பத்தேமரி - கானா பிரபா

.
பத்தேமரி - பள்ளிக்கால் நாராயணன் என்ற சாதாரணின் புலம் பெயர் வாழ்க்கைச் சரிதம்

"வெளிநாட்டில் வாழ்க்கைப்பட்டவனின் இருப்பு பலாப்பழத்தின்ர பால் கையில் ஒட்டியது போல" - பள்ளிக்கால் நாராயணன் என்ற கேரளத்துச் சாதாரணன் சொல்கிறான் இப்படி.

அறுபதுகளில் தம் குடும்பச் சுமை மீட்க, கேரளாவில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்குக் கள்ளக் கடல் வழியால் பயணித்தவர்களில் ஒருவனாக இந்தப் பள்ளிக்கால் நாராயணன். ஐம்பது வருடங்களாகச் சாதாரண தொழிலாளியாகத் தன் துபாய் வாழ்வியலினூடே நாட்டில் இருக்கும் குடும்பகாரருக்கு உழைத்துக் கொட்டி மரித்தவனின் வரலாறு பேசும் படம் தான் இது. 

இன்று காலை "பத்தேமரி" படத்தைப் பார்த்து முடித்ததில் இருந்து மனதைச் சஞ்சலிக்க வைத்து விட்டது. இருபத்தொரு வருடங்களாக நான் தரிசித்த, கேட்ட, அனுபவித்த புலம்பெயர் வாழ்வில் கூறுகளை மீளவும் நினைப்பூட்டி விடுமளவுக்கு ஒரு பந்தம் இந்தப் படைப்பின் வழியாக.


கேரள சமூகத்தின் வளைகுடா நாடுகள் மீதான வேட்கையை நகைச்சுவைப் படைப்புகளாகவும், தீவிர துன்பியல் வாழ்வனுபவப் பதிவுகளாளவும் ஏராளம் படங்கள் வந்திருக்கின்றன. அவற்றை நான் பார்த்திருக்கிறேன்.இன்னும் சொல்லப் போனால் "பத்தேமரி" படத்தை விட இன்னும் மாறுபட்ட திரை இலக்கியமெல்லாம் பதிவாகியிருக்கிறது. ஆனாலும் இந்தப் படம் மீதான நேசிப்புக்குக் காரணமே அது கொண்டிருக்கும் யதார்த்தபூர்வமான பதிவுகளை போர் அவலத்தாலும், பொருளாதார அகதிகளாகவும் புலம்பெயர்ந்த ஈழத்தவரின் வாழ்வியலுக்கு மிக நெருக்கமாக அமைந்திருக்கிறது இந்தப் படம்.


கேரளத்தில் இருந்து ஆபத்து நிறைந்த கடல் வழிப் பயணம் மேற்கொள்ளும் பள்ளிக்கால் நாராயணன் என்ற ஏழை இளைஞனோடு,  கூட்டமாகப் படகில் ஏறிப் போக்கிடம் தேடும் கூட்டத்தோடு இன்றைய நம் வாழ்வியல் சூழலோடும் பொருத்திப் பார்க்க முடிகிறது.

"நீ பணம் அனுப்பும் வரை தான் உன் குடும்பத்தார் உன்னை ஞாபகத்தில் வைத்திருப்பார்கள், பண வரத்து நின்று விட்டால் அவர்களும் உன்னை மறந்து விடுவார்கள்" என்றொரு வசனம் இந்தப் படத்தில் வருகிறது. இரண்டாவது தலைமுறையையும் சேர்த்துத் தம் குடும்பத்தைத் தாங்கி நிற்கும் சக புலம் பெயர் உறவுகள் கண்ணுக்குள் வருகிறார்கள்.

கடந்த முப்பது ஆண்டுகளில் தீவிரம் பெற்ற ஈழ யுத்தத்தில் புலம்பெயர்ந்த ஒரு சமூகம் இல்லாவிடில் இன்றிருக்கும் தாயகத்தவர் பலரின் வாழ்வு திருத்தாமல் எழுதப்பட்ட அவலம் நிறைந்ததாக அமைந்திருக்கும். ரஷ்யா போன்ற குளிர்ப் பிரதேசங்களால் பயணித்துப் போனவர்களில் இறந்தவர் போக மீதிப் பேர் பல்வேறு நாடுகளின் எல்லையைக் கடக்க, இரவோடு இரவாக முட் படுக்கைகளுக்குள்ளால் அராவிப் பயணப்பட்ட கதைகளும், பவுசர்களுக்குள் மூச்சு முட்ட அடைத்துப் போய் இறக்கி விடப்பட்டவர்களுமாக ஐரோப்பிய சமூகத்தில் குடி கொண்ட ஈழத்தவர் பலரின் சுய வரலாறுகள் பதியப்படாமலேயே போய் விட்டன. மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பயணப்பட்டவர்கள், பணிப்பெண்களாகப் பாலியல் இன்னல்களால் இறந்தவர்களின் சம்பவங்கள் வெறுஞ் செய்திகளாகவே போய் விட்டன.
ஈழத்துப் புலம் பெயர் படைப்பிலக்கியமும், காட்சி ஊடகங்களும் தீவிரமாகப் பதியாது போன வரலாற்றுக் குற்றங்கள் இவை.

இந்த விஷயத்தில் கேரளத்தவர் தம் வாழ்வியல் அனுபவங்களைத் திரை மொழியில் ஏராளம் கதைகளாகப் பகிர்ந்திருக்கிறார்கள். அதில் ஒன்று தான் இந்த "பத்தேமரி".

