ஞானம் ஆசிரியருக்கு சிட்னியில் பாராட்டு விழா

.
இன்று  (29 05 2016 ) "ஞானம்" இலக்கிய  இதழின் ஆசிரியர் திரு ஞானசேகரன்  அவர்களுக்கு சிட்னியில் பாராட்டு விழா.

 கடந்த 16 வருடங்களாக மாதம் தவறாது “ஞானம்” என்றொரு சஞ்சிகையை நடாத்திக் கொண்டிருக்கும் ஞானம் சஞ்சிகையின் ஆசிரியரும் ”போர்க்கால இலக்கியம்”,”புலம்பெயர்ந்தோர் இலக்கியம்” என்ற இரு பெரும் தொகுதிகளை வெளியிட்டவருமான திரு. ஞானம். ஞானசேகரன் அவர்களின் 75வது அகவையைக் கொண்டாடும் முகமாக உயர்திணை அமைப்பினர் இன்று சிட்னியில் பாராட்டு விழா ஒன்றினை நடாத்தியிருந்தார்கள்.





இவ் விழாவில் அவரைப் பாராட்டியதோடு  அவரிடம் இருந்து பல அனுபவத் தகவல்களையும் பகிர்ந்து கொண்டார்கள் . “ஈழத்து இலக்கிய மரபின் இன்றய நிலை” பற்றி 45 நிமிடங்கள்  அவரது பேச்சு அமைந்திருந்தது . அதனைத் தொடர்ந்து கருத்து பரிமாறல்களும்  இடம் பெற்றது. 
அதனைத் தொடர்ந்து தேநீர் சிற்றுண்டியோடு ஈழத்திற்கே தனித்துவமான கலை வடிவமாகக் காணப்படும் கூத்து மரபில் வெளிவந்த “இராவணேசன்” நாட்டுக் கூத்து ஒளிப்படக்காட்சி காண்பிக்கப்பட்டது . அது ஈழத்தின் கிழக்கு மாகாணத்துப் நுண்கலைப் பீட பேராசிரியர் மெளனகுரு அவர்களால் நெறியாழ்கை செய்யப்பட்டு பலரின் பாராட்டைப் பெற்ற கூத்து வடிவமாகும்.
நிகழ்ச்சியை கலாநிதி.மகேந்திரராஜா.பிரவீனன் தொகுத்து வழங்கினார். மங்கல விளக்கு திரு.திருமதி.ஈழலிங்கம் அவர்களால் ஏற்றிவைக்கப்பட்டது.ஞானம் ஆசிரியரை கலாநிதி ஆ சி கந்தராசா பாராட்டுரை வழங்கி கௌரவித்தார் .      உயர் திணையின் பொறுப்பாளர் யசோதா பத்மநாதனும் , இலக்கிய பேச்சாளர்  திரு தனபாலசிங்கம் அவர்களும் விருது வழங்கி கௌரவித்தார்கள். வரவேற்புரையை நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர் வழங்க நன்றி உரையை கீதா மதிவாணன் வழங்கினார்.
மண்டபம் நிறைந்த மக்களோடு பாராட்டு வைபவம் நிறைவடைந்தது.