக்குரலை   கிளப்புவதும்  சிரமப்பட்டு  சுதந்திரம் ஒளிர்விடப் பாடுபடுவதும்   எனது  தர்மமாகும்.  உலகிலே  அடிமைப்பட்டுக்கிடக்கும்  சகல  மக்களுக்கும்  நியாயத்தை எடுத்துரைப்பது  எனது  தர்மமாகும் "  - என்று  தனது  வாக்குமூலத்தை  அளித்திருக்கிறார்.
இவ்வாறு   அக்காலகட்டத்தில்  உணர்சியூட்டப்பட்ட   இளைஞர்களில் ஒருவர்தான்   வாஞ்சிநாதன்.


இவரை  ஆகர்ஷித்த  சிலர்  சிறை  சென்றிருக்கிறார்கள்.  ஆனால், வாஞ்சிநாதன்  சிறைச்சாலைப்பக்கம்  செல்லாமலேயே  நேரடியாக வன்முறையில்   ஈடுபட்டு    சிலையாக  நிற்கிறார்.   அவர்  மணியாச்சி ரயில்   நிலையத்தில்  கலெக்டர்  ஆஷை  சுட்டுக்கொன்றதனால்  அந்த ரயில்   நிலையம்  வாஞ்சி  மணியாச்சி  சந்திப்பு  எனப்பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.



எனக்கு  நன்கு  தெரிந்த  ஒரு  ஈழத்து  முற்போக்கு  எழுத்தாளர் தமிழகம்   சென்றசமயம்,  மணியாச்சி  ரயில்  நிலையத்தில்  இறங்கி அதன்   தரையைத்  தொட்டு  வணங்கியிருப்பதாகச் சொன்னார்.
வாஞ்சிநாதன்கலெக்டர்  ஆஷை  கொலை செய்வதற்காக எடுத்துவந்த   சிறிய  பிஸ்டல்,  ஒரு  மரத்தால்  செய்யப்பட்ட அம்பாள்   சிலைக்குள்  பத்திரப்படுத்தி  கொண்டுவரப்பட்டதாகவும் இதுபற்றி  பாரதிக்கும்  வா.வே.சு.  அய்யருக்கும்  தெரியும்  என்றும் ஒரு   செய்தியை  பாரதி  நூற்றாண்டு  காலத்தில்  தமிழகத்திலிருந்து இலங்கை   வந்து  உரையாற்றிய  ஒரு  இடதுசாரித்தலைவர் குறிப்பிட்டார்.

வாஞ்சிநாதன்   பார்ப்பாணர்  சமூகத்தைச்சேர்ந்தவர்  என்பதனால்   அவர்  கோ  மாமிசம்  புசிப்பவர்களையும்  வெறுத்தார். "   கோமாதா எங்கள்  குல  மாதா  "   எனப்போற்றும்  குலத்திலிருந்து  வந்திருக்கும் வாஞ்சிநாதன்   ஆஷை,   மணியாச்சிசந்தி  ரயில்  நிலையத்தில் சுட்டுவிட்டு   ஓடித் தனக்குத்தானே  எஞ்சியிருந்த  தோட்டாக்களினால் தற்கொலை    செய்துகொண்டவர்.

அவருடைய   சட்டைப்பையிலிருந்து  எடுக்கப்பட்ட  கடிதத்தில்
"  ஐக்கிய  இராச்சியத்தின்  ஐந்தாம்  ஜார்ஜ்  மன்னன்  ' கேவலம்  கோ மாமிசம்  தின்னக்கூடிய  பஞ்சமன் "  என்ற   வரிகள் இடம்பெற்றிருந்ததாம்.
யார்  பஞ்சமர் ?   என்பதை  எங்கள்  டானியலின்  பஞ்சமர்  நாவலை படித்து    தெரிந்துகொள்ளலாம்.
வாஞ்சிநாதன்   பற்றிய  மறுவாசிப்பில்  மற்றும்  ஒரு  தகவல் பதிவாகியிருக்கிறது.

