அவுஸ்திரேலியா கன்பராவில் கலை - இலக்கியம் 2016

.
                 நான்கு அமர்வுகளில் நிகழ்ச்சிகள்
ஞானம்  ஆசிரியர்  ஞானசேகரன்  பாராட்டு -  
கருத்தரங்கு 
நூல் அறிமுகம்  -  
ஆவணப்படம்  -  
குறும்படம் காட்சிகள்


                  அவுஸ்திரேலியா  தமிழ்  இலக்கிய  கலைச்சங்கமும்  கன்பரா  கலை இலக்கிய  வட்டமும்  இணைந்து,  கன்பராவில்  கலை  இலக்கியம் - 2016  என்னும்  நிகழ்ச்சியை  கன்பரா  தமிழ்  மூத்த  பிரஜைகள்  மண்டபத்தில்  (Canberra Tamil Senior Citizens Hall, 11 Brumby Street, Isaacs, ACT 2607) 
எதிர்வரும் 4 ஆம்  திகதி (04-06-2016) சனிக்கிழமை மாலை 3.00 மணிக்கு  ஒழுங்குசெய்துள்ளன.
நான்கு   அமர்வுகளாக  நடைபெறவுள்ள  இந்நிகழ்ச்சியை  கன்பரா தமிழ்ச்சங்கத்தின்  தலைவர்  திரு. ஞானசிங்கம்,  கன்பரா  தமிழ்  மூத்த பிரஜைகள்  சங்கத்தின்  தலைவர்  திரு. முருகேசு  ருத்திரன், கனடாவிலிருந்து   வருகைதந்துள்ள  இலக்கிய  ஆர்வலர்  கலாநிதி கே. கணேசலிங்கம்,  இலங்கையிலிருந்து  வருகைதந்துள்ள எழுத்தாளர்   திருமதி  ஞானம்  ஞானசேகரன்,  கவிஞி  திருமதி ஆழியாள் மதுபாஷினி  ரகுபதி  ஆகியோர்  மங்கள  விளக்கேற்றி தொடக்கிவைப்பர்.
அவுஸ்திரேலியா  தமிழ்  இலக்கிய  கலைச்சங்கத்தின்  தலைவர் பேராசிரியர் ஆசி. கந்தராஜாவின்    தலைமையில்  நடைபெறவுள்ள இந்நிகழ்வில்   இலங்கையின்  மூத்த  படைப்பாளியும்  ஞானம் ஆசிரியருமான  டொக்டர்  தி. ஞானசேகரனின்  அயராத இலக்கியசேவைகளை   பாராட்டி  எழுத்தாளர்  திருமதி  யோகேஸ்வரி கணேசலிங்கம்   உரையாற்றுவார்.
 ஞானசேகரனுக்கு    அவுஸ்திரேலியா  தமிழ்  இலக்கிய கலைச்சங்கத்தின்   சார்பில்  விருது  வழங்கப்படும்.
டொக்டர்  ஞானசேகரன்  தமது  ஏற்புரையுடன்  "  ஈழத்து இலக்கியமரபின்  இன்றைய  நிலை "  என்னும்   தலைப்பில்  உரை நிகழ்த்துவார்.


 சங்கத்தின்  துணைத்தலைவர்  திரு. லெ.முருகபூபதியின் தலைமையில்  இடம்பெறும்  இரண்டாவது  அமர்வில்,  சிட்னி  தாயகம்  வானொலி  ஊடகவியலாளர்  திரு. எழில்வேந்தன், "வானொலி  ஊடகங்களின்  நீட்சியும்  நேயர்களின்  வகிபாகமும்"  என்னும்   தலைப்பிலும்
கவிஞி  திருமதி  பாமதி பிரதீப் "  முகநூலில் கவிதைகள் "  என்னும்   தலைப்பிலும்,  மருத்துவகலாநிதி  கார்த்திக் வேல்சாமி  "  தற்காலத்தில் கம்பன் "   என்னும்  தலைப்பிலும் உரையாற்றுவர்.

திரு. திருவருள்வள்ளல்  தலைமையில்  இடம்பெறும்  நூல்  வாசிப்பு அனுபவப்பகிர்வு   நிகழ்வில்   டொக்டர்  நடேசனின்  வாழும் சுவடுகள் (மூன்று பாகங்கள்) ஆசி. கந்தராஜாவின்    கறுத்தக்கொழும்பான், கீதையடி  நீ    எனக்கு  ஆகிய  நூல்கள்,   செ. பாஸ்கரனின்   முடிவுறாத  முகாரி  கவிதை  நூல்  என்பன  அறிமுகப்படுத்தப்படும்.

நான்காவது   அமர்வில்  கனடா மூர்த்தி  தயாரித்த  சிவாஜிகணேசன் ஒரு பண்பாட்டியல் குறிப்பு    என்னும்  ஆவணப்படமும்  கன்பரா கலைஞர்   ரமேஸ்குமார் கதிரவேல்  இயக்கிய  உயிர்குடிக்கும் பசி  என்னும்  குறும்படமும்  காண்பிக்கப்படும்.

      நடிகர் திலகம்  சிவாஜிகணேசன்  ஆவணப்படம்  பேராசிரியர்  கா. சிவத்தம்பியின்  தொகுப்புரையுடன்   தயாரிக்கப்பட்டுள்ளது.
உயிர்குடிக்கும் பசி   குறும்படத்தை  திரு. மயூரன் சின்னத்துரை அறிமுகப்படுத்தி   உரையாற்றுவார்.
கலை இலக்கியம் 2016   நிகழ்ச்சியின்   ஒவ்வொரு  அமர்விலும் சபையோர்   கருத்துரைக்கும்  களம்  தரப்பட்டுள்ளது.
கலை, இலக்கிய  ஆர்வலர்கள்  அன்புடன்  அழைக்கப்படுகின்றனர்.

----0---