தொலைந்துபோன வாழ்வு - பராசக்தி சுந்தரலிங்கம்

.                                                                                                                        
            1958---- இதுதான் நூலின் பெயர்
                               இந்தத் தலைப்பைப் பார்த்ததுமே மனதிலே பழைய  துன்பியல் சம்பவங்கள் நிழலாடின

 58'ம் ஆண்டுக் கலவரம் மூட்டிய ;தீ இன்னுமே எரிந்துகொண்டிருக்கும் அழகிய தேசத்தின் சோக வரலாறு பற்றிக் கூறும் ஒரு நூல் என்றுதான் நினைத்தேன்.ஆனால் அந்தச் சோகத்தையும் அதனால் பாதிக்கப்பட்ட ஓர் இனத்தின் அழகிய வாழ்க்கையையும் கவித்துவத்துடன் கூறும்  அழகிய கதை ஒன்றை ''காலச்சுவடு'' பதிப்பித்துள்ள திரு அ .இரவியின் படைப்பிலே தரிசித்தபோது அந்த எழுத்தின் தாக்கம் மனதிலே அழியாத  கோலங்களாக இடம் பெற்றதை பதிவு செய்வது  அவசியம் எனத் தோன்றியது

1958'ம் ஆண்டு இலங்கையில் தமிழர்மீது ஏவப்பட்ட இனவன்முறை குறித்துப்   பேசுகிற புதினம் இது   இனவன்முறை நிகழ்ந்த நாட்களிலும் அதன்பின் வந்த நாட்களிலும் மனநிலை ரீதியாக ஒரு தமிழ்க்குடும்பம் சந்திக்கும் நெருக்கடிகளைச் சித்திரிக்கிறது

என்ற வாசகம் நூலின் பின்னட்டையில் காணப்படுகிறது


இது அம்மா சொன்ன கதை இவற்றில் எதுவும் என் சொந்த அனுபவம் இல்லை
இந்தக்  கதையில்    ஓரிடத்திலும் ''நான் ''  இல்லை  என்கிறார் ஆசிரியர்

ஆனால் அவரே  கதை சொல்லியாக வருவதால் நேரடியனுபவத்தை வாசகரும்
பெற்றுவிடுகிறார்கள்--நல்லதோர்  உத்தி என்றே கூறலாம்


மினுவாக்கொடையிலுள்ள ''கல்லுலுவ ''  கிராமத்திலே கதை தொடங்குகிறது
சிங்களவரும் தமிழரும் முஸ்லிம்களும் ஒருவரோடு ஒருவர் அன்னியோன்னியத்துடன்
வாழ்ந்த காலம் அது

எழுத்தாளரின் தந்தை அருணாசலம் அங்கே முஸ்லிம் பாடசாலையிலே கணித ஆசிரியர் - தனது மனைவி  மற்றும் அழகிய பெண்குழந்தையுடன்   பலரின் மதிப்பைப் பெற்று வாழ்ந்து வருகிறார்
ஹாஜியாரும் மனைவியும் சிங்கள நண்பர் பெரராவும் மனைவி நந்தாவும் சாந்தமே உருவான நந்தமித்திர தேரர்  ஆகியோர் இவர்களின் நண்பர்கள்
அந்தக் குழந்தை எல்லோர் மடியிலும் தவழ்ந்து விளையாடிமகிழ்கிறதுமொழிப்பிரச்சனைகளையோ   மதப்பூசல்களையோ   அறியாத காலம் அது


இந்த அழகிய கிராமத்து மக்களின் அழகிய வாழ்வை அழகிய சொற்சித்திரங்களாக
எம்கண்முன்னே கொண்டுவரும் எழுத்தாளரோடு நாமும் பயணிக்கிறோம்

தைப்பொங்கல்     ரமழான் நோன்பு  வெசாக் பண்டிகை எல்லாமே எல்லாருக்கும்  சொந்தமானவை -ஒன்றாக இருந்து விருந்துண்பதும் பட்டாசு  கொழுத்துவதுமாகப் பொழுது மகிழ்ச்சியாகக் கழிகிறது
 அவர்களுடைய   இயல்பான பேச்சு - ஒருவர்மீது மற்றவர் வைத்திருக்கும் நம்பிக்கை அவர்களுக்கிடையே நிலவிய அன்பான  உறவு --இஇப்படி ஒரு காலம் இருந்ததா என்று இன்றைய தலைமுறையினர் அதிசயிக்கும்படியாக ஆசிரியரின் எழுத்து நகர்கிறது