இன்று  நாம்  தலித்துக்கள்  என  அழைக்கும் ஹரிஜனக்குலத்தைச்சேர்ந்த   பெண்  ஒருத்திக்கு  ஆஷ்  செய்த மனிதாபிமான   உதவி  பற்றிய  தகவல்  வெளியாகியிருக்கிறது.
அந்தப்பெண்   கர்ப்பிணியாக  வீதியில்  நின்று  மருத்துவமனைக்கு செல்வதற்கு   சிரமப்பட்டுக்கொண்டு  இடுப்புவலியால்  துடித்தபோது அந்தப்பாதையில்   தனது  மனைவியுடன்  காரில்  வந்த  கலெக்டர் ஆஷ்அவளை  ஏற்றிக்கொண்டு  செல்வோம்  என்று இந்தியத்தமிழரான    தமது  கார்ச்சாரதியிடம்  சொன்னதும்,   அந்த  ஆள்  தயங்கியிருக்கிறார்.   மருத்துவமனைக்குச் செல்வதற்கு  ஏதும் குறுக்குப்பாதை   இருக்கிறதா ?  எனக்கேட்டுள்ளார்  ஆஷ்.

"  பார்ப்பாணர்கள்  வசிக்கும்  அக்ரஹாரத்தெரு  வழியால் செல்லமுடியும்.   ஆனால் ,  இந்த  ஹரிஜனப் பெண்ணை  நாம் அந்தப்பாதையால்  அழைத்துச்செல்ல  முடியாது. "  என்று  சாரதி சொன்னதும், "  ஒரு  பெண்  பிரசவ  வலியால்  துடிக்கிறாள். இவ்வேளையில்  என்ன  சாதி -  சமயம்  பார்க்கிறாய்.  நான்  கலெக்டர் உத்தரவிடுகின்றேன்.  அழைத்துச்செல்வோம் "  எனச்சொன்ன  ஆஷ், அவ்வாறே   அழைத்துச்சென்று  மருத்துவமனையில்  அனுமதித்து அவ்வூர்  பார்ப்பாணர்களின்  வெறுப்புக்கும்  ஆளாகியிருந்தார்.
இந்தத்தகவலை  பாரதி இயல்  ஆய்வாளரும்  முற்போக்கு எழுத்தாளருமான  தொ.மு.சி. ரகுநாதன்,  தமது    பாரதி: காலமும் கருத்தும்  நூலில்   பதிவுசெய்துள்ளார்.   பாரதி  நூற்றாண்டு  காலத்தில் வெளிவந்த   இந்நூலுக்கு,  தமிழ்நாடு  இலக்கிய  சிந்தனையின்  பரிசும் சாகித்திய   அக்கடமி  விருதும்  கிடைத்துள்ளது.


 சிதம்பரப்பிள்ளை,   சுப்பிரமணிய  சிவா  ஆகியோர்  ஆஷ் பணியிலிருந்த   காலத்தில்  கைதாகி  சிறையில்  வதைபட்டனர். சிதம்பரப்பிள்ளை   செக்கிழுத்தார்.   சுப்பிரமணிய  சிவாவுக்கு தொழுநோய்   வந்தது.  இதனால்  ஆத்திரமடைந்திருந்தார் வாஞ்சிநாதன்
திருநெல்வேலி  கலெக்டராக  அப்போதிருந்த  ஆஷ்,  தமது மனைவியுடன்   கொடைக்கானலுக்குச்செல்ல  ரயிலில்  ஏறி முதல்வகுப்பு  பெட்டியில்  இருந்தவேளையில்  அங்கு  திடீரென்று வந்த  வாஞ்சிநாதன்,   ஆஷை  சுட்டுவிட்டு  ஓடினார்.  ஒரு  மறைவான இடத்திலிலிருந்து   அதே  பிஸ்டலினால்  தன்னைத்தானே சுட்டுக்கொண்டார்.    இச்சம்பவம்  1911  ஆம்  ஆண்டு  ஜூன்   மாதம் 17 ஆம்  திகதி  முற்பகல்  10.35   மணிக்கு   நடந்ததாக வரலாற்றுக்குறிப்புகள்    தெரிவிக்கின்றன.
பந்துலு  தயாரித்து   இயக்கிய  கப்பலோட்டிய  தமிழன்  படத்தில் ஆஷ்   கொலைசெய்யப்படும் -  வாஞ்சிநாதன்  தற்கொலை செய்துகொள்ளும்  காட்சி  வருகிறது.  ஆஷ்  துரையாக  எஸ். . அசோகனும்   வாஞ்சிநாதனாக  பாலாஜியும்   நடித்திருப்பர்.)
அதன்பிறகு  என்ன  நடந்தது ?

