மண்ணிலிருந்து ( உருவகக்கதை ) - முருகபூபதி

.
                        
அந்த  வீட்டின்  முன்னறையின்  யன்னலருகில்  வளர்ந்திருந்த  மரத்தில் வந்தமரும்  பறவையொன்று,    பிறக்கவிருக்கும் தனது   குஞ்சுகளுக்காக  ஒரு  கூடுகட்டியது.  அது  கருத்தரித்திருந்தது.   தனது  குஞ்சுகளுக்காக அயலில்  பறந்து  அலைந்து  குச்சிகளை   சேகரித்துவந்து  சிறுகச்சிறுக அந்தக்கூட்டை  அமைத்தது.
அந்தவீட்டிலிருக்கும்  மகனுக்கு   வேலை  எதுவும்  இல்லை.   தினமும்  அந்த அறையில்   முடங்கியிருந்து,  முகநூல்  பார்ப்பதும்,   அருகில் வைத்திருக்கும்   தட்டிலிருந்து  எதனையாவது   எடுத்து கொறிப்பதும், உண்ணுவதும்   உறங்குவதும்தான்   அவனுடைய  அன்றாட  வேலைகள்.
சோம்பலில்   ஐக்கியமாகி  அதுவே  சுகமென  வாழ்ந்தான்.
அவனுடைய  சோம்பேறித்தனத்தை     தாயும்  தந்தையும்  பலமுறை   கண்டித்தும்  அவன்  தன்னை   மாற்றிக்கொள்ளாமல்  அந்த  அறையே   கதியென்று  கிடந்தான்.


தமது  ஒரே   மகனின்  வாழ்க்கை  இப்படி  வீணாகிறதே  என்ற  கவலையில் அந்தத்தாயும்  தந்தையும்   மனநல  மருத்துவரிடமும்  ஆலோசனை கேட்டனர்.    தாயோ  கோயிலுக்குச்சென்று  மகனுக்காக  அர்ச்சனையும் செய்து,  கோயில்  குருக்களிடம்  அவனுடைய  சாதகக்குறிப்பையும் கொடுத்துப்பார்த்தாள்.
" அழைத்து  வாருங்கள்  சிகிச்சை  செய்வோம் "  என்றார்  மனநல மருத்துவர்.
" அழைத்து வாருங்கள்  ஒரு  சாந்தி  செய்வோம் "  என்றார்  குருக்கள்.
   " அவனுக்கு   ஒரு   திருமணம்  செய்துவைத்தால்  எல்லாம்  சரியாகிவிடும் " என்றனர்  உறவினர்கள்.
" வேலை  இல்லாதவனுக்கு  யார்  பெண் கொடுப்பார்கள் ?"  என்றார்  தந்தை.
" வேலையிருக்கும்  ஒரு  பெண்ணாகப்பார்த்து  கட்டிவைப்போம் "  என்றாள் தாய்.
" தற்பொழுது  அவனுக்காக  நீ  செய்யும்  பணிவிடைகளைத்தான்  வரும் மருமகளும்   செய்வாள்.   இவன்   திருந்தமாட்டான் "  என்றார்  தந்தை.
இப்படியே  காலம்  ஓடியது.


மரத்திலிருந்த  பறவையின்  கூட்டில்  குஞ்சுகள்  பிறந்தன.
அன்று   முதல்  அந்த  மரத்திலிருந்து  பறவைக்குஞ்சுகளின்    குரல்  ஒலிக்கத்  தொடங்கியது.
தாய்ப்பறவை   தனது  குஞ்சுகளுக்கான  இரைதேடி  அலைந்து  திரிந்து கொண்டுவரும் வேளைகளில்  அந்தக்கூட்டிலிருந்து  குஞ்சுகளின்  குரல் சற்று   உயர்ந்திருக்கும்.
அறையில்  முகநூலில்  மூழ்கியிருக்கும்    மகனுக்கு  அந்த  இரைச்சல்    இடைஞ்சலாக  இருந்தது.
பொறுமையிழந்து  வெளியே  எழுந்துவந்து  பார்த்தான்.   சூரியஒளி   அவன் கண்களை    கூசச்செய்தது.   உள்ளே  வந்து    கறுப்புக்கண்ணாடியை அணிந்துகொண்டு   மீண்டும்  வெளியே   வந்து  பறவைக்குஞ்சுகளின்  குரல் வரும்   மரத்தை   அண்ணாந்து  பார்த்தான்.
அன்றுதான்   அந்த  பறவைக்கூட்டை  அவன்  பார்க்கிறான்.   அது  அவனது பார்வைக்கு  அழகாகத்தான்   இருந்தது.   ஆனால்,  அந்த  இரைச்சல்தான் அவனுக்கு   இடைஞ்சலாக  இருந்தது.
        அன்று   மாலை  தாயும்  தந்தையும்  வேலையால்  வீடுதிரும்பியதும், "  அந்தக் கூட்டை  கலைத்துவிடுங்கள்.    எனக்கு  அறையில்  நிம்மதியாக  இருக்க முடியவில்லை."   என்று  சத்தம்போட்டான்.
"  நீ  காணும்  நிம்மதி  எது ?"     என்று  தந்தை  கேட்டார்.
"  என்னால்  எனது  முகநூலை   அமைதியாக  இருந்து  பார்க்க முடியவில்லை.   அதில்  எனது  கருத்துக்களை  பதிவேற்ற  முடியவில்லை. அந்தக்கூட்டிலிருந்து   வரும்  இரைச்சல்  எனது  சிந்தனையை  குலைக்கிறது"
" தனது  குஞ்சுகளுக்காக  அந்தத் தாய்ப்பறவை   இரைதேடி  வருகிறது,   நீ யாருக்கு    இரைபோடுகிறாய் ? "  என்று  தாய்  கேட்டாள்.
உங்களுக்கு  என்ன  தெரியும்.   இந்த  முகநூலில்  நான்   உலகத்தையே பார்க்கின்றேன்"   என்றான்   மகன்.