1958''ம் ஆண்டு
திடீரென்று ஒரு நாள் வாழ்க்கை மாறுகிறது -சிங்களவர் தமிழர்களை வெட்டிக் கொல்கிறார்கள் என்ற செய்தியைக் கேட்டு கிராமமே பதைபதைகிறது. சிங்கள நண்பர்கள் கலங்கி நிற்பதையும்
முஸ்லிம் ஹாஜியார் தனது சாரத்தையும்   தொப்பியையும் ஆசிரியருக்கு அணிவிப்பதையும் அவரின் மனைவி தனது   சேலையால் நண்பரின்  மனைவிக்கு மொட்டாக்கு அணிவித்து அவர்கள் மாறுவேஷத்தில் யாழ்ப்பாணம் நோக்கித் தப்பிச்  செல்வதற்கு உதவும் மனித நேயத்தையும்  பார்த்து நாமும் கலங்குகிறோம்
போகும்  வழியெல்லாம்  எரிந்த  வீடுகள் கடைகளையும்  வெட்டுண்டு  கிடக்கும் தமிழ் மக்களையும்  இரத்தம் தோய்ந்த வீதிகளையும் வர்ணிக்கும் ஆசிரியர் ஒரு கொடிய கும்பலிடமிருந்து இவர்கள் காப்பாற்றப்பட்டு   ஒருவாறு ஊர்போய்ச் சேர்வதோடு வாசகர்களையும் யாழ்ப்பாண மண்ணிலே     கொண்டு வந்து சேர்க்கிறார்

 இங்கே நாம் பார்ப்பது   வேறொரு  சமுதாயத்தை

கதை இனக்கலவர காலத்துக்கு முன்னும் பின்னும் என நகர்கிறது

விவசாயம் மற்றும்தோட்டம் செய்வது கள் இறக்குவது கோயில் திருவிழா தவில் நாதஸ்வரக் கச்சேரி சின்னமேளம்  என்று அனுபவித்துக் கொண்டு வேள்வியிலே  கிடாய்களைப்   பலியிட்டு  பங்கு இறைச்சி போட்டு  உண்டு களித்து  கள்ளுக்குடித்து    சண்டை  போட்டி பொறாமையுடன்-- சிலவேளைகளில் கொலையும் விழும்  சிறைக்கும் போவார்கள் -- அண்ணாவியார் நாட்டுக்கூத்து தியாகராஜ  பாகவதரின் பாடல்கள்  என்று தனி உலகத்திலே வாழும் மக்களின் வாழ்க்கையை ஆசிரியர் மிகவும் சாதாரணமாகக் கூறிக்கொண்டு  போகிறார்


ஊரிலே மாற்றான் மனைவியைக் கவர்ந்து கொண்டு   வரும் வன்செயலும் -அப்படியே சவாரி வண்டி ஓட்டப்  போட்டியும் அடிபிடியும் சண்டையும் வாள்வெட்டும் கண்முன் நடக்கின்றன --பள்ளிக்குப் படிக்கப் போன பெண்பிள்ளை  பல எதிர்ப்புகளுக்கிடையிலும்   காதலித்தவனைக் கைப்பிடிப்பதும் இயல்பாகவே  வந்து போகின்றன
காங்கேசந்துறையிலே  பெரிய கப்பல் ஒன்று நக்கூரமிட்டு  நிற்கிறது

அகதிகளாக தமிழ்மக்கள் அதிலேதான் வந்திறங்கினார்கள் என்று மக்கள் கதைப்பது    இராணுவத்தினரின் பிரசன்னத்தைப் பார்த்துப் பயப்படுவது என்று எழுத்து நகர்கிறது

ஆனால் எம்மை அறியாமலே அந்த இராணுவத்தையும் இன்று மக்களைப் பீதி கொள்ளச் செய்யும் இராணுவத்தையும் மனம் ஒப்பிடுவதைத் தடுக்க முடியவில்லை