சரக்கு  ரயிலில்  உடல்கள்
வாஞ்சியின்  உடலையும் காய மடைந்த  ஆஷ்  துரையையும்  அவ் வழியாக  வந்த  சரக்கு  ரயிலில்  ஏற்றி  திருநெல்வேலிக்கு கொண்டுவந்த னர்.   கங்கைகொண்டான்  பகுதிக்கு  வந்தபோது ஆஷ்துரை   உயிரிழந்தார்.  வாஞ்சியின்  உடல்  திருநெல்வேலி சந்திப்பு  பாலம்  போலீஸ்  நிலையத்தில்  இரு  நாட்கள் வைக்கப்பட்டிருந்ததாக  வரலாற்று  குறிப்புகளில்  தெரிவிக்கப்படுகிறது.
ஆஷ்  துரையின்  உடல்  பாளையங்கோட்டை  மிலிட்டரி  லைன் இங்கிலீஷ்  சர்ச்  கல்லறை  தோட்டத்தில்  அடக்கம்  செய்யப் பட்டது. தற்போதும்   இந்த  கல்லறை  நினைவிடமாக  காட்சியளிக்கிறது. ஆனால்,  வாஞ்சியின்  உடல்  இறுதியில்  என்ன  செய்யப்பட்டது ? என்பதற்கான   ஆதாரங்கள்  இதுவரை  இல்லை.

பேரன்  கோரிக்கை
இதுகுறித்து   வாஞ்சிநாதனின்  தம்பி  கோபாலகிருஷ்ணனின்  பேரன் வாஞ்சி  கோபாலகிருஷ்ணன்  கூறியதாவது: "  வாஞ்சிநாதன்  செங் கோட்டையில்   உள்ள  பள்ளியில்  படித்தது, பின்னர்  பி.. படித்து, வனத்துறையில்  பணி  யாற்றியது  குறித்தெல்லாம்  தகவல் கள் கிடைத்திருக்கின்றன.   ஆனால்,  அவரது  இறுதி  முடிவு  குறித்து தெரிய  வரவில்லை.   அது  குறித்த  ஆய்வு களை  மேற்கொண்டு ஆவணப் படுத்த  வேண்டும் "   
   வாஞ்சி  இயக்க  நிறுவன  தலைவர்  பி.ராமநாதன்         கூறும்போது,வாஞ்சியின்  உடல்  என்ன  செய்யப் பட்டது ?  என்பது குறித்து   ஆய்வு  மேற்கொள்ள  வேண்டும்.   அவரது  உடல் எரிக்கப்பட்டு  இருந்தால்,  அந்த  இடத்தை  கண்டறிந்து  அதை ஆவணப்படுத்த  நடவடிக்கை  எடுக்க வேண்டும்என்றார். 
முதல் உலகப் போரில்   பங்கேற்ற  இந்திய  வீரர்கள்  250  பேரை  ஆங்கி லேயர்கள்  கொன்று  பஞ்சாப்  மாநிலம்  அஜ்நால்  பகுதியிலுள்ள  கிணற்றில்  வீசியதை  157  ஆண்டு களுக்குப்   பின் கண்டறிந்து  மரியாதை  செலுத்தப் பட்டுள்ளது.  இதுபோல்  வாஞ்சியின்  உடல்  என்ன  செய்யப்பட்டது ?  என் பதை  கண்டறிய வேண்டும்   என்று  சமூக  ஆர்வலர்களும்  வரலாற்று  ஆய்வாளர்களும்  கோரிக்கை  விடுத்துள்ளனர்.
மணியாச்சி  ரயில்  நிலையத்திற்கு  வாஞ்சி  மணியாச்சி  என்று பெயரிட   பாராளுமன்றத்தில்  குமரி  அனந்தன்  வலியுறுத்தினார். முன்னாள்   இந்தியப்  பிரதமர்  ராஜீவ்  காந்தி  வாஞ்சி  மரணம் அடைந்த   மணியாச்சி  ரயில்  நிலையத்திற்கு  வாஞ்சி-மணியாச்சி ரயில் சந்திப்பு   என்று   பெயர்  சூட்டினார்.  வாஞ்சி  பிறந்த செங்கோட்டையில்   அவருக்கு  உருவச் சிலையும்  திறந்து வைக்கப்பட்டது.    செங்கோட்டையில்  இவருக்கு  ஒரு  நினைவு மண்டபம்  அமைக்கப்பட்டு 2013 டிசம்பர் 23  அன்று திறக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு   செய்திகள்  வெளியாகியுள்ளன.


