.
ஆண்குழந்தை பெற்றெடுத்தால்
அன்னைக்குப் பாராட்டு
அப்பிள்ளை சபையேறின்
அப்பாக்குப் பாராட்டு
அவன்சிறந்து விளங்கிவிடின்
அகிலமே பாராட்டும்
ஆதலால் பாராட்டு
அருமைமிகு பரிசன்றோ !
குறள்தந்த வள்ளுவர்க்கு
குவலயத்தார் பாராட்டு
அவர்தந்த குறள்படிப்பார்
அனைவர்க்கும் பாராட்டு
எவர்மனமும் நோகாமல்
ஏற்றமாய்க் கருத்துரைத்த
எங்கள்பிதா வள்ளுவர்க்கு
இதயத்தால் பாராட்டு !
பாரதியின் பாட்டுக்குப்
பலவிதத்தில் பாராட்டு
பாரதிரப் பலவற்றைப்
பாட்டாலே சொன்னதனால்
போரொக்கும் சொற்கொண்டு
போதனைகள் சொன்னதனால்
பாரிப்போ பாரதியைப்
பாராட்டி நிற்கிறது !
பக்திநிறை பாடல்தந்த
பாவலர்க்குப் பாராட்டு
பலகருத்தை உள்நுழைத்த
பாங்கினுக்குப் பாராட்டு
சத்தான இலக்கியமாய்
தமிழுக்குத் தந்ததனால்
தலைவணங்கிப் பாராட்டை
தான்வழங்கி நிற்போமே !
கவிகண்ண தாசனுக்குக்
காலமெலாம் பாராட்டு
காலமெலாம் பேசும்படி
கவியெழுதிக் குவித்தாரே
கன்னித் தமிழ்தன்னை
கையாண்ட திறம்கண்டு
கவியரசர் தமிழினுக்கு
கண்ணியமாய் பாராட்டு !
பாராட்டுப் பலபெற்ற
பலதலைவர் இருந்தாலும்
பாரினிலே காந்தியைப்போல்
பார்ப்பதற்கு யாருமுண்டோ
பாருலகில் தர்மத்தால்
பலசெய்ய முடியுமென்று
பக்குவமாய் உணர்த்தியதால்
பாராட்டே அவரானார் !