 ஆசிரியரின் எழுத்தின் வலிமைதான் அவருடைய திறமை

கீரிமலைக் கிராமத்திலே நிலைகொள்ளும் அம்மாவின் குடும்பத்தின் கதை  தொடர்கிறது

அப்பாவின் குடும்பம் அளவெட்டிக் கிராமத்தில்---அங்கு அப்பாவின் அம்மா இருக்கிறார் அண்ணன் இருக்கிறார் சகோதரிகள் இருக்கிறார்கள் அம்மான்மார் இருக்கிறார்கள் .மனதிலே பெரும் சோகத்தைச் சுமந்தவாறு இரண்டு வீடுகளுக்குமாக சைக்கிளில் போய்த்திரிகிறார் அப்பா

 இவர்களின் அழகான பாசமுள்ள குடும்பத்தையும் உறவினரையும் அவர்களுடைய சாதாரண வாழ்க்கையையும் வர்ணிப்பதன்மூலம் ஆசிரியர் ஓர் இனத்தின் பண்பாட்டையே கண்முன் நிறுத்திவிடுகிறார்

ஆசிரியரின் வரிகளிலேயே அவற்றைச் சுவைப்பதுதான் அழகு

சித்திரைக்குச் சித்திரை சிதறு கள்ளு பங்குனிக்குப் பரவு கள்ளு ஆனிக்கு அரிபனைக் கள்ளு ஆடிக்கு அருந்தன் கள்ளு ஆவணிக்குக் காய்வெட்டிக் கள்ளு இப்படிக்கள்ளுக்கும் பருவங்கள் உண்டு அதைத் தெரிந்தவர் ஆசைமாமா

அரிபனைக் கள்ளுக்காலத்தில்  ஆசைமாமா  கல்மடுவை விட்டுக் கீரிமலைக்குப் போனார் கள்ளைவிட அருமைத் தங்கை அவருக்கு ஆகலும் இனிக்கிறது ஆறு சகோதரர்களுக்கு அவள் ஒரு பெண்
''தங்கச்சி -''----கூப்பிடவே எவ்வளவு ஆசையாக இருக்கிறது

ஒய்! ---ஏதும் வேணுமே ஆசை அண்ணை ??
 தங்கையின் கண்களுக்கு அன்பைச் சுரப்பதல்லாமல் வேறொன்றும் தெரியாது

அவருக்கு இன்னொரு விசேஷமும் அங்கிருக்கிறது அது கவுனாவத்தை வைரவர் கோயில் வேள்வி

அது சும்மா ஒன்றல்ல ஆயிரத்துக்கு மேற்பட்ட கிடாய்கள் அங்கு வெட்டுண்டு வீழ்கின்றன இரண்டு மூன்று மைல்சுற்றாடலில் கிடாயின் இரத்தத் துளி சொட்டாத ஒழுங்கைகள் அங்கு இல்லை

அன்றைய நாள் பார்த்து நானு ஓயா மாமா வருகிறார் வெள்ளிகிழமை மெயில் றெயின் எடுத்தால் சனிக்கிழமை காலையில் கீரிமலை வீட்டில் நிற்கிறார் -அவர் வந்தவுடன் ஒரு முட்டைக்கோப்பி அவர் மூக்கில் சுவறும்


அந்த அதிகாலையின் தெளிந்த கேணி நீர் இஒருகரைக்கும் மறு கரைக்குமாக பத்துமுறை நீச்சலடித்துவிட்டு வருகிறார் நானு ஓயா மாமா வீட்டில் இடியப்பம் குவியலாக அவிந்து கிடக்கிறது இடியப்பத்துக்கு தாளித்த எலுமிச்சம்பழச் சொதி சம்பல் முடைப்பொரியல் இருக்கின்றன
உண்டு சற்றுக் கதையாடிவிட்டுப் பாயை விரிப்பார் நானு ஓயா மாமா

பதினொருமணிக்கு எழும்பி  கூவிலில்  மார்க்கண்டு அப்புவிடம் போவார் இரண்டு பிளாக்   கள்ளு உறிஞ்சுவதற்கிடையில் கிடாய் மூளையின் வறுவலும் பிறகு இரத்த வறையும்  வரும்

அரிபனைக் கள்ளின்  ருசி வேறு எதில்தான் உண்டு ஆனிமாதத்து
அரிபனைக் கள்ளு குடம் குடமாகச் சுரந்தது  பனையில் ஐந்தாறு முட்டி கட்டியும் போதாது
இந்த வெயிலுக்குச் சோளகமும் கள்ளும்போல   சுகமானது வேறெதுவுமில்லைதென்னிலங்கையிலே அரசாங்க வேலைபார்க்கும் நம்மவர் வீடுநோக்கி வருவது இந்தச் சுகத்தை அனுபவிக்கத்தானே !!!!