-------------------------
சரி -  பிழைக்கு  அப்பால்  தாம்  ஏற்றுக்கொண்ட  நோக்கத்திற்காக போராடிய   சிலரின்  மறைவுக்குப்பின்னர்,  அவர்களின்  உடல்களுக்கு என்ன   நடந்தது ?  என்பது  இன்றுவரையில்  மர்மமாகவே  இருக்கிறது.
இந்த  மர்மம்  ஹிட்லரில்  இருந்து  நோதாஜி  சுபாஷ்  சந்திரபோஸ், மற்றும்  ஒஸாமா  பின்லாடண்,   ரோகண  விஜேவீரா,  வேலுப்பிள்ளை பிரபாகரன்   வரையில்  தொடர்ச்சியாக  நீடிக்கிறது.
ஹிட்லர்  பற்றி  பல  திரைப்படங்கள்,   ஆவணப்படங்கள் வந்துவிட்டன.   நேதாஜி  பற்றி  இன்றும்  செய்திகளும்  ஊகங்களும் வெளியாகின்றன.   ஒஸாமா  பின்லாடன்  கடலில்  ஜலசமாதியானார் என்று   அமெரிக்கத்தரப்பு  சொல்கிறது.   ரோகண விஜேவீரா,  கனத்தை மயானத்தில்   நடுச்சாமத்தில்  எரிக்கப்பட்டதாகவும்  அவருடைய அஸ்தியை   அங்கிருந்த  ஒரு  மயானக்  காவல்காரர்  இரகசியமாக ஒரு   மரத்தின்  அருகில்  புதைத்துவைத்ததாகவும்  செய்தி வெளியானது.
வேலுப்பிள்ளை  பிரபாகரன்  எங்கோ  தப்பிச்சென்று  இன்றும் உயிர்வாழ்வதாக  சீமானும்  பழ. நெடுமாறனும் சொல்லிக்கொண்டிருக்கின்றனர்.   அவர்  நீர்மூழ்கிக்கப்பலில் மாயமானர்   என்று  அவருடைய   ஆதரவாளர்கள்  நம்புகின்றனர்.
அவர்   இருக்கிறாரா ?  இல்லையா ?  என்பதை  மகிந்தர்,  கோத்தபாயா, சரத்பொன்சேக்கா   மற்றும்  58  ஆவது  படையணி  தளபதி ஆகியோரின்    முகங்களை  பார்த்து  புரிந்துகொள்ளமுடியும்.
பல  வருடங்கள்  கடந்து  எர்ணஸ்ட்  சேகுவேராவின்  உடல் புதைக்கப்பட்ட   இடம்  கண்டுபிடிக்கப்பட்டு,  எச்சங்கள்  கியூபாவுக்கு கொண்டுவரப்பட்டு , சாந்தா  கிளாராவில்  அடக்கம் செய்யப்பட்டிருக்கிறது.
வாஞ்சிநாதனின்   உடலுக்கு  என்ன  நடந்தது ?  என்பதை  வரலாற்று ஆய்வாளர்கள்   தேடுகிறார்கள்.
சரி   இனி  எமது  ஈழப்போராட்டத்திற்கு  வருவோம்.

