என் மேசையில் பூகோளம் - கவிதை - - எச்.ஏ. அஸீஸ்

.

பூகோள உருண்டை என் மேசையில் 
தடவிப் பார்க்கலாம்
சுற்றிப் பார்க்கலாம் 
பழகிப்போன பூகோள உருண்டை
கிழக்கில் இருக்கும் இந்து சமுத்திரம்
அதைப் திருப்பி வைப்பேன் 
மேல் திசையாக
மீண்டும் கிழக்கே மாற்றி வைப்பேன் 
இது உருண்டை
பூகோள உருண்டை
எங்கோ ஒரு தேசத்தில்
குண்டு வெடித்ததாய்
செய்தி வர
தேடித் தடவுவேன் அந்த தேசத்தை
கைகளால் துடைப்பேன் 


கசிந்த இரத்தத்தை
வானூர்தி எங்கோ
விழுந்து மறைத்ததாய்
அல்லது
நொருங்கிச் சிதைந்ததாய்
செய்தி வர
அந்த நாட்டையும் தேடித் தடவுவேன்
எங்கோ எரிமலை எங்கோ சுனாமி
எங்கோ பூகம்பம்
பெருவெள்ளம் சூறைக்காற்று
கண்டம் விட்டுக் கண்டம் பாயும்
ஏவுகணை ஒன்று
எங்கோ
எங்கோ
இப்படித் தினமும் வருகின்ற செய்தி 
அந்தத தேசத்தையும்
தடவிக் கொள்வேன்


ஒரு துயர் முடிவில் மறுதுயர் தொடங்கும்
ஒவ்வொரு தேசமும் துயர்களின் தொகுப்போ
தொடர் நாடகமோ இது
உருட்டி உருட்டிப் பார்க்கிறேன்
அந்த பூகோள உருண்டையை 
துளித் துளி இரத்தம்
மேசை முழுவதும்
பூகோளம் சுருங்கி
ஒரு சிறு பந்தானது
எல்லோர் கைகளிலும்
அண்ட வெளிக்கு அடைக்கலம் போயின
அமைதியும் மகிழ்ச்சியும்
துளித் துளி இரத்தம் மேசை முழுவதும்
கைகளால் துடைக்கிறேன்
      ------0-----