கவி விதை - 13 - தேசத்(தின்) துரோகம் - -- விழி மைந்தன் --

.

அது பெரும் போர்.

போருக்கெல்லாம் தாய்ப் போர்  என்று கூட அதைச் சொன்னார்கள்.

 எதிரிகள் முன்னேறி வருகிறார்கள்.

எண்ணிக்கையிலும், ஆயுத பலத்திலும், தொழில்நுட்பத்திலும், மிகுந்தவர்கள்.

ஆனால் தர்மத்தில் குறைந்தவர்கள்.

சுருள்  அலை வெள்ளம் போலத் தொகையிலாப் படைகள் கொண்டவர்கள்.

ஆயிரக் கணக்கான விமானங்களும், பதினாயிரக் கணக்கான யுத்த வாகனங்களும், இலட்சக் கணக்கான பீரங்கிகளும் உடையவர்கள்.


ஆனால் அறம்  புகாத நெஞ்சினர்.

உண்மையோ, பொய்யோ, அப்படித் தான் இவர்களுக்குச் சொல்லப் படுகிறது.

இவர்கள் படைகள் பின்வாங்கி வந்து கொண்டிருக்கின்றன.

யுத்த முனையில் ஆட்பலம் இல்லை.

ஆள்கள் இருந்தாலும் துப்பாக்கிகள் இல்லை.

துப்பாக்கிகள் இருந்தாலும் போர் அனுபவமும், பயிற்சியும் இல்லை.

அவை இருந்தாலும் சிறந்த தளபதிகள் இல்லை.

"எதிர்த்து நில்லுங்கள். எதிரிகளைத் தடுத்து நிறுத்துங்கள். மாபெரும் தேசபக்திப் போர்!" என்று இவர்களது வேந்தர் கர்ஜிக்கிறார்.

நேரம் வேண்டும்.

ஆயுதங்கள் செய்யவும், வீரர்களைத் திரட்டவும், போர்ப் பயிற்சிகள் கொடுக்கவும், தொழில் நுட்பத்தில் முன்னேறவும் நேரம் வேண்டும்.

எதிர்வரும் பூதம் வழியில் இருப்பவற்றையெல்லாம் கபளீகரம் செய்து கொண்டு மிகவேகமாக முன்னேறி வருகிறது. மின்னல் வேகத் தாக்குதல். நேரம்  கிடைக்காது என்று தோன்றுகிறது.

'மன்னபுரம்' எனும் நகர் வரை வந்து விட்டார்கள்.

"எக்காரணம் கொண்டும் மன்ன புரத்தை விட்டுக் கொடுக்காதீர்கள். எத்தனை உயிர் கொடுத்தும் எதிரிகளைத் தாமதிக்கச் செய்யுங்கள். ஆறு மாதம் எனக்குக் கிடைத்தால் புதிய ஆயுதங்களும் விமானங்களும் யுத்த முனைக்கு வந்து விடும். அதுவரை எவ்விலை கொடுத்தேனும் எதிரிகளை நிறுத்துங்கள்" என்று வேந்தர் சொல்லி விட்டார்.


கையில் அகப்பட்ட இளைஞர்களை எல்லாம் மன்னபுரத்திற்கு அனுப்புகிறார்கள். எந்தப் பயிற்சியும் இல்லை!

அவன் பெயர் செர்கெய். பதினேழு வயது இளைஞன்.

அவனுடன் இருநூறு அனுபவமற்ற இளைஞர்கள் இரயிலில் ஏற்றப் பட்டுப் போர்முனைக்கு அனுப்பப் படுகிறார்கள்.

யுத்த களம் செல்லும் முன்பே எதிரிகளின் விமானத் தாக்குதலில் அரைவாசிப் பேர் இறக்கிறார்கள்.

மற்றவர்கள் போர்க் களத்தை அடைகிறார்கள் -  பனித்த கண்ணும், பயந்ததோர் நெஞ்சமும், பனியில்  சோர்ந்து விறைத்த  உடலுமாய்.

எதிர்ப் பக்கமிருந்து எதிரிகளின் யுத்த வாகனங்கள் பீரங்கிகளை முழங்கியபடி முன்னேறி வருகின்றன.

இவர்கள் பக்கமிருந்து, பூட்டிய ஒலிபெருக்கிகளில் பிரச்சாரப் பீரங்கிகள் தான் முழங்கிக் கொண்டிருக்கின்றன.

"வீரர்களே! செங்கொடியை ஏந்துங்கள். முன்னேறிப் பாயுங்கள். எதிரிகளைத் துரத்தி  அடியுங்கள். மாபெரும் தேச பக்திப் போர்!"