உரும்பராய்  சிவகுமாரன்.


இவர்  பிறந்த  திகதி  பற்றி  ஒன்றுக்கு  ஒன்று  முரணான  செய்திகள் பதிவாகியுள்ளன.
ஓரிடத்தில்  1950  இல்  பிறந்தார்  எனவும்  மற்றும்  ஒரு  வரலாற்று நூலில்  1957  ஆம்  ஆண்டு  பிறந்தார்  எனவும்  பதிவாகியுள்ளது.
ஆனால்,  அவரும்  தமிழ்நாடு  வாஞ்சிநாதன்  போன்று  இதே  ஜூன் மாதம்தான்  (  சயனைட்  அருந்தி ) தற்கொலை   செய்துகொண்டார்உரும்பராய்  சிவகுமாரன்  1974  ஆம்  ஆண்டு  ஜூன்  மாதம்  5  ஆம் திகதி  மரணமடைந்தார்.
அவருடைய    வன்முறைக்குறியிலிருந்து  தப்பித்தவர்கள்,   அல்பிரட் துரையப்பா,    செல்லையா  குமாரசூரியர்,  பொலிஸ்  அதிகாரி சந்திரசேகரா.   துரையப்பா  அன்றைய  ஸ்ரீமா  அரசின்  ஆதரவாளர். யாழ். மேயர்.   அக்காலப்பகுதியில்  இலங்கை  அரசை  ஆதரிக்கும் எந்தவொரு   தமிழரும்  சிவகுமாரன்  பார்வையில்  துரோகிகள்தான். அவர்   பார்வையில்  துரோகிகளாகத் தென்பட்டவர்களை தீர்த்துக்கட்டுவதற்கு   தமது  தொழில்  நுட்பக்கல்லூரி  படிப்பையும் தூக்கியெறிந்துவிட்டு    விடுதலைப் போராட்டப்பாதையையும்,  அதிகார   வர்க்கத்திடம்  சிக்கநேர்ந்தால்  தற்கொலைப்பாதையையும் தேர்ந்தெடுத்தவர்தான்   உரும்பராய்  சிவகுமாரன்.

இவர்  ஒரு  தடவை  கைதாகி  யாழ்ப்பாணம்  பொலிஸ்  நிலையத்தில்  தடுத்துவைக்கப்பட்டபொழுது  நடந்த  உரையாடல் வரலாற்று   முக்கியத்துவமானது.
             சிவகுமாரனுக்கு  தமிழ்  இலக்கிய  பரிச்சயம்  இருந்ததா ?  இல்லையா ?  என்பது  எமக்குத்தெரியாது.  அவரின்  குறிக்கோள் வேறு.   எதிர்பாராத  விதமாக  அந்த  பொலிஸ்  நிலையத்தில்  அவர் சந்தித்த  ஒல்லியான  மனிதர்தான்  மூத்த  படைப்பாளி  மு. தளையசிங்கம்.
பாரதி  கனவுகண்ட  கிருதயுகத்தை  நோக்கிச்சிந்தித்த  சாத்வீகத்தில் நம்பிக்கை   கொண்டிருந்த   புங்குடுதீவு  சமூகப்போராளி தளையசிங்கம்   ஏன்  பொலிஸ்  நிலையத்தில்  இருந்தார் ?



புங்குடுதீவு   கண்ணகி  அம்மன்  ஆலயத்தின்  கிணற்றில்  மேல் சாதியினரான    தருமகர்த்தாக்கள்,  அந்தப்பிரதேசத்தில்  வசித்த தாழ்த்தப்பட்ட  மக்கள்  தண்ணீர்  அள்ளுவதற்கு தடைவிதித்திருந்தனர்.   அதனைக்கண்டித்து  அகிம்சைப்போராட்டம் நடத்துவதற்கு   உண்ணாவிரதம்  இருந்தார்  தளையசிங்கம்.