" அந்தப்பறவை   தனது  குஞ்சுகளுக்கு  ஒரு  புதிய  உலகையே காட்டுகின்றது.   தெரியுமா "  என்று  தந்தை   சொன்னார்.
" அதற்கு  இப்படி  இரைச்சல் போட  வேண்டுமா ?  சகிக்க  முடியவில்லை" என்றான்   மகன்.
"  நீ  மௌனமாக  உள்ளே   குமைந்து  குமைந்துகொண்டு  முகநூலில் கிறுக்குகிறாய்.   அதில்  ஏதோ   இன்பம்  இருப்பதாக  உணர்கிறாய்.   ஆனால் அந்தப்பறவை  தனது  இயல்பையே  வெளிப்படுத்தி,  தனது  பாசத்தை  தனது குஞ்சுகளிடம்   தருகிறது.   குஞ்சுகளும்  தமது  மழலை   மொழியில்  தமது தாய்ப்பறவைக்கு   நன்றி  தெரிவிக்கிறது.   ஆனால்,  அந்த  மொழி எமக்குப்புரியாது "  என்றார்   தந்தை.
வேலையால்  வீடு  திரும்பியிருந்த  தாய்  மகனுக்கு  சிற்றுண்டியும்  தேநீரும் கொடுத்தாள்.
அதன்பிறகே  கணவனுக்கும்  கொடுத்தாள்.
"  இங்கே  பார்  மகனே-  உனது  அம்மா   வேலையால்  வந்த  களைப்பையும் பொருட்படுத்தாமல்   உனக்கு  உபசரிக்கிறாள்.   அதுதான்  தாய்ப்பாசம். அதுபோலத்தான்    அந்தத் தாய்ப்பறவையும். அந்தப்பறவையைப்போன்றவர்கள்தான்  நாமும்.   அது   சிறுகச் சிறுக  கூடு கட்டும்பொழுதே   அதனை   நானும்  அம்மாவும்  பார்த்துவிட்டோம். அதுபோலத்தான்   எமது  ஒரே  மகனான   உனக்காகவும்  நாமிருவரும் உழைத்து    இந்த  வீட்டைக்கட்டினோம்.   நீ  வீடு  கட்டவேண்டாம்.   இருக்கும் வீட்டையாவது   பராமரிக்கப்பார்.   முதலில்  நீ  இருக்கும்  இந்த அறையையாவது   சுத்தமாக  வைத்திருக்கப்பார்."   எனச் சொல்லிவிட்டு, தந்தை  அந்த  அறையிலிருந்து  அகன்றார்.
மகன்   சாப்பிட்டுவைத்த  பாத்திரத்தையும்  தேநீர்  அருந்திய  கப்பையும் எடுத்துச்சென்று   கழுவிவைத்துவிட்டு,   மீண்டும்  வந்து "  தம்பி  இரவுக்கு சமைக்கப்போகின்றேன்உனக்கு  இரவு  உணவு  என்ன  வேண்டும் ? "  என்று   பரிவோடு  கேட்டாள்.
"  எனக்கு  ஒன்றும்  வேண்டாம்.   முதலில்  அந்தப்பறவைக்கூட்டை   அடித்து நொறுக்கி   களைத்துவிடுங்கள்.   என்னால்  இரவில்  நிம்மதியாக உறங்கமுடியவில்லை"   என்றான்  மகன்.
"  உன்னைத்திருத்த   முடியாது "  என்று  சொல்லிவிட்டு  அறைக்குத்திரும்பிய   தாய்,   மகனின்  சாதகக்குறிப்பை  தேடி  எடுத்தாள்.
தொலைபேசி   இலக்கங்கள்  பதிவுசெய்த  அட்டையில்  மனநல மருத்துவரின்   தொலைபேசி   இலக்கத்தை   தந்தை   தேடி  எடுத்தார்.
---------
 அந்தத்தாயும்  தந்தையும்  வேலைக்குப்புறப்பட்ட  மறுநாள்  காலையிலும்  அந்தப்பறவைக் கூட்டிலிருந்து  குஞ்சுகளின்  இனிமையான  குரல்  கேட்டது. தாய்ப்பறவை   இரைதேடி  பறந்திருந்தது.   அந்தக்குஞ்சுகளின்  மதுரக்குரலை  ரசித்தவாறே  அந்தப்பெற்றோர்  வீட்டிலிருந்து  புறப்பட்டனர்.