"ஆதாமிண்ட மகன் அபூ" என்ற உன்னத சினிமாவை ஆக்கியளித்துத் தேசிய விருதைப் பெற்ற இயக்குநர் சலீம் அகமது "பத்தேமரி" படத்தை இயக்கியிருக்கிறார். பத்தேமரி 2015 ஆம் ஆண்டுக்கான சிறந்த பிராந்திய மொழிப் படமாகத் தேசிய விருது கண்டிருக்கிறது.

இன்று மலையாள உலகம் நவ யுக சினிமாவைத் தூக்கிப் பிடித்திருக்கிறது. இயக்குநர் முதல்  கதாசிரியர், நடிகர், தொழில் நுட்பக் கலைஞர்கள், கதைக் களம் என்று எல்லாமே வேறு நிறம். ஆனால் "பத்தேமரி" என்ற இந்த உணர்வு பூர்வமான படத்தினையும் நேசித்து வெற்றி வைத்திருக்கிறார்கள் கேரள ரசிகர்கள். தலைமுறை தாண்டி தம்மை வாழ வைத்த அந்தப் புலம்பெயர் சமூகத்துக்குக் கொடுத்த கெளரவமாகவும் இந்தப் பட வெற்றியைப் பார்க்கலாம்.

ஆதாண்ட மகன் அபூ படத்தில் முக்கிய பாத்திரமேற்று நடித்த சலீம் குமார் இந்தப் படத்தின் ஆரம்பத்தில் சிறு வேடத்தில் வந்தாலும் நிறைவு. கேரள இளைஞர்களை சமுத்திர வழியால் கரை சேர்க்கும் கடலோடியாக, பின் புத்தி பேதலித்துப் பிதற்றும் சித்திக் இன் அந்தப் பாத்திர வார்ப்பு குறிப்பிட வேண்டியது. ஏறக்குறைய எல்லா கேரள - மத்திய கிழக்கு நாடுகளைச் சுற்றிப் பின்னப்பட்ட படங்களில் நடித்த, ஏன் இந்தப் பின்னணியில் கதைகளையும் எழுதிய சீனிவாசன் மம்முட்டியின் நண்பனாக. இந்தப் படத்தில் நினைவோட்டப் பகுதிகள் பல சீனிவாசனின் பாத்திரம் வழியே நகர்த்தப்படுகின்றன. நம் வாழ்வில் சந்திக்கும் ஏதோவொரு மனிதரை நினைப்பூட்டும் வல்லமை சீனிவாசனின் நடிப்புக்குண்டு.

படத்தின் நினைவோட்டமும் , நிகழ் பதிவுகளும் மாறி மாறிப் பெருத்தப்பாட்டோட்டு காட்டப்படுவது படத்தொகுப்பின் சிறப்பு.

ஏஜென்சிக்காரரால் ஏமாற்றப்பட்டு பம்பாயில் தொழில் பார்த்துக் கொண்டே தான் துபாயில் இருப்பதாகச் சொன்ன கதை ஏற்கனவே படங்களில் பதிவாகியிருந்தாலும் இந்தப் படத்தின் முழுமைக்கும் அது ஒரு காட்சியாக அமைந்திருக்கிறது.

ஐம்பது ஆண்டுகளாகத் துபாய் தேசத்தில் தன் குடும்பத்துக்காகப் பொருள் தேடி உழைத்து மரிக்கும் பள்ளிக்கால் நாராயணன் என்ற தொழிலாளியாக மம்முட்டி என்ற உன்னத கலாகாரன் வாழ்த்திருக்கிறார் இந்தப் படைப்பில். 
தன் நாட்டுக்கு வந்து தேடும் உண்மையான நேசத்தையும், அனுபவிக்க விழையும் சின்னச் சின்னச் சந்தோஷங்களையும், ஏமாற்றங்களையும் ஏற்கும் பள்ளிக்கால் நாராயணனாகத் தான் அவரைப் பார்க்க முடிகிறது.

படத்தின் முடிவில் சிறிதாகவொரு சினிமாத் தனம் எட்டிப்பார்த்தாலும், மம்முட்டி பேசும் தன் புலம்பெயர் வாழ்வனுபவங்களை அனுபவித்துக் கேட்கும் போது மனது கனக்கிறது.
தம் குடும்பத்துக்காக இரண்டு மூன்று வேலை செய்து, முதிர் பருவத்தைக் கடந்தவர்களைக் கடந்தவர்கள் பலரின் சுயசரிதங்களைக் கண்டு தரிசித்திருக்கிறேன். 
"வீட்டுக்குப் பணம் அனுப்பும் போது பத்தாயிரம் ரூபா அனுப்பினால், இவன் இருபதாயிரம் சம்பளம் எடுத்துக் கொண்டு பத்தாயிரத்தை எங்களுக்கு அனுப்புறான் என்பார்கள் வீட்டார், ஆனால் ஏழாயிரம் சம்பளம் எடுத்து மூவாயிரம் கடன் வாங்கி அதைப் பத்தாயிரமாக்கி நாம் அனுப்புவதி அவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை" என்பார் பள்ளிக்கால் நாராயணன்.

தன் பால்ய வயதில் விளையாட்டில் வெற்றி கொண்ட கோப்பையோடு வீட்டுக்கு வந்தால் அந்த வெற்றிக் கோப்பை சாக்கடையில் வீசப்படுகிறது. 
மற்றோருக்காகத் தன் உழைப்பைக் கொட்டி வாழ்ந்த பள்ளிகால் நாராயணன் வாழ்வில் இறுதிப் பயணமும் வெறுமையாகக் கடந்து போகிறது.