ஆயுதப்போராட்டத்தில்   தீவிர  நம்பிக்கை  கொண்டிருந்த சிவகுமாரனுக்கு   யார்  இந்த  ஒல்லியான  அப்பாவித்தோற்றமுள்ள மனிதர் ?   இவர்  என்ன  குற்றம்  செய்திருப்பார்  ?  என்ற  சந்தேகம் வந்துள்ளது.
சிவகுமாரன்  தனது  சந்தேகத்தை  தீர்த்துக்கொள்வதற்கும் பேச்சுத்துணைக்கும்   அவருடன்  உரையாடினார்.
தான்    பொலிசாரால்  கைதாகி  தடுத்துவைக்கப்பட்டுள்ளதன் காரணத்தை   தளையசிங்கம்  சொன்னதும்,  சிவகுமாரன் வாய்விட்டுச் சிரித்துள்ளார்.
"  சேர்.  நீங்கள்  படித்தவர்தானே ?  ஆசிரியர்தானே ?  இந்த மேல் சாதிக்காரங்கள்  தாழ்த்தப்பட்டவர்களுக்கு  தமது  கிணற்றில்  தண்ணீர் அள்ள  அனுமதி  மறுத்தால்,  அதற்காக  நீங்கள்  உங்களை  வருத்தி உண்ணாவிரதம்  இருந்து  சாக வேண்டுமா ?  நீங்கள்  என்ன செய்திருக்கவேண்டும்.   எல்லா  மேல்சாதிக்காரன்களின்ட  வீடுகளிலும்    இருக்கும்  கிணறுகளில்  பொலிடோல் ஊற்றியிருக்கவேண்டும்.   அதனை  விடுத்து  ஏன்  இந்த  காந்தீயம் அகிம்சை ?
இவன்களுக்கு  அகிம்சையால்  பாடம்  படிப்பிக்க  முடியாது  ? இதுபற்றி   வெளியே  வந்தபின்னர்  நன்கு  யோசியுங்கள் "  எனச்சொல்லியிருக்கிறார்   சிவகுமாரன்.
தளையசிங்கம்  யோசித்தார்.  தமிழ்  இளைஞர்கள்  எதிர்காலத்தில் தேர்ந்தெடுக்கும்   பாதையை  தீர்க்கதரிசனமாக  தெரிந்துகொண்டார்.
ஆயினும்   தளையசிங்கம்  வன்முறையை  நாடவேயில்லை.   தடுத்து வதைபட்டு  சுமார்  ஆறு  மாதங்களில்  வதை  தந்த  வலியால் மறைந்தார்.
சிவகுமாரன்  எங்கள்  தமிழ்த்தலைவர்கள்  ஊட்டிய உணர்ச்சிகளினாலும்  அன்றைய  நிகழ்வுகளினாலும்  வன்முறையை தொடர்ந்து  நம்பினார்.   இறுதியில்  சயனைட்  அருந்தினார்.
அவருக்கு   உரும்பராய்  சந்தியில்  சிலை  வைக்கப்பட்டது.  அதற்கும் ஆயுதப்படையினரால்  தொடர்ச்சியாக  தாக்குதல்கள்  நடத்தப்பட்டு சேதமாக்கப்பட்டது.
வாஞ்சிநாதனின்   அன்றைய  பார்ப்பாணிய  சமூகப்பின்னணியில் கலெக்டர்  ஆஷ்   பார்க்கப்பட்ட  விதமும்  சிவகுமாரனின்  தமிழ் உணர்வுப் பின்னணியில்   அன்றைய  யாழ்ப்பாணத்து மேட்டுக்குடியினர்   பார்க்கப்பட்ட  விதமும்  வேறு  வேறானவை.
ஹரிஜனப்பெண்ணுக்கு   உதவியவர்   கலெக்டர்  ஆஷ்.  ஆஷின்  பேரன்  ரொபர்ட்  ஆஷ்  பற்றிய  ஒரு  தகவலை  இங்கே  ஆங்கிலத்தில் படித்துப்பாருங்கள்.