------------
மாலையில்   அவர்கள்  வீடு  திரும்பியபொழுது  கண்ட காட்சியால் அதிர்ச்சியில்  உறைந்தனர்.
அம்மரத்தின்   அடியில்  மூன்று  குஞ்சுகள்  இறந்து   கிடந்தன.    தாய்ப்பறவை ஈனக்குரலில்  அழுதுவிட்டு  பறந்து  சென்றது.
அந்த   மகனே   அன்று  பகல்  அந்தக்கூட்டை   கல்லெறிந்து கலைத்துவிட்டான்.    பறக்கமுடியாத  குஞ்சுகள்  துடிதுடித்து  வெய்யிலில் காய்ந்து    இறந்துவிட்டன.
தாயும்   தந்தையும்  அந்தக்குஞ்சுகளை  வீட்டின்  பின்வளவில் குழிதோண்டிப்புதைத்தனர்.
தாய்   அதன்  மீது   அன்று  மலர்ந்த  ஒரு  மலரை  வைத்துக்கண்ணீர் வடித்தாள்.
மகன்  வழக்கப்போல்  அறையிலிருந்து  முகநூல்தான் பார்த்துக்கொண்டிருந்தான்.
தாயும்   தந்தையும்  அவனை   அலட்சியம்  செய்துவிட்டு  தமது  வேலைகளை   கவனித்தனர்.
"  அம்மா  பசிக்கிறது,   ஏதும்  சாப்பிடக்கொண்டுவாருங்கள் "  என்று அறையிலிருந்து   மகன்  கத்தினான்.   தாய்  அதனை   கவனத்தில் கொள்ளாமல்,    பின்வளவில்   பறவைக்குஞ்சுகளின்  புதைகுழியையே பார்த்தவாறு   நின்றாள்.
மகன்   தொடர்ந்தும்  குரல்  எழுப்பினான்.
தந்தை   எழுந்து  வந்து  கத்தினார்.
" அந்தப்பறவையும்  தனது  குஞ்சுகளுக்கு  இரைதேடிச் சென்றவேளையில் அந்தக்கூட்டை  கல்லால்  அடித்து  குஞ்சுகளை  சாகடித்தாய். அந்தத்தாய்ப்பறவை  என்ன  பாடுபட்டிருக்கும்.   யோசித்துப்பார்.   இப்போது  நீ   உனது  அம்மாவை   கொஞ்சம்  கொஞ்சமாக  சாகடிக்கிறாய். அந்தப்பறவை   வேறு    எங்காவது  பறந்து  சென்று  தனக்கென  ஒரு கூடுகட்டி    குஞ்சுகளையும்   பெற்றெடுத்து    வளர்க்கும்.   ஆனால்,  உன்னால்  எதுவுமே   முடியாது.   உனக்குத் தேவையானதை    நீயே  தேடிப்பெற்றுக்கொள். எங்களை    நம்பியிருக்காதே."
மகன்   சற்று  நேரம்  அமைதியாக  இருந்தான்.   பிறகு  எழுந்து  வீட்டுக்கு வெளியே    வந்து  பார்த்தான்.   மரத்தடியில்  அவன்  எறிந்த  கல்லும்  பறவைக்கூட்டின்  குச்சிகளும்  கிடந்தன.
தெருவில்   இறங்கி   நடந்தான்.
ஆகாயத்தில்   ஒரு   பறவைக்கூட்டம்  பறந்துகொண்டிருந்தது.   அவற்றின் குரல்   அவனது  செவிப்பறையில்  மோதியது.
தாய்  கவலைதோய்ந்த  முகத்துடன்  கணவன்  முன்னால்  வந்தாள்.
" எல்லோரும்  மண்ணிலிருந்துதான்  பிறக்கிறார்கள்.   பறவைகளும்தான். மனிதன்   கண்டு  பிடித்தவையே  மனிதனின்  இயல்புகளை மாற்றிவிடுகின்றன.    பறவைகள்  அப்படியல்ல.  ஆனால்,  மனிதனும்  ஒரு பறவைதான்.    என்னதான்  உயரத்தில்  பறந்தாலும்  இரைக்காக  மண்ணுக்கு வரத்தான்   வேண்டும்.   உன்  மகன்  வருவான் "  தந்தை  தாயைத் தேற்றினார்.
-----0----