தமிழ் சினிமா "மருது"





விஷால் சமீப காலமாக சீவிவிட்ட காளையின் கொம்பு போல் கூராக உள்ளார். நடிகர் சங்க வெற்றி, திருட்டு விசிடி அதிரடி முடிவு என பம்பரமாக சுழலும் இவருக்கு படத்திலும் இப்படி ஒரு கதாபாத்திரம் அமைந்தால் எப்படியிருக்கும்?.
அப்படி ஒரு கதாபாத்திரத்தை குட்டிபுலி, கொம்பன் வெற்றிகளை தொடர்ந்து முத்தையா விஷாலுக்காக ரெடி செய்துள்ள படம் தான்மருது.

கதைக்களம்

ராஜபாளையத்தில் பெரிய தலைக்கட்டு ராதாரவி, இவர் கை காட்டியவர் தான் அந்த ஊரில் பல பதவிகளை பிடிக்கிறார்கள். ராதாரவியின் இடது கை போல் அவர் சொல்லும் அத்தனை அடிதடி, கட்டப்பஞ்சாயத்து வேலைகளை முடித்துக்கொடுப்பவர் ஆர்.கே.சுரேஷ்.
இவரை அடுத்த MLA ஆக்க ராதாரவி முயற்சி செய்து வருகிறார். இதே ஊரில் லோட் மேனாக (மூட்டை தூக்குபவர்) விஷால், தன் அப்பத்தாவின் வளர்ப்பில் வீரமாகவும், ஊரில் எந்த தவறு நடந்தாலும் முத்தையாவின் டெம்ப்ளைட் ஹீரோவாக வலம் வருகிறார்.
ஸ்ரீதிவ்யாவை ஒரு கோவிலில் பார்க்க, பார்த்தவுடன் மோதல் பிறகு காதல் என விஷாலின் வாழ்க்கை சந்தோஷமாக செல்ல, ஸ்ரீதிவ்யாவின் அம்மாவை ஒரு சில காரணங்களுக்காக ஆர்.கே.சுரேஷ் கொலை செய்தது விஷாலுக்கு தெரிய வருகிறது.
அவர் இறந்ததற்கு ஏதோ ஒரு விதத்தில் விஷாலும், அவருடைய அப்பத்தாவும் காரணமாக அமைய, பிறகு என்ன அப்பத்தா விஷாலுக்கு கொம்பை சீவி விட விஷால் ஆர்.கே.சுரேஷின் அநியாயங்களை அடக்குவது மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

விஷால் 6 அடி உயரம், 5 பேர் இல்லை 50 பேர் வந்தாலும் அடித்து நொறுக்குகிறார், அதை நம்பவும் முடிகின்றது. முரட்டு இளைஞன், பெண்களுக்கு மரியாதை கொடுப்பவர், அப்பத்தாவிற்கு செல்ல பேரன், அநியாயங்களை தட்டி கேட்பவர் என அனைத்திலும் புகுந்து விளையாடியுள்ளார்.
ஸ்ரீதிவ்யா முதன் முதலாக நிறைய நடிக்கும் வாய்ப்பு உள்ளது. இதுநாள் வரை வெறும் ஸ்கீரின் வந்து மட்டும் போகும், ஸ்ரீதிவ்யா இதில் விஷாலையே கை நீட்டி அடிக்கும் அளவிற்கு தைரியமான பெண். தென் மாவட்டத்து பெண்களுக்கே உரிய பாவனை.
யாருயா இந்த அப்பத்தா? என்று தான் படம் முடிந்து வெளியே வருபவர்கள் பலரும் கேட்கும் கேள்வி. படத்தின் மற்றொரு ஹீரோ என்று கூட கூறலாம், காமெடியில் ஆரம்பித்து விஷாலுக்கு வீரம் புகுட்டும் காட்சி வரை சரவெடி தான். அதிலும் விஷாலை, ஸ்ரீதிவ்யாவை காதலிக்க வைக்கும் காட்சி காமெடி கலக்கல். அதுமட்டுமில்லாமல், ‘என் பேரனுக்கு எந்த பதவியும் வேண்டாம், அவன் நினைச்சா எந்த பதவிலையும் அவனே போய் உட்காருவான்’ என பன்ச் வசனம் வேறு, தெரிந்து தான் பேசினாரா என்பது கேள்விக்குறி.
சூரி காமெடி நீண்ட நாட்களுக்கு பிறகு சிரிப்பு வருகின்றது, கிராமத்து கதை என்றாலே சூரி கால்ஷிட் தான் போல இனி, அதே நேரத்தில் கிளைமேக்ஸில் செண்டிமெண்ட் காட்சிகளிலும் கலங்க வைத்துள்ளார். இதையெல்லாம் விடுங்க, ராதாரவி-விஷால் காம்பினேஷன் படத்தில் உள்ளது.
பலரும் எதிர்ப்பார்த்த காட்சி, பேசிய அளவிற்கு இல்லை என்றாலும், விஷால் மனதில் தோன்றியதை படத்தில் கேட்டு விட்டார். ஆனால், முத்தையா இனி இதுப்போன்ற கதைகளையே தொடர்ந்து எடுக்க வேண்டுமா? என கொஞ்சம் யோசிக்க வேண்டும். ஏனெனில் அம்மா செண்டிமெண்ட், மாமனார் செண்டிமெண்ட், தற்போது அப்பத்தா செண்டிமெண்ட் என ஒரே பாணியில் தான் அனைத்து படமும் இருக்கின்றது.
இந்த ஊரில் போலிஸ் எல்லாம் இருக்கிறார்களா? என்று கேட்கும் அளவிற்கு உள்ளது. சுரேஷ் அவர் வீட்டு ஆட்களை தவிர எல்லோரையும் வெட்டுகிறார், குத்துகிறார், லாஜிக் அத்துமீறல். இத்தனை வன்முறை தேவையா முத்தையா சார்?. டி.இமான் இசையில் பாடல்கள் தாளம் போட வைத்தாலும் பின்னணி இசை காதை பதம் பார்க்கின்றது. வேல்ராஜ் ஒளிப்பதிவு என்று யாராவது சொன்னால் தான் தெரியும், ஏதோ சிறு பட்ஜெட் படம் போல் உள்ளது.

க்ளாப்ஸ்

விஷால் கிராமத்து இளைஞனாக இறங்கி அடித்துள்ளார், விஷால்-ராதாரவி சம்மந்தப்பட்ட காட்சிகள்.
அப்பத்தா முழுப்படத்தையும் தாங்கி செல்கிறார். தமிழ் சினிமாவிற்கு குணச்சித்திர கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு.
படத்தின் முதல் பாதி சூரி காமெடி, விஷால் அடிதடி என விறுவிறுப்பாக செல்கின்றது. குறிப்பாக பெண்களை மதிக்கும் வசனங்கள்.

பல்ப்ஸ்

லாஜிக் மீறல், சமூகத்திற்கு சில தேவையற்ற குறியீட்டு வசனங்கள், கண்டிப்பாக முத்தையா இதை அடுத்த படத்தில் மாற்ற வேண்டும்.
இரண்டாம் பாதி யூகிக்க கூடிய பல காட்சிகள், கிளைமேக்ஸ் உட்பட, பார்த்து பழகி போன கதைக்களம்.
மொத்தத்தில் மருது ஜனரஞ்சக படங்களை விரும்புவோர்களுக்கு ஒரு விருந்தாக இருக்கலாம்.

ரேட்டிங்- 2.5/5   நன்றி  cineulagam