இவர்களது படை அணிக்குக் கட்டளை பிறந்து விட்டது -  எதிரிகளைத் தாக்கும் படி!

போதிய துப்பாக்கிகள் இல்லை.

இவனுக்குத் துப்பாக்கி எதுவும் வழங்கப் படவில்லை.

இருந்தாலும் கட்டளையைப் புறக்கணிக்க முடியாது. தளபதிகள் பின்னே நின்று கொண்டிருக்கிறார்கள்.

போர்க்களத்தில் பின்வாங்கும் வீரன்  எவனையும் சுட்டு விடும் படி அவர்களுக்கு உத்தரவு!

இந்தத் தேசப் பணிக்காக, இருந்தவற்றில் மிகச் சிறந்த துப்பாக்கிகளை அவர்கள் பொறுக்கி  வைத்திருக்கிறார்கள்!

குனிந்தபடி ஓடுகிறான்.

பின்பக்கமிருந்து, இவனது தளபதிகள் தீர்க்கும் துப்பாக்கி வேட்டுகள்  பிடர் பிடித்து உந்துகின்றன.

முன்பக்கமிருந்து, நெருப்பைப் பொழியும் எதிரிகளின் இயந்திரத் துப்பாக்கிகள் வரவேற்கின்றன.

முன்னேறுபவர்களை எதிரிகளும், பின்வாங்குபவர்களை இவனது தளபதிகளும் தீர்த்துக் கட்டுகிறார்கள்.

எத்தைனையோ மைந்தர்கள் தங்கள் தாயை அழைக்கிறனர் -  இறுதி முறையாக!

சிவப்பு ரத்தம் செங்கொடிகளை நனைக்கிறது.

செர்கெய் தப்பி விட்டான்.

இறந்தவர்களோடு இறந்தவனாகப் பல மணிநேரம் கிடந்த பிறகு, தப்பித் தவறி இறந்த எதிரி ஒருவனின் இயந்திரத் துப்பாகியுடன் முகாமுக்குத் திருப்புகிறான்.

எதிரிகள் ஒரு நாள் தாமதிக்கின்றனர் அந்த இடத்தில் -  இரத்தக் சேற்றில் அவர்கள் யுத்த வாகனங்கள் புதைந்துவிடக் கூடாது என்பதற்காக!

இவன் தரப்புத் தளபதிகளுக்கு வெகுமதி கிடைக்கிறது வேந்தரிடம் இருந்து -  ஒரு நாள்  எதிரிகளைத் தாமதப் படுத்தியதற்காக!

மாபெரும் தேசபக்திப் போர் தொடர்கிறது.

செர்கெய் பல போர்க் களங்களைக் கண்டு விட்டான்.

பெரும் வீரன் என்று பெயர் எடுக்கிறான்.

எதிரிகளைச் சில முனைகளில் தோற்கடித்துத் துரத்தி அடிக்கிறான்.

மன்னரிடம் இருந்து வெகுமதிகள் கிடைக்கின்றன.

ஒரு போர்க் களத்தில் வெற்றி மாலை சூடிய போது, அவன் கீழ் இருந்த வீரர்கள் "எதிர் கால மன்னர் செர்கெய் வாழ்க!" என்று கோஷித்து விட்டார்கள்.

மன்னருக்கோ கண்களும் செவிகளும் பல. 

ஒற்று ஒற்றித் தந்த பொருளையும் மற்றோர் ஒற்றினால் ஒற்றிக் கொள்பவர் அவர்.

செர்கேயின் தளபதிக்கு இரகசிய உத்தரவு வருகிறது.

இன்னுமொரு தாக்குதலுக்கு உத்தரவு இடுகிறான் தளபதி -  செர்கேயின் தலைமையில்.

செங்கொடியை ஏந்திய படி, செர்கெய் தலைமை வகித்து முன்னேறிச் செல்கிறான்.

அவன் இறுதி வரை பின்வாங்கவில்லை.

இருந்தாலும் சுடப் படுகிறான் -  முதுகில்!

பெரும் நினைவுக் கல்லுக்கு அருகில், செங்கொடி விளங்க, ராஜாங்க மரியாதைகளுடன் அவன் புதைக்கப் படுகிறான்.

நினைவுக் கல்லில் வீர வாசகம் பளிச்சிடுகிறது.

"என்னை முன் நில்லன்மின் தெவ்வீர் -  பலர் என்னை முன் நின்று கல் நின்றவர்!"

காலம் உருள்கிறது.

ஒரு முறை வீசிய கடும் காற்றில் 'தெவ்வீர்' என்ற சொல் கழன்று வீழ்ந்து விட்டது.

***

Inspired by events in the second world war


****