இன்றிரவின் முத்தம் - எச்.ஏ. அஸீஸ்

.

                           
ஒரு முச்சக்கர வண்டிக்கு
முத்தம் கொடுத்தது
என் கார் இன்றிரவு
இடுப்புடைந்து போனது
முச்சக்கர வண்டி
நொண்டி நகர்ந்தது
ஒரு பார்க்கில் நடந்த காதல் போல
பார்க்க வந்தனர் எல்லோரும்
உரத்துக் கதைத்தனர்
ஒரு சிலர் என்னிடம்
உன் கார் கொஞ்சம் அவசரப் பட்டதோ 
வாயும் பல்லும் உடைந்து
வழிகிறது இரத்தம்
அழுது தீர்க்கக் கண்ணீரில்லை

இந்த புது வருட நாளில்
குடித்து விட்டா வந்தது உன் கார்
ஒருவன் கேட்டான்
இன்னொருவன் சொன்னான்
இந்த ரோசமற்ற காரை
கல்லெறிந்து கொல்ல வேண்டும்
நல்ல காலம்
இந்த புது வருட நாளில்
எல்லாத் தீபங்களும் வீடுகளில்
வெளிச்சத்தைப் பரப்பியதால்
ஒருவரும் தீப்பிளம்பைக்
கொண்டு வரவில்லை


இந்நேரம் பார்த்து பெய்த மழையில்
என் கார் உடல் கழுவிக் கொண்டது
மின்னலும் முழக்கமும்
உசார் கொடுத்து
முத்தத்திற்கு சன்மானம் கேட்டது
முச்சக்கர வண்டி

தன்மானம் போனதாய்
தவித்தது என் கார்