இந்தப்பண்பாட்டிலே   திளைத்தவர்களை  இன்று அவர்கள்  எங்கு இருந்தாலும்   மீட்டுப்பார்க்க வைக்கும்   அழகான மொழிநடை இந்த எழுத்தாளரின் சிறப்புகீரிமலையிலே எம்மவர் அந்திரெட்டி செய்யும் பண்பாடு உள்ளது என்பதை அறிவோம்

கிரியைகள் முடிந்த பின்னர்  ஆசைமாமாவின் '' ஈஸ்வரி தேநீர்க்கடை'' யிலே அவர்கள்
சாப்பிட வருவார்கள்

தங்கச்சி எங்கை ?கெதியெண்டு கொண்டுவா அங்கை ஆக்களல்லே   பாத்துக்கொண்டு நிக்கினம் .பெட்டிநிறைந்த பக்கோடா   வரும் .வியர்த்தொழுகும் அம்மாவுக்கு


அய்யர் நாளைக்கு அந்திரெட்டி செய்ய வாறம் பத்துப் பேருக்குச் சோறு கறி வேணும்

தங்கச்சி நாளைக்கு பத்துப் பேருக்கு சாப்பாடு போடவேணும்
என்ன ஆசை அண்ணை திடுமுட்டா வந்து சொன்னால் அதுக்கேத்த உப்புப் புளி தூள் எல்லாம் இருக்க வேணுமே
திடீரென்று பத்துபேருக்கு எப்படிச் சமைப்பது

பத்துப்பேரும் எங்களை நம்பி வரும் சீவன்களல்லே

இருக்கிறதை வச்சுச் சமாளியன்

அம்மாவுக்கு அது ஒரு விரத நாள்
''ஓர் உயிர் பிரிந்திருக்கிறது மோட்சம் வேண்டி அந்த ஆத்துமா அலையும் அது பாவம் செய்த உயிராக இருக்கட்டும் அதனைகடவுள் பாத்துக் கொள்ளுவார் .நாங்கள் செய்யும் காரியம் புனிதமாக இருந்தால் அந்த ஆத்துமா உலையாது எங்கள்   கடமையை நாங்கள் வடிவாகச் செய்வோம் ;''-அம்மாவிடம் இருக்கிற ஒரேயொரு சங்கற்பம் இது

  அன்று காலைப்பலகாரத்துக்கு வீட்டில் அடுப்புப் புகைவதில்லை -சற்று நேரத்தில் சோறு வடிச்ச   கஞ்சியில் தேங்காய்ப்பால் விட்டுக் கொடுக்கிறார் அம்மா

அம்மம்மாவின் புறுபுறுப்பு   அடுப்படிவரை கேட்கிறது இவளின்ரை ஆசையண்ணனும் அவையின்ரை அந்திரட்டியும்  இஞ்சை எங்களைப் பட்டினி போடுறாள்


பத்துப்பேருக்கு என்று சொன்னாலும் பதினைந்து பேருக்கான சோறு ஐந்துவகை மரக்கறிகள் கத்தரிக்காய் பொரித்த குழம்பு அப்பளம் மிளகாய்ப்பொரியல்  --
 -அந்தியேட்டிக்காரர்  போனபிறகு  பெறாமக்களைக் கடையில் விட்டுவிட்டு   தங்கச்சியிடம்  ஓடிவருவார்  ஆசைஅண்ணை

''சோக்காயிருக்கு  சோக்காயிருக்கு  எண்டு சாப்பிட்டிச்சினம் இப்படியொரு சாப்பாட்டை எங்கையும் சாப்பிட்டதில்லை எண்டிச்சினம் எனக்குக் கிடைச்ச மாதிரி ஒரு தங்கச்சி ஆருக்கும் கிடைப்பினமே '''அம்மாவின் கைகளைப் பற்றியவாறு ஆசைமாமா சொன்னார் .அப்பொழுது ஆசைமாமா அழக்கூடச் செய்தார்


