தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு திரையுலகமும் இணைந்து எடுத்துள்ள படம் தான் தோழா. நாகர்ஜுனா, கார்த்தி, தமன்னா,பிரகாஷ்ராஜ், விவேக் என நட்சத்திர பட்டாளங்களுடன் 1000 திரையரங்குகளில் இன்று உலகம் முழுவதும் வெளிவந்துள்ள படம்தோழா.
கதைக்களம்
ஒரு பிரஞ்ச் படத்தின் இன்ஸ்பிரேஷனில் எடுத்த படம் தோழா, இதை டைட்டில் கார்டில் போடுவதிலேயே படக்குழுவினர்களின் நேர்மை தெரிகின்றது. தான் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் வாங்கலாம், இந்தியாவின் டாப் மோஸ்ட் பணக்காரர் நாகர்ஜுனா. ஆனால், உடம்பில் தலை மட்டும் தான் அசைய கை கால் வராத நிலையில் உள்ளார்.
இவருக்கு நேர் ஆப்போசிட்டாக அடிதடி ஜெயில் வாழ்க்கை அனுபவித்து, வெளியே வரும் கார்த்தி இவரை பார்த்துக்கொள்ளும் வேலைக்கு விவேக் மூலமாக செல்கிறார். அங்கு இவர் செய்யும் சேட்டைகள் எல்லாம் நாகர்ஜுனாவை கவர கார்த்தியையே வேலைக்கு கமிட் செய்கிறார்.
இதைத் தொடர்ந்து கார்த்தி, நாகர்ஜுனாவின் உண்மையான பிரச்சனைகள் உடலில் இல்லை மனதில் தான் என்பதை கண்டறிந்து அவர் இழந்த சந்தோஷங்களை திரும்ப கொண்டுவருவது, அதேபோல் கார்த்தியின் மனதில் இருக்கும் சோகத்தை கண்டறிந்து அதை போக்கி அவர் வாழ்க்கையில் சந்தோஷத்தை நாகர்ஜுனா கொண்டுவரும் நண்பர்களுக்கிடையேயான உணர்ச்சிப்போராட்டம் தான் இந்த தோழா.
படத்தை பற்றிய அலசல்
நாகர்ஜுனா இத்தனை வருடத்தில் 2 நேரடி தமிழ் படத்தில் நடித்துள்ளார் என்பது நமக்கு தான் இழப்பு போல, ஒவ்வொரு காட்சியிலும் நெகிழ வைக்கின்றார். உட்கார்ந்தே நம் மனதை கவர்ந்துவிட்டார், சூப்பர் சார்.
கார்த்தி வழக்கமான லோக்கல் பையன், தமன்னாவுடன் கலாட்டா காதல், நாகர்ஜுனாவுடன் நட்பு என குறையில்லா நடிப்பு. அத்தனை சீரியஸ் காட்சியிலும் அசால்டாக காமெடி கலாட்டா செய்கிறார்.
தமன்னாவிற்கு நடிக்க பெரிய ஸ்கோப் இல்லை, மாடல் போல் வந்து செல்கிறார். ஆனால் பிரகாஷ்ராஜ், விவேக் ஒரு சில காட்சியில் வந்தாலும் மனம் கவர்ந்து செல்கின்றனர். அதிலும் கார்த்தி வரைந்த பெயிண்டிங்கை நாகர்ஜுனா, பிரகாஷ்ராஜிடம் ஏமாற்றி விற்கும் இடம், அந்த உண்மை தெரிந்து பிரகாஷ்ராஜ் கொடுக்கும் ரியாக்ஸனில் தியேட்டரே அதிர்கின்றது.
படத்தில் பல காட்சிகள் கவிதை போல் இருக்கின்றது. கார்த்தியின் தங்கை திருமணத்திற்கு நாகர்ஜுனா உதவும் இடம், கார்த்தி நாகர்ஜுனாவிற்கு பிடித்த இடத்திற்கு கூட்டி சென்று அவரை சந்தோஷப்படுத்துவது. அதே போல் கார்த்தியின் சந்தோஷம் இதுதான் என்பதை நாகர்ஜுனா கார்த்திக்கு உணர்த்தும் இடம் கிளாஸ்.
பணம் இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைக்கும் கார்த்தி, பணம் மட்டும் வாழ்க்கையில்லை நம்மிடையே அன்பு செலுத்துபவர் ஒருவர் நம்முடன் இருந்தால் என்ன வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்பதை நாகர்ஜுனா மூலம் கார்த்திக்கு மட்டுமில்லை நமக்கும் உணர்த்துகிறார் இயக்குனர் வம்சி.
க்ளாப்ஸ்
படத்தின் மிகப்பெரிய பலமே நடிகர், நடிகைகள் தான். யாருமே ஓவர் ஆக்டிங் என்பதில்லாமல் அளவான நடிப்பை தந்துள்ளனர்.
ராஜு முருகனின் வசனங்கள் 'மனு போற இடத்துக்கு எல்லாம் மனசு வராது, பயம் இருக்கிற இடத்துல தான் காதல் இருக்கும், சந்தோஷத்தை எங்கு தொலைத்தமோ அங்கு தான் தேட வேண்டும்' என்பவை ரசிக்க வைக்கின்றது.
கோபி சுந்தரின் பின்னணி இசை, அதைவிட வினோத்தின் ஒளிப்பதிவு பனகல்பார்கோ பாரிஸோ இத்தனை கலர்புல்லாக கண்களுக்கு செம்ம விருந்து.
பல்ப்ஸ்
படத்தின் பாடல்கள் பெரிதாக கவரவில்லை. இரண்டாம் பாதி கொஞ்சம் நீளம்.
மொத்தத்தில் இந்த தோழாவை பார்த்தால் நாமும் அவர்களின் தோழன் ஆகிவிடுவோம்.