30/03/2016 பிரபல பின்னணிப் பாடகி பி. சுசீலா 17,695 பாடல்கள் பாடி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். அவருடைய சாதனையை கின்னஸ் ஏற்றுக் கொண்டுள்ளது.
ஆந்திர மாநிலம் விஜயநகரத்தில் பிறந்தவர் பி. சுசீலா. பள்ளியில் படிக்கும்போதே இசையில் ஏற்பட்ட ஆர்வத்தால் ஆந்திரத்தில் புகழ்பெற்ற இசை மேதை துவாரம் வெங்கடசாமி நாயுடுவிடம் முறையாக இசை பயின்றார். ஆந்திர பல்கலைக்கழகத்தில் இசைத் துறையில் டிப்ளமோ முடித்தார்.
பதினைந்து வயதில் சென்னை வானொலியில் "பாப்பா மலர்' நிகழ்ச்சியில் பாடத் தொடங்கினார். இவரது இசைத் திறமையால் கவரப்பட்ட இயக்குநர் கே.எஸ். பிரகாஷ்ராவ் தனது படத்தில் இவரை முதல்முதலாக பின்னணி பாட வைத்தார். 1955-இல் இவர் பாடிய எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவதும்.., உன்னைக் கண் தேடுதே பாடல்களால் பிரபலமடைந்தார். தனித்தன்மை வாய்ந்த தனது குரல் இனிமையால் தொடர்ந்து பல மொழிகளில் சிறந்த பாடல்களை அளித்துள்ள பி.சுசீலா, சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக பாடி வருகிறார்.
1955 முதல் 1985 வரை வெளிவந்த பெரும்பாலான திரைப்படங்களிலும் இவர் பின்னணி பாடியுள்ளார். தெலுங்கில் கண்டசாலா, தமிழில் டி.எம்.சௌந்தரராஜன், கன்னடத்தில் பி.பி. ஸ்ரீநிவாஸ் ஆகியோருடன் இவர் பாடிய டூயட் பாடல்கள் தென்னிந்திய திரையிசை உலகில் சரித்திரம் படைத்தன.
பத்மபூஷண், தேசிய விருது, கலைமாமணி விருது, ஆந்திர மாநில அரசின் ரகுபதி பெங்கையா விருது, கம்பன் புகழ் விருது உள்ளிட்ட பல விருதுகளை பி.சுசீலா பெற்றுள்ளார்.
இசைக்காகவே வாழ்ந்தேன்: இசைக்காகவே என் வாழ்க்கையை அர்ப்பணித்ததில் மகிழ்ச்சி. நல்ல வாய்ப்பு அமைந்தால் இப்போதும் பாடத் தயாராகவே இருக்கிறேன் என்று கின்னஸில் இடம்பிடித்த பாடகி பி.சுசீலா தெரிவித்தார்.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை அவர் கூறியதாவது: எனக்கு மிகவும் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.
முதல் தேசிய விருது எம்.எஸ்.வி இசையில் வெளியான "நாளை இந்த வேளை பார்த்து' பாட்டுக்கு கிடைத்தது. பாடல் கம்போஸிங் போதே இந்தப் பாட்டுக்கு உனக்கு விருது கிடைக்கும்னு எம்.எஸ்.வி சொன்னார். அதேபோல கிடைத்தது. எம்.எஸ்.வி இசையமைப்பில் பாடி தேசிய விருது பெற்றது பெரிய மகிழ்ச்சி அளிக்கிறது.
இயக்குநர் கோபாலகிருஷ்ணன் என்னை நடிக்க வைக்க வேண்டும் என்று விரும்பினார். கோடி ரூபாய் கொடுத்தாலும் நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டேன். எனக்கு எப்போதுமே நடிப்பில் பிரியம் இருந்ததில்லை.
இசைக்காகவே என் வாழ்க்கையை அர்ப்பணித்ததில் மகிழ்ச்சி. நல்ல வாய்ப்பு அமைந்தால் இப்போதும் பாடத் தயாராகவே இருக்கிறேன் என்றார் அவர். நன்றி தேனீ