விருந்தோம்பும் பண்பாடு எவ்வளவு அழகாக ஆசிரியரின் இந்தவரிகளிலே வருவதை நாம் பெருமையுடன் பார்க்கிறோம்

தொடர்ந்துவரும் வரிகள் நகைச்சுவையுடன் அமைந்திருப்பதும் ஆசிரியரின்  எழுத்தின் சிறப்பு


   இரவு படலை அடிபடுகிற சத்தத்தில் அம்மாவுக்குத் தெரிந்தது
ஆசைமாமா சரியில்லாமல் வருகிறார் என்று -அப்பொழுதும் அந்த வசனத்தைத் திரும்பச் சொன்னார் 'எனக்குக் கிடைச்சமாதிரி ஒரு தங்கச்சி ஆருக்கும் கிடைப்பினமே ''

இனக்கலவரம் எல்லாவற்றையுமே கவிழ்த்துபோட்டுவிட்டது

1958'ம் ஆண்டு ஏன் இனக்கலவரம் தொடங்கியது என்பதை ஆசிரியரின் அப்பாவும் ஊராரும் இருந்து அலசுவதும் அரசியல் தலைவர்கள்    திரு ஜி ஜி பொன்னம்பலம்இதிரு எஸ் ஜே வி செல்வநாயகம்  மற்றும்  அடங்காத் தமிழன் வவுனியா   திரு சி சுந்தரலிங்கம் அவர்களின்  கொள்கைகளை பாராளுமன்ற வாதப்பிரதிவாதங்களை    விமர்சிப்பதும் நூலிலே சாதரணமாக வந்துபோகின்றன


ஆசிரியர் அருணாசலம் போல அரசாங்கத்தின் சம்பளத்தை நம்பி வாழ்ந்த பலரும் வேலையை விட்டு வந்தமையால் மற்றவர் தயவிலே எத்தனை நாளைக்குத்தான் வாழ்வது என்று கூனிக் குறுகி மறுகுவதையும்  அரசாங்கத்தின் உத்தரவுப் பிரகாரம் சிங்களதேசத்துக்குப் போகப்பயப்படும்  அந்த மக்களின்  மனப்போராட்டங்களையும் மிகவும் இயல்பாக ஆனால் மனதைப் பாதிக்கும் வண்ணம் இவர் எழுதிச்செல்கிறார்

அப்பாவின் பொக்கற்றுக்குள் அண்ணா ஒருநாள் பத்துரூபா வைத்தார் கொண்டுபோ தம்பி என்ர  மோளுக்கு பால்மா வாங்கிக்குடு எப்பகாசு   வேணுமெண்டாலும்  என்னட்டைக் காசு கேக்கக் கூச்சப்படாதை
 அப்பா நின்றபடி   நின்றார் கண் ஒழுகிற்று ஒன்றும் பறையவில்லைவெம்பி வெம்பி அழுகைவர சைக்கிள் உழக்கினார்


டைனமோ போட்டுச் சைக்கிள் உழக்கியத்தில் அப்பாவுக்குக் களைப்பு  இருந்தது ஆலமரமுடக்கில் சிங்கள ஆமிக்காரர் முகத்துக்கு நேராக ரோச்ச் லைற்  பிடித்து 'எங்க போறது 'என்று அரைகுறைத் தமிழில் கேட்கிற போது இன்னும் களைப்பு அதிகமாகிறது '

''என்ர வீட்டிற்குப் போவதற்குக் கேள்வி கேட்க இவன் யார் ''

அம்மாவுக்கு ஒன்று உறுதியாக உறைத்தது

சிங்கள தேசத்தில் தமிழர் நமக்கு வாழ்க்கை இல்லை
எத்தனை சித்திரவதைகள் எத்தனை வன்கொடுமைகள் -அத்தனை தமிழ் உயிர்களையும் உதைத்தும் சிதைத்தும் எரித்தும் வெட்டியும் ------
உயிர்களிலும் தமிழ் உயிர் சிங்கள உயிர்   என்று உண்டா