Ashe   had  four  children -  two  daughters  and  two  sons.   Now  Robert  Ashe,  a grandson  of  Ashe  who  lives  in  Ireland,  has  sent  an  email  to  the  family  of Vanchinathan,  through  Prof.  A. R.  Venkatachalapathy,  a  historian  who  have met   the  Ashe  family  recently  in  Ireland.

The   email  reads,  "On  this  day  of  sad  but  proud  remembrance,   we,  the grandchildren  and  great  grandchildren  of  Robert  William  Ashe  would  like  to extend  to   the  family  of  Vanchi  Iyer,  a  message  of  reconciliation  and friendship.   Vanchi  was  an  idealist  political  campaigner  whose  zeal  for the freedom  of  his  beloved  India  sent  Robert  to  his  early  grave.   Moments  later, he  took  his  own  young  life.    All  who  act  fervently  in  the  political  arena,  both ruler   and  oppressed,  risk  making  mortal  mistakes,   and  we  who  are  fortunate enough  to  live  on,  must  forgive  and  live  in  peace   together".
--------------------------
இந்தியப்  பிரதமர்  ராஜிவ் காந்தி, வாஞ்சி  மரணம் அடைந்த மணியாச்சி ரயில் நிலையத்திற்கு வாஞ்சி-மணியாச்சி ரயில் சந்திப்பு என்ற  பெயர் சூட்டினார். ராஜிவ் காந்தியின்   படுகொலையின்   பின்னணி  தெரிந்தவர்கள்  நாம்.
இச்சம்பவத்தின்  உண்மைத் தன்மையை  அறிவதற்காக  சில வருடங்களுக்கு   முன்னர்  ராஜிவ்  காந்தியின்  மகள்  பிரியங்கா வேலூர்   சிறையில்  நளினியை  சந்தித்தார்.
அந்தக்குற்றவாளிகள்   நெல்சன்  மண்டேலாவின்  சிறை  வாச காலத்தையும்   கடந்து,  கின்னஸ்  சாதனை  நிகழ்த்துவது ஆச்சரியமானது.


வியட்நாம்  யுத்தத்தை  தான்  சமபந்தப்பட்ட  ஒரு  படத்தினால் நிறுத்திய   தீக்காயங்களினால்  பாதிப்புற்ற  கிம்புக்  என்ற  சிறுமியை அமெரிக்காவில்  சந்தித்த  அமெரிக்க   விமானப்படையில் குண்டுவீசியவர்களில்   ஒருவர்  மன்னிப்புக்கேட்டார்.
ஆனால்,  ஹீரோஷிமாவில்  அஞ்சலி  செலுத்த  வந்த  பராக் ஒபாமாவுக்கு   அச்சம்பவத்திற்காக  மன்னிப்புக்கேட்க  முடியவில்லை.
வரலாறுகள்  படிப்பினையை  மட்டும்  அல்ல,  மன்னிக்கும் இயல்புகளையும்   கொண்டிருக்கும்.
வாஞ்சிநாதனின்   உடலுக்கு  என்ன  நடந்தது ?  என்று  இன்றும் கேட்கும்   குரல்  ஒலிக்கிறது.
ஆனால்,  இலங்கையில்  யாருடைய  பெயர்களை  வைத்துக்கொண்டு அரசியல்   செய்கிறார்களோ   அவர்களினால் அந்தப்பெயருக்குரியவர்களின்   உடல்களுக்கு  என்ன  நடந்தது ?  என்று  கேட்கமுடிய வில்லை.
( இக்கட்டுரைக்கான   ஆதாரங்கள்:   தொ.மு.சி.  ரகுநாதன்  நூல்கள், சுப்பிரமணிய   சிவா  கடிதங்கள்,   மற்றும்  விக்கிபீடியா)