இனிமேலும் இப்படியே இருக்க முடியாது மூத்தம்மானின் காணியிலே   தோட்டம் செய்யலாமோ என்று அப்பா  சோதிடம் கேட்கப் போவதும் சோதிடர் வியாழக்கிழமைக்குப் பின் வா என்பதும் இங்கே ஒரு திருப்புமுனை -----
அன்று வியாழக்கிழமை அக்காணியிலே நடந்த துவக்குச் சூட்டுச் சம்பவம் இராணுவத்தின் கதை தொடரும் என்று கூறாமல் கூறி நிற்கிறது

சோதிடம் வேறு சாத்திரம் வேறு என்று தனது நேர்மையாலும் தூய வாழ்வாலும்  வழிகாட்டியாக முன்மாதிரியாக விளங்கும்  ஒரு பண்பாளரையும் சந்திக்கிறோம்

 அம்மாளிடமாவது   போய்வருவமோ என்று அப்பா யோசித்தார்

என்று கதை திடீரென முடிகிறது

திக்கற்றவனுக்குத் தெய்வமே தஞ்சம்

இனிமேல் தமிழரைக் கடவுள்தான் காப்பாற்றவேணும் என்று சொன்ன பெரியார்  நினைவுக்கு வருகிறார்

  கதையிலே தொக்கி நிற்கும் கருத்துகள் எம்மைச் சிந்திக்க வைக்கின்றன


ஆசிரியர் தனது முன்னுரையிலே கூறும் கருத்துகளிலே ஒரு வரி மிக ஆழமாக மனதைத் தைத்தது

சில நாட்களில் பின்னேரங்களில் அம்மாவிடமிருந்து ஒப்பாரிப்பாடல்களுடன் கூடிய அழுகை எழும்
எவ்வளவு விடுத்துக் கேட்டாலும் அம்மா ஏன் என்று சொல்லமாட்டார்

'முட்டுத்'தீர்ப்பதில் ஒப்பாரிக்கு ஒரு வலுவுண்டு

ஆம் !
அம்மா அழுவது   முட்டுத் தீர்ப்பதற்காக --

இழந்துபோன அழகிய வாழ்க்கையை நினைத்து அழுதிருக்கலாம்
'கல்லுலுவ ' உறவுகளை நினைத்து அழுதிருக்கலாம் -நிறைவெறியில் கைமோசக்கொலையில் மாட்டிச் சிறைக்குச் சென்ற ஆசையண்ணையை   நினைத்தும் ஒப்பாரி வைத்திருக்கலாம்

தங்களை இனக்கலவரத்தின்போது காப்பாற்றிய தமிழ் போலிஸ் அதிகாரியை   அவர் தமிழன் என்ற ஒரே காரணத்தால்  சிங்கள இனவாதிகள்   குத்திக் கொன்றதை தாங்கமுடியாமல் அழுதிருக்கலாம்

அந்த நல்ல பெண்மணியின் மனதை யார் அறிவார் ?

முட்டுத்தீர்க்கவும் இன்று உரிமையில்லாது வாழும் மக்கள் கண்ணுக்குள் வந்து போகிறார்கள்

நூலின் முகப்பிலே வெறுமையாக இருக்கும் ஒரு நாற்காலியின் படத்தைக் காட்டுவதன்   மூலம் மேலும் பல செய்திகளை ஆசிரியர் ஊகிக்க வைத்துள்ளார்


ஓர் அடர்காட்டில் இடர்ப்படநேரும் காலம் ஒன்று வந்தது .சூழ் தகிக்கும் பெரு நெருப்பு வாழ்வை அது பொசுக்கிப் போயிற்று .காட்டாறு ஒன்று வழிமறிக்க வழிமறிக்க வீட்டுவாசலை அது மூழ்கடித்தது .வீட்டிற்குள்ளும் அங்குலம் அங்குலமாக அது ஏறிற்று .அனைவரும் மூழ்கி மூச்சுத் திணறிப் போயினர் .நீண்டுகிடந்த நெருஞ்சி முட்பாதையில் எப்படிக்காலாற நடந்திட முடியும்?

 இந்த அழகிய தீவுக்கு என்ன நிகழ்ந்தது ?


 ஆசிரியரின் இந்தவரிகளை மனதிலே சுமந்தவண்ணம் முட்டுத்தீர்க்கமுடியாமல் நாமும் திணறுகிறோம்